ரோசா லக்சம்பேர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரோசா லக்சம்பேர்க்
Rosa Luxemburg

அரசியல் கட்சி செருமனியக் கம்யூனிஸ்ட் கட்சி

பிறப்பு 5 மார்ச் 1871
சமோஸ்க், விஸ்தூலா நிலம், ரஷ்யா
இறப்பு 15 சனவரி 1919
பெர்லின், செருமனி
தேசியம் போலந்து
வாழ்க்கைத்
துணை
குஸ்தாவ் லூபெக்
உறவுகள் எலியாஸ் லக்சம்பேர்க் (தந்தை)

லீன் லோவென்ஸ்டைன் (தாய்)

துறை புரட்சியாளர்
சமயம் எதுவுமில்லை (யூத இனம்)
Hammer and sickle.svg

ரோசா லக்சம்பேர்க் (Rosa Luxemburg, மார்ச் 5, 1870/71ஜனவரி 15, 1919), போலந்தில் பிறந்த ஒரு ஜெர்மனிய மார்க்சியவாதியும் சோசலிச மெய்யியலாளரும் ஒரு புரட்சியாளரும் ஆவார்.

செங்கொடி (Die Rote Fahne) என்ற இதழை ஆரம்பித்தவர் இவரே. முதலாம் உலகப் போரில் செருமனி பங்குபற்றியதை செருமனி சமூக-மக்களாட்சிக் கட்சி (ஜேர்மன் சோசியல்-டெமோகிரட்டிக் கட்சி) ஆதரித்ததைத் தொடர்ந்து இவர் மற்றொரு மார்க்சியவாதியான கார்ல் லீப்னெக்ட்டுடன் இணைந்து "புரட்சிகர ஸ்பர்டாசிஸ்ட் முன்னணி" (Spartacist League) என்ற அமைப்பை உருவாக்கினார். இதுவே பின்னர் ஜெர்மனிய கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயரைப் பெற்றது. ஸ்பர்டாசிஸ்ட் லீக் தலைமையில் ஜனவரி 1919 இல் நடத்தப்பட்ட பேர்லின் புரட்சி தோல்வியில் முடிந்தது. ரோசா லக்சம்பேர்க்கின் ஆதரவிலான இப்புரட்சி ஃப்ரீகோர்ப்ஸ் என்ற வலதுசாரி துணை இராணுவக்குழுவினரால் நசுக்கப்பட்டது. ரோசா மற்றும் லீப்னெக்ட் உட்பட பல இடதுசாரிகள் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இவர்களின் இறப்பின் பின்னர் ரோசா லக்சம்பேர்க், கார்ல் லீனெக்ட் இருவரும் ஜனநாயக சோசலிஸ்டுகளாலூம் மார்க்சியவாதிகளாலும் மாவீரர்களாகப் போற்றப்படுகின்றனர்.

பொருளடக்கம்

வாழ்க்கைச் சுருக்கம் [தொகு]

போலந்தில் [தொகு]

ரொசாலியா லக்சம்பேர்க் மார்ச் 5, 1870 அல்லது 1871 இல் யூத இன மத்தியதரக் குடும்பத்தில் ரஷ்யக் கட்டுப்பாட்டில் இருந்த போலந்து நகரான சாமொஸ்க்கில் பிறந்தார். ஐந்து வயதிலேயே இவரைப் பாதித்திருந்த இடுப்பு வலி நிரந்தர ஊனமுடையவரானார்.[1].

1873 இல் குடும்பத்துடன் வார்சாவுக்கு குடிபெயர்ந்த ரோசா 1886 இல் இருந்து போலந்தின் இடதுசாரி பாட்டாளிக் கட்சியில் (Proletariat party) சேர்ந்தார். பொது வேலைநிறுத்தமொன்றை முன்னின்று நடத்தினார். இதனை அடுத்து இவரது கட்சியின் 4 முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதில் கட்சி காலைக்கப்பட்டது. ஆனாலும் ரோசா தனது சகாக்களை இரகசியமாகச் சந்தித்து வந்தார்.

1889 இல் இவர் சுவிட்சர்லாந்துக்குத் தப்பிச் சென்றார். அங்கு சூரிச் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து தத்துவம், வரலாறு, அரசியல், பொருளாதாரம், கணிதம் ஆகிய துறைகளில் உயர் கல்வியைப் பெற்றார். இங்குதான் லியோ ஜோகித்சேவை சந்தித்தார். இவர்களுக்கிடையேயான உறவு 1907 இல் ஜோகிசத்சேக்கு அவரது உருசியத் தலைமறைவு வாழ்க்கையில் ஏற்பட்ட இன்னொரு உருசியத் தோழியுடனான உறவின் பின் முறிந்தது. ஆனால் அவர்களது முன்னைய நெருக்கமும் அரசியல் தோழமையும் ரோசாவின் இறுதி நாட்கள் வரை இருவரையும் இணைத்திருந்தது.

1893 இல் ஜோகித்சேவுடன் இணைந்து "தொழிலாளர் குரல்" (Sprawa Robotnicza) என்ற பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார். போலந்து சோசலிசக் கட்சியினரின் தேசியவாதக் கொள்கையை எதிர்த்து தமது பத்திரிகையில் எழுதினார். புரட்சியின் மூலமே போலந்தை விடுவிக்கமுடியும் என்று நம்பினார். குறிப்பாக செருமனி, ஆஸ்திரியா, மற்றும் ரஷ்யாவில் புரட்சி வெடிக்க வேண்டும் என வலியுறுத்தினார். முதலாளித்துவத்துக்கு எதிராக அணிதிரளவேண்டும் என்பதும் இவரது கொள்கையாக இருந்தது.

செருமனியில் [தொகு]

கிளாரா செட்கின் உடன் லக்சம்பேர்க் (வலது)

1898 இல் குஸ்தாவ் லூபெக் என்பாரைத் திருமணம் புரிந்து செருமனியக் குடியுரிமை பெற்று பெர்லின் நகருக்கு குடிபெயர்ந்தார். அங்கு செருமனியின் சமூக சனநாயகக் கட்சியில் இணைந்து பணியாற்றினார்.

1914, ஆகஸ்ட்டில் கார்ல் லீப்னெக்ட், கிளாரா செட்கின், பிரான்ஸ் மேரிங் ஆகியோருடன் இணைந்து Die Internationale என்ற இயக்கத்தை லக்சம்பேர்க் ஆரம்பித்தார். இவ்வியக்கம் 1916 ஆம் ஆண்டில் ஸ்பர்டாசிஸ்ட் முன்னணி (Spartacist League) என்ற பெயராக மாற்றப்பட்டது. ஸ்பர்த்தாக்கசு என்ற பெயரில் போருக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை எழுதி சட்டவிரோதமாக அச்சிட்டு வெளியிட்டார்கள். லக்சம்பேர்க் ஜூனியசு என்ற புனைபெயரில் எழுதினார். செருமனியில் பாட்டாளி வர்க்கத்தை போருக்கெதிராகத் திரட்டினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டரை ஆண்டுகள் ரோசா, கார்ல் லீப்னெக்ட் ஆகியோர் சிறையிலடைக்கப்பட்டார்கள்.

சிறையில் இருந்து இவர் எழுதிய கட்டுரைகளை அவரது நண்பர்கள் இரகசியமாக வெளியே எடுத்து வெளியிட்டார்கள். இவற்றில் ஒன்று “உருசியப் புரட்சி". இது போல்செவிக்குகளுக்கு எதிரான கருத்துக்களைக் கொண்டிருந்தது. அவர்களின் சர்வாதிகாரத் தன்மையை எடுத்துக் கூறியிருந்தார். ஆனாலும் ஒரு கட்சி ஆட்சியை அவர் வெறுத்தாலும், அவர் பாட்டாளிகளின் சர்வாதிகாரத்தை ஆதரித்து எழுதினார்.

1918, நவம்பர் 8 இல் சிறையில் இருந்து விடுதலையானார்கள். விடுதலையான அடுத்த நாள் லீப்னெக்டுடன் இணைந்து பெர்லினில் சுதந்திர சோசலிசக் குடியரசை அறிவித்தார்கள். ஸ்பர்த்தாக்கஸ் அணியை மீள நிறுவி "செங்கொடி" என்ற பத்திரிகையை ஆரம்பித்தார்கள். அரசியல் கைதிகள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும், மரண தண்டனைகளை ஒழிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் எழுதினார்கள்.

செருமனிய புரட்சியின் போது போடப்பட்ட தடை அரண்
பெர்லினில் ரோசா லக்சம்பேர்கின் சிலை

1918, டிசம்பர் 29 முதல் 31 வரை இடம்பெற்ற ஸ்பர்த்தாசிசுக்களின் காங்கிரஸ் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். இதனை அடுத்து செர்மனியப் பொதுவுடமைக் கட்சி (KPD) கார்ல் லீப்னெக்ட், ரோசா லக்சம்பேர்க் தலைமையில் 1919, சனவரி 1 இல் நிறுவப்பட்டது.

1919 சனவரியில் பேர்லின் நகரில் இரண்டாவது புரட்சி வெடித்தது. வன்முறையில் ஆட்சியைக் கைப்பற்றுவதை லக்சம்பேர்க் எதிர்த்தார். ஆனாலும் "செங்கொடி" இயக்கத்தினரை, லிபரல்களின் பத்திரிகை அலுவலகங்களை தமது குழுவினர் ஆக்கிரமித்துக் கொள்ள ஊக்குவித்தது. இதனை அடுத்து, செருமனிய அதிபர் பிரீட்ரிக் ஈபேர்ட் இடதுசாரிகளை ஒழிக்க தமது படையினருக்கு உத்தரவிட்டார். 1919, சனவரி 15 இல் ரோசா, மற்றும் லீப்னெக்ட் இருவரும் பெர்லினில் பிரீகோர்ப்ஸ் என்ற வலதுசாரி துணை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார்கள். லக்சம்பேர்க் ஒட்டோ ரூஞ்ச் (1875–1945) என்பவனால் துப்பாக்கியால் அடித்துக் காயப்படுத்தப்பட்டு, லெப். ஹெர்மன் சூக்கோன் (1894–1982) என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்; அவரது உடல் பெர்லினில் லாண்ட்வெர் கால்வாயில் எறியப்பட்டது. கார்ல் லீப்னெக்ட் சுட்டுக் கொல்லப்பட்டு பெயர் குறிப்பிடப்படாமல் சவச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதேபோல், KPD இன் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதனை அடுத்து செருமனியப் புரட்சி முடிவுக்கு வந்தது. நான்கு மாதங்களுக்குப் பின்னர் 1919, சூன் 1 இல் லக்சம்பேர்கின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு பெர்லின் மருத்துவமனையில் அடையாளம் காணப்பட்டது.

இக்கொலைக்காக ஒட்டோ ருஞ்ச் இரண்டாண்டுகள் சிறையிலடைக்கப்பட்டான். ஏனையோருக்கு எவ்விதத் தண்டனையும் வழங்கப்படவில்லை.

லக்சம்பேர்க், லீப்னெக்ட் இருவரினதும் உடல்கள் பெர்லினில் உள்ள பிரீட்ரிக்சுபெல்ட் மத்திய சவச்சாலையில் அடக்கம் செய்யப்பட்டது. சோசலிஸ்டுகளும், பொதுவுடமைவாதிகளும் இவ்விடத்தில் ஆண்டுதோறும் சனவரி மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடி அவ்விருவரையும் நினைவு கூருகிறார்கள்.

மேற்கோள்கள் [தொகு]

வெளி இணைப்புகள் [தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ரோசா_லக்சம்பேர்க்&oldid=1348836" இருந்து மீள்விக்கப்பட்டது