உள்ளடக்கத்துக்குச் செல்

வாளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒரு வாளியின் வடிவமைப்பு

வாளி (bucket), (pail) [1] என்பது ஒரு வீட்டு உபகரணமாகும். இது கிணற்றில் இருந்து தண்ணீர் அள்ளுவதற்கு பயன்படும் ஒரு சாதனமாகும். அதனைத் தவிர வேறு பலவேறு வீட்டுத்தேவைகளுக்கும் இந்த வாளி பயன்படுகிறது. அநேகமாக வீட்டுக்குள் தண்ணீர் குழாய் இல்லாத வீடுகளில் இதன் பயன்பாடு முக்கியமானதாகும். இலங்கை வாழ் தமிழர் மத்தியில் இந்த "வாளி" எனும் சொல்லின் பயன்பாடும் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும்.

உருவ அமைப்பு

[தொகு]

இதன் உருவ அமைப்பு உருளைவடிவானதாக இருக்கும். அதேவேளை இந்த உருளை வடிவமைப்பின் மேல் புறம் அகன்றும், கீழ் அடிப்பகுதி ஒடுங்கியும் காணப்படும். அத்துடன் உருளைவடிவான அடிப்பகுதியில் இந்த வாளியை கீழே வைப்பதற்கு ஏதுவாக ஒரு வளையமும் பொருத்தப்பட்டிருக்கும்.

வரலாறு

[தொகு]

மக்கள் வாளி பயன்படுத்தத் தொடங்கியக் காலங்களில் ஆரம்பத்தில் வெண்கலத்திலேயே இருந்ததாக அறியப்படுகிறது. அதன்பின்னர் இரும்பு வாளிகள் அறிமுகமாகியன. இவை கடும் கணமானதாகவும் அதேவேளை நீண்ட காலம் பயன்படுத்தக் கூடியதாகவும் இருந்தன. தற்போது இந்த இரும்பு வாளிகளை காண்பது அரிதாக வருகிறது. அதன் பின்னரான காலங்களில் கனமற்ற அதேவேளை இலகுவான வாளிகள் அறிமுகமாகின. அவற்றை பேச்சு வழக்கில் "தகர வாளி" என அழைப்பர். இத்தகர வாளிகள் இரும்பு வாளிகளுடன் ஒப்பிடும் போது அதிகம் காலம் உழைக்கக்கூடியதாக இல்லை.

நெகிழி வாளி

[தொகு]

தற்காலத்திலும் இந்த தகரவாளிகளின் பயன்பாடு ஒரு சில நாடுகளில் காணப்பட்டாலும். நெகிழிகளில் வடிவமைக்கப்பட்ட வாளிகள் பெருகியுள்ளன. இருப்பினும் இந்த தற்கால நெகிழியில் அமைக்கப்பட்ட வாளிகளை, இலங்கை மக்கள் "வாளி" என்று பெரும்பாலும் அழைப்பதில்லை. அவற்றை "பிளாஸ்டிக் வாளி" அல்லது ஆங்கில பெயர்க்கொண்டு "பக்கெட்" என்றே அழைக்கின்றனர். அதேவேளை இந்த தற்கால நெகிழி வாளிகள் கிணற்றில் இருந்து தண்ணீர் அள்ளுவது போன்ற பயன்பாடுகளுக்கு ஏற்றதாக இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணத்தில் வாளி

[தொகு]

யாழ்ப்பாண மக்களின் வாழ்வியலோடு ஒன்றிவிட்ட ஒன்று துலா கிணறும் ஆகும். இந்த துலா கிணறுகளில் இருந்து நீரை அள்ளுவதற்கும், குளிப்பதற்கும் இந்த வாளியின் பயன்பாடு பிரதானமானதாகும்.

சிங்களவர் வாளியும் தமிழ் இனவழிப்பும்

[தொகு]

இலங்கையில் சிங்களவர் "வாளி" என்பதை "பால்திய" (Baldhiya) என்றே அழைப்பர். தமிழர் "வாளி" என்றே அழைப்பர். அதுவும் சிங்களம் பேசத் தெறிந்த தமிழர்களுக்கும் உச்சரிப்பில் "வாளி" அல்லது "வாளிய" என்றே ஒலிப்புக்கு வரும். (விதிவிலக்காக ஒரு சிலர் இருந்திருக்கலாம்) இதனை அறிந்து வைத்திருந்த சிங்களவர்கள், 1977 மற்றும் 1983 ஆம் ஆண்டுகளில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இனக்கலவரங்களின் போது, தமிழர் என சந்தேகிக்கும் நபர்களை, சிங்களத்தில் Baldhiya என்று கூறும்படி கேட்பதும், தமிழர்களால் இந்த ஒலிப்புக்கு அமைவாக அச்சொல் வராததாலும் தமிழர்கள் எளிதாக இனங்காணப்பட்டுவிடுவர். இவ்வாறானவர்களை சிங்களக் காடையர்கள் அடித்தும் வெட்டியும் வாகனங்களில் உள்ளே வைத்து கதவை மூடிவிட்டு மண்ணெண்ணெய் இட்டு கொளுத்தியதுமான நிகழ்வுகள் ஏராளம் உள்ளன. இந்த "பால்திய" எனும் சொல்லை சொல்லச்சொல்லி கொல்லப்பட்டவர்கள் நூற்றுக்கணக்கில் உள்ளனர். குறிப்பாக கொழும்பு மற்றும் அதனை அண்டியப் பகுதிகளில். இந்த நிகழ்வுகளும் இந்த "வாளி" எனும் சொல்லும் இலங்கை தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகும். இவ்வாறான நிகழ்வுகள் இலங்கையில் தமிழ் இளைஞர்கள் ஆயிதவழி போராட்டங்களில் ஈடுப்படத் தூண்டியதற்கான காரணங்களில் ஒன்றும் ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாளி&oldid=3833401" இலிருந்து மீள்விக்கப்பட்டது