மகர ரேகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆள்கூறுகள்: 23°26′14″S 0°0′0″W / 23.43722°S -0.00000°E / -23.43722; -0.00000 (Prime Meridian)

புவியில் மகர ரேகையும் மற்ற நிலநேர்க்கோட்டு வட்டங்களும்
மகர ரேகையைக் காட்டும் உலக நிலப்படம்
1794ஆம் ஆண்டில் சாமுவல் டுன் வரைந்த உலக நிலப்படத்தில் மகர ரேகை
சிலியின் அன்டோஃபகஸ்ட்டாவின் வடக்கே மகர ரேகையைக் குறிக்கும் நினைவுச் சின்னம்
ஆத்திரேலிய குயின்சுலாந்திலுள்ள லாங்ரீச்
பிரேசிலின் மரிங்காவில் மகர ரேகையைக் குறிக்கும் குறியீடு
சூரியக் கடிகாரத்தில் மகர ரேகை, யுய்யீ மாநிலம், அர்கெந்தீனா

மகர ரேகை அல்லது மகரக் கோடு (Tropic of Capricorn) திசம்பர் (அல்லது தெற்கத்திய) வேனிற்கால கதிர்த் திருப்பத்தின் போது கதிரவனின் கதிரொளி செங்குத்தாக விழுகின்ற நில நேர்க்கோட்டின் வட்டம் ஆகும். இதனை தெற்கு வெப்ப மண்டலப் பகுதி (Southern Tropic) எனவும் குறிப்பிடுகின்றனர். சூரியன் நேரடியாக தலைக்கு மேலாக காணப்படுகின்ற தெற்குக் கோடி நிலநேர்க்கோடு எனவும் குறிப்பிடலாம். கதிரவன் பாதையில் கடக ரைகை வடக்கு எல்லையாகவும் மகர ரேகை தெற்கு எல்லையாகவும் உள்ளன.

புவியின் நிலப்படங்களில் குறிப்பிடப்படும் ஐந்து நிலநேர்க்கோட்டு வட்டங்களில் இதுவும் ஒன்றாகும். தற்போது (ஏப்ரல் 27, 2018) இதன் நிலநேர்க்கோடு 23°26′12.9″ (அல்லது 23.43691°)ஆக [1] உள்ளது. ஆனால் இது மெதுவாக வடக்கு நோக்கி நகர்ந்து வருகின்றது; ஆண்டுக்கு 0.47 விகலை அல்லது 15 மீட்டராக இந்த நகர்வு உள்ளது.

பெயர்க்காரணம்[தொகு]

2000 ஆண்டுகளுக்கு முன்னர் இதற்குப் பெயரிட விழைந்தபோது சூரியன் திசம்பர் கதிர்த்திருப்பத்தின்போது மகர விண்மீன் குழாமின் திசையில் இருந்ததால் இதற்கு மகரக்கோடு எனப் பெயரிடப்பட்டது. ஆங்கிலத்தில் இந்த விண்மீன் குழாம் இலத்தீனில் ஆட்டுத்தலை எனப் பொருள்படும் கேப்ரிகார்னொசு எனப் பெயரிடப்பட்டுள்ளதால் இக்கோடு டிராபிக் ஆஃப் கேப்ரிகார்ன் என அழைக்கப்படுகின்றது. தற்காலத்தில் இந்த நிகழ்வு விண்மீன் குழாம் தனுசு திசையில் நடைபெறுகின்றது. இது அயனச் சலனத்தால் ஏற்பட்டுள்ளது. ஆங்கிலச் சொல் டிராபிக் என்பதே கிரேக்கச் சொல்லான டிரோப் (τροπή) என்பதிலிருந்து வந்துள்ளது; இதற்கு திரும்புதல், திசை மாறுதல் என்ற பொருள்கள் உண்டு. இதே ஏரணத்தைக் கொண்டு மகரக்கோட்டை மகரத் திருப்பம் எனவும் பெயரிடலாம்.

புவியியலும் சுற்றுச் சூழலும்[தொகு]

மகரக் கோடு தெற்கிலுள்ள தென் மிதவெப்ப மண்டலத்தையும் வடக்கிலுள்ள அயன மண்டலத்தையும் பிரிக்கும் கோடாகும். வடக்கு அரைக்கோளத்தில் மகரக்கோட்டிற்கு இணையானது கடகக் கோடாகும்.

மகரக் கோட்டின் நிலை நிரந்தரமானதல்ல; நேரக்கோட்டில் இது மிகவும் சிக்கலான முறையில் மாறுகின்றது.

ஆத்திரேலியாவில் இக்கோட்டில் அமைந்துள்ள இடங்களில் மழைப்பொழிவு உலகின் மற்றெந்தப் பகுதிகளை விடவும் மிகவும் வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.[2] இதனால் பொதுவாக மழைப்பொழியும் இடங்களிலும் கூட வேளாண்மை செய்யவியலாதுள்ளது. இப்பகுதிகளிலும் சிஇல ஆண்டுகளில் கடும் வறட்சி நிலவுகிறது. தெற்கத்திய ஆபிரிக்காவில் மழைப்பொழிவு இதைவிட எதிர்பார்க்கக் கூடிய அளவில் உள்ளதால் இங்கு விவசாயம் நடைபெறுகிறது. இருப்பினும் இங்கும் உரங்களிட்டாலும் விளைச்சல் குறைவாகவே உள்ளது.

தென் அமெரிக்காவில் அந்தக் கண்டத்து கிரேட்டான்களின் புவிப்பரப்பு ஆத்திரேலியா, தெற்கு ஆபிரிக்கா போன்றே தொன்மையானதாக இருப்பினும் புவியியல் காலக்கோட்டில் இளமையானதும் உருவாகி வருவதுமான அந்தீசு மலைத்தொடர் இருப்பதால் இப்பகுதியில் மேற்குப் பகுதியில் உருவாகும் வெப்பமண்டல எதிர்ச்சூறாவளிகளால் அத்திலாந்திக்குப் பெருங்கடலிலிருந்து வெப்பமான, ஈரமான காற்றைப் பெறுகிறது. இக்காரணத்தால் மகரக்கோட்டை அடுத்துள்ள பிரேசில் பகுதிகளில் பெருமளவில் விவசாயம் செய்யப்படுகின்றது; முதன்மைப் பயிராக கரும்பு விளைகின்றது. தவிரவும் இயற்கையான மழைக்காட்டு தாவரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டு விவசாயம் நடக்கிறது. கீழே தெற்கிலுள்ள அர்கெந்தீனாவிலுள்ள மிதவெப்பமண்டல புல்வெளிகளான பம்பாசு மண்டலம் உலகிலேயே மிகவும் வளமையான விவசாயக்களமாக விளங்குகின்றது; இங்கு கோதுமை, சோயா அவரை, மக்காச்சோளம் விளைவிப்பதுடன் கால்நடை வேளாண்மையால் மாட்டிறைச்சியும் கிடைக்கின்றது. உலகளவில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி நாடுகளில் முதன்மையானதாக அர்கெந்தீனா விளங்குகின்றது.

அந்தீசுக்கி மேற்கில் நிலவும் ஹம்போல்ட் நீரோட்டம் அப்பகுதிகளில் மிகவும் வறண்ட வானிலை காணப்படுகின்றது. உலகின் மிகவும் வறண்ட பாலைவனமான அட்டகாமா பாலைவனம் இங்கு உருவாகியுள்ளது. இக்காரணத்தாலேயே சஜாமா எரிமலையுள்ள 18˚30' தெற்கு நிலநேர்க்கோட்டிற்கும் 27˚S நிலநேர்க்கோட்டிற்கும் இடையேயுள்ள பகுதியில் பனியாறுகள் எதுவும் இல்லை.[3] இப்பகுதியில் தாவரங்களே பெரும்பாலும் இல்லை; அந்தீசின் கிழக்குச் சரிவுகளில் மட்டும் மழை பெய்வதால் அங்கு மட்டும் மழைக்கால விவசாயம் நடக்கின்றது.

மேலும் தெற்கு நோக்கிப் பயணித்தால் அர்கெந்தீனாவும் சிலியும் பகிரும் படகோனியாவில் வானிலை மிகவும் குளிர்ந்துள்ளது; குளிர்காலங்களில் பெரும் பனித்தூவிகள் பொழிகின்றன. இதனால் ஆண்டு முழுமைக்கும் நீர்வளம் கிடைக்கின்றது. படகோனியாவின் மேற்குப் பகுதியில் வானிலை ஈரப்பசையுடன் இருக்கின்றது. இப்பகுதியில் கடனீர் இடுக்கேரி, காடு, ஏரிகளைக் காணலாம்; அந்தீசு மலைத்தொடரின் சிகரங்களில் நிரந்தரமாக உள்ள பனியிலிருந்து வரும் நீர் இதற்கு காரணமாக உள்ளது. இதனால் இப்பகுதி பனிச்சறுக்கு விளையாட்டுகளுக்கும் குளிர்கால விளையாட்டுக்களுக்கும் பரவலாகப் பெயர்பெற்றது. படகோனியாவின் கிழக்குப் பகுதி பொதுவாக குளிர்ச்சியாகவும் வறண்டும் உள்ளது; இங்கு உயர்ந்த மேசை நிலங்களுடன் வலிதான காற்று வீசும் ஸ்டெப்பி புல்வெளிகள் அமைந்துள்ளன.

நாடுகள்[தொகு]

முதனெடுங்கோட்டில் துவங்கி மேற்காக மகரக்கோட்டில் அமைந்துள்ள நாடுகள்:

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மகர ரேகை
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகர_ரேகை&oldid=2749600" இருந்து மீள்விக்கப்பட்டது