நெரலூர்

ஆள்கூறுகள்: 12°48′00″N 77°42′43″E / 12.8000900°N 77.711820°E / 12.8000900; 77.711820
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெரலூர்
புறநகர்
நெரலூர் is located in கருநாடகம்
நெரலூர்
நெரலூர்
கருநாடகத்தில் அமைவிடம்
நெரலூர் is located in இந்தியா
நெரலூர்
நெரலூர்
நெரலூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 12°48′00″N 77°42′43″E / 12.8000900°N 77.711820°E / 12.8000900; 77.711820
நாடு India
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூரு நகர மாவட்டம்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்562107
அருகில் உள்ள மாநகரம்பெங்களூர்
மக்களவை தொகுதிபெங்களூர் நகரம்
மாநிலச் சட்டப் பேரவை தொகுதிஆனேகல்

நெரலூர் (Neralur) என்பது இந்தியாவின், கருநாடக மாநிலத்தின், பெங்களூர் நகர மாவட்டத்தின், ஆனேகல் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது பெங்களூரில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டின் ஒசூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. நெரலூரின் ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் அத்திப்பள்ளி மற்றும் சந்தைபுரம் ஆகிய நகரங்கள் உள்ளன. இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் ஒன்றான எலக்ட்ரானிக் சிட்டி இந்த சிற்றூரில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. நெரலூருடன் அதன் எல்லைக்களைப் பகிர்ந்து கொள்ளும் சிற்றூர்களாக - குட்டஹட்டி, பலகாரனள்ளி, லட்சுமிசாகரா, பழைய சாந்தபுரம், திருமகொண்டனள்ளி, பந்தபுரம், யடவனள்ளி, பெந்தகனள்ளி ஆகியவை உள்ளன. கன்னடம் கிராமத்தில் அதிகம் பேசப்படும் மொழி. புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் வருகையாலும், தனியார் நகரியங்கள் கட்டுக்கடங்காமல் பெருகி வருவதாலும், நாடு முழுவதிலுமிருந்து குடியேறிய மக்கள் பல்வேறு விகிதாச்சாரத்தில் காணப்படுகின்றனர். இந்த காரணத்தினால் மொழிவாரி மக்கள்தொகை பன்முகமகாகி உள்ளது. இதன் மூலம் பல பண்பாடு மற்றும் பல இனங்களைக் கொண்ட மக்கள் வாழும் பகுதியாக நெரலூர் மாறிவருகிறது.

வரலாறு[தொகு]

நெரலூர் என்ற பெயர், அதன் பழைய பெயரான சாயாபுரி என்பதிலிருந்து தோன்றியிருக்கலாம் (இது இப்போது அதிகம் பயன்பாட்டில் இல்லை). சாயாபுரி ( சமசுகிருதத்தில் ) என்ற பெயர் நிழல் நிரம்பிய கிராமத்தைக் குறிக்கிறது ( சாயா = நிழல் மற்றும் புரி = கிராமம்) இது கன்னடத்தில் மொழிபெயர்க்கப்படும் போது நெரலூர் ( சாயா = நெரு மற்றும் புரி = ஊர் ) ஆகும். இந்த இடம் நிழலைத் தரும் பெரிய மரங்கள் நிரம்பியிருப்பதே அந்தப் பெயரே உணர்த்துகிறது. கிராமத்தில் இருந்த ஒரு பெரிய "கருப்பு நாவல் " மரத்தின் (கன்னடத்தில் நெரலே ஹன்னு ) பெயரில் இருந்து இந்த ஊரின் பெயர் தோன்றி இருக்கலாம் என்ற யூகம் உள்ளது.

போக்குவரத்து[தொகு]

பெங்களூரில் இருந்து நெரலூருக்கு பல பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பெங்களூர் மாநகர போக்குவரதுக் கழகமும், தனியார் பேருந்துகளும், அத்திப்பள்ளி, ஒசூர் மற்றும் பிற அருகிலுள்ள இடங்களுக்குச் செல்லும் வழியில், தேசிய நெடுஞ்சாலை 44 ( ஒசூர் சாலை ) சந்திப்புக்கு அருகிலுள்ள கிராமத்தில் நிறுத்தப்படுகின்றன.

நெரலூரிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் ஹீலாலிகே தொடருந்து நிலையம் உள்ளது.

தேவனள்ளியில் உள்ள கெம்பே கௌடா பன்னாட்டு வானூர்தி நிலையம் நெரலூரிலிருந்து 63 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கிராம ஊராட்சி[தொகு]

நெரலூர் சிற்றூரானது நெரலூர் ஊராட்சியின் [1] கீழ் வருகிறது, இது பெங்களூர் நகர மாவட்டம், ஆனேகல் வட்டத்தின் கீழ் வருகிறது. நெரலூர் கிராமத்தில் ஊராட்சி அலுவலகம் உள்ளது. நெரலூர் ஊராட்சியானது கர்நாடகத்தில் உள்ள மிகப்பெரிய ஊராட்சிகளில் ஒன்றாகும். இதில் மொத்தம் 64 தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் (2021 ஆம் ஆண்டு நிலவரப்படி) சமூகத்தின் பல்வேறு அடுக்குகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். நெரலூர் கிராமம் மட்டும் ஊராட்சிக்கு 14 உறுப்பினர்களை வழங்குகிறது. நெரலூர் ஊராட்சி குடையின் கீழ் நெரலூர், திருமகொண்டனள்ளி, பாலகாரனள்ளி, ஈச்சங்கூர், வத்தரபாளையம், யடவனள்ளி, ஆதிகொண்டனள்ளி, குட்டட்டி, பெந்தகனள்ளி ஆகிய ஒன்பது சிற்றூர்களை உள்ளடக்கியது. இது முழு கர்நாடகத்தில் உள்ள மிகப்பெரிய கிராம ஊராட்சி ஆகும். தற்போதைய கிராம ஊராட்சி உறுப்பினர்களை அறிய பின்வரும் இணைப்பை சொடுக்கவும் https://panchatantra.kar.nic.in/panchamitra/getGPData.aspx?selOption=2

பொருளாதாரம்[தொகு]

அண்மைக் காலங்களில் இந்த சிற்றூரைச் சுற்றி பல தொழில்கள் உருவாகியுள்ளன. இதன் விளைவாக புலம்பெயர் தொழிலாளர்கள் கிராமத்தில் குடியேறியுள்ளனர். அத்திபள்ளி தொழிற்பேட்டை பகுதி இந்த கிராம நிலப்பரப்பின் ஒரு பகுதியை உள்ளடக்கியுள்ளது. அண்மைக்காலமாக கிராமத்தின் அருகாமையில் ஏராளமான குடியிருப்பு நகரியங்கள் வந்துள்ளன. இந்த கிராமத்தில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்ளது (நெரலுர் ஹாலு உத்பாதகரா சககார சங்கம்), இது 1976 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன்பின்னர் பெரும்பாலான கிராமவாசிகளின் வாழ்க்கையில் பல வழிகளில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. நகரியங்கள் மற்றும் தொழிற்சாலைகள் கிராம நிலப்பரப்பை மூழ்கடித்த போதிலும், வேளாண்மை இன்னும் கிராமத்தில் ஒரு செழிப்பான பணியாக உள்ளது.

கல்வி[தொகு]

அரசு மேல்நிலைப் பள்ளி, நெரலூர்

நெரலூரில் கன்னடம் மற்றும் ஆங்கில வழியில் கற்பிக்கும் பல்வேறு கல்வி நிறுவனங்கள் உள்ளன. தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களால் வழங்கப்படும் உலகத்தரம் வாய்ந்த கல்வியை இந்த கல்வி நிறுவனங்கள் நிறைவு செய்துள்ளன. நெரலூரானது பெங்களூர் மற்றும் ஒசூருக்கு அருகாமையில் இருப்பதால், உலகத் தரம் வாய்ந்த பொறியியல், மருத்துவம், சட்டம், மேலாண்மை துறைகளைச் சார்ந்த கல்லூரிகள் அனைத்தும் நெரலூரிலிருந்து எளிதில் அணுகக்கூடிய சுற்றளவில் உள்ளன.

தரமான கல்வியை வழங்கும் கீழ்க்கண்ட பள்ளிகளைக் குறிப்பிட வேண்டும் ::

  • அரசு மேல்நிலைப் பள்ளி - இந்த பள்ளி 1949 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது, மேலும் இது கர்நாடக அரசின் கல்வித் துறையால் நிர்வகிக்கப்படுகிறது. பள்ளி வளாகத்தில் மதிய உணவு வழங்கப்படுகிறது. உயர்ந்த, பசுமையான மரங்களுக்கு இடையில் அமைதியான சுற்றுப்புறத்திற்கு இடையில் பள்ளி அமைந்துள்ளது.
  • சுவாமி விவேகானந்தா வித்யா நிகேதனா - இந்த பள்ளி 1985 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது எஸ்விவிஎன் அறக்கட்டளையால் நிர்வகிக்கப்படுகிறது. இது ஒரு தனியார் கல்வி நிறுவனமாகும். இந்த பள்ளி முன் மழலையர் பாலர் பள்ளி முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கல்வி வழங்குகிறது. எஸ்விவிஎன் பள்ளி வளாகத்தில் முன் பல்கலைக்கழகம் மற்றும் பட்டப்படிப்பு கல்லூரியையும் நடத்துகிறது. கல்வியகத்தின் வளாகத்தில் ஒரு பெரிய திறந்தவெளி விளையாட்டரங்கம் மற்றும் உள்விளையாட்டு அரங்கம் போன்றவை உள்ளன.

நெரலூரில் உள்ள கோயில்கள்[தொகு]

நெரலூர் அதன் பழமையான, பிரமிக்கவைக்கும், சக்தி வாய்ந்த கோயில்களுக்கு புகழ் பெற்றது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள சில கோயில்கள் குறைந்தது 100 ஆண்டுகளுக்கு முந்தையவை. இந்தக் கோயில்கள் அனைத்திலும் வழக்கமான சமய, ஆன்மிகச் செயல்பாடுகள் உற்சாகமான ஆர்வத்துடனும் நடக்கிறது.

நெரலூர் சிவன் கோயிலில் தேர்த் திருவிழா, 2023

கிராமத்தில் பல கோயில்கள் உள்ளன, அவை அண்மையில் புதுப்பிக்கப்பட்டன. அவற்றில் முதன்மையானது சிவன், ஆஞ்சநேயர், ரேணுகா எல்லம்மா தேவி, அக்கு முனீசுவரர், பசவேஸ்வரருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில்கள் ஆகும். ஆண்டுதோறும் மார்ச்/ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் தேர்த்திருவிழாவல் பல அடுக்காக அமைக்கபட்ட மரத் தேர் கிராமத்தின் பாதைகள் வழியாக பக்தர்களால் இழுக்கப்படுகிறது. தேர் ஊர்வலம் சிவன் (காசி விசுவநாதர்) கோவிலில் தொடங்கி, கிராமத்தின் மையத்தில் உள்ள எல்லம்மா தேவி கோவிலுக்குச் செல்லும். இந்த நிகழ்வு சமய ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடப்படுகிறது. ஒரு வாரத்துக்கும் மேலாக நடைபெறும் உற்சவத்தின் சிறப்பம்சமாக தேர்த் திருவிழா உள்ளது.

காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சிவலிங்கம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. மேலும் ஒரு வைராக்கியமுள்ள அர்ச்சகரால் வெறுங்காலுடன், நெரலூரில் இருந்து காசி / வாரணசி வரை நடந்து சென்று கொண்டு வரப்பட்டது. சிவராத்திரி நாளின்போது ஏராளமான மக்கள் இந்த கோயிலுக்கு வருகின்றனர். இந்த ஊரில் நடக்கும் திருவிழாவின்போது வண்ணமயமான கடைகளில், சுவையான இனிப்புகள், காரங்கள், அத்துடன் பொம்மைகள், மலிவு விலையில் வீட்டுக்குத் தேவைப்படும் பொருட்கள் விற்கபடுகின்றன.

பார்க்சுவ சுசில் தாம், என்னும் ஒரு அற்புதமான சைனக் கோயில், தேசிய நெடுஞ்சாலை 44 (முன்பு என்.எச் 7) ஐ ஒட்டி நெரலூரின் புறநகர்ப் பகுதியில் உள்ளது. இரமண மகரிசிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு ஆசிரமம், ஒரு பரோபகாரரும் இரமண மகரிசியின் பக்தருமான ஒருவரால் கட்டப்பட்டது. இது நெரலூருக்கு அருகில் உள்ள திருமகொண்டனள்ளியில் அமைந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி, இந்த பழமையான கோயில்களில் பெரும்பாலானவை புதுப்பிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கோயில்கள் நீண்டகாலமாக குடும்ப சந்ததியினரால் நிர்வகிக்கப்படுகின்றன. சில கோவில்கள் கர்நாடக அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படுகின்றது.

Shiva Temple - Neraluru
சிவன் கோயில் - நெரலூர்
அக்கு முனீசுவர சுவாமி, நெரலூர்

நெரலூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பசவேசுவரர் கோயிலும், நெரலூரின் புறநகரில் உள்ள அக்கு முனீசுவரர் கோயிலும் புதுப்பிக்கப்பட்ட கோயில்களின் பட்டியலில் இணைந்துள்ளன.

புதிதாகப் புதுப்பிக்கப்பட்ட அக்கு முனீசுவரர் கோயில், பரந்து விரிந்த, செழிப்பான, கம்பீரமான மாமரத்தின் பின்னணியில் நிற்கிறது. இது நெரலூர், பெந்தகனஹள்ளி, அலிபொம்மசந்திரா, குட்டஹட்டி மற்றும் லட்சுமிசாகர் கிராமங்களின் எல்லையில் அமைந்துள்ளது. முனீசுவரர் கிராமத்தின் காவல் தெய்வமாக கருதப்படுகிறார். மேலும் முனீசுவரனின் இந்த உறைவிடம் ஐந்து கிராமங்களின் எல்லையில் அமைந்திருப்பதால், முக்கிய பண்டிகை நாட்களில் இந்த கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகிறார்கள். அருகிலுள்ள கோயில் வளாகத்தில் ஒரு ஆசிரமமும் உள்ளது, இது துறவிகள் மற்றும் சாதுக்களின் ஓய்வு இடமாக செயல்படுகிறது.

பழைய மற்றும் புதிய கோயில்களின் விரிவான பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் விரிவானது என்றாலும், நெரலூருவில் உள்ள அனைத்து கோவிலின் பெயர்களையும் உள்ளடக்கியதாக இது இல்லை.

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Neraluru Grama Panchayat".
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெரலூர்&oldid=3749705" இலிருந்து மீள்விக்கப்பட்டது