நிலாவில் தரையிறக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1969 ஆம் ஆண்டு சூலை 21 ஆம் தேதி UTC 2:56க்கு நீல் ஆம்சுட்ரோங் முதன் முதலாக நிலவில் கால் வைத்ததைக் காட்டும் படம். உலகம் முழுவதிலும் ஏறத்தாழ 500 மில்லியன் பேர் இந்த நிகழ்வின் ஒளிபரப்பைப் பார்த்ததாக மதிப்பிடுகின்றனர். அக்காலத்தில் ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்புக்கான மிகப் பெரிய பார்வையாளர் எண்ணிக்கை இதுவாகும்.[1][2]

நிலாவில் தரையிறக்கம் (Moon landing) என்பது விண்கலம் ஒன்று நிலாவின் மேற்பரப்பைச் சென்றடைவதாகும். இது, ஆட்களுடன் செல்லும் பயணங்களையும், ஆளில்லாப் பயணங்களையும் குறிக்கும். 1959 செப்டெம்பர் 13 ஆம் தேதி நிலவை அடைந்த சோவியத் ஒன்றியத்தின் லூனா 2 விண்கலமே முதலில் நிலவைச் சென்றடைந்த மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள் ஆகும். ஐக்கிய அமெரிக்காவின் அப்பல்லோ 11 பயணமே மனிதர் இயக்கிச் சென்று நிலவில் இறங்கிய முதல் பயணம் ஆகும். இது 1969 சூலை 21 ஆம் நாள் நிகழ்ந்தது. 1969 க்கும் 1972 க்கும் இடையில் அமெரிக்காவின் ஆறு ஆட்கள் இயக்கிய கலங்களும், பல ஆளில்லாக் கலங்களும் நிலவில் இறங்கின.

ஆளில்லாத் தரையிறக்கங்கள்[தொகு]

பல நாடுகள் ஆளில்லா விண்கலங்களை நிலவுக்கு அனுப்பியுள்ளன. 1959 ஆம் ஆண்டில் சோவியத் ஒன்றியம் அனுப்பிய ஆளில்லாக் கலமான லூனா 2 மிகுந்த வேகத்துடன் சென்று நிலவின் மேற்பரப்பில் மோதியது. இதே விதமாக 1962 ஆம் ஆண்டில் அமெரிக்கர்களும் ரேஞ்சர் 4 என்னும் கலத்தை நிலவுக்கு அனுப்பினர். அண்மைக் காலங்களில் வேறு பல நாடுகளும் தமது விண்கலங்களை நிலவுத் தரையில் மோதுமாறு அனுப்பினர். இவ்வாறான கலங்கள் பல சுமார் மணிக்கு 5,000 மைல்கள் (மணிக்கு 8,000 கிலோமீட்டர்) வேகத்தில் சென்று திட்டமிட்ட இடத்தைத் துல்லியமாக அடைந்தன. இவை பெரும்பாலும் நிலாவைச் சுற்ற அனுப்பப்பட்டுத் தமது பயன்பாட்டின் இறுதிக் கட்டத்தில் தமது சுற்றுப்பாதையைப் பேணிக்கொள்ள முடியாமல் போனவை ஆகும். நிலாவைச் சுற்றிக் கொண்டிருந்த சப்பானின் ஐட்டென் என்னும் கலம், 1993 ஏப்ரல் 10 ஆம் நாள் நிலவின் தரையில் மோதியது. ஐரோப்பிய விண்வெளி முகமை சந்திரனைச் சுற்றிக்கொண்டிருந்த தமது சிமார்ட்-1 என்னும் கலத்தை அதன் இறுதிக் காலத்தில் கட்டுப்பாடான முறையில் நிலவுத் தரையில் மோத வைத்தனர். இது 2008 ஆம் ஆண்டு செப்டெம்பர் 3 ஆம் தேதி இடம்பெற்றது. 2008 ஆம் ஆண்டு நவம்பர் 14 அன்று, இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஒரு கலத்தைக் கட்டுப்பாடான முறையில் நிலவில் மோத வைத்தது. இந்தக் கலம் நிலாவைச் சுற்றிக்கொண்டிருந்த சந்திராயன்-1 விண்கலத்திலிருந்து ஏவப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது. அத்துடன் இது நிலவை நோக்கி இறங்கும்போது தொலையுணர்தல் சோதனைகளையும் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்க விடயம். 2009 ஆம் ஆண்டு மார்ச் முதலாம் தேதி சீனா அனுப்பி நிலவைச் சுற்றிய சாங்கே 1ஐயும் கட்டுப்பாடான முறையில் நிலவில் மோத வைத்தனர்.

இதுவரை 18 விண்கலங்கள் மட்டுமே ஏவுகணைகளின் உதவியுடன் நிலாவின் தரையில் பாதுகாப்பாக இறங்கியுள்ளன. இவற்றுள் 6 ஆட்கள் இயக்கியது மிகுதி 12 ஆளில்லாக் கலங்கள். இவை அனைத்துமே 1966 ஆம் ஆண்டுக்கும் 1976 ஆம் ஆண்டுக்கும் இடையில் ஐக்கிய அமெரிக்கா அல்லது சோவியத் ஒன்றியத்தினால் அனுப்பப்பட்டவை. சோவியத் ஒன்றியமே முதன் முதலாக விண்கலமொன்றை மெதுவாக நிலவில் தரையிறங்க வைத்ததுடன், அதன் லூனா 9, லூனா 13 ஆகியவற்றில் பொருத்தப்பட்டு இருந்த ஒளிப்படக் கருவிகள் மூலம் நிலாவின் தரையில் இருந்து முதல் ஒளிப்படங்களையும் எடுத்தது. இதைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்கா சர்வேயர் என்று பெயரிடப்பட்ட திட்டத்தினூடாக 5 ஆளில்லாக் கலங்களையும், அப்பல்லோ திட்டத்தினூடாக ஆட்கள் இயக்கிய ஆறு கலங்களையும் மெதுவாகத் தரை இறக்கியது. அமெரிக்கா நிலாவில் ஆட்களைத் தரை இறக்கிய பின்னர், சோவியத் ஒன்றியம் தனது லூனா 16, லூனா 20, லூனா 24 ஆகிய திட்டங்கள் மூலம் ஆளில்லாக் கலங்களை நிலவில் இறக்கி மண் மாதிரிகளை எடுத்து வரச் செய்தது.

20-21 ஆம் நூற்றாண்டில் ஆளில்லா தரையிறங்கள்[தொகு]

ஹிட்டன் (சப்பான்)[தொகு]

10 ஏப்ரல் 1993 அன்று 18:03:25.7 (ஒ.அ.நே) (11 ஏப்ரல் 03:03:25.7 சப்பான் நேரம்) மணியளவில் ஹிட்டன் என்னும் சப்பான் விண்கலம் நிலவில் இறங்கியது.[3]

SMART-1 (ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்)[தொகு]

3 செப்டம்பர் 2006 அன்று 5:42 (ஒ.அ.நே) மணியளவில்[4] SMART-1 என்னும் ஐரோப்பிய விண்வெளி நிறுவன விண்கலம் நிலவில் இறங்கியது.

சந்திரயான்-1 (இந்தியா)[தொகு]

சந்திரயான்-1 என்பது அக்டோபர் 2008இல் நிகழ்ந்த இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஆளில்லாத நிலவுப் பயணம் ஆகும். இதன் மூலம் நிலவின் பரப்பில் அதிக அளவிலான நீர் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. சந்திரயான்-2 என்பது உருசியா மற்றும் இ. வி. ஆ. மை ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் 2016இல் நடக்க உள்ள ஆளில்லாத நிலவுப் பயணம் ஆகும்.

சேன்ஞ் 1 (சீனா)[தொகு]

1 மார்ச் 2009, 2044 கிரீன்விச் இடைநிலை நேரம், 16-மாத கால முயற்சியில் சீனாவால் செலுத்தப்பட்ட நிலவு விண்களம் ஆகும்.[5]

ஆட்களோடு தரையிறக்கங்கள்[தொகு]

20 ஜூலை 1969இல் (ஒ.அ.நே) நீல் ஆம்ஸ்ட்றோங் மற்றும் எட்வின் ஆல்ட்ரின் அப்பல்லோ 11இல் துவங்கி 14 டிசம்பர் 1972இல் (ஒ.அ.நே) ஜீன் கேர்னேன் மற்றும் ஜேக் ஸ்மிட் அப்பல்லோ 17இல் முடிவடைந்த 41 மாத கால இடைவெளியில் நடை பெற்ற தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்தின் ஆறு பயனங்களில், பயனத்துக்கு இருவர் வீதம் மொதம் பன்னிரெண்டு பேர் நிலவில் தரையிறங்கியுள்ளனர்.

நிலவில் முதலில் கால்பதித்தவர் நீல் ஆம்ஸ்ட்றோங். இறுதியாக கால்பதித்தவர் கேர்னேன் ஆவார்,

அனைத்து அப்பல்லோ நிலவு பயணங்களின் குழுவிலும் கட்டளை தொகுப்பானில் (Command Module) மூன்றாவதாக ஒரு குழு உறுப்பினர் இருந்தார். கடைசி மூன்று பயணங்களிலும் நிலவில் பயணம் செய்வதை அதிகரிகக ஒரு திரிசாரணன் (Lunar Roving Vehicle) பயன்படுத்தப்பட்டது.

கட்டுக்கதை குற்றச்சாட்டுகள்[தொகு]

விண்ணோடி எட்வின் ஆல்ட்ரின், முதல் நிலாவில் தரையிறக்கத்தின் போது ஐக்கிய அமெரிக்காவின் தேசியக்கொடியின் அருகில்

சிலர் அப்பல்லோ வின்களத்தில் மனிதன் நிலவில் தரையிறங்கியது வேண்டுமென்றே புனையப்பட்ட ஒரு கட்டுக்கதை என்று வலியுறுத்துகின்றனர். ஆனாலும் புலனறிவால் அறியக்கூடிய சான்றுகள் பல இதற்கு உள்ளன. தகுந்த சீரொளி மற்றும் தொலைநோக்கியுடன் அப்பல்லோ 11ஆல் நிலவில் இடப்பட்ட பிரதிபலிப்பானில் சீரொளியினை பிரதிபளிக்க முடியும்.[6]

மேலும் ஆகஸ்ட் 2009இல் நாசாவின் லூனார் ரெகனைசன்ஸ் ஆர்பிட்டர் (Lunar Reconnaissance Orbiter) அப்பல்லோவின் இறங்கு தளத்தின் உயர் தீர்மான புகைப்படங்களை புவிக்கு அனுப்பியது. இந்த புகைப்படங்கள் சந்திர தரையிறக்கங்க விண்கலங்களின் சுவடுகளையும், விண்ணோடிகள் வின்னில் விட்டுவந்த பாதச்சுவடுகளையும் காட்டுகின்றன.[7]

குறிப்புகள்[தொகு]

  1. "Manned Space Chronology: Apollo_11". spaceline.org. பார்க்கப்பட்ட நாள் 6 February 2008.
  2. "Apollo Anniversary: Moon Landing "Inspired World"". nationalgeographic.com. பார்க்கப்பட்ட நாள் 6 February 2008.
  3. Hiten, NSSDC, NASA. Accessed:18 அக்டோபர் 2010.
  4. SMART 1, NSSDC, NASA. Accessed: 18 அக்டோபர் 2010.
  5. "Chinese probe crashes into moon", BBC News, 1 மார்ச் 2009. Retrieved 18 அக்டோபர் 2010.
  6. "Apollo 11 Experiment Still Going Strong after 35 Years", JPL பரணிடப்பட்டது 2012-03-16 at the வந்தவழி இயந்திரம் 20 ஜூலை 2004.
  7. "LRO Sees Apollo Landing Sites". தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம். 17 ஜூலை 2009. பார்க்கப்பட்ட நாள் 2 ஜூலை 2011. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலாவில்_தரையிறக்கம்&oldid=3588820" இலிருந்து மீள்விக்கப்பட்டது