உள்ளடக்கத்துக்குச் செல்

பாண்டு மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பான்டு
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ஆப்பிரிக்கப் பெரிய ஏரிகள், மத்திய ஆப்பிரிக்கா, தெற்கு ஆப்பிரிக்கா
மொழி(கள்)
பான்டு மொழிகள் (over 535)
சமயங்கள்
predominantly: கிறித்தவம், மரபுவழி நம்பிக்கைகள்; சிறுபான்மை: இசுலாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பிற நைகர்-காங்கோ-மொழி பேசும் குழுக்கள்
குத்ரீயின் பான்டு மொழிகள் வகை பிரிப்பின் அடிப்படையில், பான்டு மொழிகள் வலயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

பான்டு மக்கள் (Bantu peoples) என்னும் சொல், ஆப்பிரிக்காவில் உள்ள, பான்டு மொழிகளைப்யைப் பேசுகின்ற 300 - 600 இனக்குழுக்களைக் குறிக்கும் சொல் ஆகும்.[1] இவர்கள், தெற்கில் மத்திய ஆப்பிரிக்காவில் இருந்து ஆப்பிரிக்கப் பெரிய ஏரிப் பகுதிக்கூடாக தெற்கு ஆப்பிரிக்கா வரையில் பரந்திருக்கும் புவியியல் பகுதியில் வாழ்கின்றனர்.[1] பான்டு மொழி பெரும்பாலான ஆப்பிரிக்க மக்களால் பேசப்படும் நைகர்-காங்கோ மொழிக் குடும்பத்தின் முக்கியமான கிளை ஆகும். ஒன்றையொன்று புரிந்து கொள்ளக்கூடிய தன்மையின் அடிப்படையில்,[2] 650 பான்டு மொழிகள் இருப்பதாகக் கருதப்படுகின்றது. இம்மொழிகளுள் மொழிகளுக்கும், கிளைமொழிகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் தெளிவற்றவை. எத்னாலாக் 535 மொழிகள் இருப்பதாகக் கூறுகின்றது.[3]

ஏறத்தாழ 3,000 ஆண்டுகளுக்கு முன், முந்தைப் பான்டு மொழிக் குழுவினர், கிழக்கு நைசீரியா, கமரூன் ஆகிய நாடுகளில் எல்லைப் பகுதிகளை அண்டிய மேற்கு, மத்திய ஆப்பிரிக்கப் பகுதிகளில் இருந்த அவர்களது தாய் நிலத்தில் இருந்து கிழக்கு நோக்கிய தமது ஆயிரம் ஆண்டுக் காலப் புலப்பெயர்வைத் தொடங்கினர்.[4] இந்த பான்டு விரிவாக்கத்தின் மூலம் முன்னர் பான்டு மக்கள் இல்லாதிருந்த மத்திய, தெற்கு, தென்கிழக்குப் பகுதிகளில் பான்டுக்கள் முதன் முதலாகக் குடியேறினர். இந்த முந்தை பான்டுக் குடியேறிகள், அவர்களுக்கு முன் குடியேறிய பகுதிகளில் வாழ்ந்த, மத்திய ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பிக்மிகள், தெற்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கோசிய மக்கள் போன்ற பல பிற இனத்தவரை இனக்கலப்புக்கு உள்ளாக்கினர் அல்லது இடம் பெயர்த்து விட்டனர். இவர்கள், வடகிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து இடம் பெயர்ந்து, பல நூற்றாண்டுகளாகத் தென்கிழக்குப் பகுதிகளின் வாழ்ந்த சில ஆப்பிரிக்க-ஆசிய வெளிக் குழுக்களையும் சந்தித்தனர்.[5][6]

தனித்தனியான பான்டுக் குழுக்கள் இன்று பெரும்பாலும் மில்லியன் கணக்கில் மக்களைக் கொண்டுள்ளவையாக உள்ளன. இவற்றுள், சிம்பாப்வேயைச் சேர்ந்த டெபெலே, சோனா ஆகிய குழுக்கள் 14.2 மில்லியன் மக்களுடனும், காங்கோ சனநாயகக் குடியரசின் லூபா குழு 13.5 மில்லியனுக்கு மேற்பட்ட எண்ணிக்கையான மக்களுடனும், தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சூலு மக்கள் 10 மில்லியன் மக்களுடனும், மத்திய நைசீரியாவிலும், கமரூனிலும் வாழும் திவ் குழுவினர் ஏறத்தாழ 10 மில்லியன் மக்களையும், தான்சானியாவின் சுக்குமா குழு ஏறத்தாழ எட்டு மில்லியன் மக்களையும், கென்யாவின் கிக்குயு ஆறு மில்லியன் மக்களையும் கொண்டுள்ளன. அரபு மொழிச் செல்வாக்குக்கு உட்பட்ட சுவாகிலி மொழியைத் தாய் மொழியாகப் பேசுபவர்கள் ஏறத்தாழ ஐந்து மில்லியன் மக்களே ஆயினும்,[7] இது தெற்கு ஆப்பிரிரிக்கா முழுவதும் வாழும் 140 மில்லியனுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையான மக்களின் பொது மொழியாக உள்ளது.[8] ஆப்பிரிக்க ஒன்றியத்தின் அலுவலக மொழிகளுள் ஒன்றாகவும் சுவாகிலி உள்ளது.

வரலாறு

[தொகு]

இற்றைக்கு 4000 ஆண்டுகளுக்கு முன்பு, இன்றைய நைசீரியா, கமரூன் ஆகிய நாடுகளின் தென்மேற்கு எல்லைகளை அண்டிய மேற்கு ஆப்பிரிக்கப் பகுதியே முந்தைப் பான்டு மக்களின் தாய்நிலம் எனத் தற்கால அறிஞர்கள் கருதுகின்றனர். இவர்களது மொழி, நைகர்-காங்கோ மொழிக்குடும்பத்தின் ஒரு கிளை.[9] இந்த நோக்கு, 1960 களில் யோசேப் கிரீன்பர்க், மால்க்கம் குத்ரீ ஆகியோரான் முன்னெடுக்கப்பட்ட முரண்பட்ட கோட்பாடுகளினால் இடம்பெற்று வந்த வாதங்களுக்கு முடிவாக அமைந்தது. பான்டு மொழிகளின் முன்னேர்களாகக் கருதப்படும் முந்தைப் பான்டு மொழி தென்கிழக்கு நைசீரியாவின் மொழிகளுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டது என கிரீன்பர்க் கருதினார். பான்டு மொழிகள் அங்கிருந்து கிழக்கு நோக்கியும், தெற்கு நோக்கியும் பரவியதாகவும், பல நூறு ஆண்டுக் காலத்தினூடாக மேலும் பல இரண்டாம் நிலை மையங்களுக்கும் அம்மொழிகளின் பரவல் ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Butt, John J. (2006). The Greenwood Dictionary of World History. Greenwood Publishing Group. p. 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-313-32765-3.
  2. Derek Nurse, 2006, "Bantu Languages", in the Encyclopedia of Language and Linguistics
  3. Ethnologue report for Southern Bantoid. The figure of 535 includes the 13 Mbam languages considered Bantu in Guthrie's classification and thus counted by Nurse (2006)
  4. Philip J. Adler, Randall L. Pouwels, World Civilizations: To 1700 Volume 1 of World Civilizations, (Cengage Learning: 2007), p.169.
  5. Toyin Falola, Aribidesi Adisa Usman, Movements, borders, and identities in Africa, (University Rochester Press: 2009), pp.4-5.
  6. Fitzpatrick, Mary (1999). Tanzania, Zanzibar & Pemba. Lonely Planet. p. 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-86442-726-3.
  7. Peek, Philip M.; Kwesi Yankah (2004). African folklore: an encyclopedia. Taylor & Francis. p. 699. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-415-93933-X.
  8. Irele 2010
  9. Erhet & Posnansky, eds. (1982), Newman (1995)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டு_மக்கள்&oldid=3849051" இலிருந்து மீள்விக்கப்பட்டது