உள்ளடக்கத்துக்குச் செல்

நியம்வேசி இனக்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நியம்வேசி
மொத்த மக்கள்தொகை
(1.5 மில்லியன் (1989))
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தான்சானியா
மொழி(கள்)
நியம்வேசி
சமயங்கள்
இசுலாம்,கிறித்தவம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
சுக்குமா

நியம்வேசி இனக்குழு தான்சானியாவில் வாழும் 120 இனக்குழுக்களில் இரண்டாவது பெரிய இனக்குழுவாகும். இவர்கள் நாட்டின் வடமேற்கு நடுப் பகுதியில் விக்டோரியா ஏரிக்கும், ருக்வா ஏரிக்கும் இடையே வாழுகின்றனர். சுவாகிலி மொழியில் தோன்றிய நியம்வேசி என்னும் சொல் நிலவு மக்கள் என்னும் பொருள் உடையது.

முற்காலத்தில் தம்மை நியம்வேசிகள் என அழைத்துக்கொண்ட ஐந்து பழங்குடிகள் இருந்தன. எனினும் வெளியார் இவர்களை கிம்பு, கொனோங்கோ, நியம்வேசி, சுக்குமா, சும்ப்வா என அழைத்து வந்தனர். இவர்கள் என்றும் ஒன்றாக வாழ்ந்தது இல்லை. இவர்கள் ஏறத்தாழ ஒரேவிதமான பண்பாட்டையே கொண்டிருந்தாலும், இவை எல்லோரும் ஒரே குழுவினர் என்று கூறுவது சரியாகாது. நியம்வேசிகள் சுக்குமா மக்களுடன் நெருங்கிய பண்பாட்டுத் தொடர்புகளைக் கொண்டுள்ளனர். நியம்வேசி மக்களின் தாயகம் உன்னியம்வேசி எனப்படுகின்றது. இவர்கள் பேசும் மொழி கின்னியம்வேசி ஆகும். எனினும் இவர்களில் சிலர் சுவாகிலி மொழியையும், ஆங்கில மொழியையும் பேச வல்லவர்களாக உள்ளனர்.

வரலாறு[தொகு]

தொடக்காலம்[தொகு]

வாய்மொழி மரபுகளின்படி, நியம்வேசிகள் 1600 களிலேயே அவர்கள் இப்போது இருக்கும் வடமேற்கு நடுத் தான்சானியாப் பகுதியில் குடியேறியதாகத் தெரிகிறது. அப்பகுதியின் வளமற்ற மண் காரணமாக நியம்வேசிகள் ஒரு காலத்தில் மீனவர்களாகவும், நாடோடி வேளாண்மை செய்பவர்களாகவுமே இருந்தனர். பயணங்கள் அவர்களைத் தொழில்முறை வணிகர்கள் ஆக்கின. 1800களில் அவர்கள் வண்டிகள் மூலம் கட்டங்கா செப்பு, மெழுகு, உப்பு, யானைத் தந்தம் போன்ற பொருட்களையும் அடிமைகளையும் கொண்டு சென்று வணிகம் செய்தனர். யானைத் தந்தம், அடிமைகள் போன்றவற்றில் வணிகம் செய்த அராபிய, இந்திய வணிகர்கள் 18255 ஆம் ஆண்டளவில் நியம்வேசிகளுடன் தொடர்பு கொண்டிருந்தனர். இக் காலத்தில் நியம்வேசிகள் துப்பாக்கிகளைப் பெற்றுக்கொண்டதோடு முறையான படைகளையும் வைத்திருந்தனர். 19 ஆம் நூற்றாண்டு முழுதும் அவ்வப்போது பழங்குடிகளுக்கு இடையிலான சண்டைகளிலும், அராபியர்களுடனான சில சண்டைகளிலும் நியம்வேசிகள் ஈடுபட்டிருந்தனர்.

நீண்ட காலமாகவே நிலைத்த வேளாண்மையில் ஈடுபட்டவர்களாகவும், கால்நடைச் சொந்தக்காரர்களாகவும் இருந்த நியம்வேசிகள், 16 ஆம் நூற்றாண்டில் மேற்குச் சமவெளிப் பகுதிக்கு வந்தனர். தொடக்கத்தில் இவர்கள், அப்பகுதியில் பரவலாக அமைக்கப்பட்ட சிறு சிறு ஊர்களில் தலைவர் ஆட்சியின்கீழ் வாழ்ந்தனர். இவை படிப்படியாகப் பல அரச வம்சத்தினரின் ஆட்சியின் கீழ் வந்தன. அக்காலத்துக் கத்தோலிக்கத் துறவிகளின் தகவல்களின் படி இத்தகைய ஆட்சிப் பகுதிகள் 150க்கு மேல் இருந்திருப்பதாகத் தெரிகிறது. இவை ஒவ்வொன்றும் ஆட்சி அவைகளையும், மூத்தோரையும், அரசவை அடிமைகளையும் கொண்டு விளங்கின. 19 ஆம் நூற்றாண்டில் இத்தகைய அரச வம்சங்கள் பெரிய அடிமைச் சொந்தக்காரர்களாகவும், கால்நடைச் சொந்தக்காரர்களாகவும் விளங்கினர்.

19 ஆம் நூற்றாண்டு[தொகு]

1800களின் தொடக்கத்தில் பல நியம்வேசி அரசுகள் இருந்தன. உன்யன்யெம்பே, உல்யன்கூலு, உரம்போ போன்றவை இவற்றுட் சில. வணிக நகரான தபோராவைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாலும், தபோராவின் அராபியர்கள் மூலம் சான்சிபாரின் அராபியர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாலும், உன்யன்யெம்பேயே இவற்றுள் மிகவும் பலம் பொருந்திய அரசாக விளங்கியது. 1858 ஆம் ஆண்டில் மினிவாசெலே என்பவர் உன்யன்யெம்பேயின் அரசுரிமையைப் பெற்றபோது, அவரது போட்டியாளனாக விளங்கிய இம்காசிவா என்பவரை வெளியேற்றுவதற்கு அராபியர்கள் உதவினர். இம்காசியா உல்யன்கூலு நாட்டில் தஞ்சம் அடைந்தார். உன்யன்யெம்பேயின் வணிகர் சமூகத்தின்மீது கூடுதலான கட்டுப்பாடுகளைக் கொண்டிருக்க மினிவாசெலே முயன்றபோது அவர்கள் இம்காசிவாவுடன் கூட்டுச் சேர்ந்தனர். இது 1860 ஆம் ஆண்டில் உன்யன்யெம்பேக்கும், உல்யன்கூலுவுக்கும் இடையே மேலும் பெரிய பிணக்கைத் தோற்றுவித்தது. இதன் முடிவில் இம்காசிவா உன்யன்யெம்பேயின் அரசரானார். 1871 ஆம் ஆண்டில் உன்யன்யெம்பேயும், உரம்போவும் போரில் ஈடுபட்டன. அப்போது உரம்போ நாட்டை மிராம்போ என்பவர் ஆண்டுவந்தார். 1873 ஆம் ஆண்டில் உரம்போ படையினர் தபோராவிலிருந்தான யானைத் தந்த வணிகத்தைத் தடுத்துவிட்டனர். இதனால் உலக அளவில் யானைத் தந்தத்தின் விலை அதிகரித்தது. 1884 ஆம் ஆண்டில் மிராம்போ இறக்கும்வரை இப்போர் நீடித்தது.

1893 இல் உனியம்வேசி செருமானியர்களால் அடக்கப்பட்டது. தபோராவைச் சுற்றியுள்ள பகுதிகளில் தலைவர் இசிக்கே மட்டுமே ஓரளவு எதிர்ப்புக் காட்டினார். செருமானியர்கள் இப்பகுதியில் மறைமுகமான ஆட்சியையே நடத்தி வந்தனர். உள்ளூர்த் தலைவர்கள் நடுவண் அரசுக்கு நிர்வாக முகவர்களாகச் செயற்பட்டனர். காலப்போக்கில் உள்ளூர் தலவர்கள், அவர்களது பகுதிகளில் ஒழுங்குநிலையைப் பேண வேண்டும் என்றும், வரிகளை அறவிட வேண்டும் என்றும் செருமானியர்கள் எதிர்பார்த்தனர். தொடக்ககால அதிகாரிகள் உள்ளூர் தலைவர்களுடன் சேர்ந்து இயங்க விரும்பினர் ஆனால், பின்னர் வந்தவர்கள் அவர்கள் மீது ஐயுறவு கொண்டிருந்ததுடன், வேண்டுமென்றே தலைவர் ஆட்சியைச் சீர்குலைத்தனர்.

முதலாம் உலகப் போருக்குப் பின்னர் செருமானியர்கள் தபோராவிலிருந்து அகற்றப்பட்டதும், 1919 ஆம் ஆண்டில் பிரித்தானியர் இப்பகுதிகளைத் தமது கையில் எடுத்துக்கொண்டனர். 1961 ஆம் ஆண்டில் தான்சானியாவுக்கு விடுதலை கிடைக்கும்வரை பிரித்தானிரே இப் பகுதிகளை ஆண்டுவந்தனர்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நியம்வேசி_இனக்குழு&oldid=1453902" இலிருந்து மீள்விக்கப்பட்டது