உள்ளடக்கத்துக்குச் செல்

மெய்யெழுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிறப்பொலியியலில் (articulatory phonetics), மெய்யொலி (Consonant) என்பது, பேச்சு மொழியின் ஒரு ஒலிவகை ஆகும். நெஞ்சிலிருந்து வரும் காற்று வாய்ப்பகுதியில் தற்காலிகமாகத் தடைப்பட்டு வெளியேறும்போது மெய்யொலிகள் உருவாகின்றன. மெய்யொலிகள்,

எனப் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

தமிழ் அரிச்சுவடியில் க் தொடங்கி ன் வரையுள்ள 18 எழுத்துகளும் மெய்யெழுத்துகள் (consonant) எனப்படுகின்றன.[1] இவை வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.[2] வல்லொலிகளைக் கொண்ட மெய்யெழுத்துகள், வல்லினத்தையும் மெல்லொலிகளைக் கொண்டவை மெல்லினத்தையும் இவ்விரண்டுவகை ஒலிகளுக்கும் இடைப்பட்ட ஏனையவை இடையினத்தையும் சார்ந்தவை.[3]

வல்லினம் மெல்லினம் இடையினம்
க் ங் ய்
ச் ஞ் ர்
ட் ண் ல்
த் ந் வ்
ப் ம் ழ்
ற்[4] ன்[5] ள்[6]

மெய்யெழுத்துகள், உயிரெழுத்துகளுடன் சேர்ந்து உயிர்மெய் எழுத்துகளை உருவாக்குகின்றன.[7]

சொற்களில் மெய்யெழுத்துகளின் பயன்பாட்டுக்கான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:-

எழுத்து பெயர் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி ஒலிப்பு சொல்
க் ககரமெய் k க்கம்
ங் ஙகரமெய் ŋ ங்கம்
ச் சகரமெய் ச்சை
ஞ் ஞகரமெய் ɲ ஞ்சு
ட் டகரமெய் ɽ ட்டு
ண் ணகரமெய் ɳ ண்
த் தகரமெய் த்து
ந் நகரமெய் ந்து
ப் பகரமெய் p ப்பு
ம் மகரமெய் m ம்பு
ய் யகரமெய் j மெய்
ர் ரகரமெய் ɾ̪ பார்
ல் லகரமெய் ல்வி
வ் வகரமெய் ʋ வ்வு
ழ் ழகரமெய் ɻ வாழ்வு
ள் ளகரமெய் ɭ ள்ளம்
ற் றகரமெய் r வெற்றி
ன் னகரமெய் n ன்பு

தற்காலத்தில், க்ஷ், ஜ், ஸ், ஷ், ஹ் ஆகிய கிரந்த மெய்யெழுத்துகளும் தமிழ் உரைநடையில் பயன்படுத்தப்படுவதுண்டு. சொற்களில் அவற்றின் பயன்பாட்டுக்கான எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:-

எழுத்து பெயர் பன்னாட்டு ஒலிப்பியல் அரிச்சுவடி ஒலிப்பு சொல்
க்ஷ் க்ஷகரமெய் க்ஷ்மி
ஜ் ஜகரமெய் பூஜ்யம்
ஸ் ஸகரமெய் s ஸ்திரம்
ஷ் ஷகரமெய் ʂ புஷ்பம்
ஹ் ஹகரமெய் h ஹ்ரேன்

இலக்கணம்

[தொகு]

மொழி முதலில்

[தொகு]

தமிழ் இலக்கணப்படி, தனிமெய்யெழுத்துகள் மொழிமுதலில் வரமாட்டா.[8] ஆயினும், தற்காலத்தில் பிறமொழிச் சொற்களை எழுதும்போது தனிமெய்யெழுத்துகள் மொழிமுதலில் வருமாறும் (எ-டு: க்ரியா, த்ரிஷா) இவ்விலக்கணத்தை மீறி எழுதுவதுண்டு.[9]

க், த், ந், ப், ம் ஆகிய ஐந்து மெய்யெழுத்துகளும் பன்னிரண்டு உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும்.[10] சகர மெய்யானது அ, ஐ, ஔ ஆகிய மூன்று உயிரெழுத்துகளைத் தவிர்த்து, ஏனைய ஒன்பது உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும் எனத் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது.[11] ஆயினும், சகர மெய்யும் பன்னிரண்டு உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும் என நன்னூலில் கூறப்பட்டுள்ளது.[12] வகர மெய்யானது உ, ஊ, ஒ, ஓ ஆகிய நான்கு உயிரெழுத்துகளைத் தவிர்த்து, ஏனைய எட்டு உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும்.[13] ஞகர மெய்யானது ஆ, எ, ஒ ஆகிய மூன்று உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும் எனத் தொல்காப்பியத்தில் கூறப்பட்டிருந்தாலும், இவற்றோடு அகரத்தோடும் சேர்ந்து ஞகர மெய் மொழி முதலாகும் எனப் பவணந்தி நன்னூலில் கூறுகின்றார்.[14][15] யகர மெய்யானது ஆகாரத்தோடு மட்டும் சேர்ந்து மொழிக்கு முதலாகும் எனத் தொல்காப்பியர் கூறுகின்றார்.[16] எனினும், யகர மெய்யானது அ, ஆ, உ, ஊ, ஓ, ஔ ஆகிய ஆறு உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து மொழிக்கு முதலாகும் என்று பவணந்தி நன்னூலில் கூறுகின்றார்.[17] ஆயினும், அ, உ, ஊ, ஓ, ஔ ஆகிய உயிரெழுத்துகளுடன் சேர்ந்து யகர மெய் மொழி முதலாகுவதற்குக் காட்டப்படும் எடுத்துக்காட்டுகள் வடசொற்களாக இருப்பதைக் காரணங்காட்டி, பவணந்தியின் கூற்றை மறுப்பதுண்டு.[12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. னகார விறுவாய்ப்
    பதினெண் ணெழுத்து மெய்யென மொழிப.
    -தொல்காப்பியம் 9
  2. "ஒலிகளின் பாகுபாடு". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2015.
  3. இளம்பூரணர் (2010). தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணம். முல்லை நிலையம். pp. 18–19.
  4. வல்லெழுத் தென்ப க ச ட த ப ற.
    -தொல்காப்பியம் 19
  5. மெல்லெழுத் தென்ப ங ஞ ண ந ம ன.
    -தொல்காப்பியம் 20
  6. இடையெழுத் தென்ப ய ர ல வ ழ ள.
    -தொல்காப்பியம் 21
  7. "உயிர்மெய்". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2015.
  8. உயிர்மெய் யல்லன மொழிமுத லாகா.
    -தொல்காப்பியம் 60
  9. "எழுத்து வருகை வரலாறு". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 3 நவம்பர் 2015.
  10. கதந பமவெனு மாவைந் தெழுந்தும்
    எல்லா வுயிரொடுஞ் செல்லுமார் முதலே.
    -தொல்காப்பியம் 61
  11. சகரக் கிளவியு மவற்றோ ரற்றே
    அ ஐ ஔவெனு மூன்றலங் கடையே.
    -தொல்காப்பியம் 62
  12. 12.0 12.1 பண்டிதர் கா. நாகலிங்கம் (2000). செந்தமிழ் இலக்கண விளக்கம் முதலாம் பாகம். ஏழாலை மஹாத்மா அச்சகம். pp. 40–41.
  13. உ ஊ ஒ ஓ வென்னும் நான்குயிர்
    வ என் னெழுத்தொடு வருத லில்லை.
    -தொல்காப்பியம் 63
  14. ஆ எ
    ஒஎனு மூவுயிர் ஞகாரத் துரிய.
    -தொல்காப்பியம் 64
  15. அ ஆ எ ஒவ்வோடு ஆகும் ஞம்முதல்
    -நன்னூல் 105
  16. ஆவோ டல்லது யகரமுத லாது.
    -தொல்காப்பியம் 65
  17. அ ஆ உ ஊ ஓ ஔ யம்முதல்
    -நன்னூல் 104
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்யெழுத்து&oldid=3578106" இலிருந்து மீள்விக்கப்பட்டது