உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசிரியப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆசிரியப்பா என்பது, தமிழின் யாப்பியலில் சொல்லப்படும் ஆசிரியர்பாவிற்கு உரிய ஓசை அகவலோசை

வகைகளுள் ஒன்று. இதனை அகவல் எனவும் வழங்குவர். [1] இது அகவலோசையைக் கொண்டு அமைவது. ஆசிரியத்தளை எனப்படும் தளை வகையே இப் பாவுக்கு உரியது. எனினும் வேறு தளைகளும் இடையிடையே வருவது உண்டு. வெண்பாவினை வன்பா என்றும், ஆசிரியப்பாவினை மென்பா என்றும், கலிப்பாவினை முறற்கை என்றும் வழங்குவர். [2]

இவ்வகைப் பாக்கள் மூன்று அடிகள் தொடக்கம் எத்தனை அடிகள் கொண்டதாகவும் இருக்கலாம். அடிகளின் எண்ணிக்கைக்கு மேல் எல்லை கிடையாது. ஆசிரியப்பாவின் அடிகள் நான்கு சீர்களைக் கொண்ட அளவடியாகவோ, மூன்று சீர்கள் கொண்ட சிந்தடியாகவோ, இரண்டு சீர்களைக் கொண்ட குறளடியாகவோ அமையலாம். ஐந்து சீர்களைக் கொண்ட அடிகளும் இடம்பெறலாம். எனினும் முதல் அடியும் இறுதி அடியும் அளவடிகளாக இருத்தல் வேண்டும்.

ஆசிரியப்பாவின் இறுதி அசை ஏ, ஓ, என், ஈ, ஆ, ஆய், அய் என்னும் அசைகளுள் ஒன்றாக இருத்தல் வேண்டும் என்ற விதியும் உண்டு.

பெயர் விளக்கம்[தொகு]

ஆசு எனினும் சிறுமை எனினும் நுண்மை எனினும் ஒக்கும்.
சீரினாலும், பொருளினாலும், ஓசையினாலும் ஆகிய நுண்மையைத் தன்கண் கொண்டிருப்பதாலும், புறநிலை வாழ்த்து போன்றவற்றை ஆசிரியன் அறிவிப்பது போன்று அறிவிப்பதாலும் ஆசிரியம் என்னும் பெயரைப் பெற்றது. இச்சொல் காரணக் குறி. [3]

ஆசிரியப்பாவுக்குரியவை[தொகு]

சீர்[தொகு]

ஆசிரிய உரிச்சீர் எனப்படும் ஈரசைச் சீர்கள் மிகுந்துவரும்.பிறசீர்களும் கலந்துவரும். ஆனால் நிரைநடுவாகிய வஞ்சியுரிசீர்கள் (கருவிளங்கனி, கூவிளங்கனி) வராது. தேமா, புளிமா, கருவிளம், கூவிளம் என்ற வாய்பாட்டால் அமையும் நேர்நேர், நிரைநேர், நிரைநிரை, நேர்நிரையாகிய நான்கு சீரும் ஆசிரிய உரிச்சீருக்கு உதாரணங்கள் ஆகும்.

தேமாங்காய், புளிமாங்காய், கருவிளங்காய், கூவிளங்காய், என்ற வாய்பாட்டால் அமையப்பெறும் நான்கு சீர்களும் வெண்பா உரிச்சீருக்கு உதாரணங்கள் ஆகும். ஆசிரிய உரிச்சீருடன் வெண்பா உரிச்சீரும் ஆசிரியப்பாவில் வரலாம்.

தேமாங்கனி, புளிமாங்கனி, கருவிளங்கனி, கூவிளங்கனி என்ற வாய்பாட்டால் அமையப்பெறும் நான்கு சீர்களும் வஞ்சிச் சீர்களுக்கு உதாரணங்கள் ஆகும். இவை ஆசிரியப்பாவில் வர முடியாது.[4]

தளை[தொகு]

ஆசிரியப்பாவுக்குச் சிறப்பாக உரிய நேரொன்றாசிரியத் தளை (மாமுன்நேர்), நிரையொன்றாசிரியத் தளை (விளமுன் நிரை) மிகுந்து வரும். பிற தளைகளும் கலந்து வரும்.

சீர்கள் ஒன்றுடனொன்று கூடும் கூட்டத்திற்குத் தளை என்று பெயர். நேரொன்றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை, இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, கலித்தளை, ஒன்றிய வஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை எனத் தளைகள் ஏழு வகைப்படும். மாமுன் நிரையும், விளமுன் நேரும் வருவது இயற்சீர் வெண்டளை. காய் முன் நேர் ருவது வெண்சீர் வெண்டளை. இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் வெண்பாவுக்குரியவை.

காய்முன் நிரை வருதல் கலித்தளை. கனிமுன் நிரை வருதல் ஒன்றிய வஞ்சித்தளை. கனிமுன் நேர் வருதல் ஒன்றாத வஞ்சித் தளை. ஆசிரியப்பாவில் இருவகையான வஞ்சித்தளைகள் தவிர்ந்த ஏனைய ஐந்து தளைகளும் வரும்.[5]

அடி[தொகு]

ஆசிரியப்பாவுக்குரிய அடி அளவடி. நேரிசை ஆசிரியப்பாவின் ஈற்றயலடி சிந்தடியாகவும் இணைக்குறள் ஆசிரியப்பாவின் இடையடிகள் இரண்டும் பலவும் குறளடி, சிந்தடிகளாகவும் வரும். ஆசிரியப்பாவின் அடிச்சிறுமை மூன்றடி. பெருமை, புலவன் உள்ளக் கருத்தைப் பொறுத்தது.

ஓசை[தொகு]

ஆசிரியப்பாவின் ஓசை அகவல் ஓசை ஆகும். மயில் அகவுவது போன்று ஒருவர் பாடும் ஓசை அகவலோசை எனப்படும்.

செப்பலோசை, அகவலோசை, துள்ளலோசை, தூங்கலோசை எனச் செய்யுளோசைகள் நான்கு வகைப்படும். செப்பலோசை இருவர் உரையாடுதல் போன்றது. இது வெண்பாவுக்கரியது. துள்ளலோசை சீர்தோறுந் துள்ளினாற்போல் வருவது. (தாழ்ந்துயர்ந்து வருவது). இது கலிப்பாவிற்குரியது. தூங்கலோசை சீர் தோறுந் துள்ளாது தூங்கி வருவது. இது வஞ்சிப்பாவுக்குரியது.[6]

முடிபு[தொகு]

எல்லா வகை ஆசிரியப்பாவுக்கும் சிறப்பான முடிவு எழுத்து 'ஏ' ஆகும். ஏகாரத்துடன் , , ஆய், என், என்னும் எழுத்தொலியில் முடியும் பாடல்களும் உண்டு. நிலைமண்டில ஆசிரியப்பாவுக்குச் சிறப்பான முடிவு 'என்' என்பதாகும்.

வகைகள்[தொகு]

ஆசிரியப்பாக்கள், அவற்றில் இடம்பெறும் அடிகளின் தன்மைகளை ஒட்டிக் கீழ்க்காட்டியவாறு நான்கு வகைப்படுகின்றன.

 1. நேரிசை ஆசிரியப்பா
 2. நிலைமண்டில ஆசிரியப்பா
 3. அடிமறிமண்டில ஆசிரியப்பா
 4. இணைக்குறள் ஆசிரியப்பா

பொதுவான ஆசிரியப்பாவுக்குரிய இயல்புகளுடன் மேற்காட்டிய வகைகள் சில சிறப்பு அம்சங்களைக் கொண்டவையாக இருக்கின்றன. அவ்வாறான சிறப்பு அம்சங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

 • நேரிசை ஆசிரியப்பா - கடைசிக்கு முந்திய அடி (ஈற்றயலடி) மூன்று சீர்களைக் கொண்டிருத்தல்.
 • நிலைமண்டில ஆசிரியப்பா - எல்லா அடிகளும் நான்கு சீர்களைக் கொண்டிருத்தல்.
 • அடிமறிமண்டில ஆசிரியப்பா - எல்லா அடிகளும் பொருள் முற்றிய நாற்சீர் அடிகளாய் இருக்கும். எனவே எந்த அடியை முதல் நடு ஈற்றடியாக அமைப்பினும் பொருள் மாறாது.
 • இணைக்குறள் ஆசிரியப்பா - இதன் முதல் மற்றும் இறுதியடிகள் தவிர்ந்த இடையிலுள்ள அடிகள் இரண்டு, மூன்று அல்லது நான்கு சீர்களைக் கொண்ட அடிகள் கலந்து அமையலாம்.

இனம்[7][தொகு]

ஆசிரியப்பாவின் இனங்கள் மூன்று.

 1. தாழிசை
 2. துறை
 3. விருத்தம்

அவற்றின் கூறுகள் ஆறு

 1. ஆசிரிய ஒத்தாழிசை
 2. ஆசிரியத் தாழிசை
 3. ஆசிரிய நேர்த்துறை
 4. ஆசிரிய இணைக்குறள் துறை
 5. ஆசிரிய நிலை விருத்தம்
 6. ஆசிரிய மண்டில விருத்தம்

அவற்றின்
சிறப்புடை தளைகள் 7
சிறப்பில் தளைகள் 7
இவற்றை உறழ (6 பெருக்கல் 14) 84 வகை ஆசிரியப் பாக்கள். மேலும் விரிக்கின் பெருகும்.

எடுத்துக்காட்டு நூல்கள்[தொகு]

பெரும்பாலான பழந்தமிழ் நூல்கள் ஆசிரியப்பாவில் அமைந்தவையே. புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை, மணிமேகலை என்பன இப் பாவகையில் எழுந்த நூல்களுக்கு எடுத்துக் காட்டுக்கள் ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - jக்கம் 206
 2. அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 173
 3. அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 172
 4. யாப்பருங்கலக் காரிகை (அமிர்தசாகரர் இயற்றியது). சென்னை: முல்லை நிலையம். 2008. pp. 1–216.
 5. யாப்பதிகாரம். சென்னை: பாரி நிலையம். 1995 ஏழாம் பதிப்பு. pp. 1–192. {{cite book}}: Check date values in: |year= (help)
 6. புலவர் குழந்தை (1995 ஏழாம் பதிப்பு). யாப்பதிகாரம். சென்னை: பாரி நிலையம். pp. 1–192. {{cite book}}: Check date values in: |year= (help)
 7. அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 224
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசிரியப்பா&oldid=3875684" இலிருந்து மீள்விக்கப்பட்டது