பூரன் சந்த் ஜோஷி
பூரன் சந்த் ஜோஷி | |
---|---|
1937இல் ஜோஷி | |
இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் | |
பதவியில் 1936–1947 | |
முன்னையவர் | கங்காதர் அதிகாரி |
பின்னவர் | பி. டி. ரணதிவே |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அல்மோரா, ஐக்கிய ஆக்ரா மற்றும் அயோத்தி மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது உத்தராகண்டம், இந்தியா) | 14 ஏப்ரல் 1907
இறப்பு | 9 நவம்பர் 1980 தில்லி | (அகவை 73)
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி |
துணைவர் | கல்பனா தத்தா |
முன்னாள் கல்லூரி | அலகாபாத் பல்கலைக்கழகம் |
வேலை | விடுதலை இயக்க வீரர், தலைவர் |
பூரன் சந்த் ஜோஷி (Puran Chand Joshi) (14 ஏப்ரல் 1907-9 நவம்பர் 1980) இந்தியாவின் பொதுவுடைமை இயக்கத்தின் ஆரம்பகால தலைவர்களில் ஒருவர். 1935 முதல் 1947 வரை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தார்.
ஆரம்ப ஆண்டுகள்
[தொகு]ஜோஷி 1907 ஏப்ரல் 14 அன்று,[1] உத்தராகண்டம் மாநிலத்தில் அல்மோராவில் உள்ள குமாவோனி இந்து பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தை ஹரிநந்தன் ஜோஷி ஒரு ஆசிரியர். 1928-ல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் முதுகலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். முதுகலை முடித்தவுடன் கைது செய்யப்பட்டார். ஜவகர்லால் நேரு, யூசுப் மெகர் அலி மற்றும் பிறருடன் இணைந்து 1928-29 காலகட்டத்தில் இளைஞர் கழகங்களின் முன்னணி அமைப்பாளராக ஆனார். விரைவில், அக்டோபர் 1928 இல் மீரட்டில் உருவாக்கப்பட்ட “உத்திரப் பிரதேசத்தின் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி”யின் பொதுச் செயலாளராக ஆனார்.[2][3]1929 ஆம் ஆண்டு, தனது 22வது வயதில், மீரட் சதி வழக்கின் சந்தேக நபர்களில் ஒருவராக பிரித்தனிய அரசாங்கம் இவரைக் கைது செய்தது. சௌகத் உஸ்மானி, முசாபர் அகமது, எஸ். ஏ. டாங்கே மற்றும் ச. வி. கடே போன்ற தலைவர்களும் இவருடன் கைது செய்யப்பட்ட மற்ற ஆரம்பகால பொதுவுடைமைத் தலைவர்களில் அடங்குவர்.
ஜோஷிக்கு அந்தமான் தீவுகளில் ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. பின்னர், இவரது வயதைக் கருத்தில் கொண்டு, தணடனை மூன்றாண்டாகக் குறைக்கப்பட்டது. 1933இல் விடுவிக்கப்பட்ட ஜோஷி பல குழுக்களை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் கீழ் கொண்டு வருவதற்கு பணியாற்றினார். 1934இல் கட்சி பொதுவுடைமை அனைத்துலகத்தில் சேர்க்கப்பட்டது.
பொதுச் செயலாளராக
[தொகு]1935ஆம் ஆண்டின் இறுதியில் அப்போதைய இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் செயலாளராக இருந்த சோம்நாத் லஹிரி திடீரென கைது செய்யப்பட்ட பிறகு, ஜோஷி புதிய பொதுச் செயலாளரானார். இவர் 1935 முதல் 1947 வரை கட்சியின் முதல் பொதுச் செயலாளரானார். அந்த நேரத்தில் இடதுசாரி இயக்கம் சீராக வளர்ந்து வந்தது, பிரித்தானிய அரசாங்கம் 1934 முதல் 1938 வரை பொதுவுடைமை நடவடிக்கைகளை தடை செய்தது. பிப்ரவரி 1938 இல், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மும்பையில் அதன் முதல் சட்டபூர்வமான அமைப்பான தேசிய முன்னணி என்ற இதழைத் தொடங்கியபோது, ஜோஷி அதன் ஆசிரியராக ஆனார்.[2] இரண்டாம் உலகப் போரின் ஆரம்பகால எதிர் நிலைப்பாட்டின் காரணமாக 1939இல் கட்சிக்கு மீண்டும் தடை விதிக்கப்பட்டது. 1941இல், நாட்சி ஜெர்மனி சோவியத் ஒன்றியத்தைத் தாக்கியபோது, போரின் தன்மை பாசிசத்திற்கு எதிரான மக்கள் போருக்கு மாறிவிட்டது என்று கட்சி அறிவித்தது.
கட்சியின் முதல் மாநாடு, 1943
[தொகு]இந்த மாநாடு அரசியல் நிகழ்வைப் போலவே கலாச்சார நிகழ்வாகவும் இருந்தது. ஏராளமான கட்சி சாராதவர்கள் இந்த நடவடிக்கையில் கலந்து கொண்டு முடிவுகளுக்காக காத்திருந்தனர். ஜோஷியின் உரை ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு மிகுந்த கவனத்துடன் கேட்கப்பட்டது.
வெளியேற்றுதல் மற்றும் மறுவாழ்வு
[தொகு]இந்தியச் சுதந்திர்த்திற்குப் பிந்தைய காலத்தில், , கொல்கத்தாவில் நடந்த கட்சியின் இரண்டாவது மாநாட்டிற்குப் பிறகு ஆயுதங்களைத் தேர்ந்தெடுத்தது. ஆனாலும் ஜவகர்லால் நேரு தலைமையின் கீழ் இந்திய தேசிய காங்கிரசுடன் ஜோஷி ஒற்றுமையை வலியுறுத்தினார். 1948இல் நடந்த கட்சியின் கொல்கத்தா மாநாட்டில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ஜோஷி, பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, 1949 ஜனவரி 27 அன்று கட்சியிலிருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டு 1949 டிசம்பரில் வெளியேற்றப்பட்டார். 1951 ஜூன் 1 அன்று மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டாலும், படிப்படியாக ஓரங்கட்டப்பட்டார், இருப்பினும் இவரை கட்சியின் நியூ ஏஜ் என்ற இதழின் ஆசிரியராக ஆக்கியதன் மூலம் புனர்வாழ்வு பெற்றார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சி பிரிந்த பிறகு, இவர் அதிலேயே தொடர்ந்து இருந்தார். 1964இல் நடைபெற்ற 7வது மாநாட்டில் இவர் கட்சியின் கொள்கையை விளக்கிய போதிலும், ஒருபோதும் நேரடியாக தலைமைக்கு கொண்டு வரப்படவில்லை.
கடைசி நாட்கள்
[தொகு]தனது கடைசி நாட்களில், இந்தியப் பொதுவுடமை இயக்கம் குறித்த ஒரு காப்பகத்தை நிறுவுவதற்காக ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
சொந்த வாழ்க்கை
[தொகு]1943 ஆம் ஆண்டில், சிட்டகொங் ஆயுதக் கொள்ளையில் பங்கேற்ற புரட்சியாளரான கல்பனா தத்தா என்பவரை மணந்தார். இவர்களுக்கு சந்த் மற்றும் சூரஜ் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Chandra, Bipan (22 December 2007). "P.C. Joshi : A Political Journey". Mainstream weekly. http://www.mainstreamweekly.net/article503.html.
- ↑ 2.0 2.1 Chandra, Bipan (22 December 2007). "P.C. Joshi : A Political Journey". Mainstream weekly. http://www.mainstreamweekly.net/article503.html.
- ↑ Chandra, Bipan (22 December 2007). "P.C. Joshi : A Political Journey". Mainstream weekly. http://www.mainstreamweekly.net/article503.html.
மேலும் வாசிக்க
[தொகு]- Chakravartty, Gargi (2007). P.C. Joshi: A Biography, New Delhi: National Book Trust, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-237-5052-1.