உள்ளடக்கத்துக்குச் செல்

மரவட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரவட்டை
Millipedes
புதைப்படிவ காலம்:428–0 Ma
Late Silurian to Recent
An assortment of millipedes (not to scale)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
துணைத்தொகுதி:
வகுப்பு:
Diplopoda

Subclasses
உயிரியற் பல்வகைமை
16 orders, c. 12,000 species

மரவட்டை (Millipedes) என்பவை கணுக்காலி வகுப்பைச் சேர்ந்த உயிரினமாகும். இவை உடலில் கண்டத்துக்கு இரு இணை கால்கள் என கொண்டிருப்பவை. பெரும்பாலான மரவட்டைகள் 20க்கும் மேற்பட்ட கண்டங்களுடன், மிகவும் நீண்ட, உருளைவடிவான உடலைக் கொண்டவை. இருப்பினும் சில மரவட்டைகள் முதுகு-வயிற்றுப்புறமாகத் தட்டையானவையாகவும், நீளத்தில் மிகவும் குறுகியவையாகவும் இருக்கும். இவற்றால் தங்கள் உடலை ஒரு பந்து போல் சுருட்டிக் கொள்ள முடியும். மரவட்டைக்கு ஆங்கிலச்சொல் ’millipede’ என்பதாகும். இச்சொல் இலத்தீனிலிருந்து வந்த சொல்லாகும், இலத்தீனில் இந்தச் சொல்லிற்கு ஆயிரம் கால்கள் எனப் பொருட்படும் என்றாலும் ஆயிரங்கால்களைக் கொண்டதாக இதுவரை எந்தவொரு மரவட்டை இனமும் அறியப்படவில்லை. இருந்தபோதும், Illacme plenipes எனும் அரிய மரவட்டை சிற்றினம் 750 கால்கள் வரை கொண்டுள்ளதாக அறியப்பட்டுள்ளது. மரவட்டைகளில் சுமார் 12,000 சிற்றினங்கள் உள்ளதாகத் தெரிகிறது. மேலும் சுமார் 140 குடும்பங்களுடன் பலகாலிகளில் பெரிய வர்க்கமாக உள்ளது. மரவட்டைகள், பூரான் போன்ற பலகால் உயிரினங்கள் கணுக்காலி குழுவைச் சேர்ந்தவை.

பெரும்பாலான மரவட்டைகள் மெதுவாக நகரும் அழுகலுண்ணிகளாகும். இவை மரவட்டைகள் மக்கும் இலைகளையும், ஏனைய இறந்த தாவரப் பகுதிகளையும் உணவாகக் கொள்பவை. சில பூஞ்சைகளை சாப்பிடக்கூடியன. ஆண் மரவட்டைகள் தனது கால்களின் வழியே பெண்ணுக்கு விந்துகளை அனுப்புகிறன.[1] சில மரவட்டைகள் வீடு அல்லது தோட்டத்தில் காணப்பட்டாலும் இவற்றால் பொதுவாக மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. இவை தாவர உண்ணிகளாகும். இவற்றின் வாய் நுண்ணியதாக இருப்பதால் மனிதர்களை கடிக்க இயலாது.[2]

இவை சிலபோது மிகக் குறைந்த அளவில் தோட்டப் பயிர்களுக்கு பாதிப்பளிப்பவையாக விளங்குகின்றன. இவை பசுமைக்குடில்களில் வளரும் நாற்றுக்களுக்கு கடுமையான சேதத்தை ஏற்படுத்தக்கூடியவை. மரவட்டைகள் ஏற்படுத்திய சேதத்தினை, இளந் தாவரத் தண்டின் வெளிப் பட்டைகள் சிதைக்கப்பட்டிருத்தல், இலைகளிலும் தாவர முனைப்பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள ஒழுங்கற்ற சேதம் போன்ற அறிகுறிகளை வைத்து இனங்காணலாம். பெரும்பாலான மரவட்டைகளின் உடலில் உள்ள சிறு துளைகள் வழியாக தற்காப்பு ரசாயனங்களைச் சுரக்கின்றன. இவற்றில் பெரும்பாலான இனங்கள் இனப்பெருக்கத்திற்கான விந்துக்கள் ஆண் மரவட்டைகளின் கால்கள் மூலம் பெண் மரவட்டைகளுக்கு அனுப்பப்படுகிறது.

மரவட்டைகள் மிகப் பழமையான நிலவிலங்குகளில் ஒன்றாகும். இவை சிலுரியக் காலத்திலிருந்து காணப்படுகின்றன. வரலாற்றுக்கு முந்தையகால மரவட்டைகளில் சில சிற்றினங்கள் அதிகபட்சமாக 2 மீ (6 அடி 7 அங்குலம்) வரை வளர்ந்திருக்கின்றன. தற்கால நீண்ட மரவட்டைகள் 27 முதல் 38 செமீ (11 முதல் 15 அங்குலம்) வரை காணப்படுகின்றன. நீண்ட மரவட்டை இனங்கள் மாபெரும் ஆப்பிரிக்க மரவட்டை (Archispirostreptus gigas) சிற்றினமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "பூச்சி சூழ் உலகு 12: ஆயிரம் கால் அட்டைகள்". கட்டுரை. தி இந்து. 3 திசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 3 திசம்பர் 2016.
  2. "இயற்கை மீதான ஆர்வம் இன்னும் தீரவில்லை எனக்கு! - டேவிட் அட்டன்பரோ பேட்டி". தி இந்து (தமிழ்). 14 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 15 மே 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரவட்டை&oldid=3914926" இலிருந்து மீள்விக்கப்பட்டது