பண்டைய எகிப்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பண்டை எகிப்திய நாகரிகத்தின் முக்கிய குறியீடாகத் திகழ்வது பிரமிட்டுக்களாகும்.

பண்டைய எகிப்து வடக்கு ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில், நைல் ஆற்றின் கீழ் பகுதிகளில் செறிந்து அமைந்திருந்த ஒரு பழங்கால நாகரிகம் ஆகும். இது இன்றைய எகிப்து நாட்டுள் அடங்கியது. இந் நாகரிகம் கீழ் எகிப்தும், மேல் எகிப்தும் முதல் பாரோவின் கீழ் ஒன்றிணைந்த போது கிமு 3150 அளவில் தொடங்கியது எனலாம். இது மூன்று ஆயிரவாண்டுகளாக வளர்ச்சியடைந்தது. இதன் வரலாறு பல உறுதியான அரசுகளைக் கொண்ட காலப்பகுதிகளையும் இடையிடையே நிலையற்ற இடைக் காலங்களையும் கொண்டு அமைந்திருந்தது. புதிய அரசு எனப்பட்ட இறுதி அரசின் முடிவுடன் இந் நாகரிகம் மெதுவான ஆனால் உறுதியான இறங்குமுக நிலையை அடைந்தது. இக் காலத்தில் இப் பகுதி பல வெளிச் சக்திகளால் ஆக்கிரமிக்கப்பட்டது. கிமு 31 ஆம் ஆண்டில், தொடக்க ரோமப் பேரரசு எகிப்தைக் கைப்பற்றி அதனைப் பேரரசின் ஒரு மாகாணம் ஆக்கியபோது பாரோக்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

அரசும் பொருளாதாரமும் [தொகு]

முக்கிய நகரங்களைக் காட்டும் பண்டை எகிப்தின் நிலப்படம். (c. 3150 BC to 30 BC)

நைல் ஆற்றுப் பள்ளத்தாக்கின் நிலைமைக்கு ஏற்ப மாறிக்கொள்வதன் மூலம் எகிப்திய நாகரிகம் சிறப்புற்று விளங்கியது. கட்டுப்படுத்தப்பட்ட நீர்ப்பாசனம் வளமான இப் பகுதியில் மிகையான விளைவைக் கொடுத்தது. இது சமுதாய, பண்பாட்டு வளர்ச்சிகளைத் தூண்டியது. பயன்பாட்டுக்கான வளங்கள் அதிகமாக இருந்ததால், அரச நிவாகத்தின் சார்பில் இடம்பெற்ற கனிம அகழ்ந்தெடுப்புக்கள், தனியான எழுத்து முறையின் வளர்ச்சி, அமைப்புமுறையிலான ஒன்றிணைந்த கட்டுமானம், வேளாண்மைத் திட்டங்கள், சூழவுள்ள பகுதிகளுடனான வணிகம், எதிரிகளைத் தோற்கடித்து எகிப்தின் மேலாண்மையை நிலைநிறுத்திய படைகள் என்பவை சாத்தியமாயின. இத்தகைய நடவடிக்கைகளைத் தூண்டி ஒழுங்குபடுத்துவதற்காகச் செல்வாக்குள்ள அதிகாரிகள் குழுவும், சமயத் தலைவர்களும், நிர்வாகிகளும், தெய்வீகத் தன்மை கொண்டவராகக் கருதப்பட்ட பாரோக்களின் (மன்னர்) கீழ் இயங்கினர். இவர்கள் விரிவான சமய நம்பிக்கைகளின் துணையுடன் மக்களை ஒழுங்குபடுத்தி மக்கள் ஒத்துழைப்பை உறுதிப்படுத்தினர்.

பண்பாடும் தொழில்நுட்பமும் [தொகு]

பண்டை எகிப்தியர்களின் சாதனைகளுள், கணித முறை, கற்கள் உடைப்பு, நில அளவை, கட்டுமான நுட்பங்கள், கண்ணாடித் தொழில்நுட்பம், மருத்துவ முறை, இலக்கியம், நீர்ப்பாசனம், வேளாண்மைத் தொழில்நுட்பம் என்பவை அடங்கும். வரலாற்றில் மிகமுந்திய அமைதி ஒப்பந்தமும் இங்கேயே மேற்கொள்ளப்பட்டது. பண்டை எகிப்து ஒரு நிலையான பாரம்பரியத்தை விட்டுச் சென்றது. பிற நாட்டவரும் அவர்களுடைய கட்டிடங்களைப் பார்த்துக் கட்டினர். அவர்களுடைய கலைப் பொருட்கள் உலகம் முழுவதும் உலாவந்தன. அவர்களுடைய பாரிய நினைவுச் சின்னங்கள் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகளையும், எழுத்தாளர்களையும் பல நூற்றாண்டுகளாகக் கவர்ந்து வருகின்றன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பண்டைய_எகிப்து&oldid=1351177" இருந்து மீள்விக்கப்பட்டது