ஆதி இமானி சாமுண்டா
ஆதி இமானி சாமுண்டா | |
---|---|
தௌலாதர் சிகரம் மலைகளின் பின்னணியில் பார்க்கப்படும் ஆதி இமானி சாமுண்டா கோவில். பிப்ரவரி 2014 இல் மின்னல் தாக்கி கோயில் எரிந்த பிறகு, உருவாக்கபட்ட தற்காலிகக் கோயில் இது | |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | இமாச்சலப் பிரதேசம் |
அமைவு: | ந்தர் பன், ஜியா, காங்ரா |
கோயில் தகவல்கள் |
ஆதி இமானி சாமுண்டா (Aadi Himani Chamunda) என்பது சாமுண்டி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்துக் கோயிலாகும். இது இந்தியாவில், இமாச்சலப் பிரதேசத்தில், இமயமலையில் உள்ள காங்க்ரா பள்ளத்தாக்கில் ஜியாவின் சந்தர் பானில் அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]ராஜா சந்தர் பன் சந்த் கடோச்சின் (இ. 1660) அரண்மனையின் இடிபாடுகளுக்கு அருகில் இந்த கோயில் உள்ளது. [1] இக்கோயில் அரண்மனையைவிட பழமையானது இல்லையென்றாலும் குறைந்த பட்சம் அதே காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம். 1992 ஆம் ஆண்டு வரை இக்கோவில் பாழடைந்து கிடந்தது. ஆனால் ஓய்வுபெற்ற முதல் நிலை அதிகாரியான பி. டி. சைனி என்பவரின் கடினமான முயற்சியால் மிகப் பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்டது. அவர் ஓய்வுபெற்ற பிறகு 20 ஆண்டுகள் இதன் மறுசீரமைப்புப் பணியில் பக்தர்கள் குழுவின் உதவியுடன் ஈடுபட்டார். கோயிலின் நிர்வாகம் அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னரும் அவர் (2013 வரை) அதன் முன்னேற்றத்திற்காக தன்னை அர்ப்பணித்து வந்தார்.
கோயிலின் சுற்றுப்புறம் சிறந்த இயற்கைஅக் கொண்டது. அதனால் மலையேற்றம் செய்பவர்களுக்கு ஏற்ற இடமாகும்.
ஆதி இமானி சாமுண்டா கோயில் (3185 மீட்டர்) உயரத்தில் உள்ளது. இது இமாச்சலப் பிரதேசத்தின் காங்க்ரா மாவட்டத்தில் இருக்கும் சாமுண்டா தேவி கோயிலுக்கு வடகிழக்கே மலை உச்சியில் அமைந்துள்ளது. தரமசாலா பாலம்பூர் மாநில நெடுஞ்சாலையிலிருந்து (ஜத்ரங்கல் கிராமம்) சுமார் 13 கிலோமீட்டர் மற்றும் கார்டியானாவில் கடைசியாக மோட்டார் வசதியுள்ள சாலையில் இருந்து 8.5 கிலோமீட்டர்கள் நடைபயணம் மேற்கொண்டால் இக்கோயிலை அடையலாம். ஆதி இமானி சாமுண்டா தேவி கோயிலுக்கான மலையேற்றத்திற்கு சுமார் 6-7 மணிநேரம் தேவைப்படும். மேலும் மிதமான நிபுணத்துவம் தேவைப்படும். குளிர்காலம் தவிர்த்து ஆண்டு முழுவதும் பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வருகை தருகின்றனர். உள்ளூர் நம்பிக்கையின் படி சாமுண்டா தேவி தெய்வம் இப்பகுதியில் அக்கிரமம் செய்துவந்த சண்டா, முண்டா என்ற இரு அரக்கர்கள் மீது மலையின் உச்சியில் இருந்து பெரிய பாறைகளை எறிந்து கொன்றார். தர்மசாலா பாலம்பூர் மாநில நெடுஞ்சாலையில் இருக்கும் சாமுண்டா தேவி கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள சிவன் கோயிலுக்கு மேலே உள்ள ஒரு கற்பாறை அதில் ஒன்று என்று கூறுகின்றனர். கடந்த தசாப்தத்தில் அண்மையில் கட்டப்பட்ட கோயில் 2014 இல் ஏற்பட்ட கடுமையான தீயினால் அழிந்தது. அதன் பிறகு இது பக்தர்கள் மற்றும் கோயில் அறக்கட்டளையின் உதவியுடன் மீண்டும் புனரமைக்கப்பட்டது. கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பாதி வழி வரை தண்ணீர் கிடைக்கும், அதன் பிறகு பக்தர்கள் தங்களுக்கு வேண்டியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். மலை உச்சியில் உள்ள கோயில் வரை தேனீர் கடைகளும், ஓய்வெடுக்கும் இடங்களும் உள்ளன.
வழிபாடு
[தொகு]சாமுண்டா தேவி (சமஸ்கிருதம்: चामुण्डा, Cāmuṇḍā), சாமுண்டி, சாமுண்டேஸ்வரி, சர்ச்சிகா என்றும் அழைக்கப்படுப்பவர். இவர் இந்து சமயத்தில் சப்தகன்னியரில் ஒரு பயமுறுத்தும் அம்சமாவார். அறுபத்து நான்கு அல்லது எண்பத்தொரு தாந்த்ரீக தேவிகளின் குழுவான துர்க்கையின் உதவியாளர்களான தலைமை யோகினிகளில் இவரும் ஒருவர். [2] இவரின் பெயரான சாமுண்டி என்பது இவரால் கொல்லப்பட்ட சண்டா, முண்டா என்றும் இரண்டு அரக்கர்களின் பெயரின் சேர்க்கையாகும். தேவியின் மற்றொரு உக்கிரமான அம்சமான காளியுடன் இவர் நெருங்கிய தொடர்புடையவர். [3] இவர் சில சமயங்களில் பார்வதி, சண்டி அல்லது துர்கை தெய்வங்களுடனும் அடையாளம் காணப்படுகிறார். இந்த தெய்வத்துக்கு சம்பிரதாயமாக மிருக பலி கொடுத்து வழிபடப்படுகிறது. மேலும் பழங்காலத்தில் நரபலியும் கொடுக்கபட்டது. சாமுண்டி முதலில் ஒரு பழங்குடி தெய்வமாக இருந்தவர். பின்னர் இந்து சமயத்தால் உள்வாங்கப்பட்டார். பின்னர் சைன சமய சமயத்திலும் கடவுளாகவும் ஆக்கப்பட்டார். இருப்பினும் சைன சமயத்தில், இவரது வழிபாட்டுச் சடங்குகளில் இறைச்சி, மதுபானம் போன்றவை ஒதுக்கப்பட்டு சைவ படையல்கள் படைக்கப்பட்டன.
ராம்கிருட்டிண கோபால் பண்டார்கர் கூறுகையில், சாமுண்டி முதலில் மத்திய இந்தியாவின் விந்திய மலைத்தொடரின் முண்டா மக்களால் வழிபடப்பட்ட ஒரு பழங்குடி தெய்வமாவார். இந்த பழங்குடியினர் தெய்வங்களுக்கு விலங்குகளையும், மனிதர்களையும் பலியிடுவதுடன் மதுபானத்தையும் படையலாக வைத்தது அறியப்பட்டது. இந்த வழிபாட்டு முறைகள் இந்து சமயத்தில் உள்வாங்கப்பட்ட பிறகு சாமுண்டி வழிபாடு தாந்த்ரீக வழிபாட்டில் தக்கவைக்கப்பட்டது. சில சமயங்களில் நெருப்புக் கடவுளான அக்னியுடன் அடையாளம் காணப்பட்ட வேத உருத்திரனுடன் (நவீன இந்து சமயத்தில் சிவன் என அடையாளம் காணப்படுகிறார்) இவர் தொடர்பு காரணமாக இந்த தேவியின் இயல்பு கடுமையான ஒன்றாக இருப்பதாக அவர் கருதுகிறார். [4] இந்த தெய்வ வழிபாடு பழங்குடிகளிடமிருந்து தோற்றம் பெற்றது என்ற கோட்பாட்டை வாங்குவும் ஆதரிக்கிறார்.
அணுகல்
[தொகு]ஆதி இமானி சாமுண்டா கோயிலை, காண்ட் கர்டியானா (ஜத்ரங்கல், பரோய்) மூலம் இயற்கை பள்ளத்தாக்கு சார்ந்த மலையேற்றம் வழியாக அணுகலாம். காண்ட் கிராமத்திலிருந்து 7.7 கிமீ தொலைவு மலைப்பாதை உள்ளது. அதில் தாபா மற்றும் தேநீர் கடைகள், சோலார் விளக்குகள் மற்றும் மூன்று இடங்களில் குடிநீர் ஆதாரங்கள் ஏற்படுதப்பட்டுள்ளன. ஜியா கிராமத்திலிருந்து சற்று எளிதான ஒரு மலையேற்றமும் உள்ளது. ஜியா கிராமத்தில் இருந்து மலையேற்றம் 9.3 கிலோமீட்டர் தொலைவுக்கு உள்ளது. ஏறி முடிக்க 3-4 மணிநேரம் ஆகும்; இறங்க 2-3 மணி நேரம் ஆகும். இந்த வழித்தடத்தில் கடைகள், சூரிய ஒளி விளக்குகள், தங்குமிடங்கள் போன்ற வசதிகள் சரியாக அமைக்கப்படவில்லை. இந்த மலையேற்றப் பாதையிலோ அல்லது கோயிலிலோ வற்றாத நீர்நிலைகள் எதுவும் இல்லை, எனவே சொந்தமாக தண்ணீரை எடுத்துச் செல்வது நல்லது. [5]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ googlebooks.co.uk; Social, Cultural and Economic History of Himachal Pradesh (Manjit Singh Ahluwalla), p.26
- ↑ Wangu, p. 94
- ↑ Kinsley p. 158, Devi Mahatmya verses 10.2-5
- ↑ A B Moor p. 118
- ↑ Singh, Bharat (Nov 14, 2015). "Jia to Aadi Himani Chamunda Temple (Himachal Pradesh) Trek". பார்க்கப்பட்ட நாள் July 29, 2020.