உள்ளடக்கத்துக்குச் செல்

நெகிழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிளாஸ்டிக் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நெகிழிப் பொருட்களால் ஆன பல பயன்பாட்டுப் பொருட்கள்

நெகிழி அல்லது பிளாஸ்டிக் (Plastic) என்பது ஒரு பொருள் ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுகி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும். "வார்க்கத் தக்க ஒரு பொருள்" என்னும் பொருள் தரும் "பிளாஸ்டிகோஸ்" என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து பிளாஸ்டிக் என்ற சொல் உருவானது. நெகிழி என்னும் பொருளானது பிசைவு கொள்ளும் பொருள் ஆகும். அழுத்தம் தந்தால் வளைந்து கொடுக்காமலும் உடைந்தும் போகாமல் பிசைவு கொள்ளும் பொருட்கள் நெகிழிப் பொருள்கள் எனப்படும். களிமண் ஒரு வகையான நெகிழிப் பொருள். பீங்கான், கண்ணாடி போன்ற பொருட்கள் முறுகலான பொருட்கள் அவை வளைந்து கொடுக்காமல் உடைந்துவிடும். இரும்பு (எஃகு), வெள்ளி தங்கம் போன்ற மாழைகளை (உலோகங்களை) அறை வெப்பநிலையில் வளைத்தால், அவை மீண்டும் தன் நிலையை எய்தும். இத்தகு மீட்சித் திறன் (மீண்மை) கடந்த நிலையில் பல பொருட்கள் பிசைவு (அல்லது நெகிழ்வு) நிலையை அடைகின்றன. தங்கம், வெள்ளி போன்ற மாழைகளை விசை தந்து இழுத்தால், அவை முதலில் மீண்மைப் பண்புகளைக் காட்டும், பின்னர் இன்னும் அதிக விசையுடன் இழுத்தால் மீண்மை நிலையைக் கடந்து நெகிழ்வு நிலை அடையும். இதனை இளக்கம் (yield) என்பர். ஆனால் நெகிழிப் பொருள் அல்லது பிளாஸ்டிக்கு என்பது பெரும்பாலும் செயற்கையாக வேதியியல் முறையில் பல்கிப் பெருகக்கூடிய ஒரு மூலக்கூறு (சேர்மம்) வடிவை பல்லுருத் தொடராக செய்வித்து ஆக்கப்பட்ட பொருள் ஆகும்.

வரலாறு

[தொகு]

நெகிழி முதன் முதலில் 1862 -ல் லண்டனைச் சேர்ந்த அலெக்சாண்டர் பார்க்ஸ் என்பவரால் செல்லுலோஸ் என்ற பொருளில் இருந்து தயாரிக்கப்பட்டு லண்டன் கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதற்கு அவர் "பார்க்ஸ்டைன்" என்ற பெயரிட்டார். முற்காலத்தில் விலங்குகளின் நகங்கள், குளம்புகள், ஆமை ஓடுகள் கொண்டு "செராடின்" என்ற நெகிழியும், சில வண்டு, பூச்சிகளில் இருந்து "ஷெல்லாக்" வார்னிஷும் செய்யப்பட்டன. பில்லியார்ட்ஸ் பந்துகள் செய்ய தந்தங்களுக்காக யானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க 1869 -ல் ஜான் ஹயாத் என்பவர் செல்லுலோஸ் என்ற மாற்றுப் பொருள் ஒன்றை உருவாக்கினார். பிறகு மரப்பட்டை, நைட்ரிக் அமிலம், கற்பூரம், பசை ஆகியவை கொண்டு செல்லுலாய்டு என்ற நெகிழி உருவானது. 1907-ல் லியோ பேக்லாண்டு என்பவர் மின் சுவிச்சுகள் செய்ய செயற்கை வேதிப் பொருள்கள் கொண்டு பேக்லைட் என்ற பொருளை உருவாக்கினார். முதல் உலகப் போரில், 'டுபாண்ட் அமெரிக்க நிறுவணம்'வெடி பொருள் நெகிழித் தொழிற்சாலையைத் தொடங்கி மேலும் வளர்ந்து பல நெகிழிப் பொருள்களை உருவாக்கியது. 1913-ல் கட்டுவதற்கான நெகிழி உருவானது. 1933-ல் பாசெட் மற்றும் கிப்ரான் ஆகியோர் உருவாக்கிய பாலிதீன் அதாவது பாலி எத்திலீன், இரண்டாம் உலகப் போரில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி இன்று வரை மிக அதிகமாகப் பயன்படுத்தும் பொருளாகவும் பல சிக்கல்களை உருவாக்கும் பொருளாகவும் இருந்து வருகிறது.

பயன்பாடு

[தொகு]

காலை பல்துலக்கும் துலப்பானிலிருந்து இரவில் படுக்கும் பாய் வரை நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெரும்பாலான பொருள்கள் எல்லாமே நெகிழிப் பொருள்கள் தான். நெகிழிப் பயன்பாட்டில் நாடுகள் பட்டியலில் அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களில் இடம்பெற்றுள்ளன. இரப்பர், கண்ணாடி, இரும்பு, அலுமினியம், மரம் போன்றவற்றால் செய்யப்பட்ட பொருட்களுக்கு மாற்றாக இன்று நெகிழிப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் பல்லாயிரம் டன் கணக்கில் பாலித்தீன் தயாரிக்கப்படுகிறது.

மாற்றுப் பொருள்களைப் பயன்படுத்துதல்

[தொகு]
  • ஒருமுறை பயன்படுத்தியபின் தூக்கி எறியப்படும் பொருள்களைத் தயாரிப்பது தீமையே தருகிறது என்பது சுற்றுச் சூழல் வல்லுநர்களின் கருத்தாகும். எனவே இலை, சணல், காகிதப் பை, கண்ணாடி அடைப்பான், துணிப்பை போன்றவைகளை நெகிழிப் பொருள்களுக்கு மாற்றாகப் பயன்படுத்தலாம்.
  • தவிர்க்க முடியாத நேரத்தில் 40 மைக்ரான் தடிமனுக்கு மேற்பட்ட தடித்த பிளாஸ்டிக் பைகளையாவது பயன் படுத்தலாம். இவை மறுசுழற்சி செய்யப்படக் கூடியவை எனவே இவை 'சூழல் நண்பன்' என விளம்பரப்படுத்தப் படுகின்றன. இதனால் புதிய எடுப்புப் பைகள் மீண்டும் புழக்கத்திற்கு வராமல் தடுக்கலாம்.
  • தேநீர்க் கடைகளில் குவளைகள், பாக்குமட்டைகளால் செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்தலாம்.
  • கேரளாவில் மட்கக் கூடிய காகிதப் பைகளில் பால் அடைத்து விற்கப்படுகிறது.
  • நெகிழிப்பொருட்களைக் கண்ட இடங்களில் கொட்டாமல் தவிர்த்து, சேகரித்து, மறுபயன்பாடு செய்யலாம். எக்காரணம் கொண்டும் எரிக்கக்கூடாது.
  • நெகிழிக்குப் பதிலியாக தூய மணலுடன் மக்னீசியம் வேதிவினை புரிந்து உருவாகும் சிலிக்கான் சேர்மத்தைப் பயன்படுத்தலாம். இவை ரப்பர் போல் நீளும். மீளும். இளகும். எளிதில் தீப்பற்றாது. நெகிழியின் எல்லா நற்பண்புகளும் பெற்றது. தீய விளைவு இல்லாதது. ஆனால் இவை வ்ணிக ரீதியில் இலாபமில்லாததால் இவை அதிகம் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

பாலித்தீன்

[தொகு]

பாலித்தீன் என்ற செயற்கை நெகிழி கீழ்க்கண்ட வகையில் உருவாகிறது.

பாலித்தீன் பயன்பாடு

[தொகு]

பாலித்தீன் ஆயிரக்கணக்கான கார்பன் அணுக்களுடன் உருகிய நிலையில் இருப்பதால் பலவகைப் பொருள்களைச் செய்யலாம். அழுத்திச் சுருட்டித் தாள்களையும், உருக்கி வ்ளைத்து புட்டிகள் ஆகியவைகளை செய்யாலாம். சமன் பாட்டில் ஹைடரஜனுக்குப் பதிலாக குளோரின் அல்லது ஆக்ஸிஜன் அல்லது நைட்ரஜன் பயன்படுத்தியும் பல்வேறு வகைகள் உருவாக்கலாம். குறைந்த அடர்த்தியப் பாலித்தீன்கள், அதிகமாக நெகிழக்கூடிய வகையில் இருப்பதால் சில வேதி மாற்றங்கள் செய்து சிப்பக் கட்டு, லாமினேசன், பைகள் ஆகியவை செய்ய பயன்படுகிறது. சற்று இறுக்கமான நிலையிலுள்ள அதிக அடர்த்தியப் பாலித்தீன்களைக் கொண்டு உருளை, கொள்கலன், குப்பி, வாளி, நாற்காலி என்று பல பொருள்கள் செய்ய முடியும். பாலிபுரோபலின் என்ற நெகிழிதான் கைப்பெட்டிகள் போன்றவை செய்யப் பயன்படுகிறது. இவ்வகை நெகிழிகள் செய்ய பல்வேறு வேதிப் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன. வண்ணம், மணம் பளபளப்புக்காகவும் சில வேதிப் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன.

நெகிழி வகை

[தொகு]

வெப்பத்தால் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப நெகிழிகளில் இரு பிரிவுகள் உண்டு.

  1. இளகும் வகை
  2. இறுகும் வகை

இளகும் வகை

[தொகு]

வெப்பத்தால் இளகி, குளிர்வித்தால் இறுகி பின் இளகி-இறுகி என எத்துனை முறையும் இவ்வாறு மாற்றி மாற்றி செய்யமுடியக்கூடிய நெகிழி இளகும் வகை நெகிழி ஆகும். இவை மறு சுழற்சி செய்யக் கூடியவை. கோ பாலிமர் வினார், நைலான், பாலி புரோப்பிலின், பாலிவினைல் குளோரைடு (PVC), பாலி அசிட்டேட் நெகிழி, வினைல்,அக்ரிலிக் நெகிழி,செல்லுலோஸ் அசிட்டேன், செல்லுலாயிட், ஈதைல் செல்லுலோஸ் ஆகியவை இளகும் வகை நெகிழிகள் ஆகும்.

கோ பாலிமர் வினார்

[தொகு]

வெவ்வேறு வகை மூலக்கூறுகள், பாலிமரைசேஷன் மூலம் கிடைக்கும் நெகிழிப் பொருள் கோ பாலிமர் வினார் ஆகும்.

நைலான்

[தொகு]

வெவ்வேறு மூலக்கூறுகளைச் சுருக்குதல்(Condensation) மூலம் கிடைக்கும் நெகிழிப் பொருள் நைலான் ஆகும்.

பாலி புரோப்பிலின்

[தொகு]

இவை கொதி நீரில் உருமாற்றம் அடையாததால் பால் புட்டிகள், ஆரோக்கியப் பொருள்கள்,குப்பிகள் ஆகியவை செய்யவும், இலேசாகவும் பலமிக்கதாகவும் உள்ளதால் நீர்பாய்ச்சும் குழாய்கள்,கயிறுகள் ஆகியவை செய்யவும் பயன்படுகின்றன.

பாலிவினைல் குளோரைடு (PVC)

[தொகு]

இவை மணமற்ற நிறமற்ற இளகும் நெகிழியாகும். மின்கம்பிகளில் இன்சுலேட்டர்கள், நீரேற்றும் குழாய்கள் ஆகியவை செய்யப் பயன்படுகிறது.

பாலிவினைல் அசிட்டேட் நெகிழி

[தொகு]

வண்ணப் பூச்சுகள் ஒட்டும் பசைகள் ஆகியவை பெருமளவில் தயாரிக்கப் பயன்படுகிறது.

வினைல்

[தொகு]

டெரிலின் இழை போலவே இதில் இழைகள் தயாரிக்கலாம். இவ்விழைகள் சுருங்காது. தூசி படியாது. அழுக்கை எளிதில் நீக்கலாம். வண்ணமேற்றலாம். இவற்றிலிருந்து ஆடைகள் தயாரிக்கிறார்கள்.

அக்ரிலிக் நெகிழி

[தொகு]

இது நிறமற்றது. ஒளிபுகக் கூடியது. கண்ணாடிக்கு மாற்றுப் பொருளாகவும், இயந்திரம், கட்டிடப் பொருள்கள் செய்யவும் பல்வேறு சாதனங்களிலும் பயன்படுகிறது.இதனை நாம் மீன் தொட்டி செய்ய பயன் படுத்தலாம்

செல்லுலோஸ் அசிட்டேன்

[தொகு]

இந்நெகிழியுடன் வண்ணம் சேர்த்து பெருமளவில் மோட்டார் தொழிலில் தேவையான பல பொருள்களைச் செய்கின்றனர்.

செல்லுலாயிட்

[தொகு]

இதுவே முதன் முதலில் உருவாக்கப்பட்ட நெகிழியாகும். இது எளிதில் தீப்பற்றக் கூடியது. விளையாட்டுப் பொருள்கள், தகடுகள் செய்யவும் பயன்படுகிறது.

ஈதைல் செல்லுலோஸ்

[தொகு]

பொருள்கள் மீது மேல் பூச்சு (Coating)அமைக்கவும், புகைப்படத் தகடுகள் செய்யவும், ஈதைல் செல்லுலோஸ் பயன்படுகிறது.

இறுகும் நெகிழி

[தொகு]

இளக்கிப் பின் மீண்டும் இறுகிய பின், மீண்டும் வெப்பப்படுத்தி இளக்க முடியாத, மீளாத நெகிழி இறுகும் நெகிழி ஆகும். இது எளிதில் நொறுங்கக் கூடியது. இது இளகும் வகையை விட தரம் குறைந்தவையாகக் கருதப் படுகின்றன.

ஆல்கைடு ரெசின்

[தொகு]

ஆல்கைடு ரெசின் என்ற நெகிழிப் பொருள் வெப்பம், ஈரத்தால் பாதிக்கப்படாதது. உறுதியானது. கடினமானது. வளையக் கூடியது. மின்சாரம் கடத்தாது. ஒளி புகும். எளிதில் நிறம் ஏற்கும் எனவே விமானம், மொட்டார் பாகங்கள், தகடு, குழாய்கள், தண்டுகள், இன்சுலேட்டர்கள் போன்றவை செய்யப் பயன்படுகிறது.

மெலமின் ரெசின்

[தொகு]

இது எளிதில் தேயாது மின்சாதன பாகங்கள் (குறிப்பாக மின்விசிறி) செய்யப் பயன்படுகிறது.

பீனாலிக் ரெசின்

[தொகு]

பீனாலிக் ரெசின்கள் என்னும் பேக்லைட்டு, மலிவு விலை மின்சுவிச்சுகள், பலகைகள், தொலைபேசிகல் செய்யப் பயன்படுகின்றது.

பிற நெகிழிகள்

[தொகு]

இளகும் இறுகும் வகைகளுக்கு இடையில் இருக்கும் பாலியெஸ்டர் நூலிழை செயற்கை நெகிழியே ஆகும். பாலியெஸ்டர்,டெரிலின், டெக்ரான் ஆகிய மக்கள் விரும்பி அணியும் இழைத் துணிகள் ஆகியவையும் செயற்கை நெகிழிப் பொருள்களே ஆகும்.

நெகிழிப் பொருள்கள் தயாரிப்பு முறை

[தொகு]

நெகிழிப் பொருள் தயாரிக்க வேதிப் பொருள்களுடன் மரத்தூள் அல்லது மைக்கா போன்ற நிரப்பிகள், நிறப் பொருள்கள், கற்பூரம் போன்று நெகிழச் செய்வன போன்றவற்றைத் தகுந்த கணித முறையில் கலந்து, அச்சில் இட்டு வார்த்தோ அல்லது நுண்துளைகள் வழியே செலுத்தியோ அல்லது திருகிப் பிழிந்து முறுக்கு போல வார்த்தோ அல்லது தகடுகளாக இழுத்தோ இயந்திரங்கள் மூலமாக பொருள்களை உருவாக்குகின்றனர். செய்யும் பொருள்களில் நெகிழி வேதிவினை தொடர்ந்து நிகழ்ந்து வெடிப்புகளோ, நொறுங்குதலோ ஏற்படாமல் இருக்க சிவப்பு சிலிகேட், காரீயம் போன்ற வேதிப் பொருள்களைச் சேர்க்கிறார்கள்.

பயன்கள்

[தொகு]
  1. நெகிழிப் பொருள்களின் விலை மிகவும் மலிவாக இருத்தல்
  2. அனைவரையும் கவரும் பல வகை நிறங்கள்
  3. உடையாமல் இருத்தல்
  4. எடையின்றி இலேசாக இருத்தல்
  5. காற்று, நீர், ஈரம், சாதாரண வேதிப் பொருள்கள் இவற்றால் பாதிக்கப் படாமல் இருத்தல்
  1. மின்கசிவு ஏற்படாமல் பயன்படுத்தமுடிதல்

இத்தகைய காரணங்களால் நெகிழிப் பொருள்கள் நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாகவே உள்ளன. கடன் அட்டைகள் (Credit card), அலங்காரப் பூக்கள், செடிகள், பெவிகால், முகச்சாயம், கைப்பை, குழாய், பசை, காண்டாக்ட் லென்சு, செயற்கைப் பல், தரைப் பூச்சு, சமையலறைக் கருவிகள், பொம்மைகள், படுக்கை விரிப்புகள், துணி, நாப்கின்கள், மெத்தை, தலையணை, காலணி, கயிறு, பேனா..... ஆகியவை நெகிழியால் செய்யப்படுகின்றன. இளகும் பிளாஸ்டிக் பொருளுடன் தகுந்த அளவு கண்னாடி இழைகள் கலந்து இருக்கும் நெகிழித் தகடு, [எஃகு] போன்று வலுவுள்ளதால், பந்தயக் கார்கள், படகுகள் செய்யப் பயன்படுகின்றன. துணி காகிதம் போன்றவற்றை நெகிழிக் கரைசலில் அடுக்கி, அழுத்தி, ஒட்டிக் கிடைக்கும் தகடுகளை மேசை, நாற்காலி, சுவர் ஆகியவற்றின் மீது ஒட்டுகின்றனர்.

நெகிழியின் தீமைகள்

[தொகு]

  • இயற்கை வளங்களைக் கொண்டு உருவாகும் நெகிழிப் பொருள்கள் அதிகம் தீங்கு தரும் வேதிப் பொருள்கள் சேர்க்கப்படுவதால் பல்வேறு தீமைகளுக்குக் காரணமாகின்றன.
  • நெகிழிப் பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகளில் மறு சுழற்சி செய்யும் போதும், உருகும்போதும் வெளியேறும் வாயுக்கள் நச்சுத் தன்மை உடையதால் ஊழியர்கள், அருகில் வசிக்கும் மக்கள் ஆகியோர் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
  • குறிப்பாக நெகிழிப் (பாலித்தீன்) பைகளால் சுற்றுச் சூழல் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது.
  • கால்வாய்களிலும் அடைத்துக் கொள்வதால் நீர் வழிகள் அடைபட்டு மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு போன்ற அபாயங்கள் ஏற்படுகின்றன. மனிதர் உண்டுவிட்டு கீழே போடும் நெகிழிப் பொட்டலங்களைத் தின்னும் விலங்குகளின் உணவுக் குழாய்கள் பாதிக்கப்பட்டு அவைகள் இறக்க நேரிடுகின்றன.
  • தோல்நோய் முதல் புற்று நோய் வரை பல நோய்களுக்குக் காரணமாகின்றது. சிலருக்கு தொட்டால் கூட ஒவ்வாமை என்ற நோய் ஏற்படுகிறது.
  • மூச்சுக் குழாய் பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, நரம்புத்தளர்ச்சி, ரத்த, சிறுநீரகச் செயல் குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைவு போன்றவை ஏற்படக் கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன.
  • நெகிழி உறைகள்சுற்றப்பட்டு வரும் உணவுப் பொருட்களான சாக்லேட்டு, பால்கோவா போன்றவற்றில் நெகிழி வேதிப் பொருளான பென்சீன் வினைல் குளோரைடு கலந்து விடுகிறது. இதனால் புற்று நோய் ஏற்படக் காரணமாகிறது. குட்லைஃப் இதழ், சிங்கப்பூர். வெளியிட்ட ஆய்வு முடிவுகள்.* எளிதில் மட்காத, சிதையாத நெகிழிப் பொருட்களால் கழிவுக் குழாய்கள், சக்கடைகள் ஆகியவைகளில் அடைப்பு ஏற்பட்டு, தேங்கி துர்நாற்றம், கொசுவளர்ப்பு, நோய்கள் ஆகியவை ஏற்படக் காரணமாகின்றன.

மட்காத நெகிழிப் பொருள்கள் வேளாண் நிலங்களில் தங்கி அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகிறது. பயிர் வளர்ச்சியையும் பாதிக்கிறது.

  • கடற்கரை ஓரம், கடலில் எரியும் நெகிழிப் பொருள்கள் கடல்வாழ் உயிரினங்களுக்கும், வனப்பகுதியில் எறியப்படுபவை வனவாழ் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவித்து அழித்துவிடக் கூடியவை.
  • ரெசின் துண்டுகள் மீன் முட்டைகள் போல் இருப்பதாலும் பாலித்தீன் பைகள் ஜெல்லி மீன்கள் போல இருப்பதாலும் அவற்றை இரையாக நினைத்து, கடல் பறவைகள், சீல்கள், கடல் சிங்கம், கடல் ஆட்டர், டால்பின், கடல் பன்றி, ஆமிகள் போன்றவை அவற்றை விழுங்கி, குடல்களில், மூச்சுக் குழாய்களில் சிக்கி இறந்து விடுகின்றன.
  • நெகிழிப் பொருட்களை எரிப்பதால் டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளிவருகிறது.
  • மனித மற்றும் விலங்குகளின் உடல்களில் பிளாஸ்டிக் துகள்கள் சேர்ந்து, உணவுச்சங்கிலியுடன் கலந்து வருவது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது[1].

அகற்றும் முறை

[தொகு]

நெகிழிப் பொருட்களில் 10% பொருள்களே 'மீண்டும் பயன்படுத்த' பயன்படுகின்றன. 90% பொருட்கள் எரிக்கப்பட்டுவிடுகின்றன. மருத்துவமனைகளில் சேரும் நோய் பரப்பும் கழிவுப் பொருளான பஞ்சு போன்றவற்றை எரிக்கப்பயன்படும் 'இன்சினரேசன்' என்ற சாம்பலாக்கும் கருவி இப்போது நெகிழிக் குப்பைகளை எரிக்கப் பயன்படுகிறது. அவையும் டையாக்சின் என்ற நச்சுப் புகையைத்தான் கூடுதல் தீமையாகத் தருகின்றன. மறுசுழற்சி, கழிவு மேலாண்மை போன்றவை பயனற்றவையாகவே கருதப்படுகின்றன.

படத்தொகுப்பு

[தொகு]

உசாத்துணை

[தொகு]

டி.பாலகுமார் 'எழுதிய பிளாஸ்டிக் யுகம் நல்லதா? கெட்டதா? என்ற கட்டுரை',அறிவியல் ஒளி, பிப்ரவரி 2008 இதழ்

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "மனிதர்களின் உடம்பில் வளரும் பிளாஸ்டிக் – அதிர்ச்சியளிக்கும் ஆய்வு முடிவுகள்".[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெகிழி&oldid=3763465" இலிருந்து மீள்விக்கப்பட்டது