இரண்டாம் கிருட்டிணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரண்டாம் கிருட்டிணன் (ஆட்சிக்காலம் 878-914 ) என்பவன் ஒரு இராஷ்டிரக்கூட மன்னனாவான். இவன் தன் தந்தையான முதலாம் அமோகவர்சனின் மறைவுக்குப் பிறகு அரியணை ஏறினான். இவனது பெயர் கன்னடத்தில் " கன்னரா" என்று அழைக்கப்பட்டது. [1]இவனது அரசி செடி என்கிற ஹய்யாய நாட்டு இளவரசி மகாதேவி ஆவார். இவன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள துவக்கக்காலக் கல்வெட்டுகளைக் காணும்போது இவனது தந்தையின் வாழ்நாளின் இறுதி ஆண்டுகளின் போதே இவனது ஆட்சி தொடங்கியது என்று தெரிகிறது. [2] இரண்டாம் கிருட்டிணன் ஆட்சியின் போதும் பேரரசின் விரிவாக்கம் ஏற்ற இறக்கத்துடன் இருந்தது, இவனது ஆட்சிக் காலத்தில் இலக்கியத்தில் முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டன.

வேங்கியுடனான போர்கள்[தொகு]

இவனைக் கீழைச் சாளுக்கிய மன்னனான மூன்றாம் குணகவிசயாதித்தன் மத்திய இந்தியாவுக்கு பின்வாங்க வைத்தான். மூன்றாம் குணகவிசயாதித்தன் இறந்த பிறகு, ஆட்சிக்குவந்த சாளுக்கிய பீமனுக்கு எதிராக இரண்டாம் கிருட்டிணன் 892 இல் போர் தொடுத்து அவனைத் தோற்கடித்து வெற்றி கண்டான். சாளுக்கிய பீமன் இராஷ்டிரகூடர்களிடம் தள்ளி இருந்து வேங்கியில் தனது ஆட்சியைத் தொடர்ந்தான். ஒரு சில ஆண்டுகள் கழித்து, இரண்டாம் கிருட்டிணனை எதிர்த்து நிரவத்யபுரா மற்றும் பெருவங்குரு ஆகிய இடங்களில் கீழைச் சாளுக்கியர்கள் போரிட்டனர்.[3] எனினும் இறுதியில் இரண்டாம் கிருட்டிணன் ஆந்திரத்தை வெற்றிகொண்டான் . [2]

வடக்குப் போர்கள்[தொகு]

இரண்டாம் கிருட்டிணன் குசராத்தின் பிரத்திஹார மரபினனான முதலாம் குர்ஜராத்ர போஜனை தோற்கடித்து குஜராத்தைத் தனது நேரடி ஆட்சியின் கீழ் கொண்டு வந்து இணைத்தான். [2][3][4] மேலும் பங்கா, கலிங்க, மகத அரசாட்சிகளை தோற்கடித்தான். இதனால் இவனுடைய ஆட்சியின் செல்வாக்கு வடக்கே கங்கை ஆற்றிலிருந்து தெற்கே கன்னியாகுமரிவரை பரவியது.[2] இவன் அகலவர்சன் மற்றும் சுபதுங்கன் போன்ற பட்டங்களை சூட்டிக்கொண்டான்.

தமிழ் நாட்டு அரசியல்[தொகு]

தனது மகளை முதலாம் ஆதித்த சோழனுக்குத் திருமணம் செய்வித்தான். . இதனால் இவனின் செல்வாக்கு தமிழ் நாட்டிலும் நிலவியது. முதலாம் ஆதித்த சோழன் இறந்த பிறகு, இரண்டாம் கிருஷ்ணன், தன் பேரன் கன்னர தேவனைச் சோழ நாட்டின் அரியணையில் அமரச்செய்த முயற்சியை முதலாம் பராந்தகன் முறியடித்து மன்னனானான். இரண்டாம் கிருட்டிணன் தனது நன்பர்களான வைதும்பர்கள், பாணர்கள் உதவியுடன் 916இல் தமிழ்நாட்டின் மீது படையெடுத்தான். இதன் நோக்கம் சோழர்கள் மீதான தனது செல்வாக்கை உறுதிப்படுத்திக்கொள்வது ஆகும். ஆனால் இந்த வல்லம் போரில் சோழர்களை வெற்றிகொள்ள இயலவில்லை.[5]

குறிப்புகள்[தொகு]

  1. Reu (1933), p75
  2. 2.0 2.1 2.2 Reu (1933), p76
  3. 3.0 3.1 Sastri (1955), p160
  4. Kamath (2001), p80
  5. Sastri (1955), pp160-161

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_கிருட்டிணன்&oldid=2696037" இலிருந்து மீள்விக்கப்பட்டது