உள்ளடக்கத்துக்குச் செல்

லேவ் லந்தாவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லேவ் லந்தாவு
Lev Landau
பிறப்புலேவ் தாவீதவிச் லந்தாவு
(1908-01-22)22 சனவரி 1908
பக்கூ, அசர்பைஜான், உருசியப் பேரரசு
இறப்பு 1 ஏப்ரல் 1968(1968-04-01) (அகவை 60)
மாஸ்கோ, சோவியத் ஒன்றியம்
அடக்கத் தலம்நவோதவிச்சி மயானம், மாஸ்கோ
துறைகோட்பாட்டு இயற்பியல்
பணியிடங்கள்கார்க்கோவ் பல்தொழில்நுட்பக் கழகம், கார்க்கோவ் பல்கலைக்க்ழகம் (பின்னர் கார்க்கோவ் இயற்பியல், தொழில்நுட்பக் கல்விக் கழகம்)

மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்
கல்விபக்கூ பொருளியல் தொழில்நுட்பப் பள்ளி
கல்வி கற்ற இடங்கள்பக்கூ அரசுப் பல்கலைக்கழகம்
லெனின்கிராது அரசுப் பல்கலைக்கழகம் (பட்டயம், 1927)
லெனின்கிராது இயற்பியல்-தொழில்நுட்பக் கழகம் (D.Sc., 1934)
கற்கை ஆலோசகர்கள்நீல்சு போர்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
அலெக்சி அப்ரிக்கோசொவ்
ஈசாக் கலாத்னிகோவ்
ஏனைய குறிப்பிடத்தக்க மாணவர்கள்எவ்கேனி லீப்சிட்சு
அறியப்படுவது[லந்தாவு ஒடுக்கம்
லந்தாவு பரவல்
லந்தாவு அளவி
லந்தாவு முனைவு
லந்தாவு ஏற்புத்திறன்
மீப்பாய்மத்தன்மை
மீக்கடத்துதிறன்
விருதுகள்இசுட்டாலின் பரிசு (1946)
மேக்ஸ் பிளாங்க் பதக்கம் (1960)
இயற்பியலுக்கான நோபல் பரிசு (1962)
துணைவர்துரொபன்சேவா (தி. 1937; 1 மகவு) (1908–1984)

லேவ் தாவீதவிச் லந்தாவு (Lev Davidovich Landau, 22 சனவரி 1908 – 1 ஏப்ரல் 1968) என்பவர் கோட்பாட்டு இயற்பியலில் பெரும் பங்காற்றிய சோவியத் இயற்பியலறிஞர் ஆவார்.[1] இவரது சாதனைகளில், குவாண்டம் இயங்கியலில் (ஜான் வான் நியுமேன் உடன்) அடர்த்தி அணி முறையின் தன்னிச்சையான இணைக் கண்டுபிடிப்பு,[2][3] காந்த விலக்கத்தன்மையின் குவாண்டம் விசையியல் கொள்கை, மீப்பாய்மத்தன்மை கொள்கை, இரண்டாம்-படி நிலைமாற்றங்களின் கொள்கை, மீக்கடத்துதிறனின் கின்சுபூர்க்-லந்தாவு தொள்கை, பெர்மி திரவக் கொள்கை, அயனிமத்தில் லந்தாவு ஒடுக்கத்திற்கான விளக்கம், குவாண்டம் மின்னியக்கவியலில் லந்தாவு முனை, நியூட்ரினோக்களின் இரட்டை உறுப்புக் கொள்கை, S அணி அருநிலைகளின் லந்தாவு சமன்பாடுகள் ஆகியன குறிப்பிடத்தக்கவை ஆகும்.[4] மீப்பாய்மத்தன்மையில் கணிதக் கொள்கைக்கான விளக்கத்தில் இவரது பங்களிப்புகளுக்காக இவருக்கு 1962 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[5]

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]
லந்தாவு குடும்பம், 1910

லந்தாவு 1908 சனவரி 22 இல் யூதக் குடும்பத்தில்[5][6][7][8] அன்றைய உருசியப் பேரரசின் கீழிருந்த அசர்பைஜான், பக்கூ நகரில் பிறந்தார். இவரது தந்தை தாவீது லிவோவிச் லந்தாவு உள்ளூர் எண்ணெய்த் தொழிற்சாலையில் பொறியியலாளராகப் பணியாற்றியவர். தாயார் லியூபோவ் கார்க்கவி ஒரு மருத்துவர்.[9] கணிதத்தில் ஒரு சிறுமுது அறிஞராக விளங்கிய லேவ் லந்தாவு 12 வயதில் வகை நுண்கணிதத்தையும், 13-ஆம் ஆகவையில் தொகையீட்டையும் கற்றுத் தேர்ந்தார். பக்கூ பொருளியல் தொழில்நுட்பப் பள்ளியில் ஓராண்டு உயர்கல்வி கற்று பின்னர் பக்கூ மாநிலப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல், மற்றும் கணிதத் துறையிலும், வேதியியல் துறையிலும் படித்துப் பட்டம் பெற்றார்.

1924-ஆம் ஆண்டில், லெனின்கிராட் அரசுப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் இணைந்து 1927 ஆம் ஆண்டில் கோட்பாட்டு இயற்பியலில் பட்டம் பெற்றார். பின்னர் லெனின்கிராது இயற்பியல்-தொழில்நுட்பக் கழகத்தில் 1934 ஆம் ஆன்டில் இயற்பியல் மற்று கணித அறிவியல்களின் முனைவர் பட்டம் பெற்ரார்.[10] 1929-31 ஆம் ஆண்டுகளில் புலமைப்பரிசில் பெற்று ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றினார். இக்காலப்பகுதியில் அவர் இடாய்ச்சு மொழியையும், பிரெஞ்சு மொழியையும் கற்றுத் தேறி, ஆங்கிலத்திலும் இலகுவாகத் தொடர்பாட முடிந்தது.[11]

கோட்டிங்கன், லைப்சிக் ஆகிய நகரங்களில் ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர், 1930 இல் கோபனாவன் சென்று அங்கு, நீல்சு போர் கல்விக்கழகத்தில் பணியாற்றி, நீல்சு போரின் மானவரானார். அதன் பின்னர் கேம்பிரிட்ச் சென்று பால் டிராக்குடன் இனைந்து பணியாற்றினார்.[12][13] 1930-31 இல் சூரிக்கில் உவூல்ஃபுகாங் பவுலியுடன் பணியாற்றினார்.[12]

1932-37 காலப்பகுதியில், லந்தாவு உக்ரைனில் கார்கீவ் இயற்பியல் தொழில்நுட்பக் கல்விக்கூடத்தில் கோட்பாட்டு இயற்பியல் துறைக்கு தலைமைதாங்கிப் பணியாற்றினார். இவரது இயற்பில் துறையை பொதுவாக "லந்தாவு பள்ளி" எனக் குறிப்பிடுவர். கார்கீவில் இவரும், இவரது நண்பரும் முன்னாள் மாணவருமான எவ்கேனி லீப்சிட்சும் இணைந்து கோட்பாட்டு இயற்பியலில் பல்கலைக்கழகப் பட்டப்படிப்புக்கான பாட நூல் தொகுப்பைப் பத்து பாகங்களாக எழுதி வெளியிட்டனர். இந்நூல்கள் இன்றும் இயற்பியல் பட்டப்படிப்புத் துறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 1932-இல், லந்தாவு சந்திரசேகர் வரையறையைத் துல்லியமாகக் கணித்தார்.[14] ஆனாலும், அவர் இதனை வெள்ளிக் குறு விண்மீன்களுக்குப் பயன்படுத்தவில்லை.[15] பெரும் துப்புரவாக்கக் காலத்தில் (1937-38), லந்தாவும் அவரது இரண்டு சகாக்களும் கார்க்கீவில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர். ஆனாலும், லந்தாவு விசாரணைகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். பின்னர் அவர் மாஸ்கோ சென்றார்.[16]

சிறைச்சாலையில் லந்தாவு, 1938-9

1937 முதல் 1962 வரை லந்தாவு மாஸ்கோவில் இயற்பியல் சிக்கல்களுக்கான கல்விக்கழகத்தில் கோட்பாட்டு இயற்பியல் துறைக்குத் தலைமை தாங்கிப் பணியாற்றினார்.[17] 1938 ஏப்ரல் 27 இல் இசுட்டாலினிசத்தை நாட்சிசத்துடன் ஒப்பிட்டமைக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.[16][18] அன்று புகழ்பெற்ர உருசிய இயற்பியல் அறிஞர் பியோத்தர் காப்பித்சா அரசுத்தலைவர் யோசப் இசுட்டாலினுக்குக் கடிதம் எழுதினார். அதில் அவர் லந்தாவுவின் செயலுக்குத் தாம் பொறுப்பெடுப்பதாகவும், லந்தாவு விடுதலை செய்யப்படாவிடில், தாம் இயற்பியல் பள்ளியில் இருந்து விலகப்போவதாகவும் தெரிவித்தார்.[19] சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், லந்தாவு காப்பித்சாவின் மீப்பாய்மத்தன்மையை ஒலி அலைகள் அல்லது போனோன்களைக் கொண்டு விளக்கினார்.[16]

லந்தாவு அணு மற்றும் ஐதரசன் குண்டுகளுக்கான வளர்ச்சியை ஆதரிக்கும் சோவியத் கணிதவியலாளர்கள் குழுவிற்குத் தலைமை தாங்கி செயற்பட்டார். முதலாவது சோவியத் வெப்ப அணுகுண்டின் இயக்கத்தைக் கணித்தார். இவ்வாக்கத்திற்காக இவருக்கு 1949 இலும், 1953 இலும் இவருக்கு இசுட்டாலின் பரிசு வழங்கப்பட்டது. 1954 இவருக்கு சோசலிசத் தொழிலுக்கான வாகையாளர் விருது வழங்கப்பட்டது.[16]

நோபல் பரிசு

[தொகு]

மீப்பாய்மத்தன்மையில் கணிதக் கொள்கைக்கான விளக்கத்தில் இவரது பங்களிப்புகளுக்காக இவருக்கு 1962 ஆம் ஆண்டிற்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. திரவ ஈலியத்தின் இயல்புகளை 2.17 K (−270.98 °C) வெப்பநிலைக்குக் கீழ் இவரது கணிப்புகள் விளக்குகின்றன[20]

கடைசி ஆண்டுகள்

[தொகு]

1962 சனவரி 7 இல், லந்தாவு பயணம் செய்த வாகனம் பாரவுந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில், கடும் காயமுற்று இரன்டு மாதங்கள் வரை ஆழ்மயக்கத்தில் இருந்தார். அதன் பின்னர், அவரது அறிவியல் ஆக்கத்திறன் சிதைவடைந்தது.[17] பின்னர் அவர் என்றுமே தமது வழமையான ஆய்வுத் துறைக்குத் திரும்பவில்லை. இதனால் அவர் 1962 நோபல் பரிசை நேரடியாகச் சென்று பெற முடியவில்லை.[21]

1965 இல் அவரது முன்னாள் மாணவர்களும் பணியாலர்களும் இணைந்து மாஸ்கோவிற்கு அருகில் செர்னகோலவ்கா நகரில் லந்தாவு கோட்பாட்டு இயற்பியல் கல்விக்கழகத்தை ஆரம்பித்தனர். ஈசாக் கலாத்னிகோவ் இதற்குத் தலைமை தாங்கி நடத்தினார்.

மறைவு

[தொகு]

லந்தாவு 1968 ஏப்ரல் 1 இல் தனது 60-வது அகவையில் காலமானார்.[22]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Rosen, Joe. Encyclopedia of Physics. Facts on File. p. 177.
  2. Lev Landau (1927). "Das Dämpfungsproblem in der Wellenmechanik (The Damping Problem in Wave Mechanics)". Zeitschrift für Physik 45 (5–6): 430–441. doi:10.1007/bf01343064. Bibcode: 1927ZPhy...45..430L.  English translation reprinted in: D. Ter Haar, ed. (1965). Collected papers of L.D. Landau. Oxford: Pergamon Press.
  3. Schlüter, Michael; Lu Jeu Sham (1982). "Density functional theory". Physics Today 35 (2): 36. doi:10.1063/1.2914933. Bibcode: 1982PhT....35b..36S. http://www.physicstoday.org/resource/1/phtoad/v35/i2/p36_s1. 
  4. Shifman, M., ed. (2013). Under the Spell of Landau: When Theoretical Physics was Shaping Destinies. World Scientific. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1142/8641. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-981-4436-56-4.
  5. 5.0 5.1 Kapitza, P. L.; Lifshitz, E. M. (1969). "Lev Davydovitch Landau 1908–1968". Biographical Memoirs of Fellows of the Royal Society 15: 140–158. doi:10.1098/rsbm.1969.0007. 
  6. Martin Gilbert, The Jews in the Twentieth Century: An Illustrated History, Schocken Books, 2001, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0805241906 p. 284
  7. Frontiers of physics: proceedings of the Landau Memorial Conference, Tel Aviv, Israel, 6–10 June 1988, (Pergamon Press, 1990) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080369391, pp. 13–14
  8. Edward Teller, Memoirs: A Twentieth Century Journey In Science And Politics, Basic Books 2002, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0738207780 p. 124
  9. "Great Baku native Lev Landau". Vestnik Kavkaza.
  10. František Janouch, Lev Landau: A Portrait of a Theoretical Physicist, 1908–1988, Research Institute for Physics, 1988, p. 17.
  11. Rumer, Yuriy. ЛАНДАУ. berkovich-zametki.com
  12. 12.0 12.1 Mehra, Jagdish (2001) The Golden Age of Theoretical Physics, Boxed Set of 2 Volumes, World Scientific, p. 952. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9810243421.
  13. During this period Landau visitied Copenhagen three times: 8 April to 3 May 1930, from 20 September to 22 November 1930, and from 25 February to 19 March 1931 (see Landau Lev biography – MacTutor History of Mathematics).
  14. On the Theory of Stars, in Collected Papers of L. D. Landau, ed. and with an introduction by D. ter Haar, New York: Gordon and Breach, 1965; originally published in Phys. Z. Sowjet. 1 (1932), 285.
  15. Yakovlev, Dmitrii; Haensel, Pawel (2013). "Lev Landau and the concept of neutron stars". Physics-Uspekhi 56 (3): 289. doi:10.3367/UFNe.0183.201303f.0307. 
  16. 16.0 16.1 16.2 16.3 Gorelik, Gennady (August 1997). "The Top-Secret Life of Lev Landau". சயன்டிஃபிக் அமெரிக்கன். JSTOR 24995874. பார்க்கப்பட்ட நாள் 2018-06-18.
  17. 17.0 17.1 Dorozynsk, Alexander (1965). The Man They Wouldn't Let Die.
  18. Музей-кабинет Петра Леонидовича Капицы (Peter Kapitza Memorial Museum-Study), Академик Капица: Биографический очерк (a biographical sketch of Academician Kapitza).
  19. Richard Rhodes, Dark Sun: The Making of the Hydrogen Bomb, pub Simon & Schuster, 1995, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0684824140 p. 33.
  20. "Lev Davidovich Landau, Soviet physicist and Nobel laureate". Physics Today 57 (2): 62. 2004. doi:10.1063/1.2408530. Bibcode: 2004PhT....57Q..62.. 
  21. Nobel Presentation speech by Professor I. Waller, member of the Swedish Academy of Sciences. Nobelprize.org. Retrieved on 28 January 2012.
  22. Obelisk at the Novodevichye Cemetery. novodevichye.com (26 October 2008). Retrieved on 28 January 2012.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லேவ்_லந்தாவு&oldid=3792469" இலிருந்து மீள்விக்கப்பட்டது