நேரியல் இயற்கணிதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நேரியல் இயற்கணிதம் (Linear Algebra) கணிதத்தின் ஒரு பெரிய உட்பிரிவு. பொதுவாக திசையன் வெளி (Vector space) என்ற கருத்தையும் திசையன் வெளிகளுக்கிடையில் ஏற்படும் உருமாற்றங்களையும் பற்றிச் செயல்படுகிறது. குறிப்பாக, நேரியல் சமன்பாட்டுத் தொகுதிகளின் தீர்வுகளும், அணி, அணிக்கோவை இவைகளுடைய கோட்பாடுகளும் இதனில் அடக்கம். இவைகளெல்லாம் கணிதத்தின் எல்லாப் பிரிவுகளிலும், மற்றும் அறிவியலைச் சார்ந்த மற்ற துறைகளிலும் ஏராளமாகப் பயன்படுகின்றன. புள்ளியியல், இயற்பியல், மின்பொறியியல், மின்னணுப் பொறியியல் ஆகிய துறைகளில் நேரியல் இயற்கணிதம் ஓர் இன்றியமையாத சாதனமாகும். கணிதத்தில் சார்புப் பகுவியலிலும், நுண்புல இயற்கணிதத்திலும் அறிவியல் மொழியே நேரியல் இயற்கணிதம்தான். நேரியல் பண்பு அற்ற பற்பல பயன்பாடுகளிலும் நேரியல் வழிகளைக் கொண்டுதான் அவைகளை தோராயப்படுத்த வேண்டியிருக்கிறது.

வரலாறு[தொகு]

17ம் நூற்றாண்டில் ரெனே டேக்கார்ட் ஆயவடிவியலைப் படைத்ததிலிருந்து நேரியல் இயற்கணிதம் தொடங்கிவிட்டதென்று கொள்ளலாம். 1750 இல் கிரேமர் (ஜெர்மனி) நேரியல் சமன்பாட்டுத் தொகுதிகளின் தீர்வுக்கு ஒரு வாய்பாடு உண்டாக்கினார். பிரென்சுக்கணித இயலர்கள் வாண்டர்மாண்ட் (1771), லாப்லாஸ் (1772), லாக்ரான்சி (1773) இவர்களால் உருவாக்கப்பட்டு பிற்பாடு காஸ் (1801) (ஜெர்மனி), ஜாகோபி (1827) (பிரான்ஸ்)இவர்களால் சீர்படுத்தப்பட்ட அணிக்கோவைகளின் கோட்பாடும் 20ம் நூற்றாண்டின் நேரியல் இயற்கணிதத்துக்கு வழிவகுத்தன. 1843இல் ஹாமில்டன் (அயர்லாந்து) குவாடர்னியன் கோட்பாட்டையும் சிக்கலெண்களுக்குகந்த சரியான விளக்கத்தையும் கொடுத்தார். இவர்தான் Vector(திசையன்) என்ற கலைச் சொல்லை அறிமுகப்படுத்தினார். 1844இல் கிராஸ்மன் (ஜெர்மனி)ஒரு நூலே (Die lineare Ausdehnunglehre) எழுதினார். கெய்லி (இங்கிலாந்து) 1857 இல் அணிகளைக்கொண்டு இயற்கணிதமுறையில் இவைகளுக்கு அஸ்திவாரம் படைத்தார். ஆனாலும் 20ம் நூற்றாண்டில் நுண்புல இயற்கணிதத்தில் வளையம் என்ற கருத்து வேரூன்றியபிறகுதான் எண்கள்போல் புழங்கும், ஆனால் எண்களல்லாத, அணிகளின் ஆழமான பாதிப்பு ஏற்படத் தொடங்கி, நேரியல் இயற்கணிதம் என்ற 20ம்நூற்றாண்டின் கணிதத்துறை உருவாகியது. இதற்குத் துணைபோனது 1888இல் கால்டன் (இங்கிலாந்து) அறிமுகப்படுத்திய ஒட்டுறவுக்கெழுவைச் சுற்றிய செயல்பாடுகளும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அறிவியல் உலகத்தை உசுப்பிவிட்ட சிறப்புச் சார்புக்கோட்பாடும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=நேரியல்_இயற்கணிதம்&oldid=2372665" இருந்து மீள்விக்கப்பட்டது