தாவர வளரூக்கி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தாவர வளரூக்கி (Plant hormone), தாவர வளர்ச்சி நெறிப்படுத்தி அல்லது தாவர ஹார்மோன் எனப்படுவன தாவரங்களின் வளர்ச்சியை நெறிப்படுத்தும் வேதிப்பொருள்கள் ஆகும். இவை தாவரங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் உருவாக்கப்படும் மூலக்கூறுகள், மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன. வளரூக்கிகள் இலக்குக் கலங்களிலும் (cell), பிற இடங்களிலும் செயல்முறைகளில் மாற்றத்தை உருவாக்குகின்றன. தாவரங்களின் விலங்குகளில் இருப்பதுபோல் வளரூக்கிகளைச் சுரக்கும் சுரப்பிகள் இருப்பதில்லை. தாவர வளரூக்கிகள், தாவர வளர்ச்சியை நெறிப்படுத்துகின்றன. விதை வளர்ச்சி, பூக்கும் காலம், பூக்களின் பால் (ஆணா, பெண்ணா) என்பவற்றையும் தீர்மானிக்கின்றன. அவை எத்திசுக்கள் மேல்நோக்கியும், எவை கீழ் நோக்கியும் வளரவேண்டும் என்பதையும் தீர்மானிக்கின்றன. இலைகளின் உருவாக்கம், தண்டு வளர்ச்சி, பழம் பழுத்தல், தாவரத்தின் வாழ்வுக்காலம் அதன் இறப்பு என்பவற்றையும் தாவர வளரூக்கிகள் கட்டுப்படுத்துகின்றன. எனவே தாவர வளர்ச்சிக்கு வளரூக்கிகள் இன்றியமையாதன ஆகும்.
[தொகு] இயல்புகள்
தாவர வளரூக்கிகள் இயற்கையாகவே தாவரங்களினுள் உருவாக்கப்படுகின்றன. தாவர வளர்ச்சியை நெறிப்படுத்தக் கூடிய ஏறத்தாழ இதேபோன்ற வேதிப்பொருட்கள் பங்கசுக்கள், பக்டீரியாக்கள் என்பவற்றாலும் தயாரிக்கப்படுகின்றன. அத்துடன், பெரும் எண்ணிக்கையிலான, தாவரங்களில் வளரூக்கிகளாகப் பயன்படத்தக்க இத்தகைய வேதியியற் சேர்வைகள் ஆய்வுகூடங்களிலும் மனிதனால் உருவாக்கப்படுகின்றன. இவை தாவர வளர்ச்சி நெறிப்படுத்திகள் எனப்படுகின்றன.
தாவர வளரூக்கிகள் ஊட்டப்பொருட்கள் அல்ல. அவை மிகச் சிறிய அளவில் காணப்படும், வேதிப் பொருட்களாகும். இவை வளர்ச்சியை ஊக்குவித்துக் கலங்களினதும், திசுக்களினதும் விருத்திக்கும், சிறப்பாக்கத்துக்கும் முக்கியமானவையாக அமைகின்றன. தாவரத் திசுக்களுள் நிகழும் வளரூக்கிகளின் உயிரியற்றொகுப்பு பரவலாகவே நடைபெறுகின்றது. விலங்குகளில் வளரூக்கிகள் நாளச் சுரப்பிகள், நாளமில் சுரப்பிகள் என இரு வகைச் சுரப்பிகளிலிருந்து உருவாகி, உடல்முழுவதும் கொண்டுசெல்லப்படுவது போலன்றி, தாவரங்களில் எளிய வேதிபொருட்களான வளரூக்கிகள் தாவரத் திசுக்களினூடாகவே பரவுகின்றன.