சாம்பல் தலை வானம்பாடி
சாம்பல் தலை வானம்பாடி | |
---|---|
ஆண் பறவை | |
பெண் பறவை | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | எ. கிரிசியா
|
இருசொற் பெயரீடு | |
எரெமோப்டெரிக்சு கிரிசியா (இசுகோபோலி, 1786) | |
வேறு பெயர்கள் | |
|
சாம்பல் தலை வானம்பாடி (ashy-crowned sparrow-lark , எரெமோப்டெரிக்சு கிரிசியா) என்பது வானம்பாடி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறிய குருவி அளவிலான பறவை ஆகும். இதற்கு மண்ணாம் வானம்பாடி என்றும் நெல் குருவி என்றும் பெயர்களுண்டு. இது தெற்காசியா முழுவதும் கட்டாந்தரை, புல், புதர்கள் கொண்ட திறந்த வெளி சமவெளிகளில் காணப்படுகிறது. ஆண் பறவைகள் மாறுபட்ட கருப்பு-வெள்ளை முக வடிவத்துடன் நன்றாக அடையாளம் காணப்படுகிறது. அதே சமயம் பெண் பறவைகள் மணற் பழுப்பு நிறத்தில், பெண் சிட்டுக்குருவியைப் போலவே இருக்கும்.
வகைப்பாடு
[தொகு]சாம்பல் தலை வானம்பாடியானது முதலில் அலாடா பேரினத்தில் வைக்கப்பட்டது.[2] இந்த இனம் சாம்பல் தலை வானம்பாடி, கருவயிற்று வானம்பாடி என்ற மாற்றுப் பெயர்களாலும் அறியப்படுகிறது.
துணையினங்கள்
[தொகு]இதன் துணையினங்களாக சிலோனென்சிசு (இலங்கை) மற்றும் சிக்காட்டா (குசராத்து) என்ற பெயரில் பிரிக்கபட்டிருந்தாலும், மாறுபாடுகள் பெரும்பாலும் இவை ஒரே தோற்றமுள்ள இனமாக கருதப்படுகின்றன.[3]
விளக்கம்
[தொகு]சிட்டுக்குருவியைவிடச் சற்று சிறிய இது சுமார் 14 செ. மீ. நீளம் இருக்கும். இத தடித்த அலகு சாம்பல் நிறந் தோய்ந்த வெண்மையாகவும், விழிப்படலம் பழுப்பாகவும், கால்கள் பழுப்புத் தோய்ந்த ஊன் நிறத்திலும் இருக்கும். இப்பறவை கொண்டையற்று காணப்படும்.
ஆண் பறவையின் தலை உச்சி சாம்பல் நிறத்திலும், கன்னங்கள் வெண்மையாகவும் இருக்கும். கண் வழியாகக் கருங்கோடு செல்லக் காணலாம். உடலின் மேற்பகுதி மணல்-பழுப்பு நிறத்தில் இருக்கும். மார்பும் வயிறும் பழுப்புத் தோய்ந்த கரிய நிறத்தில் இருக்கும்.
பெண் பறவை குருவி ஊர்க்குருவியைப் போல ஆழ்ந்த நிறங்களின்றி மேலும் கீழும் தணற் பழுப்பாக இருக்கும்.
பரவலும் வாழிடமும்
[தொகு]சாம்பல் தலை வானம்பாடியானது சுமார் 1,000 மீ (3,300 அடி) உயரத்திற்குள் வாழ்கிறது. இவை இமயமலையில் இருந்து தெற்கே இலங்கை வரையும், மேற்கில் சிந்து ஆற்றில் இருந்து கிழக்கில் அசாம் வரையிலும் காணப்படுகின்றன. இவை இணையாகவோ சிறு கூட்டமாகவோ திறந்த விளைநிலங்களையும் மேய்ச்சல் நிலங்களையும் சார்ந்து காணப்படுகின்றன. கடற்கரை சார்ந்த மணற்பாங்கான புல் நிலங்களில் மிகுதியும் காண இயலும். இருப்பினும், இக்குருவிகள் பெரும்பாலும் இடம் விட்டு இடம் பெயர்வதில்லை.
நடத்தை
[தொகு]தரிசு நிலங்களில் கோணல்மாணலாக வெவ்வேறு திசைகளில் நடந்து செல்லும் இவை மண்ணின் நிறத்திலேயே இருப்பதால் கண்டுபிடிப்பது சற்று கடினம். இவை புல்விதை, தானியங்கள், பூச்சிகள் முதலியவற்றை உணவாகக் கொள்கின்றன. இனப்பெருக்கக் காலத்தில் ஆண் வானம்பாடி அருமையானதொரு கலிநடத்தை (aerobatic) அரங்கேற்றுகிறது. அப்போது இறக்கைகளை ஒருவித நடுங்கும் இயக்கத்துடன் அடித்தபடி சட்டென விண்ணை நோக்கி எழும்பும். சுமார் 30 மீ உயரம் சென்ற பிறகு இறக்கைகளைப் பக்கவாட்டில் குறுக்கிக்கொண்டு திடுமென கீழ் நோக்கி வீழும். வீழ்ந்த வேகத்திலேயே மீண்டும் மேல் நோக்கி எழும்பும். இவ்வாறு சில முறை செய்த பின்பு, ஏதாவது ஒரு கல்லில் அமைதியாக உட்கார்ந்து கொள்ளும். சிறிது நேரங்கழித்து மீண்டும் கலிநடம் தான்!! இவ்வாறு தன் கலிநடத்தை அரங்கேற்றும்போது ஒரு ரம்மியமான ஒலியை எழுப்பும். ஆண் வானம்பாடியின் இந்த வேடிக்கையான, ஆனால் ரசிக்கத்தகுந்த செயல்பாடு பெண் குருவியை இனச்சேர்க்கை பொருட்டு கவர்தலுக்காகவே என்று அறியப்படுகிறது.
இவை ஆண்டு முழுவதும் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் என்றாலும், பொதுவாக திசம்பர் முதல் மே வரையே இவை குறிப்பாக இனபுபெருக்கத்தில் ஈடுபடுகின்றன. புல், மயிர் முதலியவறைக் கொண்டு சிறிய தட்டு வடிவிலான கூட்டினைத் தரையில் குழியான பகுதியில் அமைக்கும். அதில் இரண்டு அல்லது மூன்று முட்டைகளை இடும். முட்டையானது மஞ்சள் தோய்ந்த வெண்மையாகப் பழுப்புப் புள்ளிகளோடும் கறைகளோடும் காணப்படும்.
இனப்பெருக்கம்
[தொகு]தென்னிந்தியாவில் காணப்படும் பிற வானம்பாடிகள்
[தொகு]- புதர் வானம்பாடி (Mirafa assamica)
- சிகப்புவால் வானம்பாடி (Ammomanes phoenicurus)
- கிழக்கத்திய வானம்பாடி (Alanda gulgula)
- கொண்டை வானம்பாடி (Galerida cristata)
படத்தொகுப்பு
[தொகு]-
ஆண்பறவை கொல்கத்தா அருகில் உள்ள நரேந்திரபூர்ரில்.
-
ஆண்பறவை
-
பெண்பறவை
-
ஆண்பறவை ஐதராபாத், இந்தியா.
-
ஆண்பறவை ஐதராபாத், இந்தியா.
-
ஆண்பறவை ஐதராபாத், இந்தியா.
-
ஆந்திரப் பிரதேசத்தின் புவனகிரிக்கு அருகில்
-
ஆந்திரப் பிரதேசத்தின் புவனகிரிக்கு அருகில்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Eremopterix griseus". IUCN Red List of Threatened Species 2016: e.T22717228A94525125. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22717228A94525125.en. https://www.iucnredlist.org/species/22717228/94525125. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ "Eremopterix griseus - Avibase". avibase.bsc-eoc.org. பார்க்கப்பட்ட நாள் 2016-11-18.
- ↑ Mayr E; J C Greenway Jr., eds. (1960). Check-list of birds of the world. Volume 9. Cambridge, Massachusetts: Museum of Comparative Zoology. p. 32.