இரட்டையர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரியன் பிரவுன், விவியன் பிரவுன். ஒரே தோற்றம் கொண்ட இரட்டையர்

இரட்டையர் என்போர் ஒரே கருத்தரிப்பில் பிறந்த இரு குழந்தைகள் ஆவர்.[1]

கருவியல் அடிப்படை[தொகு]

மனித இனத்தில் இரட்டைப் பிள்ளைகள் ஒரே அண்டத்திலிருந்து உண்டாவன என்றும், இரண்டு அண்டங்களிலிருந்து உண்டாவன என்றும் இரு வகைப்படும். சாதாரணமாக ஒரு தாய்க்கு மாதந்தோறும் ஒரே அண்டம் முதிர்ச்சியுறும். அது கருவுறுமானால், பிறகு குழந்தையாக வளரும். கருவுற்ற அண்டம் பன்முறை பிளவுபட்டு அணுத் தொகுதியாக இருக்கின்ற தொடக்கத்திலேயே ஏதோ காரணத்தால் இரண்டு அணுத் தொகுதிகளாகப் பிரிந்து, ஒவ்வோரணுத் தொகுதியும் ஒரு குழந்தையாக உருவாகும். இப்படிப் பிறக்கும் இரட்டைப்பிள்ளைகள் ஓரண்ட (Uniovular) இரட்டைகள் அல்லது ஒற்றுமை இரட்டைகள் (Identical twins) எனப்படும். மிக்க ஆரம்பத்திலே அணுத்தொகுதி உருவாவதற்கு முன்பே பிரிவதால் உண்டான ஒற்றுமை யிரட்டைகள் பல விவரங்களில் முழுதும் ஒத்திருக்கும். அவ்வாறின்றிச் சற்றுத் தாழ்த்து, அணுத்தொகுதி ஓரளவிற்கு உருவாகி, வலம் இடம் என்ற வேறுபாடு தோன்றிய பிறகு அந்த அணுத்தொகுதி பிரிவதால் உண்டாகும் இரட்டைப் பிள்ளைகளை எளிதில் பிரித்தறிந்துகொள்ளலாம். அவை ஒன்றற்கொன்று பிம்பமும், கண்ணாடியில் தோன்றும் அதன் பிரதிபிம்பமும் போல இருக்கும். ஒரே அண்டத்திலிருந்து உண்டாகும் இரட்டைப் பிள்ளைகள் இரண்டும் ஒரே பாலாக இருக்கும். அதாவது இரண்டும் ஆணாக இருக்கும்; அல்லது இரண்டும் பெண்ணாக இருக்கும்.

வகைமை[தொகு]

இரண்டு வெவ்வேறு அண்டங்கள் ஒரே சமயத்தில் முதிர்ச்சியுற்று வந்து, கருவுற்று இரண்டு குழந்தைகளாக வளர்வன ஈரண்ட (Biovular) அல்லது உடன்பிறப் பிரட்டைகள் (Fraternal twins) எனப்படும். இவை இரண்டும் ஒரே பாலாகவும் இருக்கலாம்; ஒன்று ஆணாகவும் ஒன்று பெண்ணாகவும் இருக்கலாம். ஒருபால் இருபால் இரட்டைகளின் விகிதம் சுமார் பாதிப் பாதியாக இருக்கும். உடன்பிறப் பிரட்டைகள் ஒரே பாலினவானாலும் அவற்றை வேறு பிரித்து அறிந்து கொள்ளுவது எளிது. ஒரே பெற்றோருக்குத் தனித்தனியாகப் பிறக்கும் பிள்ளைகளிடத்தில் எவ்வளவு ஒற்றுமை காணுமோ அவ்வளவேதான் இந்த உடன்பிறப் பிரட்டைப் பிள்ளைகளிடமும் காணும். இரட்டைப் பிள்ளைகள் உண்டாவதுபோல மூன்று நான்கு, ஐந்து பிள்ளைகளும் உண்டாவதுண்டு. ஆறு பிள்ளைகளும் பிறந்திருக்கின்றன. ஆறுக்கு மேற்பட்டுப் பிறந்திருப்பதாகத் தெரியவில்லை. மூன்று, நான்கு, ஐந்து குழந்தைகள் ஒரே அண்டத்திலிருந்தும் உண்டாகியிருக்கின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து அண்டங்களிலிருந்தும் உண்டாகலாம்.

அறிதல்[தொகு]

ஒரே அண்டத்திலிருந்து உண்டாகும் இரட்டைகளை அறிவதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று கருவை மூடியிருக்கும் உறையைக்கொண்டு அறிவது. மற்றொன்று உரு முதலியவற்றின் ஒற்றுமையைக் கொண்டு அறிவது. இரண்டு குழவிகளும் ஒரே பனிக்குடத்துக்குள் இருக்குமானால் அவை ஒரே அண்டத்திலிருந்து உண்டானவை. வெவ்வேறு பனிக் குடத்துக்குள்ளிருக்குமானால் தனித்தனி அண்டங்களிலிருந்து உண்டானவை.எனினும் சில சமயத்தில் ஒரே அண்டத்திலிருந்து உண்டான குழந்தை ஒவ்வொன்றும் வெவ்வேறு பனிக்குடத்தில் இருப்பது முண்டு. ஒற்றுமை வழிப்படிபார்ப்போமானால், இதுவோ அதுவோ என்று மயங்கும் அளவுக்கு இரட்டைப் பிள்ளைகள் ஒத்திருக்குமானால் அவை ஒரே அண்டத்திலிருந்து உண்டானவை. இரத்தக்குழு, கண்ணின் நிறம், விரல் நுனியிலுள்ள ரேகைகள் முதலியவற்றாலும் ஒற்றுமை இரட்டைகளை அறிந்துகொள்ளலாம். ஒரு பேற்றில் ஒரு குழந்தை பெறுவதற்கு ஏற்றவாறு மானிடத் தாயின் உறுப்புக்கள் அமைந்திருக்கின்றன. ஒரு தடவையில் ஒன்றுக்கு மேல் குழந்தைகள் உண்டாகுமானால் அந்தக் குழந்தைகள் உயிரோடு இருப்பதற்கு இடர்ப்பாடுகள் அதிகம் உண்டு. இரண்டு குழந்தைகள் இருந்தால் கருப்பையில் நெருக்கம் உண்டாகும் ; காலம் நிரம்புவதற்கு முன்பே குழந்தைகள் பிறந்துவிடும். உயிரோடு பிறந்தாலும் அவற்றிற்கெல்லாம் செம்மையாகப் போதிய அளவு பால் முதலிய உணவு கொடுப்பதும், அவற்றைச் சரியாகப் பேணுவதும் மிகவும் கடினம். மூன்று, நான்கு, ஐந்து உண்டானால் தொந்தரவு அத்துணை அதிகம். அவை பிழைப்பதும் அருமை. இவை போன்ற காரணங்களால் இக்குழந்தைகள் தவறிவிடுகின்றன. மருத்துவக் கலை பெரிதும் முன்னேறியுள்ள இக்காலத்தில், இந்தமாதிரி குழந்தைகளை வளர்ப்பது முன்னிலும் எளிதாக இருக்கின்றது. 1934-ல் கானடாவில் பிறந்த டயான் குழந்தைகள் ஐந்தும் நன்றாக வளர்க்கப்பட்டு வருகின்றன.

சில சமயங்களில் ஒரே அண்டத்திலிருந்து உண்டான இரட்டைகள் வெவ்வேறாகாமல் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு பிறக்கின்றன. இம்மாதிரி பிறந்தவை சீயதேசத்தில் பேர்பெற்றவை இருந்தன. ஆதலால் இத்தகைய ஒட்டுப் பிறவிகளைச் சீயத்து இரட்டைகள் (Siamese twins) என்பார்கள். இவற்றில் முதுகெலும்புகூட இரண்டுக்கும் ஒன்றாக இருக்கலாம்.

புள்ளிவிவரங்கள்[தொகு]

1980ஆம் ஆண்டில், அமெரிக்காவில் பிறந்த இரட்டையரின் சதவீதம், ஆயிரம் பேரில் 18.9% சதவீதமாக இருந்தது. 2009ஆம் ஆண்டில் 33.3% சதவீதமாக இருந்தது. இது முந்தைய கணக்கெடுப்பைவிட 76% சதவீதம் உயர்ந்திருக்கிறது.[2] 'டெஸ்ட் டியூப்' மூலம் பிறந்த முதல் குழந்தை 1978ஆம் ஆண்டில் பிறந்தது. உலகிலேயே யொருபா மக்களுக்கு தான் அதிக இரட்டையர்கள் பிறக்கின்றனர். அதாவது, ஆயிரத்துக்கு 100 இரட்டையர் என்ற விகிதத்தில் பிறப்புவிகிதம் உள்ளது.[3][4][5] இவர்கள் ஒரு வகை சேனைக்கிழங்கை சாப்பிடுவதால் பைஸ்டோயீஸ்ட்ரோஜென் என்ற சுரப்பி சரக்கும். இந்த சுரப்பியினால் சூலகம் இரு பக்கமும் இரு முட்டைகளை வெளியிடுகிறது.[6][7]

நடு ஆப்பிரிக்காவில் ஆயிரம் பேருக்கு 18-30 இரட்டையர் என்ற அடிப்படையில் இரட்டையரின் விகிதம் உள்ளது.[8] இலத்தீன் அமெரிக்கா, தெற்கு ஆசியா, தென்கிழக்காசியா ஆகிய கண்டங்களில், ஆயிரம் பேரில் 6-9 இரட்டையர் என்ற அளவில் விகிதம் உள்ளது.[8]

மேற்கோள்கள்[தொகு]

  1. MedicineNet > Definition of Twin பரணிடப்பட்டது 2013-10-22 at the வந்தவழி இயந்திரம் Last Editorial Review: 6/19/2000
  2. Martin, Joyce A.; Hamilton, Brady E.; Osterman, Michelle J.K. "Three Decades of Twin Births in the United States, 1980–2009" [1], National Center for Health Statistics Data Brief, No. 80, January 2012
  3. Zach, Terence; Arun K Pramanik; Susannah P Ford (2007-10-02). "Multiple Births". வெப்மெட். பார்க்கப்பட்ட நாள் 2008-09-29.
  4. "Genetics or yams in the Land of Twins?". Independent Online. 2007-11-12 இம் மூலத்தில் இருந்து 2009-05-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090515114147/http://www.iol.co.za/index.php?from=rss_Africa&set_id=1&click_id=68&art_id=nw20071112091221822C182549. பார்த்த நாள்: 2008-09-29. 
  5. "The Land of Twins". பிபிசி உலக சேவை. 2001-06-07. http://www.bbc.co.uk/worldservice/people/highlights/010607_twins.shtml. பார்த்த நாள்: 2008-09-29. 
  6. O. Bomsel-Helmreich; W. Al Mufti (1995). "The mechanism of monozygosity and double ovulation". In Louis G. Keith, Emile Papierik, Donald M. Keith and Barbara Luke (ed.). Multiple Pregnancy: Epidemiology, Gestation & Perinatal Outcome. Taylor and Francis. p. 34. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85070-666-2.{{cite book}}: CS1 maint: multiple names: editors list (link)
  7. "What's in a yam? Clues to fertility, a student discovers". 1999. பார்க்கப்பட்ட நாள் 2008-09-29.
  8. 8.0 8.1 Smits, Jeroen; Christiaan Monden (2011). Newell, Marie-Louise. ed. "Twinning across the Developing World". PLoS ONE (Public Library of Science) 6 (9): e25239. doi:10.1371/journal.pone.0025239. பப்மெட்:21980404. 

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டையர்&oldid=3891993" இலிருந்து மீள்விக்கப்பட்டது