உள்ளடக்கத்துக்குச் செல்

க்ஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
க்ஷ்
தமிழில் பயன்படுத்தப்படும்
கிரந்த எழுத்துகள்

க்ஷ் (kṣ) என்பது கிரந்த எழுத்து முறையின் கூட்டெழுத்துகளில் ஒன்று. தமிழ் மொழியில் ஆரம்பத்தில் மணிப்பிரவாள நடையில் எழுதுவதற்கு இவ்வெழுத்துப் பயன்படுத்தப்பட்டு, இன்று பிறமொழிச் சொற்களை எழுதுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.[1] தற்காலத்தில் இவ்வெழுத்தை க்‌ஷ் என்றே எழுதுவதுமுண்டு (எடுத்துக்காட்டு: லக்ஷ்மி-லக்‌ஷ்மி).[2]

க்ஷகர உயிர்மெய்கள்[தொகு]

க்ஷகர மெய், 12 உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துகளையும் அவற்றின் பெயர்களையும் கீழுள்ள வரிசைப் பட்டியல் காட்டுகின்றது.

சேர்க்கை உயிர்மெய்கள்
வரிவடிவம் பெயர்
க்ஷ் + அ க்ஷ க்ஷானா
க்ஷ் + ஆ க்ஷா க்ஷாவன்னா
க்ஷ் + இ க்ஷி க்ஷீனா
க்ஷ் + ஈ க்ஷீ க்ஷீயன்னா
க்ஷ் + உ க்ஷு க்ஷூனா
க்ஷ் + ஊ க்ஷூ க்ஷூவன்னா
க்ஷ் + எ க்ஷெ க்ஷேனா
க்ஷ் + ஏ க்ஷே க்ஷேயன்னா
க்ஷ் + ஐ க்ஷை க்ஷையன்னா
க்ஷ் + ஒ க்ஷொ க்ஷோனா
க்ஷ் + ஓ க்ஷோ க்ஷோவன்னா
க்ஷ் + ஔ க்ஷெள க்ஷெளவன்னா

[3]

பயன்பாடு[தொகு]

மணிப்பிரவாள நடையில் எழுதும்போதும் பிற மொழிச் சொற்களை எழுதும்போதும் க்ஷகர உயிர்மெய்கள் பயன்படுத்தப்படுவதுண்டு. எடுத்துக்காட்டுகளாக, க்ஷவரம், ரிக்ஷா, க்ஷிதி, க்ஷீதிகர்பர், க்ஷுரிக, பிக்ஷூ, க்ஷேமம், பிக்ஷை, ரிக்ஷோ, லக்ஷ்மி முதலிய சொற்களைக் குறிப்பிடலாம். ஆனால், தற்கால வழக்கில் க்ஷகர மெய்யோ அதன் உயிர்மெய்களோ பயன்படுத்தப்படுவது குறைவாகும்.

கிரந்தக் கலப்பற்ற தமிழ்[தொகு]

க்ஷகர உயிர்மெய்கள் வரும் சொற்களைத் தனித்தமிழ் நடையில் எழுதும்போது க்ஷகரத்தை ட்ச என எழுதுவது பெருவழக்கு. மொழிக்கு முதலில் க்ஷகர உயிர்மெய் வரும்போது தனித்தமிழ் நடையில் அதனைச் சகரமாகவோ ககரமாகவோ எழுதுவதுண்டு (எடுத்துக்காட்டுகள்: க்ஷணம்-கணம், க்ஷவரம்-சவரம்).

சொல்லொன்றின் இடையில் அல்லது இறுதியில் க்ஷகர உயிர்மெய் வந்தால் ட் எழுத்தை எழுதிச் சகர உயர்மெய்யை எழுத வேண்டும் (எடுத்துக்காட்டு: பக்ஷணம்-பட்சணம்). சில வேளைகளில் ச் எழுத்தை எழுதிச் சகர உயிர்மெய்யை எழுதுவதுமுண்டு (எடுத்துக்காட்டு: அக்ஷரம்-அச்சரம்). க் எழுத்தை எழுதிக் ககர உயிர்மெய்யை எழுதுவதுமுண்டு (எடுத்துக்காட்டு: தீக்ஷா-தீக்கை).

மொழிக்கு முதலில் க்ஷ் வந்தால் அதனைக் ககரமாக எழுத வேண்டும் (எடுத்துக்காட்டு: க்ஷ்ணம்-கணம்). சொல்லின் இடையில் க்ஷ் வந்தால் அதனைச் க்கு என்பதால் குறிக்கலாம் (எடுத்துக்காட்டுகள்: லக்ஷ்மி-இலக்குமி, லக்ஷ்மணன்-இலக்குவன்).[4] சில சந்தர்ப்பங்களில் ட்சு என்பதாலும் குறிப்பதுண்டு (எடுத்துக்காட்டு: லக்ஷ்மி-இலட்சுமி, லக்ஷ்மணன்-இலட்சுமணன்).

கிரந்தத்தில் க்ஷ்[தொகு]

க்ஷ்

கிரந்தத்தில் க்ஷ் எழுத்தானது அருகிலுள்ள படத்தின்படி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.[5] க்ஷ் எழுத்தானது கிரந்த எழுத்து முறையிலுள்ள க் எழுத்தும் ஷ் எழுத்தும் சேர்ந்து வருவதே. ஆனால், ஒருங்குறியிலும் பெரும்பாலான எழுத்துருகளிலும் க்ஷ் எழுத்தானது தமிழ் எழுத்து முறையிலுள்ள க் எழுத்தையும் கிரந்த எழுத்து முறையிலுள்ள ஷ் எழுத்தையும் சேர்த்துத் தவறாக எழுதப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=க்ஷ்&oldid=3422995" இலிருந்து மீள்விக்கப்பட்டது