உள்ளடக்கத்துக்குச் செல்

ஓசை (யாப்பிலக்கணம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓசை அல்லது தூக்கு என்பது செய்யுளின் ஒரு கூறு எனத் தொல்காப்பியம் கூறுகிறது. [1] செய்யுள்கள் அல்லது பாக்கள், அவற்றின் சீர்களுக்கு இடையேயுள்ள தளைகளின் தன்மையையொட்டி, வெவ்வேறு விதமான ஓசைகளை உடையனவாக இருக்கின்றன. முக்கியமாக இவ்வோசை வேறுபாட்டின் அடிப்படையிலேயே பாவகைகள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகின்றன.

ஓசைகள் நான்கு வகைப்படுகின்றன. அவை, செப்பலோசை, அகவலோசை, துள்ளலோசை, தூங்கலோசை என்பனவாகும்.

துணைப்பிரிவுகள்

[தொகு]

இவை ஒவ்வொன்றும் மூன்று துணைப்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,

செப்பலோசை [2]

1. ஏந்திசைச் செப்பலோசை, 2. தூங்கிசைச் செப்பலோசை, 3. ஒழுகிசைச் செப்பலோசை

அகவலோசை [3] [4] எடுத்துக்காட்டு

செங்களம் படக்கொன்(று) அவுணர் தேய்த்த
செங்கோல் அம்பின் செங்கோட்(டு) யானை
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந்தட்(டு) அற்றே. [5] [6]
1. ஏந்திசை அகவலோசை, 2. தூங்கிசை அகவலோசை, 3. ஒழுகிசை அகவலோசை

துள்ளலோசை [7]

1. ஏந்திசைத் துள்ளல் ஓசை, 2. அகவல் துள்ளல் ஓசை 3. பிரிந்திசைத் துள்ளல் ஓசை

தூங்கலோசை [8]

1. ஏந்திசைத் தூங்கலோசை, 2. அகவல் தூங்கலோசை, 3. பிரிந்திசைத் தூங்கலோசை

என்பனவாகும்.

செப்பலோசை பாவகைகளில் வெண்பாவுக்கு உரிய ஓசையாகும். இது வெண்டளை எனும் தளை வகையினால் உண்டாவது. அகவலோசை ஆசிரியப்பாவுக்கும், துள்ளலோசை கலிப்பாவுக்கும் உரியன. இவற்றுள் அகவலோசை ஆசிரியத்தளையாலும், துள்ளலோசை கலித்தளை, வெண்டளை கலந்த கலித்தளை, இடையிடையே வேறு தளைகள் என்பன கலந்து வருவதால் உண்டாகின்றது. வஞ்சிப்பாவுக்கு உரியதான தூங்கலோசை, வஞ்சித்தளை என்னும் தளை வகையால் உண்டாவது.

அடிக்குறிப்பு

[தொகு]
  1. தூக்கு இயல் வகையே ஆங்கு என மொழிப (தொல்காப்பியம் 3-392)
  2. அஃது அன்று என்ப வெண்பா யாப்பே தொல்காப்பியம் 3-387
  3. மயில் அகவது போல இசை கூட்டிப் பாடுவது அகவல்-ஓசை
  4. அகவல் என்பது ஆசிரிய்ம்மே (தொல்காப்பியம் 3-386)
  5. குறுந்தொகை 1
  6. தொல்காப்பியம் 3-386 இளம்பூரணர் உரை மேற்கோள்
  7. துள்ளல் ஓசை கலி என மொழிப (தொல்காப்பியம் 3-388)
  8. தூங்கல் ஓசை வஞ்சி ஆகும் (தொல்காப்பியம் 3-389)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓசை_(யாப்பிலக்கணம்)&oldid=3453909" இலிருந்து மீள்விக்கப்பட்டது