சந்திரயான்-1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சந்திரயான்-1
இயக்குபவர்இந்திய விண்வெளி ஆய்வு மையம்
திட்ட வகைசெயற்கைக்கோள்
செயற்கைக்கோள்சந்திரன்
ஏவப்பட்ட நாள்அக்டோபர் 22, 2008 - ஸ்ரீஹரிக்கோட்டா,  இந்தியா
ஏவுகலம்துருவ செயற்கைக்கோள் ஏவுவாகனம் பி.எஸ்.எல்.வி-சி11
திட்டக் காலம்2 ஆண்டுகள்
தே.வி.அ.த.மை எண்CHANDRYN1
இணைய தளம்Chandrayaan-1
நிறை523 கிகி (1,153 இறா)
திறன்சூரிய (750 W)
சுற்றுப்பாதை உறுப்புகள்
சுற்றுப்பாதையின் வட்டவிலகல்அண்ணளவாக வட்டப்பாதையில்
சேய்மைநிலைஆரம்பத்தில் 1,000 கிமீ (621 மை)

சந்திரயான்-1 (Chandrayaan-1) என்பது இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் 2008, அக்டோபர் 22 இல் விண்வெளிக்குச் செலுத்தப்பட்ட ஆளில்லாத நிலவுப் பயணம் ஆகும்[1]. இதன் முக்கிய நோக்கம் நிலவுப்பரப்பில் பல்வேறு தாதுக்கள் மற்றும் வேதிமூலகங்களின் பரவலை ஆய்வு செய்வதும், முழு நிலவுப் பரப்பையும் அதிக துல்லியத்துடன் முப்பரிமாண வரைபடமாக்கலும் ஆகும். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் துருவ செயற்கைக்கோள் ஏவுவாகனமான பி.எஸ்.எல்.வி. சந்திராயன் I கலத்தை 240 கி.மீ x 24000 கி.மீ புவிச் சுற்றுப்பாதையில் செலுத்தும். பின்னர் விண்கலமானது தன்னகத்துள்ள முன்னுந்து அமைப்பின் துணைகொண்டு நிலவைச்சுற்றிய 100 கி.மீ துருவச் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படும். சந்திராயன் I விண்கலமானது சுற்றிவரக்கூடிய அமைப்பையும் நிலவில் இறங்கக்கூடிய அமைப்பையும் ஒருங்கே கொண்டிருக்கும்.

இப்பணித்திட்டத்தின் தலைவராக மயில்சாமி அண்ணாதுரை இருந்து வருகிறார். இத்திட்டத்திற்கு இந்திய ரூபாயில் 3.8 பில்லியன் (சுமார் 83 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஆய்வுக் கருவிகள் போக பன்னாட்டு விண்வெளி நிறுவனங்களான நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் பல்கேரியாவின் ஆய்வுக் கருவிகளும் இத்திட்டத்தில் அடங்கும்.

திட்ட இலக்குகள்[தொகு]

சந்திரயான்-1
 • தொலையுணர்வுக் கருவிகளைப் பயன்படுத்தி நிலவின் முழுப்பரப்பிலும் விரவியுள்ள பல்வேறு தாதுக்கள் மற்றும் கதிரியக்க அணுக்கருத் தனிமங்கள் உள்ளிட்ட வேதிமூலகங்களின் பரவலையும், இட விவரங்களையும் முப்பரிமாணத்தில் அதிக துல்லியத்துடன் வரைபடமாக்கல். இதன் மூலம் கிடைக்கும் புதிய தகவல்கள் சூரியக் குடும்பத்தின், குறிப்பாக நிலவின், தோற்றம் மற்றும் பரிணாமம் குறித்த புரியாத பல புதிர்களுக்கு விடையளிப்பனவாக இருக்கும்.
 • அறிவியல் ஆய்வுக் கருவிகள், நிலவுக் கலம், ஏவுவாகனம், டி.எஸ்.என் நிலையம் உள்ளிட்ட தரைக் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் கட்டுப்பாடு, ஒருங்கிணைத்தல் மற்றும் சோதித்தல்,ஏவுதல் மற்றும் ~100கி.மீ நிலவுச் சுற்றுப்பாதையை எய்துதல், சுற்றுப்பாதை ஆய்வுகள், தொலைத்தகவல் பரிமாற்றம், தெரிந்தெடுக்கப்பட்ட விஞ்ஞானிகளின் உடனடிப் பயன்பாட்டிற்கான தகவல் சேகரிப்பு மற்றும் தொகுப்பு ஆகியவற்றில் நிர்ணயித்த இலக்குகளை எட்டுதல்.

குறிப்பான ஆய்வுத் துறைகள்[தொகு]

 • நிரந்தரமான மறைவுப் பகுதிகளான வட மற்றும் தென் துருவப் பகுதிகளை அதிக துல்லியத்துடன் கூடிய கனிமவியல் மற்றும் வேதியியல் படமாக்கல்.
 • நிலவில், குறிப்பாக துருவப் பகுதிகளில் மேற்பரப்பில் அல்லது மேற்பரப்புக்கு அடியில் நீர் அல்லது உறைபனி உண்டா எனத் தேடுதல்.
 • நிலவின் உயர் நிலப் பாறைகளின் இறுதிஉறுப்பு தாதுப்பொருட்களை அடையாளம் காணுதல்.
 • நிலவுப் பெருங்குழியின் மத்திய மேட்டுப் பகுதியினைத் தொலையுணர்வுக்கு உட்படுத்துவதன் மூலம் நிலவின் புற ஓட்டினை வேதி நில அடுக்கு வரைவு செய்தல்.
 • செயற்கைக்கோள் பாதை நெடுக, நிலவின் மேற்பரப்பில் காணப்படும் உயர வேறுபாடுகளை வரைபடமாக்கல்.
 • நிலவின் தோற்றம் மற்றும் பரிணாமம் குறித்த புரிதலில் புத்தொளி பெற வேண்டி, 10 கிலோ எலெக்ட்ரான் வோல்ட்டுக்கும் அதிகமான எக்ஸ்-கதிர் நிறமாலையை உற்றறிதல் மற்றும் 5 மீ துல்லியத்துடன் நிலவுப் பரப்பின் பெரும்பகுதியை உருவமொத்த வகையில் பதிவாக்கல்.

ஆய்வுக் கருவிகள்[தொகு]

இத்திட்டத்தின் மூலம் இந்தியாவின் கருவிகள் ஆறும், ஆறு அந்நியக் கருவிகளுமாக 55 கிகி மொத்த நிறையுடைய ஆய்வுக்கருவிகள் அனுப்பி வைக்கப்படும்.

 • நிலப்பரப்பு படவரைவு நிழற்படக் கருவி: 5 மீ துல்லியமும் அனைத்துநிறப் பட்டையில் 40 கி.மீ வீச்சும் கொண்ட நிலப்பரப்பு படவரைவு நிழற்படக் கருவி (The Terrain Mapping Camera (TMC)).
 • மீ நிறமாலை படிமமாக்கி: 400 - 900 நேனோமீட்டர் பட்டையில் 15 நேனோமீட்டர் நிறமாலைப் பிரித்துணர்வுடனும், 80 மீ இடப் பிரித்துணர்வுடனும் கனிமவியல் வரைபடமாக்கல் புரியும் மீ நிறமாலை படிமமாக்கி (Hyper Spectral Imager (HySI).
 • லேசர் நிலவு நில அளவீட்டுக் கருவி: மேற்பரப்பு இடவிவரங்களைத் தீர்மானிக்கும் லேசர் நிலவு நில அளவீட்டுக் கருவி (Lunar Laser Ranging Instrument (LLRI)).
 • எக்ஸ்-கதிர் ஒளிர்வு நிறமாலைமானி: (X-ray Fluoresence Spectrometer).இது பின்வரும் மூன்று உறுப்புகளைக் கொண்டிருக்கும்:
 • குறைந்த ஆற்றல் எக்ஸ்-கதிர் நிறமாலைமானி: 10 கி.மீ நிலப் பிரித்துணர்வுடன் 0.5 - 10 கி.எ.வோ அளவீடுகளுக்கான குறைந்த ஆற்றல் எக்ஸ்-கதிர் நிறமாலைமானி (Low Energy X-ray Spectrometer (LEX)).இது Si, Al, Mg, Ca, Fe மற்றும் Ti ஆகியவற்றின் பரவலை வரைவு செய்யும்.
 • உயர் ஆற்றல் எக்ஸ்-கதிர் / காம்மா கதிர் நிறமாலைமானி: 20 கி.மீ நிலப் பிரித்துணர்வுடன் 10 - 200 கி.எ.வோ அளவீடுகளுக்கான உயர் ஆற்றல் எக்ஸ்-கதிர் / காம்மா கதிர் நிறமாலைமானி (High Energy X-ray / Gamma ray Spectrometer (HEX)).இது U, Th, 210Pb, 222Rn உள்ளிட்ட கதிரியக்கத் தனிமங்களை அளவிடும்.
 • சூரிய எக்ஸ்-கதிர் கண்காணிப்புக் கருவி: 2 - 10 கி.எ.வோ அளவிலான சூரியப் பாயத்தைக் கண்டறியும் சூரிய எக்ஸ்-கதிர் கண்காணிப்புக் கருவி (Solar Flux Monitor (SXM)).இது சூரியப் பாயத்தைக் கண்காணித்து LEX மற்றும் HEX-இன் முடிவுகளை நெறிப்படுத்தும்.
 • நிலவு மோதல் சலாகை (Moon Impact Probe (MIP) ஒன்று.இது சந்திராயன் - I கலத்தால் எடுத்துச்செல்லப்படும் ஒரு செயற்கைக்கோள். கலமானது நிலவைச் சுற்றிய 100 கி.மீ சுற்றுப்பாதையை அடைந்ததும் இச்செயற்கைக்கோள் வெளித்தள்ளப்பட்டு நிலவின்மீது மோதவிடப்படும். MIP ஆனது அதிக துல்லியத்துடன்கூடிய நிறை நிறமாலைமானி, எஸ்-பட்டை உயர அளவி, கண்ணுரு படமாக்கக் கருவி ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.

நிலவில் நீர் கண்டுபிடிப்பு[தொகு]

(இடது) நிலவின் புவி-பாரா பக்கத்திலுள்ள இளங்கட்ட நிலவுப்பள்ளம் இப்படத்தில் காட்டப்பட்டுள்ளது; (அருகில்) அதே நிலவுப்பள்ளம் நாசா வின் எம் 3 யின் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது. Credits: ISRO/NASA/JPLCaltech/USGS/Brown Univ.

சந்திராயன்-1 இல் ஏற்றப்பட்டிருந்த (அமெரிக்க) நாட்டு வானியல்-விண்வெளியியல் நிறுவனம் நாசாவின் எம் 3 எனப்படும் நிலவுக் கனிமவியல் வரைவி (Moon Mineralogy Mapper), நிலவு மோதல் ஆய்வி யின் மோதலை ஆய்வு செய்தது; இந்த ஆய்வின் மூலம் நிலவின் பரப்பில் அதிக அளவிலான நீர் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.[2]

இது ஓர் சுவையான கண்டுபிடிப்பு, அவ்வளவே -- நருலிகர்[தொகு]

பதும விபூசன் விருதாளரும் நன்கறியப்பட்ட இந்திய அண்டவியலாளருமான சயந்து நருலிகர் கூறுகையில், நிலவில் நீர் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வு ஒரு முக்கிய திருப்புமுனை அல்ல என்றும் பொதுசன மனிதனும் இதில் ஆர்வத்துடன் இருப்பதால் இது ஓரு சுவையான கண்டுபிடிப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.[3]

திட்ட நிறைவு [தொகு]

சந்திரயான் இரண்டு ஆண்டுகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விண்ணில் செலுத்தப்பட்ட 312 நாட்களுக்கு பிறகு எதிர்பாராத விதமாக சந்திரயானின் தரைக்கட்டுப்பாடு நிலையத்துடனான இணைப்பு துண்டித்தது. மைக்ரோ ஒளிக்கற்றை மூலம் நாசா விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் சந்திரயான் செயலிழந்த நிலையில் நிலவுக்கு மேலே 200 கி.மீ தொலைவில் சுற்றிக்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. [4]

10 மாதங்களே செயல்பட்டாலும் சந்திரயான் தனது திட்ட நோக்கத்தில் 95 சதவீதத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததாக விஞ்ஞானிகள் அறிவித்தனர்.[5]

இவற்றையும் பார்க்கவும்‌[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 'சந்திராயன்-1'". 2008-10-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-10-22 அன்று பார்க்கப்பட்டது.
 2. டைம்சா விந்தியா
 3. டைம்சாவிந்தியா கோவா பதிப்பு
 4. https://www.jpl.nasa.gov/news/news.php?feature=6769
 5. http://news.bbc.co.uk/2/hi/south_asia/8230230.stm

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சந்திரயான்-1&oldid=3552868" இருந்து மீள்விக்கப்பட்டது