நாலூர் பலாசவனேசுவரர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு பலாசவனேஸ்வரர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:தஞ்சாவூர்
அமைவிடம்:நாலூர், கும்பகோணம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கும்பகோணம்
மக்களவைத் தொகுதி:மயிலாடுதுறை
கோயில் தகவல்
மூலவர்:பலாசவனேஸ்வரர்
சிறப்புத் திருவிழாக்கள்:சிவன்ராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

நாலூர் பலாசவனேசுவரர் கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் - குடவாசல் சாலை வழியில் திருச்சேறை என்ற பாடல் பெற்ற தலத்தை அடுத்து வரும் நாலூர் என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும்.[1] சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் ஒரு தேவார வைப்புத்தலமாகும்.[2] சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இக்கோயில் ஒரு தேவார வைப்புத்தலமாகும். இக்கோயிலுள்ள இறைவன் பலசவநாதர் / சுயம்பு நாதர் / ஞானபிரதர் / பிரம்ம முக்தீசுவரர் /அமிர்தகலச நாதர் என்ற பெயர்களால் அறியப்படுகிறார். தாயார் பெரிய நாயகி / பிருகன் நாயகி என்றும் அழைக்கப்படுகிறார். நாலூர் அமிர்த கலச நாதர் கோயில் என்ற பெயராலும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. கோச்செங்கட சோழனால் கட்டப்பட்ட மடக்கோயில்களில் இதுவும் ஒன்று என்றும் நம்பப்படுகிறது.

வரலாறு[தொகு]

நாலூர் பலாசவனேசுவரர் கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று கூறப்படுகிறது.[சான்று தேவை] திருக்கடவூர் மற்றும் திருக்கடவூர் மயானம் ஆகியவை நாகப்பட்டினம் மாவட்டத்தில் அடுத்தடுத்து அமைந்துள்ள இரண்டு தேவாரம் பாடல் பெற்ற தலங்கள் ஆகும். அதேபோல, தஞ்சாவூர் மாவட்டத்தில் நாலூர் மற்றும் நாலூர் மயானம் ஆகியவை அடுத்தடுத்து அமைந்துள்ளன.

அமைவிடம்[தொகு]

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் - குடவாசல் சாலை வழியில் திருச்சேறை என்ற பாடல் பெற்ற தலத்தை அடுத்து வருவது நாலூர் என்ற ஊர் ஆகும். கோயில் கும்பகோணம் வட்டம் கும்பகோணத்திலிருந்து 14 கிமீ தொலைவில் உள்ள திருச்சேறைக்குத் தென்கிழக்கில் 1 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.[3] நாலூர் தாண்டி குடவாசல் செல்லும் வழியில் உள்ள அத்திக்கடை பாலத்திற்கு முன்னால் இடதுபுறம் பிரியும் சாலையில் சிறிது தூரம் சென்றால் நாலூர் மயானம் என்ற இத்தலம் இருக்கிறது. இக்காலத்தில் இவ்விடம் திருமெய்ஞானம் என்றும் அழைக்கப்படுகிறது. குடவாசல் தலத்தில் இருந்து சுமார் 2.5 கி.மீ. தொலைவில் இத்தலம் இருக்கிறது.

கோயில் அமைப்பு[தொகு]

சோழர் காலத்து கட்டிடக் கலைப்பாணியில் அமைந்த இககோவில் கிழக்கு நோக்கி ஒரு முகப்பு வாயிலுடன் அமைந்துள்ளது. முகப்பு வாயிலுக்கு வெளியே நந்தி மண்டபமும், பலிபீடமும் உள்ளன. கோவிலுக்கு வெளியே ஞானதீர்த்தம் உள்ளது. வாயில் வழி உள் நுழைந்தால் வெளிப் பிரகாரம் உள்ளது. பிரகாரம் சுற்றி வரும்போது மேற்குச் சுற்றில் அமிர்தகடேசுவரர், சட்டநாதர், ஏகாம்பரேசுவரர், சிறீவீழிஅழகர் ஆகிய சிவலிங்கத் திருமேனிகள் வரிசையாக உள்ளன. அதையடுத்து நாகாராசா, சண்டிகேசுவரி, புதிய தட்சிணாமூர்த்தி, ஆத்மலிங்கம் ஆகியவற்றைக் காணலாம். வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானின் சந்நிதியும் இப்பிரகாரத்தில் உள்ளது. வடக்குப் பிரகாரத்தில் துர்க்கையைக் காணலாம். நவக்கிரக சந்நிதியும் வெளிப் பிரகாரத்தில் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[4]

சிறப்பு[தொகு]

நாலூர் பலாசவனேசுவர் கோயில் திருநாவுக்கரசர் மற்றும் சுந்தரர் ஆகியோரால் பாடப்பெற்ற வைப்புத்தலமாகும்.[3]

பூசைகள்[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. மாசி மாதம் சிவன்ராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
  3. 3.0 3.1 திருக்கோயில்கள் வழிகாட்டி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை, 2014
  4. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)