ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் காவல் மரணங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயராஜ் மற்றும் பென்னிக்சின் காவல் மரணங்கள்
நாள்19–23, சூன் 2020
நேரம்7:45 பி.ப இந்திய சீர் நேரம், ஒ.ச.நே + 05:30
அமைவிடம்இந்தியா, தமிழ்நாடு, தூத்துக்குடி, சாத்தான்குளம்.
இறப்புகள்பி. ஜெயராஜ் (வயது 59)
ஜெ. பெனிக்ஸ் (வயது 31)
புலன்விசாரணைநீதித்துறை நடுவர் முன்னிலையில் மூன்று மருத்துவர்கள் பிணக் கூறாயவு செய்தனர். முழு நடைமுறையும் காணொளியில் பதிவு செய்யப்பட்டது.
கைது(கள்)ஸ்ரீதர்
பாலகிருஷ்ணன்
இரகு கணேஷ்
முருகன்
முத்து ராஜ்
விசாரணைநடக்கிறது
கைது செய்வதற்கான காரணம்ஊரடங்கு மீறல் (கூறப்படுகிறது)

2020 சூன் 19 அன்று, பி. ஜெயராஜ் (59 வயது) மற்றும் அவரது மகன் ஜெ. பென்னிக்ஸ் (31 வயது) ஆகியோர் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் இந்திய அரசின் கொரோனா வைரசு ஊரடங்கு விதிகளை மீறியதாக விசாரணைக்கான தமிழ்நாடு காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். காவல்துறையினரின் கூற்றுப்படி, சூன் 19 ம் தேதி இருவரும் தங்கள் செல்பேசி கடையை அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கும் மேலாக திறந்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. சூன் 19 அன்று இருவருக்கும் எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர். காவலில் இருந்தபோது இவர்கள் பாலியல் வன்கொடுமை மற்றும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். இது இவர்களின் மரணத்திற்கு காரணமாயிற்று. 2020 சூன் 22 அன்று, பென்னிக்ஸ் உடல்நிலை சரியில்லாமல் கோவில்பட்டி பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் இறந்தார். அடுத்த நாள், 2020 சூன் 22 அன்று அவரது தந்தையும் இறந்தார். தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் நகரில் காவலில் வைக்கப்பட்டிந்த இருவரிடம் காவல்துறையினர் மிருகத்தனமாக நடந்தது தொடர்பாக மாநிலத்தில் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது.[1][2]

நிகழ்வுகளின் காலவரிசை[தொகு]

19 ஜூன் 19 அன்று, நேரில் கண்ட பல சாட்சிகளின் கூற்றுப்படி, சாத்தான்குளம் காவல்துறையினர் ஜெயராஜை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். முந்தைய நாள் ஜெயராஜின் மரப் பட்டறைக்கு அருகே காவல்துறையினருக்கும் இன்னும் சிலருக்கும் இடையே நடந்ததாகக் கூறப்படும் ஒரு வாக்குவாதம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.

2020 ஜூன் 19 அன்று, இரவு 7:30 மணியளவில், சாத்தான்குளம் நகரில் உள்ள காமராஜர் சிலைக்கு அருகிலுள்ள தனது கடையில் பென்னிக்ஸ் இருந்தபோது, அவரது தந்தை ஜெயராஜை காவல்துறையினர் அழைத்துச் சென்றனர் என்ற செய்தியைக் அவரது நண்பர்களிடமிருந்து கேள்விப்பட்டார். தனது தந்தையைப் பற்றி கவலைப்பட்ட பென்னிக்சு அவரது நண்பருடன் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு விரைந்தார். வெளியே காத்திருந்த பென்னிக்ஸ் காவலர்களால் அழைக்கப்பட்டார். தனது தந்தையை ஏன் கால் நிலையத்துக்கு அழைத்துச் சென்றீர் என்று கேள்வி எழுப்ப அவர் உள்ளே சென்றபோது, அவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. விரைவில், வழக்கறிஞர்களான பென்னிக்சின் நண்பர்கள் காவல் நிலையத்திற்கு வெளியே கூடினர். பென்னிக்சின் நண்பர்களின் கூற்றுப்படி, "போலீசாருக்கு எதிராக பேச உங்களுக்கு என்ன தைரியம்" என்று பொலிசார் கூச்சலிடுவதை அவர்கள் கேட்டார்கள். காவல் துணை ஆய்வாளர் ரகு கணேஷ் வந்தபோது காவல் நிலையத்திற்குள் வன்முறை அதிகரித்ததாக நேரில் கண்ட சாட்சிகள் கூறுகின்றன. காவல் நிலையத்துக்குள் இருந்த போலீஸ் நண்பர் குழுவைச் சேர்ந்தவர்கள் இருவரையும் தாக்கத் தொடங்கினர். ஜூன் 20 வரை பென்னிக்சையும் அவரது தந்தையை சந்திக்க வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படவில்லை.[3][4]

2020 சூன் 20 அன்று, இருவரின் வழக்கறிஞர் மணிராமனின் கூற்றுப்படி, அவர்களின் மலவாயிலில் இருந்து அதிக அளவில் இரத்தப்போக்கு ஏற்பட்டதால் அவர்கள் ஆறு லுங்கிகளை மாற்ற வேண்டியிருந்தது. மருத்துவ உடல் பரிசோதனைக்காக காவல்துறையினர் ஜெயராஜ் மற்றும் பென்னிக்சை கோவில்பட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதன்பிறகு, அவர்கள் சாத்தான்குளம் குற்றவியல் நடுவர் சரவணனிடம் அழைத்துச் செல்லப்பட்டனர். குற்றவியல் நடுவர் காயமடைந்த இருவரின் உடல் நிலையை ஆராயாமல் காவலில் வைத்தனர்.[5]

2020 சூன் 22 அன்று, பென்னிக்ஸ் கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, இரவு 9:00 மணியளவில், கடுமையான இரத்தப்போக்கு காரணமாக இறந்தார். கோவில்பட்டி கிளைச் சிறை அதிகாரிகளால் அதே நாளில் இரவு 10:30 மணிக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் பி. ஜெயராஜ் அனுமதிக்கப்பட்டார்.[6]

2020 சூன் 23 அன்று, அதிகாலை 5:40 மணிக்கு, பி. ஜெயராஜ் சிகிச்சையில் இருந்தபோது நுரையீரல் துளைத்ததல் காரணமாக இறந்தார்.[7]

உயர் நீதிமன்றம் மற்றும் மனித உரிமைகள் ஆணையம்[தொகு]

சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை தாமாகவே முன்வந்து இந்த விசயத்தில் தலையிட்டது. மேலும் சூன் 24 அன்று நீதிபதிகள் பி. என். பிரகாசு மற்றும் புகழேந்தி ஆகியோர் இந்த சம்பவம் குறித்து விசாரித்து நிலை அறிக்கை சமர்ப்பிக்குமாறு தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட்டனர்.[8] பிணக்கூறு ஆய்வை காணொளியில் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. காவல்துறை தனது விசாரணை நடவடிக்கைகளை முடித்த பின்னர் ஒரு குற்றவியல் நடுவர் முன்னிலையில் மூன்று நிபுணர்களின் குழுவால் விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.[9] பிணக்கூறு ஆய்வு மற்றும் விசாரணையின் இரு அறிக்கைகளின் நகல்களும் உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் இந்த குற்றம் குறித்து அறிக்ககையை தாக்கல் செய்ய காவல் துறையிடம் கேட்டது.[10]

நீதித் துறை விசாரணை[தொகு]

சாத்தான்குளம் காவல் நிலையத்தில் விசாரணையை மேற்கொண்டிருந்த போது காவலர் மகாராஜனின் முரட்டுத்தனமான நடத்தை குறித்து நீதித் துறை நடுவர் எம். எஸ். பாரதிதாசன் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தார். அந்த அறிக்கையில், கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் டி. குமார் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் சி. பிரதாபன் ஆகியோரின் முன்னிலையில் கான்ஸ்டபிள் மகாராஜன் நீதித்துறை நடுவருக்கு எதிராக "உன்னால் ஒன்றும் செய்ய முடியாதுடா" என்று இழிவான கருத்து ஒன்றை தெரிவித்தார்.[11][12] புகாரைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையானது நீதிமன்ற நடவடிக்கைகளை அவமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தென் மண்டல காவல்துறைத் தலைவருக்கு உத்தரவிட்டார். காவல்துறைத் தலைவர் மகாராஜனை இடைநீக்கம் செய்தார்; காவல்துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் டி. குமார், மற்றும் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சி. பிரதாபன் ஆகியோர் காத்திருப்பு பட்டியலில் வைக்கபட்டனர். காவல் நிலையத்தில் தேவையான சான்றுகளை சேகரிக்கவும், குற்றிவியல் நடுவருக்கு உதவுவதற்காகவும் காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டை எடுத்து வருவாய்த் துறை அதிகாரிகளை நியமிக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த சம்பவம் இந்திய காவல்துறை வரலாற்றில் முதல் முறையாக மாவட்ட நிர்வாகம் ஒன்று காவல் நிலையம் ஒன்றின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியது. மேலும் காவல் நிலையத்திலிருந்து பொருட்களை சேகரிக்க நிபுணர்கள் குழுவை அனுப்புமாறு தடய அறிவியல் துறையின் கூடுதல் இயக்குநருக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.[13]

சமூக ஊடகங்களில் எதிர்வினை[தொகு]

” "இதை கேட்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். சோகம் மற்றும் கோபத்திற்கு ஆளானேன். என்ன குற்றம் செய்து இருந்தாலும் எந்த ஒரு மனிதனுக்கும் இது போன்ற மிருகத்தனமான விஷயம் நடக்க கூடாது. குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படாமல் விடக்கூடாது. நமக்கு உண்மை விவரங்கள் தெரிய வேண்டும். அவர்கள் குடும்பம் என்ன நிலையில் தற்போது இருக்கும் என என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அவர்களுக்கு எனது ஆறுதல் மற்றும் பிரார்தனைகள். நாம் ஒன்றுகூடி குரல் கொடுத்து ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும்”

பிரியங்கா சோப்ரா டிவிட்டரில் எழுதியது [14]

இந்த நிகழ்வு தொடர்பாக பிரபலங்கள், அரசியல்வாதிகள் போன்ற பல குறிப்பிடத்தக்க நபர்கள் சமூக ஊடகங்களில் தாக்குதல் குறித்த விவரங்களை வெளிப்படுத்தவும் காவல் துறையின் செயல்களை கண்டிக்கவும் செய்தனர். #JusticeforJayarajandBennix என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி இலட்சக் கணக்கான டிவீட்டுகள் அனுப்பப்பட்டன, இது 2020 சூன் 26 அன்று இந்தியாவில் பிரபலமான டிவிட்டர் தலைப்புகளில் ஒன்றாகவும், உலகளவில் பிரபலமான 30 பிரபலமான டிவிட் தலைப்புகளில் ஒன்றாகும் ஆனது.[1] ரவிச்சந்திரன் அசுவின், ஷிகர் தவான், சுசித்ரா, சித்தார்த், குஷ்பு சுந்தர், ஜெயம் ரவி, கார்த்திக் சுப்புராஜ், டி. இமான், சூரியா உள்ளிட்ட பிரபலங்கள் இந்த ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தினர்.[15][16] மேற்கு இந்தியாவின் குஜராத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான ஜிக்னேஷ் மேவானி டிவிட்டரில் "இந்தியாவில் ஜார்ஜ் பிலாய்டுகள் மிக அதிகமானவர்கள்" என்று எழுதினார்.[17] திரைப்பட இயக்குனர் ஹரி காவல்துறையின் மிருகத்தனத்தை கண்டித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார் அதில் தான் காவல் துறையை போற்றி ஐந்து படங்கள் எடுத்ததாகவும். அதற்காக வெட்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.[18]

அதிகாரப்பூர்வ எதிர்வினைகள்[தொகு]

” தில்லியில் நடந்த நிர்பயா வல்லுறவு சம்பவத்தைவிட இது மோசமானது. நிர்பயாவின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்தது போலவே, சாத்தான்குளம் சம்பவத்திலும் பென்னிக்சின் ஆசன வாயில் தடியை சொருகிய கொடூரம் நிகழ்ந்துள்ளது. இதில் கவனிக்க வேண்டியது நிர்பயா சம்பவம் தனிநபர் அதாவது பொது மக்களில் சிலரால் செய்யப்பட்டது. ஆனால் இங்கே சட்டத்தை நிலை நிறுத்துவதையும் குடிமக்களை பாதுகாப்பதையும் கடமையாகக் கொண்ட போலீஸ்காரர்களால் இது செய்யப்பட்டுள்ளது. குற்றங்கள் சாதாரண மக்களால் செய்யப்பட்டால், சாதாரண தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் காவல்துறையினரால் குற்றம் செய்யப்பட்டால், அவர்களுக்கு மிக கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். ”

— இந்திய உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்சு தி வீக்கில் எழுதியது [19]

இரண்டு துணை ஆய்வாளர்கள் மற்றும் ஒரு ஆய்வாளரை காவல் துறை இடைநீக்கம் செய்தது. சாதான்குளம் காவல் நிலையத்தில் உள்ள மற்ற காவலர்கள் கூண்டோடு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.[20][21][22] இந்த சம்பவம் காவல் துறை மற்றும் பிற அதிகாரிகளின் கூட்டு தோல்வி மற்றும் மனித உரிமை மீறல் என்று தூத்துக்குடி தொகுதியின் மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.[23][24] சூன் 28 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி இந்த மரணங்கள் தொடர்பான வழக்கை சிபிஐ வசம் ஓப்படைக்க உத்தரவிட்டார்.[25][26]

சிபிஐ விசாரணை[தொகு]

காவல் மரணம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து நடுவண் புலனாய்வுத் துறை 2020 ஜூலை 07 அன்று இரண்டு வழக்குகளை பதிவு செய்தது. தமிழக அரசின் வேண்டுகோளின் பேரிலும், இந்திய அரசிடமிருந்து வந்த மேலதிக அறிவிப்பினாலும், முன்னர் கோவில்பட்டி காவல் நிலையத்தில் பதிவுசெய்யப்பட்ட வழக்கு எண். 649 மற்றும் 650 ஆகிய இரண்டு வழக்குகளின் விசாரணையையும் தன் வசம் எடுத்துக் கொண்டது. ஒரு சிபிஐ குழு தொடர்ந்து மதுரையில் முகாமிட்டு, கோவிட் 19 தொற்று சிக்கலின் போது இந்த வழக்கில் பணியாற்றியது. விசாரணையின் போது காவல் கண்பாணிப்பாளர் / எஸ்.எச்.ஓ, 3 துணை கண்காணிப்பாளர்கள், 2 தலைமைக் காவலர்கள், 4 கான்ஸ்டபிள்கள் உட்பட 10 காவல் அதிகாரிகள் அதாவது சாத்தான்குளம் காவல் நிலையத்ததில் உள்ள அனைவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக ஐபிசி ஆர் / டபிள்யூ பிரிவு 302, 342, 201, 182, 193, 211, 218 & 34 ஆகிய பிரிவுகளில் சிபிஐ 26.09.2020 அன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. ஒரு குற்றவாளியான, துணை ஆய்வாளர் பல்துரை கோவிட் -19 காரணமாக விசாரணை காலத்தில் இறந்தார்.[27][28]

சிபிஐ குற்றப்பத்திரிகையில், பிணக்கூறு ஆய்வு அறிக்கையில் காவல்துறை அதிகாரிகள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்சை கொடூரமாக சித்திரவதை செய்ததாகவும், "இதுபோன்ற காயங்களால் அவர்கள் இறந்துவிடுவார்கள் என்பதை நன்கு அறிந்தும் பல காயங்களை ஏற்படுத்தியதாகவும்" உறுதிப்படுத்தியது.[29] "ஆய்வக பகுப்பாய்வின் முடிவுகள்" என்ற தலைப்பில் சிபிஐ அறிக்கையில், சாத்தான்குளம் லாக்காப் அறை, கழிப்பறை, எஸ்.எச்.ஓ அறை, லத்திகளிலிருந்தும், சுவர்களில் இருந்தும் சேகரிக்கப்பட்ட மரபணு மாதிரிகள் பாதிக்கப்பட்டு இறந்த இருவரின் மாதிரிகளுடன் பொருந்தக்கூடியவை என்று கூறுகிறது.[28]

ஜூன் 9 ஆம் தேதி இரவு 7:45 மணி முதல் மறுநாள் அதிகாலை 3 மணி வரை ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரும் காவல் நிலையத்திற்குள் சித்திரவதை செய்யப்பட்டனர் என்று குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணையின்படி, அவர்கள் பல சுற்று தாக்குதலுக்கு ஆளானார்கள்.[29][30] குற்றப்பத்திரிகை மேலும் கூறுகையில், அவர்கள் மௌனமாக இருந்த போதெல்லாம், ஆய்வாளர் மௌனத்திற்கான காரணத்தை கேட்க்கச் சொல்லி தன் ஊழியர்களை ஏவி, அதன் மூலம் மீண்டும் தாக்கத் தூண்டினார். சித்திரவதையின் போது அவரகளின் ஆடைகள் அகற்றப்பட்டன. காவல் நிலையத்தின் அடைக்கபட்ட வளாகத்திற்குள் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தைக்கு கொடூரமான சித்திரவதைகள் பல மணி நேரம் தொடர்ந்தது நடந்தது.[28]

பின்விளைவு[தொகு]

2020 சூலை 8 ஆம் நாள், கூடுதல் தலைமைச் செயலாளரின் அலுவலகம் தமிழகம் முழுவதும் காவல் நண்பர்கள் குழுவை கலைக்க உத்தரவு பிறப்பித்தது.[31] இது 1994 இல் வெளியிடப்பட்ட முந்தைய உத்தரவான காவல் நண்பர்கள் குழுவை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தும் உத்தரவை மாற்றி அமைத்தது.[சான்று தேவை]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Tamil Nadu Can't Turn Blind Eye to Police Torture: Amnesty India". The Quint (in ஆங்கிலம்). 2020-06-27. பார்க்கப்பட்ட நாள் 2020-06-28.
  2. ""India's George Floyds": Father-son death in police custody sparks outrage" (in en). 2020-06-27. https://www.reuters.com/article/us-india-police-crime-idUSKBN23Y0FB. 
  3. www.thenewsminute.com https://www.thenewsminute.com/article/justice-jayaraj-fenix-bennix-timeline-two-shocking-custodial-deaths-tn-127424. பார்க்கப்பட்ட நாள் 2020-06-28. {{cite web}}: Missing or empty |title= (help)
  4. "Thoothukudi: Outrage after father, son die in police custody". www.aljazeera.com. பார்க்கப்பட்ட நாள் 2020-06-28.
  5. Kaveri, Megha (26 June 2020). "Justice for Jayaraj and Bennix: Timeline of two shocking custodial deaths in TN". The News Minute. https://www.thenewsminute.com/article/justice-jayaraj-fenix-bennix-timeline-two-shocking-custodial-deaths-tn-127424. 
  6. THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT (THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT): 8. https://www.livelaw.in/pdf_upload/pdf_upload-377084.pdf. 
  7. THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT (THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT): 8. https://www.livelaw.in/pdf_upload/pdf_upload-377084.pdf. 
  8. "Tamil Nadu: Social Media Outrage, Protests Over Brutal Thoothukudi Custodial Deaths". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2020-06-28.
  9. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  10. Vignessh (2020-06-24). "Sexual torture inflicted on father-son in TN police custody: Witnesses". The Federal (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-28.
  11. மாஜிஸ்திரேட்டை மிரட்டிய காவலர் சஸ்பெண்ட் - ஏ.எஸ்.பி, டி.எஸ்.பி. இடமாற்றம் நியூஸ் 18, 2020 சூன் 30
  12. "Police used disparaging remarks: JM probing father, son custodial deaths". Deccan Herald (in ஆங்கிலம்). 2020-06-29. பார்க்கப்பட்ட நாள் 2020-06-30.
  13. "Sathankulam police not cooperating with judicial inquiry; HC orders revenue officials to take control of police station". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-06-30.
  14. "Priyanka Chopra condemns alleged custodial deaths of father-son in Tuticorin". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-06-29.
  15. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  16. "Indian cricketers Ravichandran Ashwin, Shikhar Dhawan call for justice in Tamil Nadu custodial death case". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-06-29.
  17. "'India's George Floyds': Father-son death in police custody sparks outrage". cnbctv18.com (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-28.
  18. "Regret glorifying police brutality: Director Hari". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2020-06-29.
  19. "OPINION: Thoothukudi police violence case worse than Nirbhaya". The Week (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-29.
  20. "Sathankulam station inspector Sridhar suspended over custodial deaths". www.thenewsminute.com. பார்க்கப்பட்ட நாள் 2020-06-29.
  21. Vignessh (2020-06-23). "Tension grips TN's Tuticorin district due to custodial death of father-son duo". The Federal (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-28.
  22. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  23. "DMK MP Kanimozhi writes to NHRC over 'custodial death' of shopkeeper, son". The Indian Express (in ஆங்கிலம்). 2020-06-26. பார்க்கப்பட்ட நாள் 2020-06-29.
  24. "COVID-19 in Tamil Nadu: Kanimozhi writes to NHRC over custodial deaths; 3000 TASMAC outlets to have CCTV cameras". The Indian Express (in ஆங்கிலம்). 2020-06-26. பார்க்கப்பட்ட நாள் 2020-06-29.
  25. "Sattankulam custodial deaths | CBI will investigate the case, says Tamil Nadu CM". https://www.thehindu.com/news/national/tamil-nadu/sattankulam-custodial-deaths-tn-decides-to-hand-over-probe-to-cbi-says-palaniswami/article31938757.ece. 
  26. "Will seek permission from Court to transfer Tuticorin custodial death case to CBI: Palaniswami". ANI News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-29.
  27. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-11-01. பார்க்கப்பட்ட நாள் 2020-11-14.
  28. 28.0 28.1 28.2 Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  29. 29.0 29.1 "TN Father-son Duo, Killed in Police Custody, Was Tortured for Over 7 Hours, Reveals CBI Chargesheet". News18 (in ஆங்கிலம்). 2020-10-27. பார்க்கப்பட்ட நாள் 2020-10-30.
  30. "Jayaraj-Benniks custodial deaths | Father, son were tortured for 7 hours, made to clean blood, says CBI". Moneycontrol (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-30.
  31. "Government of Tamil Nadu : Government Orders | Tamil Nadu Government Portal" (PDF). Government of Tamil Nadu : Government Orders. 8 July 2020. பார்க்கப்பட்ட நாள் 10 July 2020.