உள்ளடக்கத்துக்குச் செல்

லூபா இனக்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

லூபா இனக்குழு நடு ஆப்பிரிக்காவில் வாழும் பாண்டு மக்கள் இனத்தின் ஒரு பிரிவு ஆகும். இவர்கள் இன்றைய காங்கோ சனநாயகக் குடியரசின் குறைத் தன்னாட்சிப் பகுதிகளுக்குள் அடங்கும், கட்டங்கா, கசாய், மானியெமா ஆகிய பகுதிகளைத் தாயகமாகக் கொண்டவர்கள். லூபா மக்கள் சிலூபா (Tshiluba), சுவாகிலி ஆகிய மொழிகளைப் பேசுகின்றனர். குடியேற்றவாத ஆட்சிக் காலத்துக்கு முன்னர் நடு ஆப்பிரிக்காவில் லூபா இராச்சியம் ஒன்று இருந்தது. இது இன்று காங்கோ சனநாயகக் குடியரசின் தென்பகுதியில் உள்ள "உபெம்பா" தாழ்வுப் பகுதிகளின் சதுப்புப் புல்வெளிகளில் உருவானது. லூபா பகுதிகள் பொன், யானைத் தந்தம், செப்பு, சாம்பிராணி, கருங்காலி போன்ற பல்வேறு இயற்கை வளங்களைக் கொண்டது. அத்துடன் இவர்கள் மரபுவழியான மட்பாண்டங்கள், முகமூடிகள் போன்றவற்றின் உற்பத்தி, வணிகம் என்பவற்றிலும் ஈடுபட்டுள்ளனர்.

வரலாறு

[தொகு]

நடு ஆப்பிரிக்காவின் உப்பெம்பா தாழ்வுப் பகுதியிலுள்ள கட்டங்கா பகுதியில் இவர்கள் வாழ்ந்தது பற்றிய தகவல்கள் கிபி 5 ஆம் நூற்றாண்டில் இருந்து கிடைக்கின்றன. இப் பகுதியில் அணைகளையும், நீர்ப்பாசன வாய்க்கால்களையும் அமைப்பதற்கும், அவற்றைப் பேணுவதற்கும் பெரும் அளவிலான கூட்டு முயற்சிகள் தேவைப்பட்டன. இத்தகைய கூட்டு முயற்சிகள் நீண்ட வரட்சிக் காலங்களில் மீன்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக நீரைத் தேக்கும் பொருட்டு அணைகள் கட்டவும் பயன்பட்டன. 6 ஆம் நூற்றாண்டளவில் லூபா மக்கள் இரும்பைப் பயன்படுத்தி வந்ததோடு, உப்பு, புற்றாவர எண்ணெய் (palm oil), கருவாடு போன்ற பொருட்களின் வணிகத்திலும் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் இப் பொருட்களைக் கொடுத்து, செப்பு, கரி, கண்ணாடி மணிகள், இரும்பு போன்ற பொருட்களைப் பெற்று வந்தனர்.


1500 ஆம் ஆண்டளவில் அல்லது அதற்குச் சற்று முன்னரே லூபாப் பகுதிகள் ஒருங்கிணைந்த நாடு உருவானது. இறைவனால் அனுப்பப்பட்டவர்களாக மக்கள் நம்பிய அரசர்கள் அந்நாட்டை ஆண்டு வந்தனர். இவர்கள் "முலோப்வே" எனப்பட்டனர். இவர்கள், மனிதர்கள் வாழும் உலகத்துக்கும்; ஆவிகள், மூதாதையர் போன்றோர் வாழும் உலகத்துக்கும் இடைப்பட்டவர்களாகச் செயற்படுபவர்கள் என மக்கள் நம்பிய "பலோப்வே" என்னும் குழுவைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். அரசனுக்கு மூன்று வழிகளிலான அதிகாரம் இருந்தது.

  1. இவர், ஆளுநர், கீழ்நிலை ஆளுநர் தொடக்கம் ஊர்த் தலைவர்கள் வரையான மதச் சார்பற்ற படியமைப்புக்குத் தலைவராக இருந்தார்.
  2. இவர் உள்ளூர்த் தலைவர்களிடம் இருந்து திறை பெற்றார். இது இவருக்கு நம்பிக்கையானவர்களுக்குப் பகிந்து அளிக்கப்பட்டது. இத்திறை முறை ஏறத்தாழ ஒரு அரசால் கட்டுப்படுத்தபட்ட வணிக வலையமைப்பாகவே செயற்பட்டது.
  3. இவர் குறிப்பிடத்தக்க ஆன்மீக மதிப்புக் கொண்டவராக இருந்தார். பாம்புத்யே எனப்பட்ட மதம்சார்ந்த குழுவுக்குத் தலைவராகவும் இவர் இருந்தார். அரசர்கள், தலைவர்கள், அதிகாரிகள் என்போர் அடங்கிய இக் குழுவில் ஆண், பெண் இரு பாலாரும் அடங்கியிருந்தனர். இவர்களே இனக்குழுவின் வாய்மொழி மரபுகளைப் பேணிக்காத்து வந்தனர்.


லூபா மக்களின் இந்த அரசு முறை போதிய அளவு நிலைப்புத் தன்மை கொண்டிருந்ததனால், நடு ஆப்பிக்காவின் பல பகுதிகளுக்கும் இது பரவியது. லுண்டா, லோசி போன்ற இனக்குழுக்களும், பிறரும் சில மாற்றங்களுடன் இம்முறையைப் பின்பற்றினர். 1585 ஆம் ஆண்டளவில் இருந்து லூபா இராச்சியம் விரைவாக விரிவடையலாயிற்று. செப்புச் சுரங்கங்கள், மீன்பிடிப் பகுதிகள், புற்றாவரப் பயிர்ச்செய்கைப் பகுதிகள் போன்றவை இந்த இராச்சியத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. 1700 க்குப் பின் சோளம், மரவள்ளிக் கிழங்கு போன்ற பயிர்கள் போத்துக்கீசர் ஊடாக அறிமுகமாயின. இப் புதிய பயிர்கள், குறிப்பிடத்தக்க மக்கள் தொகை வளர்ச்சிக்கு வித்திட்டதுடன், பொருளாதார வளர்ச்சியையும் தூண்டின. இது, அரச அதிகாரத்தின் வலுவையும், மதிப்பையும் கூட்டியது. 1780 ஆம் ஆண்டுக்கும் 1870 ஆண்டுக்கும் இடையில், இலுங்கா சுங்கா (1780-1810), கும்விம்பே நிகோம்பே (1810-1840), இலுங்கா கபாலே (1840-1874) ஆகிய மூன்று பலம் வாய்ந்த அரசர்களின் கீழ் லூபா இராச்சியம் அதன் உயர்நிலையில் இருந்தது. லூபா இடைத் தரகர்கள் ஊடாக அங்கோலாவில் இருந்த போத்துக்கேய வணிக நிலைகளுடன் வணிகத்திலும் ஈடுபட்டிருந்தது.


வீழ்ச்சி

[தொகு]

1870 ஆம் ஆண்டிலிருந்து லூபா இராச்சியம் வீழ்ச்சியடையத் தொடங்கிற்று. அரச பதவிக்கான உரிமைக்குத் தெளிவான வரையறைகள் இல்லாததால், இராச்சியம் இது தொடர்பான உட்சண்டைகளை எதிர் நோக்கியது. அத்துடன், தற்போதைய சாம்பியாப் பகுதியைச் சேர்ந்த நியம்வேசி என்னும் இனக்குழுவினரிடம் இருந்தும், சுவாகிலி-அராபியர்களிடம் இருந்தும் இவர்களுக்குத் தொல்லைகள் ஏற்பட்டன. இக்குழுக்கள் துப்பாக்கிகளை வைத்திருந்ததோடு இரு குழுக்களும் கூட்டாளிகளாகவும் இருந்தன. லூபாவைக் கைப்பற்றாவிட்டாலும், லூபாக்கள், வடபகுதிகளில் இருந்த காடுகளில் வசித்த இனக்குழுக்களுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்புகளை சுவாகிலி-அராபியர் துண்டித்து விட்டனர். இதே வேளை நியம்வேசிகள் மிசிரி (Msiri) என்பவர் தலைமையில், லூபாக்களின் தென்பகுதி வணிகத்தைச் செயல் இழக்கச் செய்தனர்.

லூபாக்களின் பொருளாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டது. அவர்களுக்குத் துப்பாக்கிகள் அவசரமாகத் தேவைப்பட்டன. தமது வீழ்ச்சியைத் தடுப்பதற்காக, அவர்கள் அங்கோலாவில் இருந்த போத்துக்கீசருடன் பெரும் எடுப்பில் அடிமை வணிகத்தில் ஈடுபடத் தொடங்கினர். ஆனால், அடிமை வணிகமும் மறையத் தொடங்கியது. அடிமைகளுக்காகக் கிடைத்த பணமும் குறைந்து கொண்டே வந்தது. புற இனத்தவரிடையே அடிமைகளைப் பிடிப்பதற்கான வல்லமையை லூபா மக்கள் இழந்துவிட்டதால் அவர்கள் தமக்குள்ளேயே அடிமைகளைப் பிடிக்கத் தொடங்கினர். இதனால் லூபா சமூக வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், நாட்டின் அரசியல் ஒற்றுமையும் குலைந்தது. 1874 ஆம் ஆண்டில் அரசர் இலுங்கா கபாலே கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் லூபாவின் அரச மரபினரிடையே பிணக்கு ஏற்பட்டுக் குழுக்களாகப் பிரிந்தனர். 1880 களில், கிழக்குக் காங்கோவின் பெரும்பகுதி திப்பு திப் என்னும் படையெடுப்பாளரிடம் வீழ்ச்சியடைந்தது.


பெல்சியத்தின் கட்டுப்பாடு

[தொகு]

1885 ஆம் ஆண்டில், இன்று காங்கோ சனநாயகக் குடியரசு என்று அறியப்படும் பகுதிகளில் தமது கட்டுப்பாட்டை ஐரோப்பியர் ஏற்றுக்கொள்ளச் செய்வதில் பெல்சியத்தின் அரசராக இருந்த இரண்டாம் லியோபோல்ட் வெற்றிகண்டார். இவர் இப் பகுதிக்கு காங்கோ சுதந்திர நாடு எனப் பெயரிட்டு, அதனைத் தமது சொந்தச் சொத்துப்போலவே கருதிச் சுரண்டலில் ஈடுபட்டார். லூபா மக்கள் இதனை எதிர்த்தனர். சிறப்பாக 1895 ஆம் ஆண்டில் பெரிய கலவரம் ஏற்பட்டது. இதன் பின்னர் பல லூபாக்கள், கட்டங்காப் பகுதியில் இருந்த செப்புச் சுரங்கங்களுக்குக் கட்டாயக் கூலிகளாக அனுப்பப்பட்டனர். பின்னர் கிசுலா நிகோயே என்பவர் தலைமையில் இன்னொரு கலவரம் ஏற்பட்டது. 1917 ஆம் ஆண்டுவரை இதை பெல்சியத்தினால் அடக்க முடியவில்லை.


காங்கோவின் விடுதலை

[தொகு]

இப் பகுதியில் ஏற்பட்ட தேசிய எழுச்சியைத் தொடர்ந்து 1960 ஆம் ஆண்டில் காங்கோவுக்கு விடுதலை கிடைத்தது. அதே ஆண்டில் கட்டங்கா மாகாணத்தைக் காங்கோவில் இருந்து பிரிப்பதற்காக மொய்சே திசோம்பே என்பவர் தலைமையில் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இவ்விடயத்தில் லூபாக்கள் இரு பிரிவினராகச் செயற்பட்டனர். ஒரு பிரிவினர், நிடாயே எம்மானுவேல் தலைமையில் பிரிவினையை ஆதரிக்க, மறு பிரிவினர் கிசுலா நிகோயே தலைமையில் அதனை எதிர்த்தனர். 1965 ஆம் ஆண்டில் திசோம்பேயின் பிரிவினை அரசு வீழ்ச்சியடைந்ததும் கிசுலா நிகோயே லூபா மக்களின் முக்கிய தலைவராக ஆனார்.


இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூபா_இனக்குழு&oldid=1355134" இலிருந்து மீள்விக்கப்பட்டது