உள்ளடக்கத்துக்குச் செல்

ஜ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜ்
தமிழில் பயன்படுத்தப்படும்
கிரந்த எழுத்துகள்

ஜ் (j) என்பது கிரந்த எழுத்து முறையின் எழுத்துகளில் ஒன்று. தமிழ் மொழியில் ஆரம்பத்தில் மணிப்பிரவாள நடையில் எழுதுவதற்கு இவ்வெழுத்துப் பயன்படுத்தப்பட்டு, இன்று பிறமொழிச் சொற்களை எழுதுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றது.[1]

ஜகர உயிர்மெய்கள்[தொகு]

ஜகர மெய், 12 உயிரெழுத்துகளுடனும் சேர்ந்து உருவாகும் உயிர்மெய் எழுத்துகளையும் அவற்றின் பெயர்களையும் கீழுள்ள வரிசைப் பட்டியல் காட்டுகின்றது.

சேர்க்கை உயிர்மெய்கள்
வரிவடிவம் பெயர்
ஜ் + அ ஜானா
ஜ் + ஆ ஜா ஜாவன்னா
ஜ் + இ ஜி ஜீனா
ஜ் + ஈ ஜீ ஜீயன்னா
ஜ் + உ ஜு ஜூனா
ஜ் + ஊ ஜூ ஜூவன்னா
ஜ் + எ ஜெ ஜேனா
ஜ் + ஏ ஜே ஜேயன்னா
ஜ் + ஐ ஜை ஜையன்னா
ஜ் + ஒ ஜொ ஜோனா
ஜ் + ஓ ஜோ ஜோவன்னா
ஜ் + ஔ ஜௌ ஜௌவன்னா

[2]

பயன்பாடு[தொகு]

மணிப்பிரவாள நடையில் எழுதும்போதும் பிற மொழிச் சொற்களை எழுதும்போதும் ஜகர உயிர்மெய்கள் பயன்படுத்தப்படுவதுண்டு. எடுத்துக்காட்டுகளாக, ஜனவரி, ஜான், ஜிமெயில், ஜீன்ஸ், ஜுப்பிட்டர், ஜூலை, ஜெனீவா, ஜேர்மனி, ஜைல்ஸ், ஜொகானஸ்பர்க், ஜோக், ஜௌடகாந்தாரி, ஹஜ் முதலிய சொற்களைக் குறிப்பிடலாம்.

கிரந்தக் கலப்பற்ற தமிழ்[தொகு]

ஜகர உயிர்மெய்கள் வரும் சொற்களைத் தனித்தமிழ் நடையில் எழுதும்போது ஜகரத்தைச் சகரமாக எழுதுவது பெருவழக்கு. மொழிக்கு முதலில் ஜகர உயிர்மெய் வரும்போது தனித்தமிழ் நடையில் அதனைச் சகர உயிர்மெய்யாக எழுத வேண்டும் (எடுத்துக்காட்டுகள்: ஜனவரி-சனவரி, ஜூன்-சூன்). இலங்கை வழக்கின்படி, மொழிக்கு முதலில் ஜகரம் வந்தால் அதனை யகரமாகவும் எழுதுவதுண்டு (எடுத்துக்காட்டுகள்: ஜப்பான்-யப்பான், ஜன்னல்-யன்னல்). மொழிக்கு முதலில் ஜ் வந்தால் அதனை விட்டு விட்டு எழுதுவதுண்டு (எடுத்துக்காட்டு: ஜ்ஞானம்-ஞானம்). சில சமயங்களில் வேறு மாதிரியும் எழுதுவதுண்டு (ஜ்யோதி-சோதி).

சொல்லொன்றின் இடையில் அல்லது இறுதியில் ஜகர உயிர்மெய் வந்தால் அதனைச் சகரமாக அல்லது யகரமாக எழுத வேண்டும் (எடுத்துக்காட்டு: பங்கஜம்-பங்கசம், பங்கயம்).[3]

சொல்லின் இடையில் ஜ் வந்தால் அதனை ச்சி அல்லது ச்சு என்று எழுத வேண்டும் (எடுத்துக்காட்டுகள்: வஜ்ரபானி-வச்சிரபானி, வாஜ்பாய்-வாச்சுபாய்). சொல்லொன்றின் இறுதியில் ஜ் வருமாயிருந்தால் அதனை ச்சு என்று எழுத வேண்டும் (எடுத்துக்காட்டு: ஹஜ்-அச்சு).

சில சொற்களில் ஜகர உயிர்மெய் வருமிடத்துக் கூடுதல் அழுத்தம் தருவதற்காக அதனை ச்ச என்றும் எழுதுவதுண்டு (எடுத்துக்காட்டு: ராஜஸ்தான்-இராச்சசுத்தான்).

மேற்கோள்கள்[தொகு]

  1. 6.5 வரலாற்று நோக்கில் எழுத்துச் சீர்திருத்தம்
  2. "தமிழ் எழுத்துக்கள் + வடமொழி எழுத்துகள்". Archived from the original on 2012-05-27. பார்க்கப்பட்ட நாள் 2012-04-22.
  3. கட்டுரைக் கசடறை என்னும் வியாச விளக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜ்&oldid=3584851" இலிருந்து மீள்விக்கப்பட்டது