வராஹி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வராஹி ஆறு மேற்குத் தொடர்ச்சி மலைகளில் தோன்றி இந்தியாவின் கர்னாடக மாநிலத்தின் வழியே பாய்ந்து செல்லும் ஓர் ஆறு. ஆற்றோட்டக் கீழ்பகுதிகளில் ஹலாடி ஆறு என்றும் அறியப்படும் இந்த ஆறு, ஹலாடி, பஸ்ரூர், குந்தாபுரா, கங்கொல்லி போன்ற இடங்களின் வழியாகச் செல்கிறது. இது சௌபர்னிகா ஆறு, கேடகா ஆறு, சக்ரா ஆறு, குப்ஜா ஆறுகளுடன் இணைந்து பஞ்சகங்கவள்ளி ஆறு என்ற பெயரில் அரபிக்கடலில் கலக்கிறது.

புவியியல்[தொகு]

இந்த ஆறு சிவமொக்கா மாவட்டத்திலுள்ள தீர்த்தஹள்ளி வட்டத்தில் ஆகும்பேவுக்கு அருகிலுள்ள ஹெப்பகிலு என்ற இடத்தில் கடல் மட்டத்திலிருந்து 730 மீட்டர் உயரத்தில் தோன்றுகிறது.[1] ஷெட்டிகொப்பா, ஹலிகே, கொள்ளவாடி, பங்காரகள்ளி போன்ற இடங்களில் பல துணையாறுகள் வராஹியாற்றுடன் சேர்கின்றன.[2] உடுப்பி மாவட்டத்திலுள்ள குந்தாபுராவில் இந்த ஆறு அரபிக்கடலுடன் கலக்கிறது.

குஞ்சிக்கல் அருவி[தொகு]

குஞ்சிகல் அருவி, சிவமொக்கா மாவட்டத்தின் ஹொசனகரா வட்டத்தில் அமைந்துள்ளது. இது வராஹி ஆற்றின் தோன்றிடத்திலிருந்து 25 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது. 455 மீட்டர்களில் தொடர்படுகை அருவிகளான இவை குஞ்சிக்கல் அருவிகள் என்ற அறியப்படுகின்றன. இந்த அருவிகள் நேரடியாக நிலத்தில் விழாமல், பாறைகளின் மேலும் கூழாங்கற்களின் மேல் விழுந்து எழுகின்றன. வராஹி நீர்மின் நிலையத் திட்டத்துக்காக அருகிலுள்ள மணி அணை கட்டியபின் இந்த அருவிகளுக்கான நீர்வரத்து வெகுவாகக் குறைந்துவிட்டது. நிகழ்காலங்களில் இந்த அருவிகள் மழைக்காலங்களில் மட்டுமே செயல்படுகின்றன.

வராஹி நீர்மின் நிலையத் திட்டம்[தொகு]

மணிபைல் என்று சிற்றூரில் அமைந்ததால் மணி அணை என்று வழங்கப்படும் நீர்மின் நிலையத் திட்டம், வராஹி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டது.[3] உடுப்பி மாவட்டத்தில் ஹொசனகடிக்கு அருகில் நிலத்துக்கு அடியில் ஒரு மின் உற்பத்தி நிலையம் கர்னாடக மின் கழகத்தால் கட்டப்பட்டது.1989-ம் ஆண்டிலிருந்து செயல்படும் இத்திட்டம் 469 மெகாவாட் திறன் கொண்டது.[4][5]

வராஹி இறவைப் பாசனத் திட்டம், உடுப்பி மாவட்டத்தில் சித்தபுரா சிற்றூருக்கு அருகே 1979 முதல் செயல்பட்டு வருகிறது.

சான்றுகள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வராஹி_ஆறு&oldid=3605925" இருந்து மீள்விக்கப்பட்டது