காற்றோட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கட்டிடக்கலையில், காற்றோட்டம் (Ventilation) என்பது, கட்டிடம் ஒன்றினுள் புதிய வளியை வெளியில் இருந்து நுழையவிட்டு உள்ளே இருக்கும் வளியை வெளியேற்றுவதைக் குறிக்கும். கட்டிடங்களின் உள்ளே இருக்கும் வளி பல காரணங்களால் பயன்பாட்டுக்குரிய தரத்தை இழக்கிறது. சிறப்பாக, காபனீரொட்சைட்டின் செறிவு கூடுதல், தூசித் துணிக்கைகளால் மாசடைதல், ஆவியாகும் கரிமச் சேர்வைகளால் மாசடைதல், சமையலறை மற்றும் கழிப்பறைகளில் இருந்து வரும் மணம், நீராவியின் செறிவு கூடுதல் என்பன உள்ளேயிருக்கும் வளியைப் பயன்பாட்டுக்குப் பொருத்தமற்றவையாக மாற்றுகின்றன. இதனால், கட்டிடத்தினுள் மனிதருடைய வாழ்வுக்கும், அவர்களுடைய செயற்பாடுகளுக்கும் ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு, மாசடைந்த வளியை அகற்றிப் புதிய தரமான வளியைக் கொடுக்கவேண்டியது அவசியம். அதாவது, உள்ளக வளிப் பண்பை (Indoor Air Quality) உரிய தரத்தில் பேணுவது அவசியமாகின்றது. இதனாலேயே கட்டிடத்தினுள் காற்றோட்டம் முக்கியமான அம்சமாக அமைகின்றது.

காற்றோட்டத்தை இரண்டு வழிகளில் அடைய முடியும்:

  1. இயற்கைக் காற்றோட்டம்
  2. பொறிமுறைக் காற்றோட்டம்

இயற்கைக் காற்றோட்டம் என்பது, பொறிகளின் உதவியின்றி, இயற்கையாகவே, வெளியே உள்ள வளி உள்ளே நுழைந்து மாசடைந்த வளி வெளியேறுவதைக் குறிக்கும். எனினும், உகந்த முறையிலும், தேவையான அளவிலும் கட்டிடங்களினுள் காற்றோட்டத்தை ஏற்படுத்துவதற்குக் கட்டிடங்களின் வடிவமைப்பில் கவனம் செலுத்தவேண்டியது இன்றியமையாதது.

பொறிமுறைக் காற்றோட்டத்தை, மின் விசிறிகள், உறிஞ்சு விசிறிகள் (exhaust fan), வளிப்பதன முறைகள் என்பவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் செயற்படுத்தலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=காற்றோட்டம்&oldid=121634" இருந்து மீள்விக்கப்பட்டது