ந. வீரமணி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ந. வீரமணி ஐயர் | |
---|---|
பிறப்பு | இணுவில், யாழ்ப்பாணம் | அக்டோபர் 15, 1931
இறப்பு | அக்டோபர் 8, 2003 | (அகவை 71)
கல்வி | ஆசிரியர் மானிப்பாய் இந்துக் கல்லூரி இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயம் |
பணி | அரசுப்பணி |
வாழ்க்கைத் துணை | ருக்மணி அம்மையார் |
ந. வீரமணி ஐயர் (15 அக்டோபர் 1931 – 8 அக்டோபர் 2003), ஈழத்துக் கவிஞரும் கருநாடக இசைக் கலைஞரும் ஆவார். பாபநாசம் சிவன் அவர்களின் மாணவர். புகழ்பெற்ற 'கற்பகவல்லி நின் பொற்பதம்' என்ற பாடலை இயற்றியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த ம. த. நடராஜ ஐயர், சுந்தராம்பாள் தம்பதியினருக்கு 1931 அக்டோபர் 15 இல் இரண்டாவது புதல்வனாகப் பிறந்த வீரமணிஐயர், தனது சிறுவயதுக் கல்வியை இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்திலும், (தற்போதைய இணுவில் இந்துக் கல்லூரி) உயர் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் கற்றார். அங்கு படிக்கும்போது சிறந்த மாணவனுக்கான விருதைப் பெற்றவர்.
கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு மேல் படிப்புக்காக இந்தியா சென்ற இடத்தில், இசை, நடனம், நாடகம் என்பனவற்றால் கவரப்பட்டு, திருமதி ருக்மணிதேவி அருண்டேல் (பரதநாட்டியம்), எம். டி. ராமநாதன் (இசை), பாபநாசம் சிவன் (சாகித்ய குரு) ஆகியோரிடம் பயின்றார்.
பாடல்கள் இயற்றல்
[தொகு]தாய்நாடு திரும்பி, தான் படித்த மானிப்பாய் இந்துக் கல்லூரியிலேயே ஆசிரியராகப் பணி புரிந்தார். சில ஆண்டுகளின் பின்னர், கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் விரிவுரையாளராக இணைந்து 33 ஆண்டுகள் பணியாற்றி, ஏராளமான இசை,நாட்டிய ஆசிரியர்களை உருவாக்கினார். ஏராளமான சாகித்யங்களையும், நாட்டிய நாடகங்களையும், ஆலயங்கள்மீதான பாடல்களையும் இயற்றினார்.
`கற்பகவல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்...' என்று ஆரம்பிக்கும் ஆனந்த பைரவி இராகத்தைப் பல்லவியில் கொண்டமைந்து நான்கு இராகங்கள் முத்திரை அமைக்கப் பெற்ற இவரது இராகமாலிகை கீர்த்தனை தென்னிந்தியப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் அவர்களால் பாடப்பெற்று உலகப் பிரசித்தி பெற்றதாகும்.
இயற்றிய உருப்படிகள்
[தொகு]72 மேளகர்த்தா இராகங்களிற்கும், 175 தாளங்களிற்கும் இன்னும் இதற்கு மேலாகவும் உருப்படிகளை ஆக்கியுள்ளார். பல இராகங்களின் பெயர்களை முத்திரையமைத்துப் பாடியுள்ளமை இவருடைய ஆக்கங்களின் சிறப்பம்சமாகும்.
கீதம், கீர்த்தனை, பதம், பல்லவி, வெண்பா முதலிய சகல வகை பாடற் துறைகளிலும் கவிபாடும் ஆற்றல் கைவரப் பெற்ற வீரமணிஐயர் அவர்கள் பல கோவில்களுக்கு ஊஞ்சற்பாக்களும் இயற்றியுள்ளார். சமற்கிருதத்திலும் இவர் பாடல்கள் எழுதியுள்ளார்.
இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோயில், இணுவில் கந்தசுவாமி கோயில், இணுவில் சிவகாமி அம்மன்,மீது பாடிய பாடல்களின் (கீர்த்தனைகள்) தொகுப்புக்கள் மலேசியா வாசுதேவன், நித்யஸ்ரீ மகாதேவன், மகாநதி ஷோபனா ஆகியோரால் பாடப்பெற்று ஒலிப்பேழைகள், இறுவெட்டுக்களில் வெளிவந்துள்ளன.
இறுதி நாட்கள்
[தொகு]கர்நாடக இசை, நடனம் ஆகிய இரண்டிலும் டிப்ளோமா (Diploma in Dance & Music) தகைமைகளைக் கொண்டிருந்த வீரமணிஐயர் அவர்கள் தனது அரச பணியின் நிறைவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் வருகை விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
1996 ஆம் ஆண்டு அவரது மனைவியார் ருக்மணி அம்மையார் காலமானார். என். வீரமணி ஐயர் 2003ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ந்திகதி யாழ்ப்பாணத்தில் காலமானார்.
யாழ்ப்பாணத்தில் கொழும்புஸ்டூடியோ உரிமையாளர் திரு.அ. குகதாசன் அவர்களின் உதவியோடு இவர் பல புத்தங்களை வெளியிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் அந் நாட்களில் கலைத்துறைக்கும், அவற்றைப் புத்தகமாக அச்சிட உதவும் புளொகுகளை அமைத்து வந்த கொழும்பு ஸ்ரூடியோ, இவருக்குப் பேருதவிகள் புரிந்துள்ளது. அத்தோடு இவர் திரு அ.குகதாசன் அவர்களின் நெருங்கிய நண்பரும் ஆவார்.
விருதுகளும் பட்டங்களும்
[தொகு]- கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் இவருக்கு நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வு ஒன்றில் சாகித்ய சாகரம்' என்ற சிறப்புப் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
- 1982 ஆம் ஆண்டு வட இலங்கை சங்கீத சபை பொன்விழாவில் கவிமாமணி என்ற சிறப்பு பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
- இயல் இசையில் இவருக்கு இருந்த மேன்மையால் இயலிசை வாரிதி, மஹா வித்துவான் என்ற சிறப்பு விருதுகள் வழங்கப்படன.
- 1999 அக்டோபர் 6 இல் யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கௌரவ முதுமாணி (எம்.ஏ.) பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
இயற்றிய பாடல்கள்
[தொகு]- நல்லூர் முருகன் பாடல்கள்
- இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் பாடல்கள்
- இணுவில் சிவகாமி அம்மன் கீர்த்தனைகள் - பாடியவர்: மகாநதி ஷோபனா
- மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் மீதான பாடல்கள்
- கோண்டாவில் சிவகாமியம்மன் பாடல்கள் - பாடியவர்: சீர்காழி சிவசிதம்பரம்
- காரைநகர் திக்கரை முருகன் பாடல்கள்
- சுட்டிபுரம் கண்ணகை அம்மன் பாடல்கள் - பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றிய சாகித்யங்கள்
[தொகு]- கற்பகவல்லி நின் பொற்பதங்கள் (ராகமாலிகை)- பாடியவர்: டி. எம். செளந்தரராஜன்
- சின்ன வயதினிலே (சாகித்யம்) - பாடியவர்: சுதா ரகுநாதன்
- சரஸ்வதி வீணை (ராகமாலிகை) - பாடியவர்: நித்யஸ்ரீ மகாதேவன்
- தசாவதாரம் ( ராகமாலிகை)
- என் முகம் பாராயோ சண்முகனே (விருத்தம்)- பாடியவர்: மகாராஜபுரம் சந்தானம்
- ஏனடா முருகா
- என்னடி பேச்சு சகியே
- கஜமுகா
- குஞ்சரன் சோதரா
- குழல் ஊதி விளையாடி
- மட்டுநகர்
- நவரச நாயகி
- சாரங்கன் மருகனே
- வண்ண வண்ண
- கற்பக விநாயகனே
- தாமரை இதழிலே நாதம் கேட்குதடி
- நயினையம்பதி
வெளி இணைப்புகள்
[தொகு]- கிடுகுவேலி - பிரம்மஸ்ரீ ந. வீரமணி ஐயர்
- கதகளி - வீரமணி ஐயரின் கட்டுரை
- 20/21ம் நூற்றாண்டின் 100 தமிழர்கள் - யாழ்ப்பாணம் என்.வீரமணி ஐயர்
- கற்பகவல்லியும் கவிமாமணி வீரமணி ஐயரும் - மலைநாடான் பதிவு
- கொஞ்சு தமிழில் மிஞ்சி விளையாடிய சந்தக் கவிஞர் கவிமாமணி பிரம்மஸ்ரீ ம.த.ந. வீரமணிஐயர் பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம்
- கல்வித் தெய்வம் இவள் தானடி தோழி, பக்திப்பாடல்