வடிவவியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வடிவவியல் (அல்லது கேத்திர கணிதம், Geometry) என்பது வெளிசார்ந்த (spatial) தொடர்புகள் சம்பந்தமான அறிவு பற்றியெழுந்த ஒரு துறையாகும். இது நவீன கணிதவியல் துறையின் இரு பிரிவுகளுள் ஒன்று. மற்றப் பிரிவு, எண்கள் தொடர்பான அறிவு பற்றியது. வடிவவியலைக் குறிப்பிட, வடிவகணிதம், கேத்திர கணிதம் (இலங்கை கல்வித் துறையில் பயன்படும் கலைச்சொல்) போன்ற சொற்களும் பயன்படுகின்றன. தற்காலத்தில் வடிவவியல் கருத்துருக்கள், சிக்கல் தன்மை வாய்ந்ததும், உயர் நுண்ம (abstract) நிலைக்குப் பொதுமைப் படுத்தப்படும் உள்ளன. அத்துடன் இங்கே பயன்படுத்தப்படும் முறைகள் நுண்கணிதம், மற்றும் நுண்ம இயற்கணிதம் (abstract algebra) தொடர்பானவையாகவும் இருப்பதனால், இன்றைய வடிவவியல் பிரிவுகளுட் சில மூல வடிவவியலிலிருந்து உருவானவை என்பதை அடையாளம் கண்டு கொள்ள முடியாதுள்ளது.

ஆரம்பகால வடிவவியல்[தொகு]

ஆரம்பகால வடிவவியல் தொடர்பான பதிவுகள் பற்றிச் சுமார் கி.மு 3000 ஆண்டுகளிலிருந்து, பண்டைய எகிப்து, சிந்துவெளி, மற்றும் பபிலோனியா போன்ற இடங்களிலிருந்து கிடைத்த தொல்பொருட்கள் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது. ஆரம்பகால வடிவவியல், நில அளவை, கட்டுமானம், வானியல், பல்வேறு கைவினைத் துறைகள் போன்றவற்றில் பயன்படுத்துவதற்காக விருத்தி செய்யப்பட்ட பல கொள்கைகளின் தொகுப்பாக இருந்தன. இவை நீளம், கோணம், பரப்பு, கன அளவு போன்ற விடயங்களோடு தொடர்புடையவையாக இருந்தன. ஐரோப்பாவில் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சில கொள்கைகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே எகிப்து, பபிலோனியா போன்ற இடங்களில் பயன்படுத்தப்பட்டு வந்ததும் தெரிய வருகிறது. எடுத்துக்காட்டாகப் பைதகரசின் தேற்றத்தில் சொல்லப்படும் விடயங்கள்பற்றி எகிப்திலும், பபிலோனியாவிலும் பைதகரசுக்கு 1500 ஆண்டுகளுக்கு முன்னரே அறிந்திருந்தார்கள். எகிப்தியர் பிரமிட்டுகளின் அடித்துண்டுகளின் கன அளவுகளைக் கணிக்கும் முறைபற்றி அறிந்திருந்தனர். பபிலோனியர் அக்காலத்திலேயே கோணகணிதம் தொடர்பான அட்டவணைகளைப் பயன்படுத்தி வந்தனர்.

பண்டைக்கால இந்தியாவில் வடிவவியல்[தொகு]

சிந்துவெளி[தொகு]

சுமார் கி.மு. 3000 ஆண்டு காலத்திலிருந்தே சிந்துவெளி மக்களின் வடிவவியல் அறிவு சமகால நாகரீகங்களின் வடிவவியல் அறிவுக்கு இணையானதாகவே கருதப்படுகின்றது. அங்கேயிருந்த ஹரப்பா முதலிய நகரங்களின் உயர்நிலையிலான நகரத் திட்டமிடல் இதற்குச் சிறந்த சான்றாக விளங்குகின்றது. நிறை கற்கள், செங்கற்களின் உற்பத்தி போன்றவற்றிலும் வடிவவியல் அறிவின் பயன்பாட்டைக் காண முடிகின்றது. நிறைகற்கள் கனக்குற்றி, உருளை, கூம்பு போன்ற பல வடிவங்களில் செய்யப்பட்டன. செங்கல் உற்பத்தியில் நியம விகிதங்கள் (4:2:1) பயன்படுத்தப்பட்டதும் தெரிய வருகிறது.

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வடிவவியல்&oldid=1827051" இருந்து மீள்விக்கப்பட்டது