பிரமிடு
பிரமிட்டு என்பது பட்டைக்கூம்பு வடிவில் அமைந்த ஒரு கட்டிட அமைப்பு ஆகும். இதன் அடி பெரும்பாலும் சதுரமாக அமைந்திருக்கும். எனினும், இது முக்கோணம், வேறுவகைப் பல்கோணங்கள் ஆகிய வடிவங்களிலும் அமையலாம். இக் கட்டிடங்களின் நிறையில் பெரும் பகுதி அடிப்பகுதியில் அமைந்திருப்பதால், இவற்றின் புவியீர்ப்பு மையம் நிலத்துக்கு அண்மையில் அமைந்திருக்கும் இதனால், சில பழங்கால நாகரிக மக்கள் உறுதியான நினைவுச் சின்னங்களை அமைப்பதற்கு இந்த வடிவத்தைத் தேர்ந்தெடுத்தனர்.
பல ஆயிரம் ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய அமைப்புக்கள் பிரமிட்டுகளாகவே இருந்தன. முதலில் டாசுர் நக்குரோபோலிசில் உள்ள சிவப்புப் பிரமிட்டும், பின்னர் கூபுவின் பெரிய பிரமிட்டும் மிகப்பெரிய அமைப்புக்களாக இருந்தன. பழைய ஏழு உலக அதிசயங்களுள் இன்றும் நிலைத்திருப்பது கூபுவின் பெரிய பிரமிட்டு மட்டுமே. உலகில் கட்டப்பட்ட பிரமிட்டுக்களில், கனவளவு அடிப்படையில் மிகப் பெரியது மெக்சிக்கோவில் உள்ள சோலுலாவின் பெரிய பிரமிட்டு ஆகும். இப் பிரமிட்டு இன்னும் அகழப்பட்டு வருகின்றது.
பிரமிட்டு வடிவிலான கட்டிடங்கள் எகிப்தியர், மாயர், சுமேரியர் உள்ளிட்ட பல பழம் நாகரிக மக்களால் அமைக்கப்பட்டன.