உள்ளடக்கத்துக்குச் செல்

எரோடோட்டசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எரோடோட்டசு
எரோடோட்டசின் மார்பளவு சிலை
பிறப்புஅண். கிமு 484
ஆலிகார்னாசசு, காரியா, அனட்டோலியா
இறப்புஅண். கிமு 425
தூரீ, சிசிலி அல்லது பெல்லா, மசிடோன்
பணிவரலாற்றாளர்

எரோடோட்டசு (Ἡρόδοτος, Herodotus) அனதோலியாவில் உள்ள ஆலிகார்னாசசைச் (Ἁλικαρνᾱσσεύς, Halicarnassus) சேர்ந்த ஒரு கிரேக்க வரலாற்றறிஞா் மற்றும் புவியியலாளர் ஆவார். கிரேக்க பாரசீகப் போர்கள் குறித்த வரலாறை எழுதியதற்காக குறிப்பாக இவர் அறியப்படுகிறார். கிமு 5 ஆம் நூற்றாண்டில் (கிமு 484 - கிமு 425) வாழ்ந்த இவர் மேற்கு நாடுகளின் பண்பாட்டில் வரலாற்றின் தந்தை எனப்படுகிறார். இது பண்டைய உரோமானிய சொற்பொழிவாளர் சிசெரோவால் இவருக்கு வழங்கப்பட்டது.[1][2] தேவையான தகவல்களை முறைப்படியாகச் சேகரித்து, ஓரளவுக்கு அவற்றின் துல்லியத்தைச் சோதித்து, ஒழுங்கான அமைப்பில் அவற்றைத் தெளிவாக விளக்கிய முதல் வரலாற்றாளர் இவராவார். உலக வரைபடங்களை வரைந்த முதல் நபர் ஆவார்.

இவரின் வரலாறுகள் முதன்மையாக மாரத்தான், தேமோபைலே, ஆர்ட்டெமிசியம், சலாமிஸ், பிளாட்டீயா, மைக்கேல் போன்ற புகழ்பெற்ற சமர்களையும் முக்கிய மன்னர்களின் வாழ்க்கையையும் உள்ளடக்கியது. வரலாற்றின் இன்றியமையாத பகுதியை உள்ளடக்கி, வாசகர்களுக்கு கூடுதல் தகவல்களை வழங்குவதாக பண்பாட்டு, இனவரைவியல், புவியியல், வரலாற்றுவரைவியல் போன்றவற்றின் பின்னணியையுடன் வழங்க அவரது பணி உள்ளது.

எரோடோட்டசு தனது படைப்பில் "தொன்மங்கள் மற்றும் கற்பனை தகவல்களை" சேர்த்ததற்காக விமர்சிக்கப்பட்டார். சக வரலாற்றாசிரியர் துசிடிடீஸ் அவர் பொழுதுபோக்கிற்காக கட்டு்க்கதைகளை உருவாக்கியதாக குற்றம் சாட்டினார். எவ்வாறாயினும், எரோடோட்டசு தான் "பார்த்ததையும், தனக்குச் சொல்லப்பட்டதையும்" தெரிவித்ததாக விளக்கினார். இவரின் வரலாறுகளின் கணிசமான பகுதி நவீன வரலாற்றாசிரியர்கள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வாழ்க்கை

[தொகு]

எரோடோட்டசு சின்ன ஆசியாவில் உள்ள ஆலிகார்னாசசுவில் கிமு 484இல் பிறந்தார். இவருடைய குடும்பத்தினர் சிலர் அரசுக்கு எதிரான சூழ்ச்சிகளில் ஈடுபட்டதால் இவர் ஏறக்குறைய முப்பத்திரண்டாவது வயதில் நாடு கடத்தப்பட்டார். நாடுகடத்தப்பட்ட பிறகு இவர் பல நாடுகளை கிழக்கே சின்ன ஆசியா முதல் மேற்கே எகிப்து வரை சுற்றிவந்தார். வெறுமனே சுற்றிவராமல் ஒவ்வொன்றையும் பற்றியும் அறிந்து கொள்ளும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். சுமார் பதினைந்து ஆண்டுகள் நாடுகளை சுற்றிவந்து, இறுதியில் ஏதென்சுக்கு வந்து அங்கேயே நிரந்தரமாக வசிக்கலானார்.

தான் கண்டதை, கேட்டதை, தனக்கு முன் அறிஞர்கள் எழுதிவைத்தவை போன்றவைற்றைக் கொண்டு வரலாறை எழுதினார். எகிப்து, சின்ன ஆசியா, கிரேக்கம் இவற்றின் வரலாறுகளை, ஆதிகாலத்தில் இருந்து கிரேக்க பாரசீகப் போர்கள் வரை அதாவது செட்டாஸ் முற்றுகை வரை எழுதியுள்ளார். இவர் எழுதியதை அவ்வப்போது பொதுமக்கள் இடையே உரக்கப் படித்துக் கான்பித்தார். அதைக் கேட்டு மகிழ்ந்த மக்கள் இவருக்கு சன்மானம் அளித்ததாக கூறப்படுகிறது.[3]

குறிப்புகள்

[தொகு]
  1. Luce, T. James (2002). The Greek Historians. p. 26.
  2. "Herodotus". Encyclopædia Britannica. 
  3. வெ. சாமிநாத சர்மா, கிரீஸ் வாழ்ந்த வரலாறு (நூல்) 1955, பக்கம் 412-413, பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், புதுக்கோட்டை
"https://ta.wikipedia.org/w/index.php?title=எரோடோட்டசு&oldid=3435973" இலிருந்து மீள்விக்கப்பட்டது