கு. கலியபெருமாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புலவர் கு. கலியபெருமாள் (04.மார்ச்.1924 16-மே-2007) என்பவர் பகுத்தறிவு, வர்க்க விடுதலை, சாதி ஒழிப்பு, விவசாயிகளுக்கானப் போராட்டம், ஈழ விடுதலை ஆதரவு, மொழிப் பாதுகாப்பு, இன விடுதலைக்கு ஆயுதமேந்திய போராட்டம் என வாழ்ந்த போராளியாவார்.[1]

பிறப்பும், கல்வியும்[தொகு]

இவர் கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த சௌந்திர சோழபுரத்தில் ஓரளவு வசதியான குடும்பத்தில் அஞ்சலை, குஞ்சான் இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர். சௌந்திர சோழபுரத்தில் துவக்கக் கல்வியும், பென்னாடத்தில் பள்ளிக் கல்வியையும் பெற்றார். புதுமுக வகுப்பை மயிலத்தில் உள்ள சிவஞான பாலையா சுவாமிகள் மடத்தினரால் நடத்தப்பட்ட கல்லூரியில் கற்றார். இக்கால கட்டத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் அறிமுகம் கிடைத்து. சுயமரியாதை நூல்களையும், துண்டறிக்கைகளையும் கொண்டுவந்து சக மாணவர்களுக்கு வழங்கிவந்தார். பின் திருவையாறு கல்லூரியில் புலவர் படிப்புப் படிக்க இணைந்தார். அக்கல்லூரியில் சாதி பேதம் அதிகமாக பார்க்கப்பட்டது. பார்ப்பண மாணவர்கள் உள்ள விடுதியில் பிற மாணவர்கள் நுழையக்கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகள் இருந்தனை அதை எதிர்த்து கலியபெருமாள் புத்துலக சிற்பகம் என்னும் மாணவர் அமைப்பை ஏற்படுத்தி மாணவர்களை திரட்டி போராடி அங்கு இருந்த பேதத்தை ஒழித்தார்.[2] கல்வியை முடித்தப்பின் ஆசிரியராக வாழ்க்கையைத் துவக்கினார். இவருடைய துணைவியார் பெயர் வாலாம்பாள்.

சாருமஜூம்தாரை சந்தித்தல்[தொகு]

இந்திய அளவில் நக்சலைட் இயக்கத்தை ஆரம்பித்த சாரு மஜூம்தார் தமிழகத்திற்கு வந்தபொழுது. அவரைப் பெண்ணாடம் அருகில் உள்ள முந்திரிக் காட்டுக்கு வரவழைத்து இரகசியமாகக் கூட்டம் போட்டார் கலியபெருமாள். சாருமஜூம்தார் தோற்றுவித்த இ.ம.க.(மா.லெ) இயக்கம் தமிழகத்தில் வேரூன்றக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் கலியபெருமாள்.

போராட்டங்கள்[தொகு]

ஆசிரியர் பணியை விட்டுவிட்டு, பெரும் நிலப்பிரபுக்களின் நிலங்களுக்குத் தனது தோழர்களுடனும், பொது மக்களுடனும் திரண்டு சென்று அதிரடியாக அறுவடை நடத்தி நெல் மூட்டைகளைக் கடத்தி வந்து கிராமத்தினருக்குப் பகிர்ந்து கொடுத்தார். பெண்ணாடம் பகுதி சர்க்கரை ஆலைகளுக்கு எதிரான போராட்டங்களையும் தலைமையேற்று நடத்தினார்.

வெடிவிபத்து[தொகு]

1970 ம் வருடம் அவரது சொந்தக் கிராமமான செளந்திரசோழபுரத்தில் உள்ள தனது தோப்பில் கணேசன், காணியப்பன், சர்ச்சில் ஆகிய மூன்று இளைஞர்கள் இவர் முன்னிலையில் தற்பாதுகாப்புக்காக வெடிகுண்டு தயாரித்தபொழுது எதிர்பாராத விதமாக வெடிகுண்டு வெடித்து மூன்று இளைஞர்களும் அதே இடத்தில் சிதறிப்போனார்கள். அருகில் இருந்த கலியபெருமாளுக்கும் பலத்த காயம். இறந்துபோன மூன்று தீவிரவாத இளைஞர்களின் உடல்களையும் அருகிலேயே புதைத்துவிட்டு, தலைமறைவாகிவிட்டார் கலியபெருமாள்.

மரண தண்டனை[தொகு]

1971-ல் கலியபெருமாளும்,அவரது மகன்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். காவல்துறை உளவாளி ஐயம்பெருமாள் கொலை வழக்கில் 1972 ஆம் ஆண்டு கலியபெருமாளுக்கும் அவரது மூத்த மகன் வள்ளுவனுக்கும் மரணதண்டனையும், இளையமகன் சோழ நம்பியார், கலிய பெருமாளின் ஒன்றுவிட்ட தம்பிகள் மாசிலாமணி, இராஜமாணிக்கம், ஆறுமுகம் கலியபெருமாளின் மனைவியின் அக்காள் அனந்தநாயகி ஆகியோருக்கு ஆயுள் தண்டணையும் கடலூர் நீதிமன்றத்தில் விதிக்கப்பட்டது. ஆக மொத்தம் அவரது குடும்பமே சிறையில். பின்னர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வள்ளுவனுக்கு ஆயுள் தண்டனை என்றும் மற்றவர்களுக்கு அதே தண்டனை என்றும் உறுதிசெய்யப்பட்டது.[3] கலியபெருமாளை மரணதண்டனையிலிருந்து காக்க பலரும் போராடி, கையெழுத்து இயக்கம் நடத்தி இந்திய குடியரசு தலைவருக்கு அனுப்பினர் 1973இல் குடியரசு தலைவர் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார்.

சிறைவாழ்வுக்கு முடிவு[தொகு]

1981இல் கலியபெருமாளும் அவர் குடும்பத்தினர் ஆக ஏழு பேர் சிறையில் வாடுவதை அறிந்த தில்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் "கன்ஷியாம் பர்தேசி" என்பவர் நேரில் வந்து சந்தித்து பின் மனித உரிமை ஆர்வலர்களை ஒரிங்கிணைத்து குழு அமைத்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அவர்கள் அனைவரையும் 1983 ஆம் ஆண்டு நிபந்தையற்ற நீண்டகால பரோலில் வெளியே மீட்டு வந்தார். பின்னர் சில ஆண்டுகள் கழித்து அதே நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில் தண்டனையில் இருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டனர். தமிழகத்தில் நக்சல் இயக்கத்தைத் துவக்கிய இவர் பிறகு தமிழ்த் தேசியராக மாறினார் .[4]

சுயசரிதை நூல்[தொகு]

இவர் தனது வாழ்க்கை வரலாறை மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன் என்ற பெயரில் சுயசரிதை நூலை எழுதியுள்ளார்.[5]

மறைவு[தொகு]

16-05-2007 அன்று மறைந்தார். அவரின் உடல் பெண்ணாடம் அருகேயுள்ள அவரது சொந்த ஊரான சௌந்தரசோழபுரத்தில், 22-2-1970-இல் அவரது தோழர்கள் சர்ச்சில், கணேசன், காணியப்பன் மரணம் எய்திய அதே இடத்தில் புலவரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. தற்போது அவ்விடம் `தென்னஞ்சோலை செங்களம்' என அழைக்கப்படுகிறது.[1]

வெளி இணைப்புகள்[தொகு]

கலியபெருமாள் குறித்து கீற்று இணைய தளத்தில் கட்டுரை,[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 http://kosukumaran.blogspot.in/2007/06/blog-post_30.html
  2. மக்களின் துணையோடு மரணத்தை வென்றேன், புலவர் கலியபெருமாள், பக்.48
  3. வே. ஆனைமுத்து (சனவரி 2018). "தோழர் கு. க. வள்ளுவன் மறைந்தார்". சிந்தனையாளன். 
  4. http://tamil.oneindia.com/news/2000/08/23/terrorist.html
  5. http://kuzhali.blogspot.in/2007/05/blog-post_17.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._கலியபெருமாள்&oldid=2972370" இருந்து மீள்விக்கப்பட்டது