பேச்சு:உளிதவரு கண்டந்தை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் உளிதவரு கண்டந்தை எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

தமிழ் இலக்கணப்படி கண்டந்தெ என முடிவதில்லை. கண்டந்தே என எழுதப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 09:26, 2 செப்டம்பர் 2015 (UTC)

அவ்வாறு முடிவதில் தவறில்லை. எல்லா உயிரெழுத்துகளும் மொழியிறுதியில் வரலாம். ஆயினும் மரபுப்படி, கண்டந்தே என எழுதுவதே வழமை. நதீ என்று எழுதுவதும் இலக்கணத்திற்குட்பட்டதே. ஆயினும் நதி என்று எழுதுவதே மரபு. நதீ என்று யாரும் எழுதுவதில்லை. --மதனாகரன் (பேச்சு) 10:34, 2 செப்டம்பர் 2015 (UTC)
அவ்வாறு இருக்க வேண்டிய அவசியமில்லை. முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும், இது கன்னடச் சொல் மூல மொழியிலிருப்பதை தமிழ் எழுத்துக்கு உகந்ததாக மாற்றலாமே ஒழிய, தமிழ் இலக்கணத்திற்கு ஏற்றதாய் மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அவ்வாறு மாற்றித் தான் ஆக வேண்டும் என்றால், பிறமொழி சார்புடைய பல கட்டுரைகளின் தலைப்பை தமிழ் விக்கியில் மாற்ற வேண்டும். அதுவும் போக, தமிழ் இலக்கணத்தில் ந்தெ என முடிவதில் தவறேதுமில்லை, அதில் வழுவும் இல்லை. இங்கு கன்னட மொழியில் முடிவுறும் -ந்தெ என்பது தமிழிலில் ந்தே என மாறாது, -ந்தை என்று தான் மாறும். (உள்ளிதவரு கண்டெந்தெ > உள்ளிதவர் கண்டந்தை > உள்ளவர் கண்டது) ஆனால், அது தமிழாக்கம் செய்யும் போது மட்டுந்தான் மூல மொழியின் பெயர்ச்சொல்லை தமிழ் எழுத்துக் கொண்டு எழுதும் போது அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. நன்றிகள். --விண்ணன் (பேச்சு) 11:00, 2 செப்டம்பர் 2015 (UTC)
இதுவுந் தமிழாக்கம் தான். எப்படி ஒலிப்பது என்று கட்டுரையினுள் குறிப்பிடலாம். இலக்கண நெறிகளை மீறவில்லை என்ற வகையில் கண்டந்தெ என்பதும் உடன்பாடே. --மதனாகரன் (பேச்சு) 11:03, 2 செப்டம்பர் 2015 (UTC)
இலங்கையில் பல சிங்கள ஊர்ப் பெயர்கள் தமிழ் முறைப்படிதான் எழுதப்படுகின்றன. (ஓர் உதாரணம்: கடவத்த - கடவத்தை) கண்டந்தெ இலக்கணத்தை மீறாவிட்டால் சரி. (எவ்வாறு இதனை எவ்வாறு உச்சரிப்பது? எனக்கு முடியவில்லை:)) நமது விக்கியில் இருந்து இதுவே பின்னர் ஒரு தமிழ் சொல்லாக ஆக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.--Kanags \உரையாடுக 11:29, 2 செப்டம்பர் 2015 (UTC)
நான் தான் தவறாகக் கூறிவிட்டேன். எகரம் தவிர்ந்த எல்லா உயிரெழுத்துகளும் எப்போதும் மொழியிறுதியில் வரலாம். அளபெடைச் சொற்களில் மட்டுமே எகரம் மொழியிறுதியில் வரும். --மதனாகரன் (பேச்சு) 11:46, 2 செப்டம்பர் 2015 (UTC)
//முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும், இது கன்னடச் சொல் மூல மொழியிலிருப்பதை தமிழ் எழுத்துக்கு உகந்ததாக மாற்றலாமே ஒழிய, தமிழ் இலக்கணத்திற்கு ஏற்றதாய் மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது.// திசைச்சொல் இலக்கணம் எல்லாம் தேர்வில் விருப்பவினாவாக விடுவதற்குத் தானா?--இரவி (பேச்சு) 12:23, 2 செப்டம்பர் 2015 (UTC)
ஆமாம் தோழரே, தேர்வில் விட்டுவிடுவது தான் வழக்கம். எனக்கு இலக்கணம் தெரியாது தோழரே, கொஞ்சம் வந்து மாலை வகுப்பு எடுத்து உதவினால் புண்ணணியாமாகப் போகும். முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், திசைச் சொல் இலக்கணம் என்பது அந்நிய மொழிச் சொல்லை தமிழில் கடன் வாங்கிப் பயன்படுத்துவதற்காகத் தானே ஒழிய, அந்நிய மொழிப் பெயர்களை மாற்றுவதற்காக அல்ல. கண்டந்தெ என்பதைத் தமிழில் பயன்படுத்தினால் அதைத் திசைச்சொல்லாக நாம் எடுக்க நேரிட்டால் கண்டந்தை என்று மாற்றிக் கொள்ளலாம், இங்குக் கண்டந்தெ என்பது வெறும் பெயர், ஒரு படத்தின் பெயர் அவ்வளவே, இது எப்படித் திசைச் சொல் இலக்கணத்திற்குள் வரும் எனத் தெரியவில்லை. நான் ஒன்றை இங்கு நினைவு படுத்த விரும்புகின்றேன், தாங்கள் முன் வைக்கும் இலக்கணம் எல்லாம் உரைநடைக்காக உருவாக்கப்பட்டதல்ல, அது செய்யுள்களுக்காக உருவாக்கப்பட்டது. அக் காலத்தில் கொடுந்தமிழ் எனப்படும் பேச்சுத் தமிழிற்கும், கல்வெட்டுத் தமிழிற்கும் என்ன மாதிரியான இலக்கணங்கள் இருந்தன எனத் தெரியவில்லை. கொடுந்தமிழ் வழக்குகளைச் சிற்றிலக்கியங்களில் ஆங்காங்கே வருவதைக் கடந்து ஆவணப்படுத்த முடியவில்லை. ஆனால், பழைய சித்தர் பாடல்கள், நாட்டார் பாடல்களில் கொடுந்தமிழ் பயன்பட்டிருப்பதை அறிய முடிகின்றது. அதே போலக் கல்வெட்டுக்களில் மூலமாகவே கொடுந்தமிழ் பயன்பாடு எவ்வாறிருந்தது என்பதை அறிய முடிகின்றது. வீரமாமுனிவர் எழுதிய கொடுந்தமிழ் இலக்கணமே நமது பேச்சுத் தமிழிற்கான முதல் இலக்கணமாக இருக்கின்றது. தொல்காப்பியமோ, நன்னூலோ, வீரசோழியமோ செய்யுள் படைப்பதற்கான இலக்கணத் தமிழையே தருகின்றது. உரைநடைத் தமிழ் என்பது தமிழிற்குப் புதியதே. அதற்கான இலக்கணங்கள் இன்னென்ன என்று வரையறை குறைவே. பொதுவாகச் செய்யுள் இலக்கண முறையை ஒத்தே, உரைநடைத் தமிழ் வளர்ந்து வந்திருக்கின்றது, வந்து கொண்டும் இருக்கின்றது. இது பரிணமித்துக் கொண்டிருக்கும் ஒரு நிலையில் தான் உள்ளது. மிக அண்மைய காலமாகத் தான் நுஃமான் உட்படப் பல தமிழறிஞர்கள் தற்காலத் தமிழிற்கான இலக்கணத்தைப் பற்றி எழுதத் தொடங்கியிருக்கின்றனர். ஒரு மொழி அதன் இயல்பில் பரிணமிப்பதும், அதை உள்வாங்கி இலக்கணமாக்குவதுமே நடந்து வருகின்ற விடயம். ஓர் இலக்கணத்தை வைத்துக் கொண்டு, அதிலும் அது செய்யுளுக்கான இலக்கணத்தை வைத்துக் கொண்டு, அதுவும் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு இலக்கணப் பாடங்கள் எடுப்பதே வேடிக்கையாக இருக்கின்றது. தமிழ் மொழியைச் சாங்கதம் போல ஒரு செத்த மொழியாக்கும் முயற்சி அது.
உளிதவரு கண்டந்தெ என்பதில் எந்தவொரு தவறும் இல்லை. இலக்கணம் பற்றி வியாக்கியானம் பேசுகிறவர்கள், நன்னூல் வகுத்துள்ள படி நோக்கி இந்தியா என்பதை இந்தியை என மாற்றுமாறு விண்ணப்பிக்கின்றேன். விளிச் சொல் மட்டுமே ஆ என்ற ஈற்றுச் சொல் வருமே ஒழிய, அது பெயர்ச்சொல்லாக எழுதப்படும் போது, ஆகாரம் கொள்ளாது, மாறாக ஐகாரம் கொள்ளும். அவ்வாறான சொற்கள், இ, ஐ, ஒ, உ போன்ற ஈற்றுப் பெறும். இன்றளவு கூட மலையாள மொழியில் சந்தியா என விளிக்கின்ற பெயரை எழுதும் போது சந்திய ( மலையாளத்தில் இரண்டாம் வேற்றுமை உருபான ஐகாரம் அகரமாகும் ), கன்னடத்தில் சந்தியா என்பது சந்தியே எனவும் மாறும் ( அங்கு ஐகாரம் எகரம் ஆகும் ). ஆனால் இதே விக்குத் தமிழில் இதே இலக்கண வகுப்பெடுப்பவர்கள் எழுதிய எழுதுகின்ற கட்டுரைகளில் விளிவேற்றுமைக்குரிய ஆகாரத்தில் பல பெயர்ச்சொற்களை எழுதி வைத்திருக்கின்றனர். அப்போது நீங்கள் இந்தமாதிரியான இலக்கணத்தைப் பின்பற்றிக் கொண்டிருக்கின்றீர்கள். தற்காலத் தமிழிற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட இலக்கண நூல் வரும் வரை நாம் இங்குக் குழம்பிக் கொண்டே தான் இருக்கப் போகின்றோம். இதைப் பற்றித் தமிழ்ச் சமூகம் அக்கறைப்படுவதாக இல்லை, தமிழக அரசும் கவலைப்படுவதாக இல்லை.
எனக்கு உளிதவரு கண்டந்தை எனத் தலைப்பை மாற்றுவதில் எவ்வித எதிர்ப்பும் இல்லை. ஆனால், இலக்கண வகுப்பெடுக்க வரும் முன், மற்றவர்களைப் பரிகாசிக்க முன், தம்மை ஒன்றிற்குப் பலமுறை பரிசோதித்துக் கொள்வது சாலச் சிறந்தது. நன்னூல் இலக்கண மரபில் தான் இங்குக் கட்டுரை படைக்க வேண்டும் என்றால், அதைத் தமிழ் விக்கியின் விதிகளில் சேர்த்துக் கொள்ளுங்கள், அது சொன்னது போலவே கட்டுரையைப் படைக்கலாம், நானும் நீங்களும். அதில் பத்திப் பிரித்தல், நிறுத்தற்குறிகள், மற்றும் அதில் சொல்லாத எதையும் நாம் பின்பற்றத் தேவையில்லை. சரியா?! தமிழ் விக்கியில் எந்த மாதிரியான இலக்கணத்தைப் பின்பற்றலாம் என்பதில் ஓர் இறுதி தீர்மானம் எடுங்கள், அதன் பிறகு அப்படியே எழுதிக்கொள்ளலாம். பழையதில் பாதிப் புதியதில் பாதி என இரண்டுங்கெட்டானாய், விரும்பிய இடத்தில் புதிய பாணி, மற்றோர் இடத்தில் பழைய பாணி எனத் தாமும் குழம்பி மற்றவரையும் குழப்பிக் கொண்டிருக்கின்றீர்கள். --விண்ணன் (பேச்சு) 00:01, 3 செப்டம்பர் 2015 (UTC)

லங்கா என்பதை தமிழ்ப்படுத்தி இலங்கை என மாற்றியவர்கள், ஏன் இந்தியா என்பதை இந்தியை, அமெரிக்கா என்பதை அமெரிக்கை, ஐரோப்பா என்பதை ஐரோப்பை என மாற்றவில்லை? அவை எல்லாம் திசைச் சொல்லாக எடுத்துக் கொள்ளக் கூடியவை. ஏன் பெயர்ச்சொல் விகுதிகளான இ, ஐ, ஓ, உ தவிர்த்த விளிச் சொல்லிற்கான ஆகாரத்தைப் போட்டு எழுதுகின்றீர்கள்? தங்களது இலக்கணப் பற்றும், இலக்கண பேரறிவும் அவ்விடங்களில் மறைந்து போனதேனோ?! --விண்ணன் (பேச்சு) 00:35, 3 செப்டம்பர் 2015 (UTC)

//விளிச் சொல் மட்டுமே ஆ என்ற ஈற்றுச் சொல் வருமே ஒழிய// அம்மா, அப்பா, பலா, வினா-இவற்றைப் பற்றி என்ன சொல்ல வருகிறீர்கள்? --மதனாகரன் (பேச்சு) 02:15, 3 செப்டம்பர் 2015 (UTC)
தங்களின் தமிழறிவை கண்டு வியக்கின்றேன் சகோதரரே. அம்மா, அப்பா, பலா, வினா என்பவை எல்லாம் விளிச் சொற்களே. அம்மை, அப்பன், பலாவு, வினவு என்பதே அதன் அசல் வடிவங்கள். --விண்ணன் (பேச்சு) 02:29, 3 செப்டம்பர் 2015 (UTC)

விண்ணன், நீங்கள் கூறுவது தவறு. யாரும் லங்கா என்பதை மாற்றி இலங்கை எனக் கூறவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழிலக்கியங்களும் இலங்கை என்றே குறிப்பிடுகின்றன. அத்துடன் நீங்கள் இலக்கணம் பேச முன்னர் யப்பான் என்பதை இயப்பான் என்றெழுதுவதே இலக்கணமென்று கூறியதற்கு ஆதாரம் காட்ட முடியுமா? அத்துடன், மேலே மதனாகரன் சுட்டிய சொற்களுடன் கடா, விளா, இரா, நிலா, விழா போன்ற பெயர்ச் சொற்களையும் இரா, மாட்டா, வரா போன்ற வினைச் சொற்களையும் சேர்த்துக் கொள்க. இவ்விடயத்திலும் உமது கருத்துக்கு இலக்கண ஆதாரம் தேவை.--பாஹிம் (பேச்சு) 03:08, 3 செப்டம்பர் 2015 (UTC)

இலங்கு + ஐ = இலங்கை என்றுங் கூறுவதுண்டு. பலா மரத்தைக் கூடவா விளித்து அழைப்போம்? நகரும் உயிரினங்களை விளித்து அழைப்பதுண்டு. நிலைத்திணையை விளித்து அழைப்பதை இப்பொழுது தான் கேள்விப்படுகிறேன். --மதனாகரன் (பேச்சு) 03:14, 3 செப்டம்பர் 2015 (UTC)
* நல்லதொரு கண்டுபிடிப்பு. இலங்கு என்ற சொல்லிருந்து தான் இலங்கை வந்தது என இலக்கிய ஆதாரங்கள் ஏதுமுண்டா? குறைந்தது எதாவது உரையாசிரியர்களது ஆதாரங்களாவது உண்டா? --விண்ணன் (பேச்சு) 09:53, 3 செப்டம்பர் 2015 (UTC)
* யப்பான் - இயப்பான் ஆதாரம் கேட்டோர் இங்கே போய் பார்க்கலாம், நானறிந்து தமிழ் இலக்கணப்படி யகரத்தில் சொல் வரும் என அறிந்ததில்லை, யாகரத்தில் வரும் யகரத்தில் தோன்றாது இ, உ போன்ற முன்னொட்டு அவசியம். --விண்ணன் (பேச்சு) 09:53, 3 செப்டம்பர் 2015 (UTC)

உங்களது கருத்து மீண்டும் பிழை. பன்னீருயிரும் க ச த ந ப ம வ ய ஞ ங என்னும் ஈரைந்து உயிர் மெய்யும் மொழி முதல் என்கிறது நன்னூல்.--பாஹிம் (பேச்சு) 13:04, 3 செப்டம்பர் 2015 (UTC)

* அடுத்து தாங்கள் சொன்ன கடா, விளா, இரா, நிலா, விழா என்பவை ஆகியவை பெயரெச்ச வடிவங்கள். அதனை தனித்து எழுதும் போது முற்று பெற வேண்டும் கடவு, விளவு, இரவு, நிலவு, விழவு? சந்தேகம் எனில் நல்லதொரு தமிழ் வித்துவானிடம் கேட்டறிந்து கொள்ளலாம். இதற்கு மேல் விளக்கமளிக்க எனக்குத் தமிழறிவு குறைவே. --விண்ணன் (பேச்சு) 09:53, 3 செப்டம்பர் 2015 (UTC)

விளா என்பது ஒரு மரத்தின் பெயர். நிலா என்றால் சந்திரன். கடா என்றால் ஆட்டின் ஆண் (கடா - மறி). இங்கே பெயரெச்சமெதுவும் கிடையாது. சும்மா கற்பனை செய்து கொள்வதால் அவை பெயரெச்சமாகி விடுவதில்லை. தேவையாயின் அகராதியைப் புரட்டிப் பார்த்தால் நல்லது.--பாஹிம் (பேச்சு) 13:09, 3 செப்டம்பர் 2015 (UTC)

//இலங்கு + ஐ = இலங்கை என்றுங் கூறுவதுண்டு.// மூன்றாம் நிலைத் தரவாகவே இங்குக் குறிப்பிட்டுள்ளேன். சான்றுகள்: 1, 2, 3 --மதனாகரன் (பேச்சு) 10:12, 3 செப்டம்பர் 2015 (UTC)
இலங்கு என்பது தமிழ் சொல் என்பதை நானறிவேன். ஆனால், இலங்கை என நாட்டுப் பெயராக வழங்கி வரும் இலங்கைக்கும் இந்த இலங்குக்கும் எந்தமாதிரியான தொடர்பு என எனக்குத் தெரியவில்லை. இலங்கை என்பது லங்கா எனப்படும் பொன்னைக் குறிக்கும் வடசொல்லிலிருந்து தோன்றியது. அதை தமிழாக்கிய போது லங்கை > இலங்கை என மாற்றப்பட்டது, சங்க இலக்கியத்தில் கூட தென்னிலங்கை என இலங்கையை குறித்துள்ளார்கள். லங்கா என்ற சொல் பொன்னைக் குறிப்பதாலேயே, அதற்கீடான தமிழ்ச் சொல்லான ஈழம் என்பதை தமிழர்கள் பயன்படுத்தினார்கள். இலங்கை தமிழ் சொல்லாகவே இருந்திருந்தால் ஈழம் என்ற சொல்லை தமிழர்கள் பயன்படுத்தியிருக்க வேண்டிய தேவையேற்பட்டு இருக்காது. அத்தோடு இலங்குவதால் இலங்கை என வந்ததாக நானறிந்து பண்டைய சங்க இலக்கியங்களிலோ, இடைக்கால தமிழ் இலக்கியங்களிலோ விளக்கமளிக்கப்பட்டதில்லை. இந்த நூற்றாண்டில் தான் இவ்வாறு சொல்ல துவங்கியுள்ளார்கள். இதில் எனக்கு உடன்பாடு கிடையாது. --விண்ணன் (பேச்சு) 10:28, 3 செப்டம்பர் 2015 (UTC)

விண்ணன், கண்டந்தெ எதிர் கண்டந்தே - இவற்றில் எது சரி என்ற இலக்கண அடிப்படையிலான உரையாடலுக்குள் நான் புகவில்லை. ஆனால், //இது கன்னடச் சொல் மூல மொழியிலிருப்பதை தமிழ் எழுத்துக்கு உகந்ததாக மாற்றலாமே ஒழிய, தமிழ் இலக்கணத்திற்கு ஏற்றதாய் மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது// என்ற உங்கள் கூற்றில் உடன்பாடில்லை. ஏனெனில், தமிழில் எழுத்துகள் என்பன ஆங்கில எழுத்துகள் போன்று வெறும் எழுத்துக்குறிகள் அல்ல. தமிழ் இயல்புக்கு ஏற்ப எப்படி ஒலிக்க முடியும் என்பதைத் தான் இலக்கணம் வரையறுக்கிறது. ஒலிப்புக்கான இலக்கணம் என்பது பிற மொழிப் பெயர்ச்சொற்களை ஒலிப்பதையும் சேர்த்தே தான். பிற மொழிப் பெயர்ச்சொற்களுக்கு என்று ஒலிப்பில் விலக்கு அளிக்கப்பட்டிருப்பதற்கான இலக்கணக் குறிப்போ செய்யுள் எடுத்துக்காட்டுகளோ தர முடியமா? இதே காரணத்தால் தான் ஒரு சொல் மெய்யெழுத்தில் தொடங்கலாகாது என்ற விதியைப் பின்பற்றுகிறோம். அதற்கு நீங்கள் உட்பட பல்வேறு விக்கிப்பீடியர்களும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இந்த விதியுமே கூட காலாவதியான செய்யுளுக்கான இலக்கணம் என்று வாதிடவும் இங்கு ஆட்கள் உள்ளனர்.

//அது செய்யுளுக்கான இலக்கணத்தை வைத்துக் கொண்டு, அதுவும் கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு இலக்கணப் பாடங்கள் எடுப்பதே வேடிக்கையாக இருக்கின்றது. தமிழ் மொழியைச் சாங்கதம் போல ஒரு செத்த மொழியாக்கும் முயற்சி அது.// என்ற உங்கள் கூற்றுக்கு மாறாக, தெளிவான இலக்கணம் கொண்டு இயங்கி வந்திருப்பதாலேயே தமிழ் சிதையாமல் இருக்கிறது என்று கருதும் நோக்கும் உள்ளது. செல்வா, சுந்தர் போன்றோர் இன்னும் விரித்துக் கூறலாம்.

இலக்கணமே இல்லாத மொழிகள் கூட பிற மொழிப் பெயர்களைத் தங்கள் இயல்புக்கு ஏற்ப மாற்றியே பயன்படுத்துகின்றன. பிற மொழிப் பெயர்களைத் தமிழ் இலக்கணத்தை வளைத்து நெளித்தாவது தமிழ் எழுத்துகளில் எழுதிக் காட்ட வேண்டும் என்று முனைவது உலக அறிவு என்ற போர்வையில் முன்வைக்கப்படும் தாழ்வுமனப்பான்மையைத் தூண்டும் அடிமைவாதமே. இப்படி இலக்கணத்தைச் சிதைத்தேனும் பிற மொழிகளின் ஒலிகளைத் தமிழ் எழுத்துகளில் அப்படியே சுட்ட வேண்டிய தேவை ஒரு சாராருக்கு உண்டு. அந்த அரசியலைப் பேசாமல் தமிழின் இலக்கணம் காலாவதியாகவிட்டதா என்ற உரையாடலுக்குள் புக முடியாது. ஆனால், அந்த அரசியலைப் பேசுவதற்கான களம் இது அன்று. நன்றி.--இரவி (பேச்சு) 03:47, 3 செப்டம்பர் 2015 (UTC)

தோழரே, எல்லா தமிழ்ச் சொற்களையும் தமிழ் இலக்கணத்திற்குட்பட்டு மாற்றுவீர்களானால் உங்களின் கூற்றை நான் ஆதரிப்பேன்? வெறும் ஒரண்டி இழுப்பதற்காக ஒரு சில சொற்களையே மாற்றுவேன், மற்றதை மாற்ற மாட்டேன் என அடம் பிடிப்பதில் என்ன நியாயம் என்பது எனக்குப் புரியவில்லை?

  • தமிழ் செய்யுள்களுக்காக வகுக்கப்பட்ட இலக்கணத்தைக் கொண்டு உரைநடையை எழுதுவது சரியா?
  • அப்படி என்றால், தமிழ் இலக்கணத்தில் சொல்லப்படாத வகையில் வார்த்தைப் பிரித்தல், பத்திப் பிரித்தல், நிறுத்தற்குறிகளை எல்லாம் எந்த செய்யுளின் அடிப்படையில் பின்பற்றி வருகின்றீர்கள்?
  • நான் முன்பு கேட்ட கேள்விக்கு பதில் வரவில்லையே. //தமிழ் இயல்புக்கு ஏற்ப எப்படி ஒலிக்க முடியும் என்பதைத் தான் இலக்கணம் வரையறுக்கிறது// என்றால் ஏன் அமெரிக்கா, இந்தியா என ஏன் இலக்கணக் குற்றத்தோடு எழுதுகின்றீர்கள், அது இலக்கணப்படி சரி என்கின்றீர்களா? அமெரிக்கை, இந்தியை என்று எழுதுவது தானே முற்று பெறக் கூடிய சொல்லாகும். ஏனிந்த பாரபட்சம்?

செய்யுளை எல்லாம் வைத்து ஆழமான விளக்கம் கொடுக்க எனக்கு தமிழறிவு போதாது, (பேச்சு) தான் விளக்கம் தர வேண்டும். நான் கற்றவரையில் தாங்கள் இலக்கணத்தை கையாளும் முறை hypocritical ஆகவே படுகின்றது. தற்காலத்தில் சேர்க்கப்பட்டுள்ள நிறுத்தற்குறிகள் போன்றவை எல்லாம் இலக்கண வரம்புக்குள் வராதவை. திசைச் சொற்களை கையாள்வதில் தற்காலத் தமிழில் பல குறைபாடுகள் உள்ளன. ஒவ்வொருவரும் தாம் விரும்பிய வண்ணம் தமிழை வளைக்கின்றனர். அதில் செந்தமிழ் விரும்பிகள் என்போர் ஏனோ தானோ என இயல்பினை விளங்கிக் கொள்ளாமல் செந்தமிழை புகுத்துவதும், கலப்புத் தமிழ் விரும்பிகள் மனம் போன போக்கில் மொழியை கையாளத் தொடங்கியிருப்பதும் குழப்பத்தையே உருவாக்கி வருகின்றது. --விண்ணன் (பேச்சு) 10:13, 3 செப்டம்பர் 2015 (UTC)

தமிழ் விக்கியில் தமிழ் இலக்கணத்தை தூக்கிக் கொண்டோடி வருவோருக்கு நல்ல இலக்கணம் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கின்றது? குறைந்தது நல்லதொரு தமிழாசானையாவது கலந்தாலோசிக்காமல் இங்குள்ளவர்களே மனம் விரும்பிய வண்ணம், தமிழை வளைத்துக் கொள்வது நல்லதல்ல. இதில் யாமும் அடக்கமே. நான் சொல்வது கூட முடிந்த முடிபல்ல, என்னிடமும் கூட பல இலக்கணக் குற்றங்கள் உள்ளன. சொல்லப் போனால், இம் மாதிரியான விவாதங்களின் பின்னரே இலக்கணத்தை தெளிகிறேன். ஆனால், அதே சமயம் கண்டந்தெ என்பதை கண்டந்தே என மாற்றுவது எல்லாம் பொருளையே மாற்றிவிடுகின்றது. அதை செவ்வனே தமிழ்ப் படுத்த தமிழறிவு மிக்க தமிழை முறைப்படியாக கற்ற ஆசான்களையே நாம் துணைக்கழைக்க வேண்டும். அப்படி வழிகாட்ட தமிழ் ஆசிரியர்களைக் கொண்ட குழு ஏதுமுண்டா எனவும் எனக்குத் தெரியவில்லை. இருந்தால் அவர்களைக் கேட்டுத் தெளியலாம். இது அனைவருக்கும் பயன் தரும், குறிப்பாக தமிழுக்கு நல்லது. அதே சமயம், புதியன புகுதலும் பழையன கழிதலும் என்பது போல தமிழில் நிகழ்ந்த நிகழ்ந்து கொண்டிருக்கும் மாற்றங்கள், வளர்ச்சிகள், பரிணாமங்களை கருத்தில் கொண்டு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது தமிழ் இலக்கண வழிகாட்டிகள் உருவாக்கப்படல் வேண்டும். புதிய இலக்கணங்களை முன் வந்து தமிழறிஞர்கள் எழுத வேண்டும். அப்போது தான் நம்மைப் போன்ற குறைகுடங்கள் தழும்பாமல் நல்வழி காட்டப்படுவோம்.--விண்ணன் (பேச்சு) 10:13, 3 செப்டம்பர் 2015 (UTC)

இலக்கணத்தை செய்யுள் மேற்கோளோடு சரியான முறையில் விளக்கும் அறிவு எனக்குக் குறைவே. ஆனால், கண்டந்தெ என்பது கண்டந்தே என வராது, அங்கு பொருள் குற்றம் ஏற்படும், ஏனெனில் தமிழும், கன்னடமும் ஒரே வேரைக் கொண்ட மொழிகள். பல வினைச் சொற்கள், இலக்கண ஒற்றுமைகள் இருக்கின்றன. ஒன்று அது கண்டந்து என வரும், அல்லது கண்டந்தை என வரும். இதை திசைச்சொல்லாக கருதி தமிழிற்கு கொண்டு வந்தால், இலக்கணத்தை புகுத்தி மாற்றினால் அது கண்டந்து, கண்டது என்று தான் மாற வேண்டும். உளிதவரு என்பது உள்ளிதவர், உள்ளவர் என்று தான் மாறும்.

கண்டந்தெ என ஏன் முடிவதில்லை என இங்கு யாருமே விளக்கவில்லை? எகரத்தோடு முடியாதா? ஆகாரத்தோடு சொல் முடியும் போது ஏன் எகரத்தோடு சொல் முடியக் கூடாது? தமிழறிவு மிக்கோர் விளக்க விண்ணப்பிக்கின்றேன்.--விண்ணன் (பேச்சு) 10:19, 3 செப்டம்பர் 2015 (UTC)

சுந்தர்[தொகு]

நெடிய உரையாடலென்பதால் இன்னும் முழுவதும் படிக்கவில்லை. இக்கட்டுரையின் பெயரைப்பற்றி என் கருத்துகள்:
  • தமிழ் எழுத்திலக்கண மரபின்படியே எழுத்துக்கூட்டுகிறோம். ஒவ்வொரு மொழிக்கும் ஓர் ஒலியன்வரும் இணக்கமுண்டு. அதன்படி ஒலிப்பதே அம்மொழிபேசும் மக்களுக்கு எளிதாகும். தமிழருக்கும் பெரும்பாலான மற்ற மொழியினருக்குங்கூட குறில் எகரத்தில் ஒலிப்பை நிறுத்துவது கடினம். மூச்சுமுட்டும்.
மொழிக்கு ஈறாகாத உயிர்மெய்கள் ஈறாகும்முறை

இதுவரை கூறப்பட்டவற்றுள், மொழிக்கு ஈறாகாத உயிர்மெய்கள் இருப்பதை அறிவீர்கள். எடுத்துக்காட்டாக, க், வ் அல்லாத மெய்கள் சேர்ந்த ஒளகாரம் - பௌ, மௌ போன்றன; மெய்யோடு சேர்ந்த எகரம் - செ, தெ போன்றன; ‘ந்’ அல்லாத வேறுமெய்யுடன் சேர்ந்த ஒகரம் - தொ, மொ போன்றன.

 
[1]
  • புறப்பெயர்கள் மூலமொழியையோ, இடைமொழியையோ அண்மித்திருக்கலாம் அல்லது முற்றிலும் வேறாகவும் அமையலாம். செருமானியர்களின் மொழியில் அவ்வினக்குழுவுக்கும் மொழிக்கும் நிலப்பரப்புக்கும் செருமன் எனும் அடிச்சொல்லில் சொல்கிடையாது. இலங்கை என்பது நன்கு வழக்கூன்றிய புறப்பெயரும் தமிழ் இலக்கண மரபுவழி பொருத்தமானதுமாகிய பெயர்.
  • கன்னட மொழிச்சொற்களுக்கும் தமிழ்மொழிச்சொற்களுக்குமிடையே தெளிவாய்க்காட்டத்தக்க ஒலிப்புமாற்ற நெறிகள் உள்ளன. பகரத்தில் தொடங்கும் தமிழ்ச்சொற்களுக்கு இணையான சில கன்னடச்சொற்கள் ஹகரத்தில் இந்நாளில் தொடங்குகின்றன. பழங்கன்னடத்தில் அவற்றுக்கிணையான சொற்கள் பகரத்திலேயே தொடங்கியிருக்கின்றன என்பதையும் கவனிக்கவேண்டும். அதேபோலத்தான் மேம்போக்காக குற்றியலுகரமில்லாததுபோலத் தோன்றினாலும் ஒலியன்வருவியல் நெறிகளால் (phonotactics) கன்னடத்திலும் குற்றியலுகரத்தைக் கவனித்திருக்கிறேன். அவ்வகையில் எகர உயிர்மையில் சொல்லை முடிப்பது அவர்களுக்குமே கடினந்தான். வழக்கில் அது சற்று நீண்டுதான் ஒலிப்பதுபோலத்தென்படுகிறது. அவனுக்கு எனப்பொருள்படும் கன்னடச்சொல்லான அவனிகெ வழக்கில் அவனிகே என்றே ஒலிக்கிறது. ஆகையால் நாம் உளிதவரு கண்டெந்தே என தலைப்பிடுவதில் தவரில்லை. பேச்சு:கருநாடகம், பேச்சு:தொம்மலூரு முதலிய உரையாடல்களையும் காணவும். -- சுந்தர் \பேச்சு 13:29, 3 செப்டம்பர் 2015 (UTC)

அன்புடன் நீலன்[தொகு]

அனைவருக்கும் வணக்கம், நல்லதொரு விவாதத்தினை இங்குப் பலரும் முன்னெடுத்துள்ளீர்கள். ஆரோக்கியமான விவாதமே அறிவை விருத்தியாக்கும் என்பார்கள். இங்குள்ள பலரும் அறிவால் பெரியோர், எனக்குத் தெரிந்ததைச் சொல்ல விழைகின்றேன், அதில் குற்றங்குறை இருப்பின் மன்னித்தருள்க !

திசைச் சொல்

இன்றுள்ளது போல, பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் உலகின் பல மொழிகளோடு தமிழ் மக்களுக்கு நேரடியான தொடர்புகள் இருந்திருக்கவில்லை, அக் காலங்களில் தமிழகத்திற்குப் பக்கத்திலிருந்த பிற திராவிட மொழிகளையும், அதிகப் பட்சமாக வடநாட்டிலிருந்த சங்கதம், பாகதம் ஆகிய மொழிகளையுமே அறிந்திருந்தனர். தமிழின் கிளைமொழிகளை மட்டும் பண்டைய தமிழ் இலக்கண அறிஞர்கள் திசைமொழிகள் எனவும், அச்சொற்களை திசைச் சொல் எனவும் கொண்டனர். தமிழகத்திற்கு வடக்கே இருந்து வந்த அனைத்து மொழிச் சொற்களையும் எல்லாம் வடசொல் என்றனர்.

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தினும் தம் குறிப்பினவே திசைச்சொல் கிளவி - இளம்பூரணர்

தமிழகத்தைச் சேர்ந்த (இன்றைய தமிழ்நாடு, கேரளம், புதுவை மாநிலங்கள் அடங்கிய ஏனம், காசர்கோடு நீங்கிய நிலப்பகுதி) 12 நிலங்களில் (வட்டாரங்களில்) பேசப்பட்டு வந்த வட்டார மொழிகளின் சொற்கள் மட்டும் தான் திசைச் சொல்லாக பழங்காலத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பொதுங்கர், தென்பாண்டி, ஒளி, குட்ட, பன்றி, கற்கா, சீத, பூழி, மலை, அருவா, அருவா வட, குட என பன்னிரு நாடுகளை இளம்பூரணர் கூறுகின்றார்.

தொல்காப்பியரது காலத்தின் பின்னரே திசைச் சொல் என்பவற்றில் மற்ற திராவிட மொழிகளின் சொற்களையும் சேர்க்கும் வழக்கம் வந்திருக்கின்றது.

கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம் சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும் எல்லையின் புறத்தவும் ஈழம் பல்லவம் கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றம் என்பன குடபால் இருபுறச் சையத்து உடனுறைவு பழகும் தமிழ்திரி நிலங்களும் முடியுடை மூவரும் இடுநில ஆட்சி அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள் பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்த பன்னிரு நிலத்தில் சொல்நயம் உடையவும்'' - என அகத்தியனாரும் கூறுகின்றார்.

இதில் கன்னித் தென்கரைக்கண் பழந் தீவம் (மாலைதீவுகள்), சிங்களம், கொல்லம், கூவிளம், ஈழம், பல்லவம், கன்னடம், வடுகு, கலிங்கம், தெலிங்கம், கொங்கணம், துளுவம் குடகம், குன்றம் (கோண்டி) ஆகிய நிலங்களின் மொழிகள் தமிழிலிருந்து திரிந்த மொழிகள் எனக் கருதப்படுகின்றது. அதாவது திராவிட மொழிகள் என கருதப்படுகின்றது. இதில் இன்று வடுகு, தெலிங்கம், துளுவம், கன்னடம், கொல்லம், குடகம், குன்றம் ஆகிய நிலங்களின் மொழிகள் மட்டுமே திராவிட மொழிகளாக இருக்கின்றன, பிற நிலங்களின் மொழிகள் இந்தோ-ஆரிய மொழிகளாகிவிட்டனர். பல்லவம், கூவிளம், ஈழம் ஆகிய மொழிகள் எல்லாம் எவை எனத் தெரியவில்லை. ஈழம் தமிழோடும், பல்லவம் தெலுங்கோடும், கூவிளம் கன்னடத்தோடும் கலந்திருக்கக் கூடும். ஆக மொத்தம் 15 மொழிகளிலிருந்து தான் திசைச் சொல் எடுக்க முடியும் என அகத்தியனார் கூறுகின்றார்.

செந்தமிழ் நிலம் சேர் பன்னிரு நிலத்தினும் ஒன்பதிற்று இரண்டினில் தமிழ்ஒழி நிலத்தினும் தம் குறிப்பினவே திசைச் சொல் என்ப (நன்னூல் : 273) கூறுகின்றது. [ நன்னூல் படைத்த பவணந்தி முனிவர் ஒரு கன்னடர் என்பதும் இங்கு நினைவில் கொள்ளத் தக்கது.]

அதாவது தமிழகத்தைச் சேர்ந்த 12 தமிழ் நிலங்களிலிருந்தும், 9 X 2 = 18 நிலங்களில் - 1 தமிழ் நீக்கப்பட்டு = தமிழ் மொழி பேசப்படாத 17 பிற நிலங்களைச் சேர்ந்த மொழிகளிலிருந்தும் வருவது திசைச் சொல்லே என்கிறது நன்னூல். இந்த 17 நிலங்களின் மொழிகள் எவை என்பதில் உரையாசிரியர்களிடையே கொஞ்சம் வேறுபாடு இருக்கிறது.

சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுக், குடகம் கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலிங்கம், கலிங்கம், வங்கம், கங்க மகதம், கடாரம், கவுடம், கடுங்குசலம், தங்கும் புகழ்த்தமிழ் சூழ்பதி னேழ்நிலம் தாமிவையே - என மயிலைநாதர் கூறுகின்றார்

இந்த 17 நிலங்களின் மொழிகளிலிருந்து மட்டும் திசைச் சொற்களை பெறலாம் என நம் இலக்கணம் வழிவிட்டுள்ளது. ஆனால், இன்று இந்த 17 மொழிகளையும் கடந்து எண்ணற்ற மொழிச் சொற்களையும் தமிழர்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இந்த சொற்களை எல்லாம் எவ்வாறு தமிழாக்கம் செய்வது என்பதில் சரியான வழிகாட்டல்களும் இல்லை. ஆனால், நன்னூல் தரும் இலக்கணப் படி நோக்கினால் இந்த 17 நிலங்களின் மொழிகளைத் தவிர ஆங்கிலம் உட்பட பிற மொழிச் சொற்களைக் கூட திசைச் சொல்லாக பயன்படுத்துவது குற்றம்.

உளிதவரு கண்டந்தெ

எனது அறிவுக்கு எட்டிய வரையில், கன்னட சொற்களைத் தமிழில் மாற்றி எழுதுவது மிக எளிது. ஏனெனில் தமிழோடு மிக நெருங்கிய அடுத்த மொழி கன்னடமே. மூலத் தமிழிலிருந்து கன்னடம் பல இடங்களில் மாற்றம் கண்டிருக்கின்றது, எடுத்துக்காட்டுக்கு பள்ளி > ஹள்ளி பகரம் ஹகரமாதம், பெயரு >ஹெசரு யகரம் சகரமாதல் இவ்வாறு நிறைய வழிகளில் மிகத் தெளிவான வகையில் கன்னட மொழி மூலத் தமிழிலிருந்து வளர்ச்சியடைந்திருக்கின்றது.

இங்குக் கண்டந்தெ என்ற சொல்லை தமிழில் சரியாக எப்படி மாற்றி எழுதுவது என விவாதித்திருப்பதை வாசித்தறிந்தேன். இது மற்றொரு திராவிட மொழி சொல்லாதலால், இதை திசைச் சொல்லாக நாம் எடுத்துக் கொள்ளலாம். திராவிட மொழிகளுக்கே ஒரு பாங்குண்டு, அதனைப் பகுத்து, பகுதிச் சொல்லை எளிதில் கண்டறியலாம். அதுவே வேர்ச்சொல்லாகவும் இருக்கும்.

கண்டந்தெ என்பதை = கண்டு+ந்+த்+எ எனப் பகுக்க வேண்டும், இச் சொல்லை பகுக்கக் கூடியதாக இருப்பதால் இது பகுபதம் ஆகும். இதில் கண்டு என்பது நிலைமொழி. கண்டு என்ற நிலைமொழியைக் காண்+ட்+உ எனப் பகுக்கலாம். ஆக, காண்+ட்+உ+ந்+த்+எ எனப் பகுக்கலாம். இதில் காண் என்பது முதல்நிலை பகுதி. இது ஒரு வினையைக் குறிப்பதால் இது வினைச்சொல்லாகும். கண்டு என்பதில் செயல் முடியவில்லை, ஆக இது வினையெச்சமாகும். அடுத்து த் என்பது இடைநிலையாகும், இது காலம் உணர்த்துகின்றது, அதுவும் இறந்தகாலத்தை உணர்த்துகின்றது. ந் என்பது சந்தியாகும். ஆக, இதுவரையில் தமிழ் இலக்கணம் போன்றே கன்னடமும் இருப்பதை உணர முடிந்தது. இனி எ என்ற விகுதியைப் பற்றியது. தமிழில் எ என்ற விகுதி கிடையாது.

நன்னூல் 37 விகுதிகளை மட்டுமே தருகின்றது. அன், ஆன், அள், ஆள், அர், ஆர், ப, மார், அ, ஆ, கு, டு, து, று, என், ஏன், அல், அன், அம், ஆம், எம், ஏம், ஓம், கும், டும், தும், றும், ஐ, ஆய், இ, மின், இர், ஈர், ஈயர், க, ய, உம் - என்பன.

தமிழில் தெரிநிலை வினையெச்ச விகுதிகளும் உள்ளன. உ, இ, ய், பு, ஆ, ஊ, என, ஏ, அ, இன், ஆல், கால், ஏல், எனின், ஆயின், ஏனும், கு, இய, இயர், வான், பான், பாக்கு, கடை, கண், வழி, இடத்து, உம், மல், மை, மே, து முதலியன. இவற்றில் மல், மை, மே, து என்ற நான்கும் எதிர்மறைப் பொருளிலும் வருவன. பிறவினை விகுதிகள் வி, பி, கு, சு, டு, து, பு, று ஆகியவை.

பெயர் விகுதிகள் பலவும் தமிழில் உள்ளன. பெயர்ப்பகுபத விகுதிகளாவன அன், ஆன், அள், ஆள், அர், ஆர், மார், து, அ, இ. தொழிற்பெயர் விகுதிகள் தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, உ, தி, சி, வி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து, ஆகிய 19 விகுதிகள். பண்புப் பெயர் விகுதிகள் மை, ஐ, சி, பு, உ, கு, றி, று, அம், ஆர்.

தமிழில் எகர விகுதி வராது. அதே போல ஏகாரம் எதிர்மறை வினையெச்ச விகுதியில் மட்டுமே வரும், கண்டந்தே என வராது. ஏனெனில் இங்கு கண்டந்தெ என்ற கன்னட சொல்லின் பொருள் எதிர்மறையில் சொல்லப்படவில்லை. ஆக, கண்டந்தெ, கண்டந்தே என இரண்டுமே தமிழ் இலக்கணப்படி தவறு.

திராவிட மொழிகளில் பாலெண் இயைபு விகுதிகள் இருக்கின்றன. இ, ஐ, ஆய் ஆகிய மூன்றும் தமிழில் வரும் பாலெண் இயைபு விகுதிகள். இதற்கீடாகக் கன்னடத்தில் அம், எ, இ என வரும். இந்தக் கன்னடச் சொல்லில் வருகின்ற எ என்ற பாலெண் இயைபு விகுதிக்குத் தமிழில் இணையாக இருப்பது ஐ என்பதே. ஆக, கண்டந்தெ என்பது கண்டந்தை என மாறும் என்பது சரியே. கன்னடத்தில் கண்டந்தெ என்பதின் விகுதியை கன்னட மக்கள் ஐகாரத்திற்கும் எகரத்திற்கும் இடையில் வருவது போலவே ஒலிப்பார்கள். ஐகாரக் குறுக்கம் எகரமாதலை கன்னடத்தில் கவனிக்கலாம்.

அவனிகெ

மற்றொரு எடுத்துக் காட்டு வழங்கப்பட்டிருந்தது. அவனிகெ என்பதை அவனிகே என மாற்றுவது தவறு. கன்னட மொழியில் கெ என்பது ஒரு உருபு, நன்கு கவனிக்க வேண்டும், இது எ என்பதல்ல, கெ என்பதே ஒரு வேற்றுமை உருபு. தமிழில் நான்காம் வேற்றுமை கன்னடத்திலும் உண்டு. தமிழில் வருகின்ற நான்காம் வேற்றுமைக்கான உருபுகள், -க்கு, --க்க, -இன் என்பவை ஆகும். அதுவே கன்னடத்தில் -(க்)கெ, -(க்)கெ, [ ஒலிப்பு - (g)ge ] ஆகியவை ஆகும். இதில் கெ எனத் தனித்தும் வரும், க்கெ எனச் சேர்ந்தும் வரும். k, g ஆகிய இரண்டு ஒலியன்களுக்கும் கன்னடத்தில் தனி எழுத்து உண்டு என்பதையும் கவனிக்க. அவனிகெ என்ற சொல்லை தமிழ் மாற்றம் செய்யும் போது, கெ என்ற நான்காம் வேற்றுமை உருபானது, தமிழில் க்கு என்று மாறும். அதாவது கன்னடத்தில் அவனிகெ என்று வந்தால் தமிழில் அது அவனுக்கு என்று தான் மாற்ற வேண்டும். வேறு வழியில்லை.

மொழி முதல் யகரம்

தமிழில் க், ச், த், ப், ஆகிய நான்கு வல்லின எழுத்துக்களும், ந், ம், ஞ் ஆகிய மூன்று மெல்லின எழுத்துக்களும், வ், ய் ஆகிய இரண்டு இடையின எழுத்துக்களும் உயிருடன் புணர்ந்து மொழி முதலில் வரும். மொழி முதலில் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஓ ஆகிய 12 எழுத்துக்களும் மொழி முதலில் வரும்.

ஆனால் ச் என்ற எழுத்து அ, ஐ, ஔ ஆகிய மூன்று உயிர்களுடன் சேர்ந்து மொழி முதலில் வராது. அதாவது, ச, சை, சௌ ஆகிய மூன்றும் மொழி முதலில் வராது. சகரக் கிளவியும் அவற்று ஓரற்றே அ, ஐ, ஒள எனும் மூன்று அலங்கடையே (தொல்.எழுத்து.62) அதே போல வ் என்ற மெய்யெழுத்தோடு உ, ஊ, ஒ, ஓ ஆகிய நான்கும் சேர்ந்து வு, வூ, வொ, வோ ஆகிய நான்கும் மொழி முதல் வராது. (தொல். எழுத்து.63). அதே போல ஞ் என்ற மெய்யெழுத்து ஆ, எ, ஓ ஆகிய மூன்றோடு சேர்ந்து ஞ, ஞெ, ஞோ ஆகியன மட்டுமே மொழிமுதலில் வரும், மற்றவை வராது. (தொல். எழுத்து.64). ய் என்ற மெய்யெழுத்து ஆ என்ற உயிரெழுத்தோடு இணைந்து யா மட்டுமே முதலில் வரும், மற்றவை வராது. (தொல். எழுத்து.65)

அதாவது ச, சை, சௌ, வு, வூ, வொ, வோ, ஞ, ஞி, ஞு, ஞூ, ஞே, ஞை, ஞொ, ஞோ, ஞௌ, ய, யி, யு, யூ, யெ, யே, யை, யொ, யோ, யௌ ஆகியவை தொல்காப்பிய இலக்கண மரபின் படி மொழி முதலில் வராது. யகரமும் பழந்தமிழில் மொழிமுதலாக வந்ததில்லை.

ரவ்விற்கு அம்முதல் ஆம் முக் குறிலும்-ரகத்திற்கு அ, இ, உ என்றும் மூன்று குற்றெழுத்துக்களில் ஒன்றும், லவ்விற்கு இம்முதல் இரண்டும் - லகரத்திற்கு இ, உ என்னும் இரண்டில் ஒன்றும் , யவ்விற்கு இய்யும் - யகரத்திற்கு இகரமும் , மொழி முதல் ஆகி முன் வரும் - அவ் எழுத்துக்களை முதலிலுடைய வடமொழிகளுக்கு முதலாகி அம்மூன்று எழுத்துக்களுக்கும் முன்னே வரும் என்ற இலக்கண விதிப்படி யகரத்திற்கு முன் இகரம் போட்டு எழுதுவதே இலக்கண முறையாகும்.

ஆனால், இந்த இலக்கண மரபை சங்கக் காலத்தில் நம் புலவர்கள் மீறிவிட்டனர். மொழி முதல் வராது என சொல்லிய பல எழுத்துக்களை மொழி முதல் வரும்படி எழுதி இலக்கணத்தைக் கட்டுடைத்திருக்கின்றனர். அதனால், 12-ம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூல் இவற்றை இலக்கணத்துக்குள் சேர்த்துக் கொண்டது. தொல்காப்பிய இலக்கணப்படி யப்பான் தவறு. ஆனால், நன்னூல் இலக்கணப்படி யப்பான் சரியே.

மொழி முதல் வராது என நன்னூல் சொன்ன ட, ர, ற, ல ஆகிய நான்கு எழுத்துக்கள் தற்காலத்தில் மொழிமுதலில் வருகின்றது. மீண்டும் இலக்கணத்தைக் கட்டுடைத்துவிட்டனர் தமிழர்கள். ஆக, தற்கால முறையில் ட, ர, ற, ல ஆகியவை மொழி முதலில் பரவலாக பலரும் எழுதிவருகின்றனர். இதை இலக்கணத்தில் சேர்க்கலாமா வேண்டாமா என்பதை புதிய இலக்கண ஆசிரியர்களே தீர்மானிக்க வேண்டும்.

உதவியவை - நூல்கள்: திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் - கால்டுவெல், திராவிட மொழிகளின் ஒப்பீட்டாய்வு - தங்க மணியன், இலக்கணக் குறிப்பு கண்டுபிடிப்பது எப்படி? - புலவர் கு நாராயணபாரதி, அடிப்படைத் தமிழ் இலக்கணம் - எம்.ஏ.நுஃமான், திரவிடத்தாய் - மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர். செயலிகள்: நாவி, வாணி - நீச்சல்காரன்.

பரந்து விரிந்த தமிழ் வெளியில் நான் ஒரு சிறு துளியைப் போன்றவன், தமிழைச் சுவைக்கத் தொடங்கிய ஒரு தொடக்க நிலை மாணவன், எனக்கிருக்கின்ற அறிவைக் கொண்டு எனது விளக்கத்தைத் தந்தருளியுள்ளேன். குற்றங்குறைகள் இருந்தால் தயவுகூர்ந்து மன்னிக்கவும். மிக்க நன்றிகள். --அன்புடன் நீலன் (பேச்சு) 19:33, 3 செப்டம்பர் 2015 (UTC)

பாஹிம்[தொகு]

@அன்புடன் நீலன்:! நீங்கள் செந்தமிழ் சேர் நிலம் பன்னிரண்டு என்று குறிப்பிட்டு விட்டு அவற்றைப் பன்னிரு மொழிகளாகக் கருதுவது தவறல்லவோ? பன்னிரு நிலம் என்றால் பன்னிரண்டு நிலப் பகுதிகள் என்றன்றோ பொருள்? அக்காலத்தில் யவனம் அல்லது சோனகம் எனப்பட்டதில் பண்டைய கிரேக்க, உரோமப் பேரரசுகளின் நிலங்களனைத்தும், அஃதாவது இன்றைய ஐரோப்பாவும் வட ஆபிரிக்காவும் மத்திய கிழக்கு நாடுகளும் உள்ளடங்குகின்றன. இப்பகுதிகளில் பல நூற்றுக் கணக்கான மொழிகள் வழங்குகின்றன. சாவகம் என்று பண்டைக் காலத்தில் இன்றைய இந்தோனேசியாவின் பெரும் பகுதிகள் குறிப்பிடப்பட்டன. இந்தோனேசியாவிலும் ஆயிரக் கணக்கான மொழிகள் வழங்குகின்றன. கடாரம் என்றால் இன்றைய மலேசியா. அங்கும் ஏராளமான மொழிகள் வழக்கிலுள்ளன. இவ்வாறு இதனுள் ஆயிரக் கணக்கான மொழிகள் உள்ளடங்கியுள்ள நிலையில் நீங்கள் எப்படி நிலம் என்றால் மொழி என்று பொருள் கூறலாம்?--பாஹிம் (பேச்சு) 09:05, 4 செப்டம்பர் 2015 (UTC)
இந்த 17 மொழிகளைத் தவிர ஆங்கிலம் உட்பட பிற மொழிச் சொற்களைக் கூட திசைச் சொல்லாக பயன்படுத்துவது குற்றம் என்று கூறுகிறீர்களே. ஆங்கிலம், அரபு போன்ற மொழிகள் உட்பட பண்டைய சோனக அல்லது யவன நிலத்து மொழிகளான இன்றைய ஐரோப்பிய, வட ஆபிரிக்க, மத்திய கிழக்கு, மத்திய ஆசிய மொழிகளிலிருந்து திசைச் சொற்களைப் பெறுவது எவ்வாறு குற்றமாகும்? இது நன்னூலின் வழிகாட்டலுக்குட்பட்டதன்றோ?--பாஹிம் (பேச்சு) 11:22, 4 செப்டம்பர் 2015 (UTC)
நான் நேற்றுக் கேள்வி கேட்ட பின்னர் இந்த 17 மொழிகளைத் தவிர ஆங்கிலம் உட்பட... என்று நீங்கள் கூறியதை இந்த 17 நிலங்களின் மொழிகளைத் தவிர ஆங்கிலம் உட்பட ... என்று மாற்றியிருக்கிறீர்கள். பண்டைக் காலத்தில் யவனர் அல்லது சோனகர் என்ற சொல் முதலில் கிரேக்கர்களையும், பின்னர் உரோமர்களையும், பின்னர் அரபியரையும் குறிப்பிட்டது. கிரேக்க மக்கடோனியப் பேரரசன் வட இந்தியா வரை கைப்பற்றி ஆட்சி செய்தான். ஆதலின், அப்பகுதிகளனைத்தும் யவன நிலங்களாயின. கிரேக்கப் பேரரசு, உரோமப் பேரரசு, அரபுப் பேரரசுகள் என்பன பரந்து விரிந்திருந்த இன்றைய ஐரோப்பா, வட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா என்பவற்றின் மொழிகளான அரபு, ஆங்கிலம், யேர்மனியம், இத்தாலியம், எசுப்பானியம், பிரான்சியம், காலியம், எபிரேயம் போன்றவை நீங்கள் குறிப்பிடும் சோனக நிலத்து மொழிகளே. அவ்வாறிருக்க, நீங்கள் எப்படி ஆங்கிலம் உட்பட பிறமொழிச் சொற்களைக் கூட திசைச் சொல்லாக பயன்படுத்துவது குற்றம் என்று கூறலாம்? மகதம் என்றால் மகதப் பேரரசு அன்றோ? மகநப் பேரரசு வட இந்தியா முழுவதும் பரந்து காணப்பட்டது. முற்காலத்தில் தமிழர்கள் பொருளாதார, பண்பாட்டுத் தொடர்புகளைப் பேணி வந்த சாவகம், கடாரம் என்பவற்றில் தென்கிழக்காசியா உள்வாங்கப்பட்டிருந்தது. சீனம் என்றால் பண்டைய சீனப் பேரரசு. எனவே, மேற்குறித்த பன்னிரு நிலங்களிலும் ஐரோப்பாவும் ஆசியாவும் வட ஆபிரிக்காவும் முழுமையாக உள்வாங்கப்படுகின்றன. இந்நிலையில் நீங்கள் உங்களது கூற்றை எவ்வாறு எண்பிக்கப் போகிறீர்கள்?--பாஹிம் (பேச்சு) 01:46, 5 செப்டம்பர் 2015 (UTC)

அன்புடன் நீலன்[தொகு]

பன்னிரு நிலங்களும் வட்டார மொழிகளும்

வணக்கம், தங்களின் கேள்வியே குழப்பமானதாக இருக்கின்றது, இருந்தாலும் எனக்குத் தெரிந்தவைகளைக் கூறுகின்றேன். இதை ஏற்பதும் ஏற்காததும் தங்கள் விருப்பம். மேற்கூறியவற்றில் சில உரைதிருத்தங்களைச் செய்திருக்கின்றேன். சரி, தங்களின் கேள்விக்குப் போவோம். செந்தமிழ் சேர் நிலம் 12 எனத் தொல்காப்பியர் கூறியதும், 17 நிலங்கள் எனப் பவணந்தியார் கூறியதும் வெவ்வேறானவை. இதை முதலில் சேர்த்து நோக்குவதைத் தவிர்க்கவும். செந்தமிழ் சேர் 12 நிலங்கள் என்பவை, செந்தமிழ் மொழி பேசப்படும் நாட்டினைச் சேர்ந்த 12 நிலங்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும். இந்த 12 நிலங்களில் சோனகம், சாவகம் எல்லாம் வராது. இந்த 12 நிலங்கள் தமிழகத்தின் 12 வட்டாரங்களைக் குறிப்பன. “செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தம்குறிப் பினவே திசைச்சொற் கிளவி” எனத் தொல்காப்பியர் கூறியதிலிருந்து தொல்காப்பியர் காலமான கிமு 3 ஆம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் 12 வட்டாரங்கள் இருந்ததை நம்மால் அறிய முடிகின்றது. இந்த 12 வட்டாரங்கள் எவை என்பதை நச்சினார்க்கினயர் உரை, சேனாவரையர் உரை மூலமாக நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது. அது மட்டுமின்றி இவர்கள் 12 வட்டாரங்களில் காணப்படும் சொற்களையும் எடுத்துக் காட்டியும் உள்ளனர். இந்த 12 நிலங்கள் என்று தானே சொல்லியிருக்கின்றார்? 12 மொழிகள் என எப்படி எடுத்துக் கொள்வது என்ற கேள்வியே சற்றே சிறுபிள்ளைத் தனமானது, பள்ளி மாணவர்களுக்கே இதற்கான விடை தெரியும். இருந்தாலும், சொல்கின்றேன் கேளுங்கள். இந்த உரைகளில் 12 நிலங்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, ஒவ்வொரு நிலத்தின் வட்டார மொழிக்கு ஒரு சொல்லை எடுத்துக் காட்டாகக் காட்டி எழுதியுள்ளனர். இதன் மூலம் ஒரு வட்டாரத்துக்கு ஒரு வட்டார மொழி என்பதை அவர்கள் தெளிவுபடுத்துகின்றனர். ஒன்றிற்கும் மேற்பட்ட கிளைமொழி ஒரு வட்டாரத்தில் இருந்திருந்தால் நிச்சயம் அவர்கள் ஒன்றிற்கும் மேற்பட்ட சொற்களை எடுத்துக் கூறி, அந்த வட்டார மொழியினைப் பற்றியும் விவரித்திருப்பார்கள். நமக்குக் கிடைத்திருக்கின்ற தொல்பொருள் மற்றும் இலக்கியச் சான்றுகளின் படி, தொல்காப்பியம் எழுதப்பட்டது கிமு 3-ஆம் நூற்றாண்டு. அக் காலக் கட்டத்தில் கிடைக்கின்ற அசோகர் கல்வெட்டுக்களை வைத்து நோக்கும் போது தமிழகத்தில் ஐந்து அரசாட்சிகளே இருந்திருக்கின்றனர் ( சேர, சோழ, பாண்டிய, அதியமான், தாமிரபரணி ). ஆனால், அதே காலக் கட்டத்தில் எழுந்த தொல்காப்பியமோ, 12 நிலங்களாகத் தமிழகத்தைப் பிரித்திருக்கின்றது. இந்த 12 நிலங்கள் என்பவை புவியியல் மற்றும் அரசியல் பகுப்புக்கள் கிடையாது. ஏனெனில் புவியியல் பகுப்பாகத் தொல்காப்பியம் ஐந்து திணைகளைக் கூறுகின்றது. அரசியல் பகுப்பாக அசோகர் கல்வெட்டு ஐந்து தமிழ் அரசாட்சியைக் கூறுகின்றது. தொல்காப்பியம் தரும் இந்த 12 நிலங்கள் என்பவை 12 வட்டார மொழிகளைப் பேசி வந்த 12 வட்டாரங்களையே குறிக்கின்றது. அது மட்டுமின்றி வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம் எனத் தொல்காப்பியத்திற்குச் சிறப்புப் பாயிரம் பாடிய பரம்பரனார் கூறியதிலிருந்து தமிழகத்தின் எல்லையானது வடக்கே வேங்கட மலைத் தொடரும், தெற்கே குமரி முனையும், இரண்டு பக்கமும் கடல் என்பதை நாமறியலாம். அத்தோடு இந்த 12 நிலங்களின் பெயர்களை உரையாசிரியர்கள் வழங்கியும் உள்ளனர். இந்த நாடுகள் எவை எவை என்பதைத் தொ.பெ. மீனாட்சி சுந்தரம் அவர்கள் தெளிவாகவே தமது ஆராய்ச்சி நூலில் எடுத்துக் காட்டியுள்ளார். 12 நிலங்களில் பேசப்பட்டு வந்தது 12 கிளைமொழிகள் தான் என்பதை வீரசோழியத்தின் உரையாசிரியர் பெருந்தேவனாரும் மற்றும் நன்னூலின் உரையாசிரியர் மயிலைநாதரும் தெளிவுபடுத்துகின்றனர். --அன்புடன் நீலன் (பேச்சு) 06:39, 5 செப்டம்பர் 2015 (UTC)

பதினேழு நிலங்கள் பற்றி

நன்னூல் கூறும் 17 நிலங்களைப் பற்றிப் பார்ப்போம். நன்னூல் இயற்றப்பட்டது கிபி 12-ம் நூற்றாண்டு ஆகும். நன்னூலை இயற்றியது பவணந்தி முனிவர் கன்னட மரபைச் சேர்ந்த ஒரு சமணத் துறவி. அவரை ஆதரித்தவர் தென் கருநாடகத்தை ஆட்சி செய்து வந்த கங்கையரசன் ஆவார்கள். கங்கையரசர்களும் கன்னடர்களே. நன்னூலுக்கு உரை எழுதியது மயிலைநாதர் ஆவார். இவரது காலம் கிபி 13-ஆம் நூற்றாண்டு ஆகும். இவர் தமிழ் மரபினர் என்ற போதும், இவரை ஆதரித்த மன்னன் சீயகங்கன் என்ற கன்னட கங்கையரசனே ஆவான். சரி, 17 நிலங்களைப் பற்றி நோக்கும்.

சிங்களம், சோனகம், சாவகம், சீனம், துளுவம், குடகம், கொங்கணம், கன்னடம், கொல்லம், தெலிங்கம், கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கவுடம், கடுங்குசலம் என தமிழகத்தைச் சுற்றி அமைந்திருக்கும் 17 நிலங்கள் தாம் இவை என்கிறார் மயிலை நாதர். இதில் கொல்லம், தெலிங்கம், கன்னடம், துளுவம், குடகம், கொங்கணம் ஆகியவை தென்னிந்தியாவில் இருக்கின்ற பிற நிலங்கள் ஆகும். இவற்றில் முறையே தெலிங்கம், கன்னடம், துளுவம், குடகம், கொங்கணம் மொழிகள் என்பதை நாம் அறிவோம். இந்த மொழிகள் அதே பெயரால் அழைக்கப்பட்ட நிலங்களில் பேசப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த நாடுகளை முறையே சோழர், பாண்டியர், போய்சளர், சாளுக்கியர், காக்காத்தியர் என்ற மன்னர்கள் ஆட்சி செய்திருந்தனர்.

கலிங்கம், வங்கம், கங்கம், மகதம், கடாரம், கவுடம், கடுங்குசலம் என்ற வடநாட்டு நிலங்களில் அதே காலக் கட்டத்தில் பாலர், காளாசூரியர், கிழக்கு கங்கர்கள், சண்டாளர்கள், சேனர்கள் என பல மன்னர்கள் ஆட்சி செய்திருந்தனர். அதனால், மயிலைநாதர் குறிப்பிடும் இந்த நிலங்கள் எல்லாம் மொழி பேசும் நிலங்கள் தான், அவை ஆட்சிப் பகுதிகளோ, நாடுகளோ கிடையாது. மகதம் என்பதும் ஒரு மொழியே, இன்றும் அது மககி என்ற பெயரில் பேசப்பட்டுத் தான் வருகின்றது. மொழி சார்ந்த இலக்கணத்திற்கு உரை எழுதிய நம் முன்னோர்கள், இதை எல்லாம் சிந்திக்காமலா எழுதியிருப்பர். இந்த நிலங்கள் எல்லாம் மொழிசார் நிலங்களாகவே அவர்கள் குறிப்பிடுகின்றனர், ஏனெனில் மயிலைநாதர் உரை எழுதிய காலத்திலும் சரி அதற்கு முந்தைய நூற்றாண்டுகளிலும் சரி, மேற்கூறிய நிலங்களை பல மன்னர்கள் பங்கிட்டு ஆட்சி செய்திருந்தனர். அவர்களின் பெயர்களும், ஆட்சி செய்த நாட்டின் பெயர்களும் வேறு வேறானவை. மரபுவழி மொழித் தாயகமாக அதன் பெயர்களையே நிலங்கள் என பவணந்தியார் குறித்ததாக மயிலைநாதர் சொல்லுகின்றார். அதனைத் தான் இன்றும் பல தமிழ் அறிஞர்கள் ஏற்றும் கொண்டுள்ளனர்.

அடுத்து அயல் நிலங்களைப் பற்றிப் பார்ப்போம். சிங்களம், சோனகம், சாவகம், சீனம், கடாரம் ஆகிய பிற நிலங்களையும் மயிலைநாதர் கூறுகின்றார். கிமு 12, 13-ஆம் நூற்றாண்டளவில் ஐரோப்பாவில் ரோமப் பேரரசு ஆட்சி முடிவுற்று விட்டது. ரேமப் பேரரசின் கீழ் இருந்து வந்த கிரேக்கர்களின் வழித் தோன்றலாகிய பைசாந்திய பேரரசு மத்தியத் தரைக் கடல் பகுதியில் வாழ்ந்து வந்தது. அங்கு பல மொழிகள் பேசப்பட்டும் வந்தது. ஆனால், அரேபிய தீபகற்பத்தில் அரேபிய ஆட்சியாளும், எகிப்தில் பாத்திமை காலிபாக்களும் ஆட்சி செய்து வந்தனர். பாரசீகத்தில் செல்யூக சுல்தான்கள் ஆட்சி செய்து வந்தனர். இக் காலக் கட்டத்தில் பைசாந்தியப் பேரரசு கிரேக்கம், துருக்கி, சிரியா, இராக் வரை மட்டுமே ஆட்சி செய்தனர். ஐரோப்பவின் பிற பாகங்களில் பல்வேறு அரசுகள் அப்போது தோன்றிவிட்டன. ஆக, ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு என அனைத்தையும் சோனகம் என சேர்த்து பவணந்தி முனிவர் சொல்லியிருப்பாரா என்பது ஐயமே. அவ்வாறு சேர்த்து சொல்லுகின்ற வழக்கம் தமிழ் இலக்கியத்தில் மட்டுமில்லை, மற்று எங்குமே காணப்பட்டதில்லை, அதற்கான சான்றுகளும் இல்லை. இருந்தால் தாருங்கள், அறிந்து கொள்ள விரும்புகின்றேன்.

சோனகர் என்ற பெயர் யவனர் என்ற பெயரிலிருந்து வருவதாகவும், யவனர் எனும் பெயரை இறுதியாகப் பெற்றவர்கள் அறபிகளும் ஏனைய முஸ்லிம்களுமாவர் என ஐ.எல்.எம் அப்துல் அசீஸ் தமது இலங்கை சோனகரது வரலாறு என்னும் நூலில் குறிப்பிடுகின்றார். குறிப்பாக ஒன்பதாம் நூற்றாண்டின் பின் கிரேக்கர்கள், ரோமர்களது வணிக செயற்பாடுகள் அறவே நின்றுவிட்டன. அந்த இடத்தை அரபுகளே பெற்றனர். முன்பு கிரேக்க, ரோமர்களைக் குறித்த யவனம் என்ற சொல் அரபுகள் பெற்றுக் கொண்டனர். யவனம் என்பதே பின்னர் சோனகம் ஆகியது. சோனகம் என பவணந்தி முனிவர் அரபு நாட்டையே சொல்லியிருக்கக் கூடும். யவனம் என்ற சொல் ஒரு காலத்தில் ரோமர், கிரேக்கர், பீனிசியர், அரபு என பலரையும் குறித்தது. ஆனால், சோனகர் சிறப்பாக அரபு மக்களையே குறித்தது என நிறுவுகின்றார். ஆக, சோனகம் என்பதை எல்லா இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கும் பொருத்துவது பிழையான கருத்து. சோனகம் என்பது சிறப்பாக அரபு மொழியை மட்டுமே குறித்திருக்கின்றது. அரபு மொழியானது இந்தோ-ஐரோப்பிய மொழி கிடையாது, அது செமிட்டிக் மொழி என்பதையும். அக் காலத் தமிழர்கள் அரபு, பாரசீகம், எகிப்து, கிரேக்கம் ஆகிய மொழிகளின் வேறுபாடுகளை அறிந்திருந்தனர். அவை தனித் தனி மொழிகள் என்பதையும் உணர்ந்திருந்தனர் இதை கொல்லம் செப்பேடு மூலம் நாம் உறுதி செய்து கொள்ள முடிகின்றது.

பவணந்தி முனிவர் வாழ்ந்த காலம் கிபி 12-ம் நூற்றாண்டு, அக்காலத்தில் ரோம பேரரசு தாங்கள் கூறிய ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு எல்லாவற்றையும் ஒன்றிணைத்து ஆட்சி செய்யவில்லை. ரேம பேரரசின் வழிதோன்றலான பைசாந்திய அரசின் ஆட்சிப் பகுதிகள் கிரேக்கம், துருக்கி, மற்றும் மேற்குக் கரையில் மட்டுமே இருந்தது. மற்றைய பகுதிகளில் பல இஸ்லாமிய பேரரசுகள் தோன்றி ஆட்சி செய்தன. அரேபியம், பாரசீகம், எகிப்து ஆகியவற்றில் அரபு காலிபாக்கள் ஆட்சி செய்திருந்தனர். ஆக சோனகம் என்றால் அது ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு எல்லாவற்றையும் குறிக்கும் என நினைப்பது தவறு.

கடாரம், சாவகம் அகிய இரண்டும் வெவ்வேறு மொழிகள். கடாரம் என்பது bahasa melayu, சாவகம் என்பது bahasa java என்பதையும் குறிக்கின்றது. கெடா என்ற ஊரில் தமிழர்கள் கொண்ட தொடர்பினால், மலாயம் முழுவதையும் கடாரம் என்றழைக்கும் வழக்கம் தமிழர்களிடையே வந்தது. சாவகம் என்பது ஜாவாத் தீவைக் குறிப்பதாகும், அங்கு தனியே ஒரு மொழி இன்றளவும் இருந்து வருகின்றது. கடாரத்தை ஆட்சி செய்த ஸ்ரீவிஜய மன்னர்கள் சாவகத்தையும் ஆட்சி செய்திருந்தனர். ஒரு பொதுச் சொல்லால் பல மொழிகளை ஒருங்கிணைந்து குறிக்க நினைத்திருந்தால், மயிலைநாதர் கடாரம், சாவகம் என இரண்டு மொழிகளை தனித் தனியே குறிப்பிட்டிருக்க வேண்டிய தேவையே இல்லை. எல்லாவற்றையும் கடாரம் என்றோ, சாவகம் என்றோ குறிப்பிட்டு இருப்பாரே. ஆக, ஆட்சிப் பகுதியின் பெயரால் பல்வேறு மொழிகளை ஒன்றிணைத்துக் கூறியிருக்கலம் என்ற வாதம் பிழையானது. பல மொழிகள் இன்று பேசப்பட்டிருந்தாலும் பவணந்தி முனிவர் காலத்தில் எத்தனை மொழிகள் இருந்தன என்பதையும், அதில் எத்தனை மொழிகள் பெருமொழிகளாக இருந்தன என்பதையும், அதில் எத்தனை மொழி பேசுவோர் தமிழகம் வந்து சென்றிருந்தனர் என்பதையுமே நாம் கருத்தில் கொள்ள வேண்டும். கடாரம், சாவகம் ஆகியவற்றின் மொழிகளைத் தனித் தனியாகக் குறிப்பிட்ட மயிலைநாதர், கிரேக்கம், ரோமன், எகிப்து, அரபு, பாரசீக மொழிகளை எல்லாம் சோனகம் என்ற ஒற்றைச் சொல்லில் அடக்கியிருந்தார் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளத் தக்கதாய் இல்லை. ஒருவேளை தாங்கள் சொல்வதும் கூட சரியாக இருக்கலாம், அதற்கான சான்றுகளோடு ஓர் ஆய்வுக் கட்டுரையை எழுதி சமர்பித்துப் பாருங்கள், பல தெளிவுகளைத் தமிழ் சமூகம் பெறக் கூடும். தற்சமயம், தமிழ் அறிஞர்களும், எனது தமிழ் ஆசிரியர்களும் கற்பித்தவைகளிலிருந்தே எனக்கான பதிலை நான் தந்திருக்கின்றேன். புதியதொரு Conspiracy theory சார்ந்த விவாதங்களில் பங்கெடுக்க எனக்கு விருப்பமில்லை. திசைமாறிய விவாதங்களில் பங்கெடுக்க நேரமோ, ஆர்வமோ தற்சமயம் இல்லை என்பதால் இதில் விளக்கமான பதிலை வரலாற்று அறிஞர்களிடமே கேட்டுத் தெளிய வேண்டுகின்றேன். இந்த விவாதக் களத்தில் கண்டந்தெ என்ற சொல்லைப் பற்றியதாகவே தொடங்கப்பட்டு இருந்தது, அதற்கான விளக்கங்களை மேற் பத்திகளில் தந்திருந்தேன். வாய்ப்பளித்தமைக்கு நன்றிகள் ! --அன்புடன் நீலன் (பேச்சு) 06:48, 5 செப்டம்பர் 2015 (UTC)

கடாரம் என்ற பெயரில் ஒரு மொழி இருக்கவே இல்லை. மலாய மொழியின் தொடக்கம் சுமாத்திராத் தீவிலும் அதனை அண்டிய தீவுகளிலுமே ஏற்பட்டது. மலாய மொழிக்கு கடாரம் என்ற பெயர் ஒரு காலத்திலும் வழங்கப்பட்டதன்று. சாவகத் தீவில் தனியொரு மொழியிருப்பதாகக் கூறுவது தவறானது. நானும் சாவகத் தீவிலேயே வசிக்கிறேன். சாவகத் தீவில் சாவக மொழி, சுண்டா மொழி, பாலி மொழி, மதுரா மொழி, பங்கா மொழி, படாங் மொழி, மூசி மொழி என்று பல்வேறு மொழிகள் வழக்கிலுள்ளன. இம்மொழிகள் ஒவ்வொன்றும் பல மில்லியன் கணக்காரனோராற் பேசப்படுகின்றன. அத்துடன் கடாரத்தை ஆட்சி செய்த மன்னரகள் நீங்கள் சொல்லும் காலப் பகுதியில் சாவகத்தை ஆளவில்லை. கடாரம் என்பதும் சாவகம் என்பதும் வெவ்வேறு பகுதிகள். அவற்றை வெறுமனே இரண்டு மொழிகளாகக் காட்ட நினைப்பது தவறு. அவ்வாறே சோனகம் என்ற சொல் நீங்கள் குறிப்படும் காலத்தில் அரபியரை மட்டும் குறிக்கப் பயன்பட்டதாகக் கூறுவது தவறு. அதற்கு ஆதாரமில்லை. அக்கால மேலை நாடுகளனைத்தும் சோனகம் என்றழைக்கப்பட்ட வெவ்வேறு பேரரசுகளின் கீழிருந்த நிலப் பகுதிகளே. எனவே, ஒரு நிலப் பரப்பின் பெயரால் தனியொரு மொழியைக் குறிக்கப்பட்டதாகக் கூறுவது தவறு.--பாஹிம் (பேச்சு) 07:34, 5 செப்டம்பர் 2015 (UTC)

வணக்கம் நண்பரே, சான்றுகளின் அடிப்படையில் மட்டுமே பேச வேண்டும் என்பது எனது பேரவா. அதனால் இயன்றவரை சான்றுகளை முன் வைத்துப் பேசுவோம். ஊகங்களின் அடிப்படையில் பேசுவதை தவிர்க்கலாம்.

கடாரத்தை ஆட்சி செய்த மன்னர்கள் நீங்கள் சொல்லும் காலப் பகுதியில் சாவகத்தை ஆளவில்லை. முற்றிலும் சரியே ! கடாரம் தனித்தும், சாவகம் தனித்துமே ஆளப்பட்டது. அது மட்டுமின்றி இந்த இரு நாட்டு மொழிகளும் வெவ்வேறானவை என நன்னூல் காலத்தில் தமிழர்கள் அறிந்திருந்தனர். இந்த இரு நாட்டுக்குள்ளும் பல மொழிகள் இருப்பதும் உண்மையே, ஆனால் இன்றைய காலத்திலேயே தனிமொழிக்கும், கிளைமொழிக்கும், வட்டார வழக்குகளுக்கும் உள்ள வேறுபாடுகளை பிரித்தறிவதில் பல இடர்பாடுகள் உள்ளன. அக் காலக் கட்டத்தில் அந்த நாட்டுக்கு எல்லாம் போய் தமிழர்கள் மொழி ஆராய்ச்சி செய்திருக்க மாட்டார்கள் என்றே நினைக்கின்றேன். இந்த இரு நாடுகளின் பெருநகரத்து மக்கள் வணிக காரணங்களுக்காக தமிழ்நாட்டுக்கு வந்து சென்ற, தமிழ்நாட்டு வணிகர்கள் அந்த நாடுகளின் பெருநகரங்களுக்கு போய் வந்த தொடர்புகளின் அடிப்படையில் தான் இந்த இரு நாட்டில் பயன்படுத்தப்பட்ட மொழிகளையும் (Official Language) தனிமொழிகளாக கருதியிருக்கின்றனர்.

மேற்கூறிய நன்னூல் பாடலுக்கான மயிலைநாதர் தரும் விளக்கத்தினை ஊன்றிப் படிக்கவும், அக் காலக் கட்டத்தில் மக்கள் அதிகம் அறிந்த நாடுகள் ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்தியக் கிழக்கு, தெற்காசியா, தென்கிழக்காசியா, கிழக்காசியா மட்டுமே. இதையே உலகம் எனக் கருதி வந்தனர். அப்படியிருக்க நன்னூலார் 17 நாடுகளை மட்டும் குறிக்க வேண்டிய தேவை என்ன? யாதும் ஊரே யாவரும் கேளிர் எனக் கணியன் பூங்குன்றனார் பாடியது போல, உலக மொழிகள் எலாம் என பவணந்தி முனிவர் பாடியிருக்கலாமே? தமிழகத்திற்கு வந்த மற்றும் இந்தியர்கள் அறிந்த நாட்டு மொழிகளின் சொற்களை நிச்சயம் ஆராய்ச்சி செய்திருக்கின்றார். தமிழ் மொழியின் ஒலிநயத்துக்கு மாற்றவல்ல மொழிகளை மட்டுமே அவர் தேர்ந்தெடுத்திருக்கின்றார்.

தாங்கள் சொல்வது போல ஒரு பெருநிலத்தைக் குறிப்பிட்டு அதன் மொழிகள் எல்லாவற்றையும் அதற்குள் அடக்கியும் அவர் கூறியிருக்கலாம். கடாரம் என்றால் தென்கிழக்காசியா எனவும், சாவகம் என்றால் இந்தோனேசியாவின் தீவுகள் அனைத்தும், சீனம் என்றால் கிழக்காசிய நாடுகள் எனவும் நாம் பொருள் கொள்ளவும் வாய்ப்புண்டு.

ஆனால், கிபி 9-ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரையிலான தென்கிழக்காசிய வரலாற்றைத் தேடிய போது, இன்றைய மலேசியா, சுமத்திர தீவுகளை மலாய் அரசர்கள் ஆட்சி செய்துள்ளனர். இவர்களின் பெருமொழியாக பழைய மலாய மொழியே இருந்திருக்கின்றது. சங்க காலம் முதலே மலாய நாட்டை கடாரம் என்றழைக்கும் வழக்கம் தமிழர்களிடையே இருந்து வந்திருக்கின்றது. இந்த கடாரம் என்ற பெயரை ஏன் தமிழர்கள் பயன்படுத்தினர் என்றால் தமிழ்நாட்டிலிருந்து சென்ற வணிகர்கள் முதன்முதலில் இறங்கிய இடம் கெடா என்று இன்றழைக்கப்படும் கடாரமே. அதனால் தான் மலாய நாடு முழுவதையும் கடாரம் என்றழைத்தனர். சோழர்கள் கடாரம் கொண்டான் என்ற பட்டத்தை பெற்றதும், வெறும் கெடா என்ற ஊரைக் கைப்பற்றியதாலல்ல, ஸ்ரீவிஜய மன்னர்கள் ஆண்ட மலாய தீபகற்பம், சுமத்திர உள்ளடங்கிய முழு கடார நாட்டையும் கைப்பற்றியதால் தான்.

அதே, கிபி 9-ஆம் நூற்றாண்டு முதல் 12 ஆம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதியில் ஜாவாத் தீவினையும், போர்னியோ உட்பட சில தீவுப் பகுதிகளையும் சாவக மன்னர்கள் ஆட்சி செய்து வந்திருக்கின்றனர். இவர்களின் பெருமொழியாக பழைய சாவக மொழியை ஆட்சிமொழியாக கொண்டிருந்தனர். சயிலேந்திர மன்னர்கள் இந்த மொழியில் கல்வெட்டுக்களையும் தந்தருளியுள்ளனர். மரபுவழி தாயகமாக சாவகம் தனியொரு அடையாளமும் கொண்டிருந்தது.

அதே, கிபி 9-ஆம் நூற்றாண்டு முதல் 12-ஆம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதியில், சாவக மன்னர்களோ, கடார மன்னர்களோ இன்றைய தாய்லாந்து, பர்மா, கம்போடியா பகுதிகளை தொடர்ச்சியாக ஆளவில்லை. அங்கே தனித் தனி அரசுகள் இருந்தன. தாய்லாந்து, கம்போடியா, வியட்நாமை உள்ளடிக்க பகுதிகளில் கெமர் மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். இவர்களின் பெருமொழியாக இருந்தது பழைய கெமர் மொழியாகும். இதைத் தமிழர்கள் கம்போசம் எனவும் அழைத்திருக்கின்றனர். ஆனால், கம்போச மொழியை மயிலைநாதர் சொல்லவில்லை, கடாரம் என்பதற்குள் கம்போசத்தை உள்ளடக்கி சொல்லியிருந்தார் என கருதும் வாதம் பிழையானது. கடாரம் என்ற சொல்லில் கம்போசத்தை உள்ளடக்கியிருப்பின், ஏன் அதே சொல்லில் சாவகத்தையும் உள்ளடக்கிச் சொல்லியிருக்கக் கூடாது. தனித் தனியே சொல்ல வேண்டிய தேவை இல்லையே. வெறுமனே கீழை மொழிகள் எலாம் எனவும் கூறியிருக்கலாமே?!

அதே, கிபி 9-ஆம் நூற்றாண்டு முதல் 12-ஆம் நூற்றாண்டு வரையிலான காலப் பகுதியில் அரேபிய காலிபாக்கள், மற்றும் சுல்தான்களின் ஆட்சியில் தான் மத்திய கிழக்கும், வட ஆப்பிரிக்காவும் இருந்தது. ஆனால் தாங்கள் சொல்கின்றது போல ஐரோப்பா அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. சுல்தான்களின் ஆட்சியில் அரபு மட்டுமே பெருமொழியாகவும் இருந்து வந்திருக்கின்றது. அதே சமயம், அக் காலக் கட்டத்தில் மேற்கிலிருந்து வந்தோரை எல்லாம் மிலேச்சர் என்றே இந்தியர்கள் அழைத்து வந்தனர். ‘மிலேச்ச’ என்ற சொல் சங்க இலக்கியத்தில் முல்லைப் பாட்டில் வருகிறது. இது மேற்கிலிருந்து வந்தோருக்கான பொதுச் சொல்.

ஆனால், யவனர் என்ற சொல்லானது, கிரேக்க நாட்டிலிருந்த Ionic Greek என்ற மக்களைக் குறித்த சொல்லாகும். இவர்களே அதிகளவிலான வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்களில் பலரும் சங்க காலம் தொட்டே தமிழகம் வந்து சென்றிருக்கின்றனர். இவர்களையே முதலில் யவனர் என தமிழர்கள் அழைத்திருந்தனர். அதே சமயம், மத்திய கிழக்கிலிருந்து வந்த யூதப் பெருமக்களை அஞ்சுவண்ணம் என தமிழர்கள் அழைத்திருந்தனர். கிபி 9-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தரிசப்பள்ளி செப்பேடுகள் இதில் முக்கியமான ஓர் ஆவணமாகும். அந்த செப்பேடுகளில் தமிழ் மன்னர்கள் அரபு படையெடுப்பினால் பாதிக்கப்பட்டு மத்தியக் கிழக்கிலிருந்து அகதிகளாக வந்த அந்நிய மக்களுக்கு நிலங்களை வழங்கி குடியேற அனுமதித்துள்ளனர். இதில் மூன்று மொழிகளில் அந்நிய மக்கள் ஒப்பமிட்டுள்ளனர். எபிரேயம், பகலாவி, மற்றும் அரபு மொழி ஆகும். இவ்வாறு மத்தியக் கிழக்கிலிருந்து பல்வேறு மொழி பேசுவோரும், பல்வேறு மதத்தினரும் தமிழகம் வந்து சென்றும், குடியேறியும் உள்ளனர். அவர்களுக்கு பல தனிப் பெயர்களும், அவர்களின் மொழிகளுக்கு தனிப் பெயர்களும் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சோனகம் என்ற ஒற்றைச் சொல்லில் மேற்கு மக்கள் அனைவரையும் அழைத்ததாக சொல்லுவது நம்பும்படியாக இல்லை. சோனகம் என்ற சொல்லே முஸ்லிம் மக்களை குறிக்கவே கிபி 9-ஆம் நூற்றாண்டின் பின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை பெரும்பாலான ஆராய்ச்சியாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.

1910-இல் பழைய இந்திய இலக்கியங்களின் அடிப்படையில் ஆராய்ச்சி செய்து அபிதான சிந்தாமணி என்னும் கலைக் களஞ்சியத்தை ஆ.சிங்கார வேலு முதலியார் வெளியிட்டார். இதில் பழைய தேசங்களாக 56 தேசங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை:

அங்கம், அருணம், அவந்தி, ஆந்திரம், இலாடம், யவனம், ஒட்டியம், கருசம், கலிங்கம், கன்னடம், கர்நாடம், காசம், காசுமீரம், காந்தாரம், காம்போஜம், கிராமம், குருகு குடகம், குந்தளம், குரு, குலிந்தம், கூர்ச்சரம், கேகயம், கேரளம், கொங்கணம், கொல்லம், கோசலம், சகம், சவ்வீரம், சிங்களம், சிந்து, சீனம், சூரசேனம், சோழம், சோனகம், திராவிடம், துளுவம், தெங்கணம், நிடதம், நேபாளம், பாஞ்சாலம், பப்பரம், பல்லவம், பாண்டியம், புலிந்தம், போடம், மகதம், மச்சம், மராடம், மலையாளம், மாளவம், யுகந்தரம், வங்கம், வங்காளம், விதர்ப்பம்.

இதில் தெளிவாகவே யவனம், சோனகம் ஆகிய இரண்டையும் தனித் தனியாக குறித்துள்ளார். ஆக, யவனம் தான் சோனகம், சோனகம் தான் ரோம சாம்ராஜ்யம், ரோம சாம்ராஜ்யம் தான் ஐரோப்பா முழுமையும் என்ற வாதங்கள் எல்லாம் கேள்விக்குறியாகவே இருக்கின்றது? அது மட்டுமின்றி பண்டைய காலத்தில் இந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு 56 நாடுகளை தெரிந்திருக்கின்றது. ஆனால், இதில் 17 நாடுகளை மட்டுமே நன்னூல் சொல்கின்றது. அந்த 17 நாடுகளில் பல நாடுகளின் பெயராலே தனிமொழி இன்றளவும் இருந்து வருகின்றது. ஆக, அந்த நிலங்கள் மொழிவழிப் பெருநிலம், மொழிவழித் தாயக நிலங்களாகவே நாம் கருத இடமுண்டு. அதே சமயம் யவனம் உட்பட சில நாட்டு மொழிகளை திசைச் சொல்லாக ஏற்பதை நன்னூலார் விரும்பவில்லை என்றே தோன்றுகின்றது. இது தமிழின் சொல்லமைதிக்கு அவை பொருத்தமுடையதாய் இல்லை எனக் கருதியிருக்கலாம். இன்றளவும் கூட ஐரோப்பிய மொழிச் சொற்களை தமிழிற்கு மாற்றுவது பெருந்தடையாக இருக்கின்றது. அதனால் தான் நாம் பல சமயம் ஆங்கிலச் சொற்களை தமிழிற்கு கடன் வாங்குவதைத் தவிர்த்து தனித் தமிழ் சொற்களை உருவாக்கிக் கொண்டும் வருகின்றோம்.

ஆனால் சோனகம் என்றால் ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு என அனைத்தையும் குறித்தது என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால் தாருங்கள்? தெரிந்து கொள்ள ஆர்வமாகவே இருக்கின்றேன். பவணந்தி முனிவர் காலத்தில் ஐரோப்பா முழுவதும் சோனகம் என அழைக்கப்பட்டதற்கான சான்று? --அன்புடன் நீலன் (பேச்சு) 16:13, 5 செப்டம்பர் 2015 (UTC)

சோனகம்[தொகு]

ஓரிடத்தில் சோனகம் என்பதும் யவனம் என்பதிலிருந்து மருவியது என்று கூறும் நீங்கள் மற்றோரிடத்தில் இரண்டும் வெவ்வேறானவை என்கிறீர்கள். அடுத்தது மேற்குறித்த பன்னிரு நிலங்களும் இவை தாமென்று நன்னூலார் குறித்ததில்லை என்கிறீர்கள். மேலும் அபிதான சிந்தாமணி என்பது வெறும் கற்பனைகளையும் கட்டுக்கதைகளையும் ஏராளமாகத் தொகுத்து வைத்துள்ள ஒரு புத்தகம். அது ஏற்கப்பட முடியாது. எவ்வாறிருப்பினும் சோனகம் என்பதன் மூலம் அக்கால ஐரோப்பாவும் வட ஆபிரிக்காவும் மத்திய ஆசியாவும் மத்திய கிழக்கும் குறிக்கப்பட்டமைக்கான சான்று இதோ. This becomes especially significant in view of the findings by Rajendrala’la Mitra, based largely on literary evidence, showing that originally the Yavana of the Sanskrit writers was the name of a country and of its people to the west of Kandahar (Arabia, Persia, Medea or Assyria) subsequently becoming the appellation for all casteless races to the west of the Indus, including the Arabs and the Asiatic Greeks என்று குறிக்கிறார் மேற்படி ஆய்வாளர். நான் முதலிலேயே குறிப்பிட்டது போன்று சோனகம் அல்லது யவனம் என்ற சொல் வெவ்வேறு எழுத்தாளர்களால் கிரேக்கர், உரோமர், அரபியர், பாரசீகர், அசீரியர் எனப் பல்வேறு தரப்பினரையும் குறிக்கப் பயன்பட்டுள்ளது.--பாஹிம் (பேச்சு) 02:37, 6 செப்டம்பர் 2015 (UTC)

வணக்கம், யவனர் என்ற சொல் தொடக்கத்தில் இயோனிக கிரேக்கர்களைக் குறித்தது என்பதும், பின்னர் அனைத்து கிரேக்கர்களையும், பின்னர் அரபுகளையும் குறித்தது. இயோனா, யவனா அனைத்தும் ஒரே மூலத்திலிருந்து வந்திருக்கின்றது என்பதும் ஏற்கத் தக்கதே. யவனம் தான் சோனகம் ஆனது என பல எழுத்தாளர்களும் கருதுகின்றனர். இதுவும் ஆழ்ந்து ஆராயப்பட வேண்டிய ஒன்றே.
யவனம் என்ற சொல்லிலிருந்து சோனகம் வந்திருக்கலாம். ஆனால், சோனகம் என்ற சொல் கிரேக்கர்களைக் குறிக்கவில்லை, அது மற்ற ஐரோப்பியர்களையும் குறிக்கவில்லை. இந்தியர் என்ற சொல்லிருந்து செவ்விந்தியர் என்ற சொல் வந்திருந்தாலும், செவ்விந்தியர் என்ற சொல் இந்தியரைக் குறிக்காது, அதில் இந்தியர் என்ற பதம் இருந்தாலும் கூட.
சோனகர் என்ற சொல் அரபுகளையே குறித்திருக்கின்றது என்பதற்கான சான்றுகளே மிக அதிகம். Frontiers of Embedded Muslim Communities in India என்ற நூலில் விநோத் கே. ஜெய்ரத் அவர்கள் கூறுகின்றார், " Sonkan or the native of Sonka, meaning Arabia ". History of People and Their Environs: Essays in Honour of பேராசிரியர் சந்திரபாபு அவர்கள் கூறுகின்றார், "Sonka this term also seem to have denoted collectively the West Asian traders, the Arabs, the Jews, the Parsees, but the Arab Muslims figured more prominently" "Sonakar was the term used for "Muslim" in Tamil". Damilica என்ற நூலில் in the Chola period called them Sonaka, Sonakar in Tamil means Muslim எனச் சொல்லப்பட்டுள்ளது. Maritime History of the Coromandel Muslims என்ற நூலில் Sonakam in Tamil stands for Arabia எனச் சொல்லப்பட்டுள்ளது. The evolution of an ethnic identity: the Tamils in Sri Lanka என்ற நூலில் ther term Sonaka ... also seems to have denoted collectively the West Asian traders என்கிறார். பண்டைய இலக்கியங்களை தீவிரமாக ஆராய்ந்து அபிதான சிந்தாமணி என்னும் கலைக் களஞ்சியத்தை எழுதிய ஆ.சிங்கார வேலு முதலியார் ஏன் யவனம், சோனகம் என இரண்டையும் தனித் தனியாக குறிக்கின்றார்
தமிழகம், கேரளம், இலங்கை ஆகியவற்றில் மத்தியக் கிழக்கிலிருந்து குடியேறிய யூதர்கள், அரபுகள், அசிரியர்கள் வாழ்ந்திருந்த போதும், சோனகர் என்ற சொல்லானது முஸ்லிம்களை மட்டுமே இன்றளவும் குறிக்கின்றது. மற்ற சமூகத்தவரை சோனகர் என குறிக்கவில்லை. சோனகரது ஆரம்பம் அரேபியாவிலிருந்துதான் தொடங்குகின்றது என ஐ.எல்.எம் அப்துல் அஜீஸ் குறிப்பிடுகின்றார்.
யவனர் என்றால் கிரேக்கர் மற்றுமுள்ள ஐரோப்பியர் என பொருள் கொள்ளுகின்ற படி தமிழ் சமூகம் எழுதி வந்திருக்கின்றது. ஆனால், மத்தியக் கிழக்கில் அரபுகளின் எழுச்சியும், இஸ்லாமிய மதத்தின் தோற்றத்தின் பின்னர் யவனம் என்ற சொல் கைவிடப்பட்டுவிட்டது. பின்னர், சோனகம் என்ற சொல் பயன்பாட்டில் வந்தது. இந்த சோனகம் என்ற சொல்லை அரபு இஸ்லாமியர்களையே தமிழ் சமூகம் என்றும், இன்றும் குறித்து வந்திருக்கின்றது. மற்ற மேற்கத்தியவர்களை நஸ்ரானிகள், கிறித்தவர்கள், ஐரோப்பியர்கள், மிலேச்சர்கள் என்ற சொல்லால் தமிழ் சமூகம் குறித்துள்ளது. சோனகம் என்ற சொல்லே மேற்கத்தயவர் என தமிழ் சமூகம் கருதியிருந்தால் ஏனைய சொற்களை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் தேவையே ஏற்பட்டிருக்காது. ஆக, சோனகம் என்பது அரேபியம் என்று தான் பொருள் கொள்ள வேண்டும் அல்லது மத்தியக் கிழக்கினர் எனவும் பொருள் கொள்ளலாம். அல்லது சோனகம் என்றாலே மேற்கத்தையவர்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டமைக்கான சான்றுகள் ஏதும் உண்டா? இருந்தால் அறியத் தாருங்கள் நண்பரே. அறிய ஆவலாகவே உள்ளேன். --அன்புடன் நீலன் (பேச்சு) 04:07, 6 செப்டம்பர் 2015 (UTC)

அதைத்தானே நான் மேலே சுட்டிக்காட்டிய ஆய்வு originally the Yavana of the Sanskrit writers was the name of a country and of its people to the west of Kandahar (Arabia, Persia, Medea or Assyria) subsequently becoming the appellation for all casteless races to the west of the Indus, including the Arabs and the Asiatic Greeks (அடிப்படையில் சமற்கிருத எழுத்தாளர்களால் யவன எனக் குறிக்கப்பட்டது கந்தஹாருக்கு மேற்கே (அரபியா, பாரசீகம், மெதேயா அல்லது அசீரியா) இருந்த ஒரு நாட்டினதும் அதன் மக்களினதும் பெயராகவே இருந்ததுடன், பின்னர் அக்குறிப்பு அரபுக்கள், ஆசியமயமான கிரேக்கர் உட்பட இந்துஸ் சமவெளிக்கு மேற்கே இருந்த சாதியமற்ற எல்லா இனத்தினருக்கும் வழங்கியது) என்று கூறுகிறது. அத்துடன் நீங்கள் சுட்டிக் காட்டியதில் ther term Sonaka ... also seems to have denoted collectively the West Asian traders (சோனகர் என்ற சொல் மேற்காசிய வர்த்தகர்களை ஒட்டு மொத்தமாகக் குறிப்பதாகவும் தோன்றுகிறது) என்ற வரியைச் சற்று ஆழமாகக் கவனியுங்கள். இங்கே அபிதான சிந்தாமணி போன்ற குப்பைகளை ஆதாரமாகக் காட்ட வேண்டாம். நீங்கள் குறிப்பிடும் அபிதான சிந்தாமணி எத்தகைய கட்டுக் கதைகளைக் கொண்டிருக்கிறது என்பதை பேச்சு:தமிழ் ஆண்டுகள் பக்கத்தில் தமிழ் ஆண்டுகள் தோன்றிய கதையாகக் கூறப்படுவது என்ற தலைப்பின் கீழ்தரப்புட்டுள்ள உதாரணம் எடுத்துக் காட்டுகிறது.--பாஹிம் (பேச்சு) 04:22, 6 செப்டம்பர் 2015 (UTC)

தாங்கள் நான் சொன்னவற்றை விளங்கிக் கொள்ளவில்லை என நினைக்கின்றேன். யவனம் என்ற சொல்லிருந்து சோனகம் தோன்றியிருக்கலாம், ஆனால் சோனகம் என்ற சொல் ஐரோப்பியர்களைக் குறிக்கவில்லை. அது அரேபியர்களையும், பிற மத்தியக் கிழக்கின் வாணிகர்களையே குறித்திருக்கின்றது. அபிதான சிந்தாமணியை விடுங்கள், மற்ற சான்றுகளைப் பாருங்கள். அனைத்தும் சோனகம் என்ற சொல் அரபு முஸ்லிம்களை குறிப்பதாகவே கூறுகின்றது, அதிக பட்சம் மத்தியக் கிழக்கின் பிற வணிகர்களையும் குறித்தது. எங்குமே அது ஐரோப்பியரையும் சேர்த்துக் குறித்தது எனக் கூறவில்லை. சோனகம் என்ற சொல் ஐரோப்பியர்களைக் குறித்ததற்கான சான்றுகள் இருந்தால் தாருங்கள் என பலமுறை கேட்டுவிட்டேன், தேடுகின்றீர்கள் என கருதுகின்றேன், காத்திருக்கின்றேன், அப்படி ஏதுமிருந்தால் நானும் ஒரு புதிய விடயத்தை அறிந்தவனாகின்றேன் என பெருமகிழ்ச்சியே கொள்வேன்.--அன்புடன் நீலன் (பேச்சு) 04:54, 6 செப்டம்பர் 2015 (UTC)

தொன்று தொட்டு வழங்கும் யவன என்ற சொல்லே இன்றளவும் சோனகர் என்பதற்குப் பகரமாகக் கையாளப்படுகிறது. சோனகம் என்ற சொல் எப்போது தோன்றியது என்பதும் தெளிவில்லை. இலங்கையில் சிங்களத்தில் யொன் என்றும் யோனக என்றும் குறிக்கப்படுவதற்குச் சமமாகவே தமிழில் சோனகம் என்ற சொல் கையாளப்படுகிறது. மேற்படி யொன் என்பது பாளி மொழியின் அல்லது சமற்கிருதத்தின் யவன என்ற சொல்லிலிருந்து தோன்றியதென்கிறார் ஐ. எல். எம். அப்துல் அசீஸ். அவ்வாறாயின் யவனம் = சோனகம் என்று பொருளாகும். இது தற்கால வழக்கு. இந்நிலையில் மேலே நான் சுட்டிக் காட்டிய ஆதாரம் போதுமானதே. பண்டைக் காலத்தில் ஒரு சிங்கள மன்னன் யவனரை அனுராதபுரத்தில் குடியமர்த்தினான் என்று மகாவம்சம் குறிக்கிறது. அக்காலத்தில் குறிக்கப்பட்ட அதே சொல் சிங்களத்தில் இன்று வரை சோனகரைக் குறிக்கப் பயன்படுகிறது. எனவே சோனகர் என்ற சொல்லில் பண்டைக் காலத்தில் யவன அல்லது யொன் எனக் குறிக்கப்பட்டோராகிய எல்லா இனனத்தினரும் உள்ளடங்குகின்றனர்.--பாஹிம் (பேச்சு) 06:21, 6 செப்டம்பர் 2015 (UTC)

சிந்து என்ற சொல்லிலிருந்தே ஹிந்து என்ற சொல் உருவாகியது. பாரசீக மொழியில் சகரம் ஹகரமாதலால் ஹிந்து என அழைக்கப்பட்டது. பின்னர், கிரேக்கர்கள் ஹிந்து என்பதை இந்திக் என்றழைத்தனர். அதுவே பிற்காலங்களில் இந்தியா, இந்தியர் என உருமாறியது. இந்த சொல் மெகஸ்தனிஸ் எழுதிய நூலில் மட்டுமின்றி, பண்டைய கிரேக்க நூல்களிலும் இடம்பெற்றுள்ளது. இந்தியர் என்ற சொல்லில் இந்திய மக்களை எல்லாம் உள்ளடக்கினார்கள். பிற்கால பாரசீகர்கள் இந்தியாவை ஹிந்துஸ்தான் என்றழைத்தனர். ஐரோப்பியர்கள் அமெரிக்காவை கண்டறிந்த பின்னர், அங்குள்ள மக்களை இந்தியர்கள் என்றழைக்கத் தொடங்கினார்கள். பின்னர் அவர்களை செவ்விந்தியர் எனவும், பூர்விக இந்தியர் எனவும், அமெரிக்க இந்தியர் எனவும் அழைத்தனர். அதனால், செவ்விந்தியர்களும் இந்தியர்கள் தான் என சொன்னாலும், செவ்விந்திய மொழியையும் நாம் இந்திய மொழிகளில் ஒன்றாக கருதிக் கொள்ளலாம் என சொன்னாலும், செவ்விந்தியர் என்ற சொல்லிலேயே எல்லா இந்தியர்களையும் உள்ளடக்கியும் விடலாம் என வியாக்கியாங்கங்கள் பகன்றாலும் வியப்பதற்கில்லை. மேற்கூறிய சான்றுகளே போதுமானதாக இருக்கின்றது என சாதித்தாலும் அதிர்ச்சிக் கொள்ளத் தேவையில்லை. எனது விவாதத்தை இத்துடன் நிறைவு செய்கின்றேன். வாழ்க வளமுடன் ! நன்றிகள் !--அன்புடன் நீலன் (பேச்சு) 06:49, 6 செப்டம்பர் 2015 (UTC)

தலைப்பு சர்ச்சை மீண்டும்[தொகு]

கண்டந்தெ என்பது கண்டந்தே என்றே மாற்றப்பட வேண்டும். கண்டந்தை என்றே கன்னடர்கள் பலுக்குகிறார்களா? கண்டந்தே என்பது தமிழ் இலக்கணத்தின் படி எழுதுவது ஏன் தவறு என்பதைச் சுருக்கமாக விளக்க வேண்டுகிறேன்.--Kanags \உரையாடுக 07:34, 9 செப்டம்பர் 2015 (UTC)

கண்டந்தெ என்ற கன்னட சொல் கண்டந்தே என தமிழில் வராது. இந்த சொல்லின் விகுதி உருபான ஏகாரம் (ஏ) என்பது தமிழில் தெரிநிலை வினையெச்ச விகுதிக்கும், எட்டாம் வேற்றுமைக்கும் மட்டுமே வரும். கண்டந்தெ என்ற சொல்லில் வருகின்ற எகர (எ) விகுதி வினையெச்சமும் கிடையாது, எட்டாம் வேற்றுமையும் கிடையாது. ஆக, அதை கண்டந்தே என மாற்றுவதில் எவ்வித நியாயமும் கிடையாது, அப்படி மாற்றினால் பொருளே மாறிவிடும். கண்டந்தை என்றே கன்னடர்கள் பலுக்குகிறார்களா? எனக் கேட்கின்றீர்கள்? அதனையே யாமும் திரும்பிக் கேட்கின்றோம், கண்டந்தே என்றா கன்னடர்கள் பலுக்குகிறார்கள்?. கண்டந்தெ என்பதில் வருகின்ற கன்னட எகர விகுதி உருபை நாம் கன்னட இயைபு விகுதிகளாகவே கருத வேண்டியிருக்கின்றது. தமிழில் அதற்கு நிகரான இயைபு விகுதி உருபு ஐகாரம் ஆகும். ஆகையால் கண்டதை என்பதே சரி. எகர விகுதியை எவ்வித இலக்கண ஆய்வுமினிறி ஏகாரமாக மாற்ற வேண்டும் என நீங்கள் கருதுவீர்களானால், இலக்கண உருபை கருத்தில் கொண்டு ஐகாரமாக ( கண்டந்தை ) மாற்றப்படுவதே சரி என்பேன். --அன்புடன் நீலன் (பேச்சு) 10:45, 9 செப்டம்பர் 2015 (UTC)
தெரிநிலை வினையெச்ச விகுதி? ஏ வரக்கூடிய சில உதாரணங்கள் தாருங்கள். கண்டந்தெ என எழுதினாலும், கண்டந்தே என்று தான் கன்னடர்கள் பலுக்குகிறார்கள் என்று கன்னடர்களுடன் அதிகமாகப் பழகும் சுந்தர் மேலே கூறியுள்ளார்.--Kanags \உரையாடுக 11:11, 9 செப்டம்பர் 2015 (UTC)
மீண்டும் முதலிலிருந்தா. சரி தங்களின் மனசமாதானத்திற்காக ஏகார விகுதி கொண்ட வினையெச்சங்களுக்கு சில எடுத்துக்காட்டுக்கள் இதோ உண்ணாமே, நடந்தாமே, செய்தாமே, நட்டாமே, நடவாமே, நில்லாமே, பேசாமே சொல்லிக் கொண்டே போகலாம். ஏகார வினையெச்ச விகுதி எதிர்மறைப் பொருள் தரும். ( பார்க்க: ஆறுமுகநாவலர் காண்டிகையுரை, உயர்தரக் கட்டுரை இலக்கணம் - மொழிஞயிறு ஞா.தேவநேயப் பாவாணர் ).
தமிழில் ஏகாரம் விகுதியாக வரக் கூடிய சில எடுத்துக் காட்டுக்கள்
- உம்மைத் தொகை ( நிலனே நீரே - நிலனும் நீரும் ) கண்டந்தே என்றால் இது உம்மைத் தொகையா என்றால் நிச்சயம் இல்லை.
- வினையெச்சம் ( உண்ணாமே, நடவாமே ) இந்த வினையெச்சங்கள் எதிர்மறை பொருள் தரும் ஆகையால் கண்டந்தே என்றால் இது எதிர்மறை பொருள் தரும் சொல்லா என்றால் அதுவும் இல்லை.
- தேற்றம் தத்தம் பொருள் உணர்த்தும் ( அவனே நின்றான், நீயே நடந்தாய் ) கண்டந்தே என்றால் இது தத்தம் பொருள் உணர்த்தவில்லை, அது படர்க்கை பொருளில் வந்துள்ளது, அதனால் இதுவும் இல்லை.
- வினா விகுதி ( “ஈயாயாயினும் இரங்குவே அல்லேம்” (புறம் 209-1) ) வினா பொருளில் ஏகாரம் வரும், ஆனால் கண்டந்தே என்றால் இது வினா சொல்லுமல்ல.
- எட்டாம் வேற்றுமை படர்க்கை பெயரெட்டு ( முருகனே வா ) எட்டாம் வேற்றுமை விளி வேற்றுமை, கூப்பிடு பொருளில் மட்டுமே வரும், ஆனால் கண்டந்தே என்றால் இது யாரையும் கூப்பிடவுமில்லை.
கண்டந்தே என்று தான் கன்னடர்கள் பலுக்குகிறார்கள் என்று கன்னடர்களுடன் அதிகமாகப் பழகும் சுந்தர் மேலே கூறியுள்ளார். அவர் கன்னடர்களோடு பழகுவதைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது. என்னுடைய மனைவி வழியினர் அனைவரும் கன்னடத்தையே முதன்மை மொழியாகப் பேசி கருநாடகத்தில் வாழ்ந்து வருபவர்கள். அது மட்டுமின்றி, கன்னட மொழி அடிப்படையை ஓரளவு நானும் கற்றுள்ளேன். ஆகையால், என்னாலும் கன்னட மொழி அறிவு எனக்கும் ஓரளவு உண்டு. இதுவே இந்த சொல் விளிச் சொல்லாக இருந்திருந்தால், அதாவது விளி வேற்றுமையாக இருந்திருந்தால் கன்னட எகரம், தமிழில் ஏகாரமாய் மாற்றுவதில் எந்தவொரு சிக்கலும் இல்லை. கௌடரெ என வந்திருந்தால் கௌடரே என மாற்றலாம், சுந்தர் ஒருவேளை இந்த விளிவேற்றுமையை கவனித்துவிட்டு எல்லா இடத்திலும் எகரம் ஏகாரமாகும் என்கிறார் போல. அதே போல எதிர்மறை பொருளைத் தரும் கன்னட எகரம், தமிழில் ஏகாரமாய் மாற்றலாம். ஆனால், இந்த இரண்டும் கண்டந்தெ என்ற சொல்லுக்கு பொருந்தாது.
பிரபல தமிழ் எழுத்தாளர் இமயம் எழுதிய எங் கதெ என்ற புத்தகம் தமிழில் வெளிவந்துள்ளது. அதில் எகர விகுதியோடு தலைப்பை வைத்திருக்கின்றார் ஆசிரியார். தமிழில் குறிப்பாக வட தமிழகத்தில் பல வட்டார மொழிகளில் எகர விகுதி புழங்கி வருகின்றது.
தமிழில் ஐகாரக் குறுக்கம் ஐகாரக் குறுக்கம் என்ற ஒன்றுண்டு. இந்த ஐகாரக் குறுக்கும் சொல்லீற்றில் வரும் போது மாத்திரை அளவில் வெகுவாக குறைந்து ஒலிக்கும். எடுத்துக் காட்டுக்கு கதை என்பதை Kathai என பலுக்கக் கூடாது, அதை Katha என்பதாகவே பலுக்க வேண்டும். இந்த ஐகாரக் குறுக்கமானது கன்னட மொழியில் எகரமாக மாறுகின்றது. இந்த மாற்றம் தருமபுரி, கிருஷ்ணகிரி, கடலூர், திருவண்ணாமலை உட்பட பல வட தமிழக வட்டார மொழிகளும் காணப்படுகின்றது. இந்த எகரம் பொதுவில் எழுதும் போது ஐகாரமாகவே நாம் எழுத வேண்டும். அத எடு என பேசினாலும் அதை எடு என்று தான் எழுத வேண்டும்.
மீண்டும் கண்டந்தெவுக்கு வருவோம், கண்டந்தெ என்பதன் பொருள் என்ன? கண்டு, காணப்பட்டது என்ற தான் பொருள் தரும். கன்னட மூல ஒலிக்கு நெருக்கி இந்த சொல்லை மாற்ற வேண்டும் என்றால் கண்டந்த என மாற்றலாம், அப்போது தான் பொருள் மயக்கம் தராது, ஆனால், இலக்கணப் படி நோக்கினால் கண்டந்தை என்பதே சரி, அதற்கான விளக்கங்களை மேலே கொடுத்தும் விட்டேன். --அன்புடன் நீலன் (பேச்சு) 00:28, 10 செப்டம்பர் 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:உளிதவரு_கண்டந்தை&oldid=2921835" இலிருந்து மீள்விக்கப்பட்டது