அஜந்தா நடவடிக்கை
அஜந்தா நடவடிக்கை (Operation Ajanta ) என்பது தமிழ்நாட்டில், நக்சலைட்டுகளை ஒடுக்க தமிழ்நாடு அரசின் காவல்துறை அதிகாரி வால்டர் தேவாரம் தலைமையில் காவல் படைகளால் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையாகும்.
பின்னணி
[தொகு]மேற்கு வங்கத்தில், நக்சல்பாரி கிராமத்தில் 1967இல் விவசாய எழுச்சி உண்டானது. அதைத் தொடர்ந்து நாட்டின் பல பகுதிகளில் நக்சலைட் இயக்கத்தில் இளைஞர்கள் இணைந்தனர். நக்சலைட் இயக்கத்தை ஆரம்பித்த சாரு மசூம்தார் தமிழகத்திற்கு வந்தபொழுது. அவரைப் பெண்ணாடம் அருகில் உள்ள முந்திரிக் காட்டுக்கு வரவழைத்து கு. கலியபெருமாள், தமிழரசன் போன்றவர்கள் இரகசியமாகக் கூட்டம் போட்டனர். இதனால் தமிழகத்தின் இயக்கத்தில் பல இளைஞர்கள் இணைந்தனர். குறிப்பாக வேலூர் மாவட்டம், தென்னாற்காடு மாவட்டம், தர்மபுரி மாவட்டங்களில் நக்சலைட் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இந்த மாவட்டங்களில் கந்துவட்டிக் கொடுமையில் ஈடுபடுபவர்கள், மக்களைச் சுரண்டுபவர்கள் என கருதப்படுவர்களை நக்சலைட்டுகள் அழித்தொழிப்பு செய்து வந்தனர்.
அப்போது வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டுவந்த நக்சல் குழுவினர் மீது 1978இல், மத்தூரில் அப்பாசாமி ரெட்டியார் என்பவரை கொலை செய்தது, மடவாளம் இரட்டை கொலை வழக்கு, ஏலகிரிமலை ரெட்டியார் கொலை என, பல கொலை, கொள்ளை, கடத்தல் வழக்குகள் பதியப்பட்டன.[1] இதனால் இதில் சம்பந்தப்பட்ட நக்சசலைட்டுகளை காவல்துறையினர் தேடிவந்தனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்ட காவல் ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையிலான காவலர்கள் 1980ஆம் ஆண்டு ஆகத்து 6ஆம் தேதி அதிகாலை ஏலகிரி மலை அடிவாரத்தில் பதுங்கி இருந்த நக்சலைட் சிவலிங்கம், பெருமாள், ராஜப்பா, செல்வம், சின்னதம்பி ஆகியோரை பிடித்தனர்.
திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் இவர்களிடம் முதல் கட்ட விசாரணை முடித்துவிட்டு அனைவரையும் வேறு ஒரு தனி இடத்துக்கு காரில் அழைத்துச் சென்றபோது, வக்கணம்பட்டி என்ற இடத்தின் அருகே சென்றபோது மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை நக்சலைட்டுகள் வெடிக்கச் செய்தனர் என்று கூறப்படுகிறது. இதில் ஆய்வாளர் பழனிச்சாமி, தலைமைக் காவலர் ஏசுதாஸ், முருகேசன், நக்சலைட்டுகள் பெருமாள், ராஜப்பா, செல்வம் ஆகியோர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் நக்சலைட் சின்னதம்பி மீட்கப்பட்டார்.[2]
நடவடிக்கைகள்
[தொகு]வேலூர் மாவட்டம், காட்பாடியில் நடந்த ஆய்வாளர் பழனிச்சாமியின் இறுதி ஊர்வலத்தில் அப்போதைய முதல்வர் எம். ஜி. ஆர் கலந்துகொண்டார். தமிழ்நாட்டில் நக்சலைட்டுகளை ஒழிக்க பழனிச்சாமியின் மகள் அஜந்தா பெயரில் ‘ஆபரேஷன் அஜந்தா’ தொடங்க உத்தரவிட்டார். நக்சல் இயக்கத்தினரைப் பிடிக்க நான்கு பிரிவுகள் கொண்ட ஒரு சிறப்பு காவல் படையை அமைக்கப்பட்டது. இந்த நடவடிக்கை அப்போது டிஐஜியாக இருந்த வால்டர் தேவாரம் தலைமையில் நடைபெற்றது. களத்தில் இருந்த காவல் படையினருக்கு உளவுத்துறை தகவல்களை டிஐஜி மோகன்தாஸ், எஸ்.பி. அலெக்சாண்டர் போன்றோர் அளித்தனர். நடவடிக்கைத் துவக்கப்பட்ட ஓராண்டில் 19 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். கடைசியாக 1981இல் மூன்று நக்சலைட்கள் கொல்லப்பட்டனர்.[3] இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் பலர் நிராயுதபாணிகள் என்றும், பலர் கொல்லப்பட்டு கணக்கில் கொண்டுவரப்படாமல் காணாமல் போனவர்களாக ஆக்கப்பட்டனர் என்றக் குற்றச்சாட்டு நிலவுகிறது.
நினைவுச் சின்னம்
[தொகு]அஜந்தா நடவடிக்கையில் கொல்லபட்ட பாலன், அப்பு ஆகியோருக்கு தருமபுரி மாவட்டம் நாயக்கன் கொட்டாயில் நினைவுச் சின்னம் மற்றும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "போலீசாரை கொன்ற நக்சலைட்டுக்கு 5 ஆயுள் சிறை தண்டனை". தினமலர்.
- ↑ "1980-ல் கார் மீது வெடிகுண்டு வீசி 6 பேர் கொல்லப்பட்ட வழக்கு: நக்சலைட் சிவலிங்கத்துக்கு 5 ஆயுள் தண்டனை". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ சுதாங்கன் (5 மே 2017). "அந்த நாலு பேருக்கு நன்றி!". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 5 அக்டோபர் 2018.