மூச்சுத் திவலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
A green sign with illustrations and the text: "Droplet Precautions. Everyone must clean their hands, including before entering and when leaving the room; Make sure their eyes, nose and mouth are fully covered before room entry; Remove face protection before room exit."
சுவாசத் துளி பரவுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டும் ஒரு சுவரொட்டி. நோய்த்தொற்றுள்ள நோயாளிகளின் அறைகளுக்கு வெளியே நோயானது சுவாசத் துளிகளால் பரவக்கூடியது என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது[1]

மூச்சுத் திவலை அல்லது சுவாசத் துளி (Respiratory droplet) என்பது பெரும்பாலும் நீரைக் கொண்டுள்ள ஒரு துகள் ஆகும். இது உற்பத்தி செய்யப்பட்ட பின்னர் விரைவாக தரையில் விழும் அளவுக்கு பெரியது. பெரும்பாலும் 5 மைக்ரோமீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்டதாக வரையறுக்கப்படுகிறது. சுவாசிப்பது, பேசுவது, தும்மல், இருமல் அல்லது வாந்தியெடுத்தல் போன்ற செயல்பாடுகளின் விளைவாக சுவாசத் துளி இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படுகிறது. அல்லது தூசுப்படலத்தை உருவாக்கும் மருத்துவ நடைமுறைகள், கழிப்பறைகளை சுத்தப்படுத்துதல் அல்லது பிற வீட்டு வேலை நடவடிக்கைகள் மூலம் செயற்கையாகவும் இத்துளிகளை உருவாக்க முடியும்.

சுவாச நீர்த்துளிகள் நீர்த்துளி உட்கருக்களிலிருந்து வேறுபட்டவையாகும். நீர்த்துளி உட்கருக்கள் 5 மைக்ரோமீட்டரை விட சிறிய அளவு கொண்டவையாகும். அவை குறிப்பிடத்தக்க காலத்திற்கு காற்றில் தொங்கியிருக்க முடியும். இதனால் நீர்த்துளி உட்கருக்கள் காற்றுவழி நோய்களுக்கான நோய்க்காவி நோய்ப்பரப்பியாக இருக்கின்றன. சுவாசத் துளிகள் மூலம் காற்றுவழி நோய்கள் பரவுவதில்லை.

உருவாக்கம் மற்றும் இடப்பெயர்ச்சி[தொகு]

சுவாச நீர்த்துளிகள் பல வழிகளில் உருவாக்கப்படுகின்றன. சுவாசம், பேசுதல், தும்மல், இருமல் அல்லது பாடுதல் போன்ற செயல்களின் விளைவாக அவை இயற்கையாகவே உருவாகின்றன. மூச்சுக்குழலுக்குள் குழாய் செருகுதல், இதய இயக்க மீட்பு, பிணக்கூறாய்வு, அறுவைச் சிகிச்சை மருத்துவம், மூச்சுக்குழல் உள்நோக்காய்வு போன்ற மருத்துவச் செயல்பாடுகள் மூலமாக இவை செயற்கையாகவும் உருவாகின்றன [2]. இதே வகை சுவாச நீர்த்துளிகள் வாந்தியெடுத்தல், கழிவறையை கழுவி சுத்தம் செய்தல் , ஈரமான தரைப்பரப்பை சுத்தம் செய்தல், தூவாலை நீர்ப்பொழிவு அல்லது குழாய் தண்ணீர் பயன்படுத்துதல், விவசாயத் தேவைகளுக்காக தேங்கிய நீரைத் தெளித்தல் போன்ற பிற நடவடிக்கைகளினாலும் சுவாசத் துளிகள் உருவாகின்றன [3].

உருவாகும் முறையைப் பொறுத்து, அவற்றில் உப்புக்கள், செல்கள் மற்றும் வைரசு துகள்கள் இருக்கலாம்[2]. இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் சுவாச நீர்த்துளிகளைப் பொருத்தவரையில் அவை சுவாசக் குழாயின் வெவ்வேறு இடங்களில் உருவாகலாம். அவை அவற்றின் உள்ளடக்கத்தை பாதிக்கலாம்[3]. சளியின் உள்ளடக்கம், சளியளவு, மற்றும் அதன் பாகுத்தன்மை ஆகியவற்றில் காணப்படும் வேறுபாடுகள் காரணமாக ஆரோக்கியமான மற்றும் நோயுற்ற நபர்களிடையே தோன்றும் சுவாச நீர்த்துளிகளின் அளவு பாதிக்கப்பட்டு வேறுபடுகிறது [4].

சுவாசத் துளிகள் உருவாக்கத்தின் வெவ்வேறு முறைகள் காரணமாக வெவ்வேறு அளவும் வெவ்வேறு ஆரம்ப வேகமும் கொண்ட சுவாச நீர்த்துளிகள் உருவாகின்றன. இதனால் இவற்றின் போக்குவரத்தும் காற்றில் பரவும் முறையும் மாறுபடுகின்றன. 10 மைக்ரோமீட்டருக்கு அதிகமான விட்டம் கொண்ட சுவாசத்துளிகள் ஒருவேளை சுவாசப் பாதைக்குள் உள்ளிழுக்கப்பட்டால் அவை உட்புற சுவாச மண்டலத்தில் ஊடுருவதலுக்குப் பதிலாக மூக்கு அல்லது தொண்டையில் பிடிபட்டு நிற்கின்றன[4]. 100 மைரோமீட்டருக்கும் குறைவான அளவுள்ள சுவாசத் துளிகள் உடனடியாக உள்ளிழுக்கப்படாவிட்டால் அந்நீர்த்துளிகள் ஒரு மேற்பரப்பில் குடியேறுவதற்கு முன்பாகவே முற்றிலும் வறண்டு போகின்றன[2][3]. இவ்வாறு உலர்ந்ததும் அவை எளிதில் ஆவியாகாத சுவாசத் துளி உட்கருக்களாகின்றன. சுவாச நீர்த்துளிகள் காற்றில் உள்ள உயிரற்ற பிற துகள்களுடன் தொடர்பு கொள்கின்றன. அவை இவற்றை விட எண்னிக்கையில் அதிகமானவை[3].

நோய் பரப்புவதில் பங்கு[தொகு]

சில தொற்று நோய்கள் வாய் மற்றும் மூக்கிலிருந்து வெளியேற்றப்படும் சுவாசத் துளிகள் வழியாக பரவுகின்றன.

நோய் பரவுவதற்கான ஒரு பொதுவான வழிமுறை இருமல், தும்மல் அல்லது பேசுவதன் மூலம் வெளிப்படும் சுவாச துளிகளால் உருவாகிறது. சுவாச நீர்த்துளி பரவுதல் என்பது சுவாச நோய்த்தொற்றுகளுக்கான வழக்கமான வழியாகும். கண்கள், மூக்கு அல்லது வாய் போன்ற எளிதில் தாக்குதலுக்கு உட்படக்கூடிய மேற்பரப்புகளை சுவாசத் துளிகள் அடையும்போது நோய் பரவுதல் தொடங்குகிறது. சுவாசத் துளிகளால் அசுத்தமான அம்மேற்பரப்புகள் கைகளால் தொடப்படும்போது மேலும் ஒரு புதிய தொடர்பு மூலம் மறைமுக வழிமுறையில் நோய் பரவுதல் தொடர்கிறது.

சுவாச துளிகள் அளவில் பெரியவை என்பதால் அவற்றால் நீண்ட நேரம் காற்றில் மிதந்திருக்க முடியாது. எனவே பொதுவாக அவை சில மீட்டர் அளவு குறுகிய தூரங்களுக்கு சிதறடிக்கப்படுகின்றன [5].

சுவாச நீர்த்துளி பரவலால் இன்புளூயன்சா வைரசு, ரைனோவைரசு, சார்சு வைரசு, எண்டரோ வைரசு எனப்படும் ஆர்.என்.ஏ வைரசு, நோரோவைரசு[6], தட்டம்மை மார்பிலிவைரசு[7], சார்சு கொரோனா வைரசு, கோவிட்-19 கொரோனா வைரசு போன்ற வைரசுகள் சுவாச நீர்த்துளி பரவலால் பரவி தொற்று நோய் பரவலை உண்டாக்குகின்றன[8]. பாக்டீரியா, பூஞ்சை போன்ற தொற்று முகவர்களும் கூட சுவாச துளிகளால் பரவும். பாக்டீரியா, பூஞ்சை போன்ற தொற்று முகவர்களும் கூட சுவாச துளிகளால் பரவும்[2]. இதற்கு நேர்மாறாக சுவாச நீர்த்துளிகள் காய்ந்து வறண்ட பிறகு ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நோய்கள் காற்றின் வழியாக பரவுவதல் மூலம் பரவுகின்றன.[7]

சுற்றுச்சூழல் வெப்பநிலையும் ஈரப்பதமும் தூசுப்படல உயிரினத்தின் உயிர்வாழ்வை பாதிக்கின்றன. ஏனெனில் நீர்த்துளி ஆவியாகி சிறியதாக மாறும்போது அது கொண்டிருக்கும் தொற்று முகவர்களுக்கு இது குறைந்த பாதுகாப்பை வழங்குகிறது. பொதுவாக வைரசு அதன் கொழுப்பு மேலுறையுடன் இருக்கும்போது வறண்ட காற்றில் மிகவும் நிலையானவை. அதே சமயம் உறை இல்லாத வைரசுகள் ஈரமான காற்றில் நிலையானவை. வைரசுகள் பொதுவாக குறைந்த காற்று வெப்பநிலையில் மிகவும் நிலைத்திருக்கும்.[3]

ஆபத்து கட்டுப்பாடு[தொகு]

ஒரு சுகாதார அமைப்பில் நோய்த் தொற்று உள்ளவர்களை தனி அறையில் வைத்திருப்பது, அறைக்கு வெளியே அவர்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்துவது மற்றும் சரியான தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களைப் பயன்படுத்துதல் ஆகியவை சுவாச நீர்த்துளி மேலும் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கைகளில் அடங்கும்.[1][9]

ஒரு நோயாளிக்கு ஏற்படும் நோய்த்தொற்றின் அடிப்படையில் சுவாசத் துளி பரிமாற்றங்களுக்கு மூன்று வகையான வாய்ப்புகளுள்ளன. நோய்த் தொற்றுக்கான காரணங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவேண்டிய பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அலட்சியம் செய்வது, தொடர்பு கொள்வதில் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனமின்மை மற்றும் காற்று வழியாக பரவுதலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அலட்சியம் செய்வது என்பன அம்மூன்று பரிமாற்ற வழிமுறைகளாகும் [1]. இருப்பினும் தூசுபடலத்தில் உருவாகும் சிறிய சுவாசத் துளிகளால் வெகுதூரம் பயணிக்க முடியும். எனவே சுவாசத் துளி முன்னெச்சரிக்கைகள் அவற்றைத் தடுக்க போதுமானதாக இருக்காது.[10]

பொதுவாக, அதிக காற்றோட்ட விகிதங்கள் சுவாசத் துளிகளை நீர்த்துப்போகச் செய்வதற்கும் அகற்றுவதற்கும் ஆபத்து கட்டுப்பாட்டாகப் பயன்படுத்தப்படலாம். இருப்பினும் வடிகட்டப்படாத அல்லது போதுமான அளவு வடிகட்டப்படாத காற்று வேறொரு இடத்திற்கு வெளியேற்றப்பட்டால் அது தொற்று பரவுவதற்கு வழிவகுக்கும்.[3]

பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும்[1][9] சுகாதாரப் பணியாளர்களுக்கும் சுவாசத் துளி பரவாமல் தடுக்க அறுவை சிகிச்சை முகமூடிகள் பயன்படுத்தப்படுகிறது[1][11].2002-2004 ஆண்டுக் காலத்தில் சார்சு வைரசு வெடித்த காலத்தில் அறுவை சிகிச்சை முகமூடிகள் மற்றும் என்95 சுவாசக் கருவிகளின் பயன்பாடு சுகாதாரப் பணியாளர்களின் தொற்றுநோய்களைக் குறைத்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது [10]. அறுவைசிகிச்சை முகமூடிகள் அதை அணிந்தவரின் வாய் மற்றும் மூக்கு வழியாக வாரியடிக்கப்படும் சுவாச நீர்த்துளிகள் போன்ற சாத்தியமான அசுத்தங்களை எதிரில் இருக்கும் நபருக்கு பரவவிடாமல் தடுக்கும். என்95 போன்ற சிறப்பு முகமுடிகள் இப்பணியுடன் காற்றிலுள்ள 95 சதவீதம் கிருமிகளை மூக்கு மற்றும் வாய்க்குள் செல்ல விடாமல் தடுக்கும். அதே வேளையில் சாதாரண மற்றும் என்95 முகமுடிகள் இரண்டிலுமே அவற்றுக்கும் முகத்திற்கும் இடையே தளர்வான பொருத்தம் இருப்பதால் காற்றில் பரவும் நோய்களைப் பரப்பும் மிகச் சிறிய துகள்களை வடிகட்டவோ தடுக்கவோ அவற்றால் முழுமையாக முடிவதில்லை.[12]

வரலாறு[தொகு]

1899 ஆம் ஆண்டு செருமனி நாட்டைச் சேர்ந்த பாக்டீரியா ஆய்வு வல்லுநர் கார்ல் பிளாக்கெ முதன்முதலில் சுவாசக் குழாயிலிருந்து வெளியேற்றப்பட்ட நீர்த்துளிகளில் உள்ள நுண்ணுயிரிகள் நோய் பரவுதலுக்கு ஒரு வழிமுறையாகும் என்பதை முதன்முதலாக நிருபித்தார். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிளாக்கெ சுவாச நீர்த்துளி என்ற சொல் சில நேரங்களில் முற்றிலும் வறண்டு போகாத அளவுக்கு தோராயமாக 100 மைக்ரோமீட்டர் அளவு பெரிய துகள்களுக்கு பயன்படுத்தப்பட்டது.[13]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Transmission-Based Precautions" (in en-us). 2016-01-07. https://www.cdc.gov/infectioncontrol/basics/transmission-based-precautions.html. 
 2. 2.0 2.1 2.2 2.3 Atkinson, James; Chartier, Yves; Pessoa-Silva, Carmen Lúcia; Jensen, Paul; Li, Yuguo; Seto, Wing-Hong (2009). "Annex C: Respiratory droplets" (in en). Natural Ventilation for Infection Control in Health-Care Settings. உலக சுகாதார அமைப்பு. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-92-4-154785-7. https://www.ncbi.nlm.nih.gov/books/NBK143281/. 
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Morawska, L. (2006-10-01). "Droplet fate in indoor environments, or can we prevent the spread of infection?" (in en). Indoor Air 16 (5): 335–347. doi:10.1111/j.1600-0668.2006.00432.x. பன்னாட்டுத் தர தொடர் எண்:0905-6947. பப்மெட்:16948710. https://eprints.qut.edu.au/5883/1/5883.pdf. பார்த்த நாள்: 2020-04-04. 
 4. 4.0 4.1 Gralton, Jan; Tovey, Euan; McLaws, Mary-Louise; Rawlinson, William D. (2011-01-01). "The role of particle size in aerosolised pathogen transmission: A review" (in en). Journal of Infection 62 (1): 1–13. doi:10.1016/j.jinf.2010.11.010. பப்மெட்:21094184. 
 5. "Clinical Educators Guide for the prevention and control of infection in healthcare". Australian National Health and Medical Research Council. 2010. p. 3 இம் மூலத்தில் இருந்து 2015-04-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150405034015/http://www.nhmrc.gov.au/_files_nhmrc/publications/attachments/cd33_icg_clinical_ed_guide_web.pdf. பார்த்த நாள்: 2015-09-12. 
 6. La Rosa, Giuseppina; Fratini, Marta; Della Libera, Simonetta; Iaconelli, Marcello; Muscillo, Michele (2013-06-01). "Viral infections acquired indoors through airborne, droplet or contact transmission". Annali dell'Istituto Superiore di Sanità 49 (2): 124–132. doi:10.4415/ANN_13_02_03. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-2571. பப்மெட்:23771256. https://www.scielosp.org/article/aiss/2013.v49n2/124-132/. 
 7. 7.0 7.1 "FAQ: Methods of Disease Transmission". https://eportal.mountsinai.ca/Microbiology/faq/transmission.shtml. 
 8. "Pass the message: Five steps to kicking out coronavirus" (in en). 2020-02-23. https://www.who.int/news-room/detail/23-03-2020-pass-the-message-five-steps-to-kicking-out-coronavirus. பார்த்த நாள்: 2020-03-24. 
 9. 9.0 9.1 "Prevention of hospital-acquired infections". World Health Organization (WHO): p. 45 இம் மூலத்தில் இருந்து 26 March 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200326160913/https://apps.who.int/medicinedocs/documents/s16355e/s16355e.pdf. 
 10. 10.0 10.1 Gamage, B; Moore, D; Copes, R; Yassi, A; Bryce, E (2005-03-01). "Protecting health care workers from SARS and other respiratory pathogens: A review of the infection control literature" (in en). American Journal of Infection Control 33 (2): 114–121. doi:10.1016/j.ajic.2004.12.002. பப்மெட்:15761412. https://archive.org/details/sim_american-journal-of-infection-control_2005-03_33_2/page/114. 
 11. "Clinical Educators Guide: Australian Guidelines for the Prevention and Control of Infection in Healthcare". December 2019. p. 20. https://www.nhmrc.gov.au/file/14878/download?token=I4HAGQuD. 
 12. "N95 Respirators and Surgical Masks (Face Masks)" (in en). 2020-03-11. http://www.fda.gov/medical-devices/personal-protective-equipment-infection-control/n95-respirators-and-surgical-masks-face-masks. பார்த்த நாள்: 2020-03-28. 
 13. Hare, R. (1964-03-01). "The transmission of respirratory infections". Proceedings of the Royal Society of Medicine 57 (3): 221–230. doi:10.1177/003591576405700329. பன்னாட்டுத் தர தொடர் எண்:0035-9157. பப்மெட்:14130877. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூச்சுத்_திவலை&oldid=3629572" இருந்து மீள்விக்கப்பட்டது