உள்ளடக்கத்துக்குச் செல்

ஆழ்மயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆழ்மயக்கம் (Coma=கோமா) என்பது வலியை ஏற்படுத்தும் தூண்டல்களுக்கோ, ஒளி, அல்லது ஒலிக்கோ எந்த ஒரு எதிர்வினையும் காட்டாமல் இருப்பதுடன், தன்னிச்சையாக எந்தவொரு இயக்கத்தையோ / செயலையோ செய்ய முடியாமல், சாதாரணமாக உறங்கி, விழித்திருக்கும் வட்டத்தை இழந்து, ஆறு மணித்தியாலங்களுக்கு மேலாக, உணர்வுகளை இழந்து, விழித்தெழச் செய்ய முடியாத நிலையில் தொடரக்கூடிய ஒரு மருத்துவ நிலைமையைக் குறிக்கும்[1]. ஆனாலும் கிளாஸ்கோ ஆழ்மயக்க வரையறையின்படி (Glasgow Coma Scale) [2][3], குழப்பத்திலுள்ளவர்களையும் மிதமான ஆழ்மயக்கத்தில் உள்ளவர்களாகக் கொள்ளலாம்[4]. இந்த ஆழ்மயக்கமானது, உணர்விழந்த நிலை, உணர்விழந்த மயக்க நிலை, செயலிழந்த மயக்க நிலை, நினைவற்ற நிலை என பலவகையாக அழைக்கப்படும். இது ஆங்கிலத்தில் கோமா (Coma) என அழைக்கப்படும். கோமா என்பது ஆழ்ந்த உறக்கத்தைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான κῶμα என்பதிலிருந்து பெறப்பட்டதாகும்.

இந்த ஆழ்மயக்கமானது பல்வேறு காரணங்களால் ஏற்படும். இக்காரணிகள் மைய நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்போது இந்நிலைமை தோன்றும். விதிமுறைகளை மீறிய, தவறான போதைப்பொருள் பாவனை, தவறான அல்லது அளவுக்கதிகமான மருந்துகளின் பாவனை போன்றவற்றால் ஏற்படும் நச்சூட்டுப் பாதிப்பு; வளர்சிதைமாற்றத்தில் ஏற்படும் அசாதாரண நிலைகள்; மைய நரம்பு மண்டல நோய்கள்; பக்கவாதம், குடலிறக்கம், இரத்தச் சர்க்கரைக் குறைவு போன்றவற்றால் ஏற்படும் தீவிரமான நரம்பியல் பாதிப்புகள்; வாகன விபத்து, உயரத்திலிருந்து விழுதல் போன்ற நிலைமைகளில் ஏற்படும் பேரதிர்ச்சிப் பாதிப்புகள் போன்றன ஆழ்மயக்கத்திற்கான காரணங்களாக அமைகின்றன. நிலசமயம், மூளையில் பேரதிர்ச்சி ஏற்பட்ட நிலையில், மூளையின் தொழிற்பாட்டை பாதுகாப்பதற்காகவும், சில நோய் நிலைகள், அல்லது காயங்களின் தாக்கத்தால் ஏற்படும் வலி அதிகமாக இருக்கும் வேளையில், அளவுக்கு மீறிய வலியிலிருந்து நோயாளியைப் பாதுகாப்பதற்காகவும், சில மருத்துவ சிகிச்சை முறைகளின் தீவிரத்தன்மையை நோயாளி தாங்க முடியாமல் இருக்கும் எனும்போதும், திட்டமிட்டு, சில குறிப்பிட்ட மருந்துகளை பயன்படுத்தி, இவ்வகையான ஆழ்மயக்கத்திற்கு நோயாளி கொண்டு செல்லப்படுவதும் உண்டு.

அறிகுறிகள்[தொகு]

Video of a man at beginning of documented 3 month coma.[5]
Video of the man still nonresponsive to stimuli.[6]
Video of the man playing with his kids nearly out of 3 month coma.[7]
Video of the man walking 2 weeks after 3 month coma.[8]

பொதுவாக ஆழ்மயக்கத்திற்கு உட்பட்ட ஒரு நோயாளி;

 • தன்னிச்சையாக கண்களை திறக்க முடியாமல் இருப்பார்.
 • வழமையான உறக்கம் / விழிப்பு வட்டத்தின்படி செயற்பட முடியாமல் இருப்பார்.
 • பெரிய வலிகளுக்கு எதிர்வினையாற்றாமல் இருப்பார்.
 • பேச்சுத் தூண்டல்களுக்கும் செவிசாய்க்காதிருப்பார்.
 • கிளாஸ்கோ ஆழ்மயக்க வரையறையின்படி [2],[3] 3 - 8 நிலையில் இருப்பார்.

மனிதரில் பேரதிர்ச்சி, காயங்கள் ஏற்படும்போது, வழமையான உடற் தொழிற்பாடுகளை நிறுத்திவிட்டு, உடனடியாக காயத்தை குணப்படுத்தும் செயற்பாட்டை கவனிப்பதற்காக இவ்வகையான ஆழ்மயக்கம் ஏற்படலாம். மேலதிகமாக ஆற்றல் செலவிடப்படுவதை ஈடு செய்வதற்காக இந்நிலை உண்டாகின்றது. ஆழ்மயக்கத்திற்கான காரணியின் தீவிரத்தன்மை, ஆழ்மயக்கம் தோன்றிய விதம் என்பவற்றைப் பொறுத்தே ஆழ்மயக்க நிலைகளும் வேறுபடும். ஆரம்பத்தில் ஒரு குழப்பநிலையாகத் தோன்றி பின்னர் நீண்ட ஆழ்மயக்கமாக மாறுவதும் உண்டு. சிலசமயம் பேரதிர்ச்சிகள் ஏற்படும்போது, சடுதியாக நேரடியாகவே நீண்ட மயக்கத்திற்குச் சென்று விடுவதும் உண்டு. இப்படியான மயக்கம் 6 மணித்தியாலத்திற்கு உட்பட்டதாக இருப்பின், அதனை ஆழ்மயக்கம் என வரைவிலக்கணப்படுத்துவது இல்லை. ஆனாலும் அவர் ஆழ்மயக்க அனுபவத்தைப் பெற்றவராக குறிப்பிடலாம்.

நோயறிதல் (Diagnosis)[தொகு]

ஆழ்மயக்க நோய்நிலையை அறிதல் இலகுவாயினும், அதற்குக் காரணமான நோய்நிலைமையை அறிதல் இலகுவல்ல.

ஆழ்மயக்கத்துக்கு உட்பட்ட ஒரு நோயாளியின் நிலையை ஒருநிலைப்படுத்த, முதல் சிகிச்சையாக வளி உள்ளெடுக்கும் வழியை தடைகளற்றதாக்கி (Airway), அவர் சிரமமின்றி மூச்சுவிடுவதற்கு (Breathing) உதவியளித்து, அவரது உடலில் சுற்றோட்டத் தொகுதியின் (Circulation) தொழிற்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும். இதனை ஆங்கிலத்தில் ABC (Airway, Breathing, Circulation) அடிப்படை சிகிச்சை என அழைப்பர்[9]. நோயாளி ஆழ்மயக்கத்தில் ஒரு தளம்பலற்ற நிலைக்கு வந்த பின்னர், அம்மயக்க நிலைக்கான சரியான காரணியை அறிவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இவ்வாய்வுகள் உடல் பரிசோதனை (Physical Examination) மூலமும், எலக்ட்ரோஎன்செஃபலோகிராஃபி (EEG) போன்ற விசேட ஆய்வுகள் மூலமும், இதய மின்துடிப்புப் பதிவி (ECG), காந்த அதிர்வு அலை வரைவு (MRI Scan), வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி (CT Scan) போன்ற இயல்நிலை வரைவு (Imaging) முறைகள் மூலமும் ஆராயப்படும்.

நோய்த்தாக்கக் கணிப்பு (Prognosis)[தொகு]

இப்படியான ஆழ்மயக்கத்திற்கு உட்பட்ட ஒருவர் மீண்டும் உணர்வு நிலையைப் பெறலாம். ஆழ்மயக்கத்தில் இருக்கும் காலம் மிகவும் வேறுபாட்டைக் கொண்டதாக இருக்கலாம். இக்காலமானது சில நாட்கள், சில கிழமைகள், சில மாதங்கள், சிலசமயம் சில ஆண்டுகள் வரையில் கூட நீடிக்கலாம். ஆழ்மயக்க நிலை முடிவடையும்போது, ஒருவர் சிறிது சிறிதாக, அதிலிருந்து மீண்டு, தன் சுயநினைவுக்கு கொண்டு வரப்படலாம். ஆழ்மயக்கத்திற்கு உட்பட்ட ஒருவர் மீண்டும் உணர்வு நிலைக்கு வராமலேயே இறந்து விடுவதும் உண்டு. ஆழ்மயக்கத்தில் இருந்து மீளும் ஒருவர் முழுமையாக தன் உணர்நிலையை அடையக் கூடும். அதேவேளை சிலசமயம், முழுமையான உணர்நிலைக்கு வராமல், மீளும்முயற்சியிலேயே நீண்டகாலம் இருந்து விடுவதும் உண்டு. இவ்வாறான நிலையில் நோயாளி ஒருவர் இருந்து, ஆவணப்படுத்தப்பட்ட அதி நீண்ட காலம் 37 ஆண்டுகள் ஆகும்[10].

ஆழ்மயக்க நோயாளி, அந்நிலையில் இருந்து மீள்வதும், அதற்கு எடுக்கும் காலமும், அல்லது இறப்பதும், அந்நிலையை ஏற்படுத்திய காரணி, ஏற்பட்ட இடம், அதன் தீவிரத்தன்மை, நரம்புத் தொகுதியில் ஏற்படும் பாதிப்பின் அளவு என்பவற்றில் தங்கியிருக்கும். சிலசமயம் அதிகளவு ஆழ்மயக்கத்தில் இருப்பவர் விரைவில் குணமாகி மீண்டு வருவதையும், மிதமான ஆழ்மயக்கத்திற்கு உட்படுபவர், அந்நிலையில் இருந்து மீளாமலே, முன்னேற்றம் எதுவுமின்றி இருந்து விடுவதையும் கூட அவதானிக்கலாம்.

ஆழ்மயக்க நிலையில் இருந்து மீண்டு வருபவர்கள் பல்வேறு வகையான உடல், மனப் பிரச்சனைகளை எதிர் நோக்க வேண்டி இருப்பதனால், அவர்களுக்கு விசேட கவனம் வழங்கப்பட வேண்டும். சிறிது சிறிதாகவே உணர்வுகள் மீளப் பெறப்படும். ஆரம்பத்தில் சில நிமிடங்கள் மட்டும் விழிப்பார்கள். பின்னர் படிப்படியாக விழித்திருக்கும் நேரம் கூடும். படிப்படியாக அவர்கள் தமது உணர்வுநிலையை மீளப்பெற சிறிதளவு காலம் தேவைப்படும். ஆரம்பத்தில் அவர்களுக்கு பல குழப்பங்கள் இருக்கும். பலர் முழுமையான மீட்சியைப் பெறும் அதேவேளை சிலர், குறிப்பிட்ட சில அடிப்படையான உணர்வுகளை மட்டுமே மீளப் பெறுகின்றனர்[11].

நரம்புத் தொகுதியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை அளவிடக்கூடிய முறையை, அதன் திறனைப் பொறுத்து, மீட்சியைப் பற்றிய முன் கணிப்பு அமையும். பொதுவாக புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டே இவ்வகையான முன் கணிப்புக்கள் அமைகின்றன. ஆழ்மயக்கத்தில் ஒருவர் இருக்கும் காலத்தைப் பொறுத்து அவரது மீட்சி நிலையும் அமைவது அவதானிக்கப்பட்டுள்ளது. மூளைப் பாதிப்பினால் ஏற்பட்ட ஆழ்மயக்கத்தில் ஒருவர் 4 மாதங்கள் இருந்திருந்தால், அவர் பகுதியாக மீட்சியடைவதற்கான சந்தர்ப்பம் 15% ஆகவும், முழுமையான மீட்சி அடைவதற்கான சந்தர்ப்பம் மிகவும் குறைவாகவுமே இருக்கும்[12][13]

ஒருவரின் மீட்சிக் காலத்தில், அதிக நாட்கள் படுக்கையிலேயே அசைவற்று இருப்பாராயின், நுரையீரல் அழற்சி போன்ற தொற்றுநோய்கள் ஏற்படின் அது அவரது இறப்பில் முடிவடைவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகும். சிலசமயம் பல வருடங்களின் பின்னரும்கூட உணர்வுநிலையைப் பெற்றவர்களும் உள்ளனர். Terry Wallis என்பவர் 19 வருடங்கள் மிகக் குறைந்த உணர்வு நிலையில் இருந்த பின்னர், தானாகவே பேசத் தொடங்கி, தனது சூழல்பற்றிய புரிந்துணர்வைப் பெற்றார்[14]. அதேபோல் போலந்து நாட்டைச் சேர்ந்த Jan Grzebski என்பவர் 19 ஆண்டுகள் ஆழ்மயக்கத்திற்குப் பின்னர் 2007 இல் விழித்துக் கொண்டார்.

மூளைப் பாதிப்பு காரணமாக ஆறு ஆண்டுகளாக ஆழ்மயக்கம் போன்ற நிலையில் இருந்த ஒரு மனிதனை, 2003 ஆம் ஆண்டு மருத்துவர்கள், மின்வாயிகளை அவரது மூளையில் ஆழமாக செலுத்தியதன் மூல உணர்நிலைக்கு கொண்டு வந்தனர்[15]. இது ஆழமான மூளைத் தூண்டல் (DBS - Deep Brain Stimulation) வழிமுறையாகும். அமெரிக்காவைச் சேர்ந்த 38 வயதான அந்த மனிதர் மிகக் குறைந்தளவு உணர்நிலையைக் (MCS - Minimum Conscious State) கொண்டிருந்தார். மிகக் குறைந்த உணர்நிலை என்னும்போது, ஆழ்மயக்க நோயாளிகள் போலன்றி, இவர்களில் இடையிடையே, குறுகிய சூழல்பற்றிய உணர்வும், தன்விழிப்பு நிலையும் ஏற்படும்.

ஆழ்மயக்கமானது சில வினாடிகளிலிருந்து சில நிமிடங்கள் வரை நீண்டிருப்பின், அவரது மூளை பாதிப்பின் காரணமாக ஏற்படக்கூடிய அதிர்ச்சிக்குப் பின்னான மறதி (PTA - Post Traumatic Amnesia) சில மணித்தியாலம் முதல் சில நாட்கள் வரை நீடிப்பதுடன், மீட்சிக்கான காலம் சில நாட்கள் முதல் சில கிழமைகள் வரை நீடிக்கலாம். ஆழ்மயக்கம் சில மணித்தியாலங்களோ, சில நாட்களோ தொடர்ந்திருப்பின், அவரது அதிர்ச்சிக்குப் பின்னான மறதி சில நாட்கள் முதல் சில கிழமைகள் வரை நீடிப்பதுடன், மீட்சிக்கான காலம் சில மாதங்கள் வரை நீடிக்கலாம். ஆழ்மயக்கமானது சில கிழமைகளுக்குத் தொடர்ந்து இருக்குமாயின், அவரது அதிர்ச்சிக்குப் பின்னான மறதி சில மாதங்களுக்கு நீடிப்பதுடன், மீட்சிக்கான காலம் பல மாதங்களுக்கோ, சில ஆண்டுகளுக்கோ கூட நீடிக்கலாம்.

சிகிச்சையும் மீட்சியும்[தொகு]

மருத்துவ சிகிச்சை[தொகு]

ஆழ்மயக்கம் என்பது ஒரு மருத்துவ அவசரநிலை அல்லது நெருக்கடிநிலை ஆகும். எனவே உடனடியாக அவருக்கான மூச்சுவிடல் உதவியும், சுற்றோட்டத் தொகுதி சரியான முறையில் தொழிற்படுவதற்கான உதவியும் வழங்கப்பட வேண்டும். மூச்சுவிடுவதற்காக குழாய்கள் வழியாக காற்றுவழங்கிகள் (Ventilators) உடலில் பொருத்தப்படுவதுடன், சிரை வழியாக திரவங்கள் அல்லது குருதி உட்செலுத்தப்பட்டு சுற்றோட்டமும், அதற்கு பக்கபலமாக தேவைப்படும் அனைத்து உதவிகளும் செய்யப்படும். நோயாளி ஆபத்தான கட்டத்தைத் தாண்டி, ஒரு சமநிலைக்கு வந்த பின்னர், அவரது உடல்நலம் தொடர்பான விடயங்களைக் கவனிக்கலாம். நுரையீரல் அழற்சி போன்ற தொற்றுநோய்கள், படுக்கைப் புண் என்பன ஏற்படாது தடுத்தலும், சமச்சீர் ஊட்டச்சத்து வழங்கலும் முக்கியமானதாகும்[16]. ஆழ்மயக்கத்தின் எந்த நிலையில் உள்ளார் என்பதைப் பொறுத்து, அவரை வேறுபட்ட அசைவு நிலைகளுக்கு உட்படுத்தலாம். படுக்கையிலேயே இருப்பவராயின் வலம், இடமாக திருப்பி விடலாம். ஓரளவு உணர்வு நிலையுள்ளவராயின், இடையிடையே நாற்காலியில் உட்காரச் செய்யலாம்.

ஆழ்மயக்க நிலைக்கு ஆட்பட்ட சிலர் மிகவும் அமைதியற்ற நிலையிலும், தம்மைத்தாமே காயப்படுத்திக் கொள்ளக் கூடிய நிலையிலும் இருப்பர். அவர்களை அமைதியாக்க தேவையான மருந்துகள் வழங்கப்படலாம். நோயாளிகள் படுக்கையிலிருந்து விழுந்து விடாமல் இருக்க, கட்டிலின் கரைகளில் பாதுகாப்பு வளையங்களை வைக்கலாம்[16].

உணர்ச்சி சார்பான சவால்கள்[தொகு]

ஆழ்மயக்க நோயாளிகளில் குடும்ப உறுப்பினர்கள் பலவகையான உணர்ச்சிகளைக் கொண்டிருப்பர். நோயாளிகளை கவனித்துக் கொள்வதில் முக்கிய பங்கு அளிப்பவர்களிடமும் பல்வேறு உணர்ச்சிக் குழப்பங்கள் காணப்படும். பொதுவாக நம்பிக்கை இழந்த தன்மை, கோபம், விரக்தி, மறுப்பு போன்ற குணங்கள் ஏற்படும் சாத்தியங்கள் காணப்படும். குடும்ப உறுப்பினர்களின் சுமூகமான உறவு, மருத்துவ பணியாளர்களுடன் ஏற்படக்கூடிய நல்லெண்ணம் போன்றன நோயாளிகள் குணமடைவதற்கு மேலும் உதவலாம்[17]

சமூகமும், கலாச்சாரமும்[தொகு]

Dr. Eelco Wijdicks என்பவர் திரைப்படங்களில் ஆழ்மயக்கம் பற்றிய சித்தரிப்பு எவ்வாறு உள்ளதென்பதை ஆய்வு செய்து, மே 2006 இல் Neurology எனப்படும் மருத்துவ ஆய்விதழில் முடிவுகளை வெளியிட்டார். 1970 இலிருந்து 2004 வரையான காலத்தில் வெளிவந்த, ஆழ்மயக்கம் தொடர்பான 30 திரைப்படங்களை இவர் தனது ஆய்வுக்காக பார்வையிட்டார். அதில் இரு திரைப்படங்கள் மட்டுமே ஒரு ஆழ்மயக்கத்தால் பாதிக்கப்பட்ட நோயாளியின் உண்மையான நிலையையும், நோயாளி விழித்திருப்பதற்காக காத்திருக்கும் வேதனையையும் சரியான முறையில் சித்தரித்து இருப்பதாக முடிவைக் கூறியுள்ளார். Reversal of Fortune (1990) உம், The Dreamlife of Angels (1998) உமே அவ்விரு படங்களாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஏனைய 28 படங்களும் ஆழ்மயக்கத்தில் இருப்பவர் மிகவும் வியக்கத்தக்க வகையில் திடீரென விழிப்பது போலவும், பக்க விளைவுகள் எதுவுமற்று அவர்கள் தொடர்வதுபோலவும், சிகிச்சைகள் மற்றும் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் யதார்த்தமற்றவையாக இருப்பதாகவும் விமர்சித்துள்ளார்.[18]

மேற்கோள்கள்[தொகு]

 1. Weyhenmyeye, James A.; Eve A. Gallman (2007). Rapid Review Neuroscience 1st Ed. Mosby Elsevier. pp. 177–9. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-323-02261-8.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
 2. 2.0 2.1 'Glascow Coma Scale' in Wikipedia
 3. 3.0 3.1 "Glascow Coma Scale". Archived from the original on 2018-06-04. பார்க்கப்பட்ட நாள் 2011-09-13.
 4. Teasdale G, Jennett B. (1974). ""Assessment of coma and impaired consciousness. A practical scale."". The Lancet 13 (2(7872)): 81-84. 
 5. "Video of Aaron Cohen at beginning of documented 3 month coma".
 6. "Video of Aaron Cohen still nonresponsive to stimuli while in coma".
 7. "Video of Aaron Cohen nearly out of 3 month coma".
 8. "Video of Aaron Cohen walking 2 weeks after 3 month coma".
 9. [1]
 10. According to the Guinness Book of Records, the longest period spent in coma was by Elaine Esposito. She did not wake up after being anaesthetized for an appendectomy on August 6, 1941, at age 6. She died on November 25, 1978 at age 43 years 357 days, having been in a coma for 37 years 111 days.
 11. NINDS (October 29, 2010). "Coma Information Page: National Institute of Neurological Disorders and Stroke (NINDS)". Archived from the original on 2010-12-04. பார்க்கப்பட்ட நாள் 2010-12-08.
 12. Formisano R, Carlesimo GA, Sabbadini M, et al. (May 2004). "Clinical predictors and neuropleropsychological outcome in severe traumatic brain injury patients". Acta Neurochir (Wien) 146 (5): 457–62. doi:10.1007/s00701-004-0225-4. பப்மெட்:15118882. 
 13. "brain injury .com | Coma traumatic brain injury - Brain Injury Coma". Archived from the original on 2011-07-08. பார்க்கப்பட்ட நாள் 2011-09-14.
 14. "Mother stunned by coma victim's unexpected words". The Sydney Morning Herald. 2003-07-12. http://www.smh.com.au/articles/2003/07/11/1057783356390.html. 
 15. "Electrodes stir man from six-year coma-like state". Cosmos Magazine. 2 August 2007 இம் மூலத்தில் இருந்து 16 டிசம்பர் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091216045016/http://www.cosmosmagazine.com/node/1513. 
 16. 16.0 16.1 "Coma" (PDF). Archived from the original (PDF) on 2010-06-27. பார்க்கப்பட்ட நாள் 2010-12-08.
 17. Coma Care (2010-03-30). "Caring for Care Giver and Family". Archived from the original on 2020-09-19. பார்க்கப்பட்ட நாள் 2010-12-08.
 18. Eelco F.M. Wijdicks, MD and Coen A. Wijdicks, BS (2006). "The portrayal of coma in contemporary motion pictures". Neurology 66 (9): 1300–1303. doi:10.1212/01.wnl.0000210497.62202.e9. பப்மெட்:16682658. http://www.neurology.org/cgi/content/abstract/66/9/1300. பார்த்த நாள்: 2009-11-25. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆழ்மயக்கம்&oldid=3705203" இலிருந்து மீள்விக்கப்பட்டது