தேசிய கலைக்கூடம், சென்னை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தேசிய கலைக்கூடம் (சென்னை)

தேசிய கலைக்கூடம் (National Art Gallery) சென்னையின் எழும்பூர் பகுதியில் அமைந்துள்ள, [1] இந்தியாவின் பழமையான கலைக்கூடங்களில் ஒன்றாகும். இது எழும்பூரில், பாந்தியன் சாலையில் உள்ள அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ளது. அதே வளாகத்தில் கன்னிமாரா பொது நூலகமும் அமைந்துள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சத்தியவேடு என்னும் இடத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சிகப்புக் கற்களைக்கொண்டு 1906 ஆம் ஆண்டில் இந்தக் கட்டடம் கட்டப்பட்டது. இந்தோ சார்சனிக் முறையில் கட்டப்பட்ட இந்தக் கட்டடத்தில் தஞ்சாவூர், ராஜஸ்தான், காங்ரா மற்றும் டெக்கான் பகுதிகளைச் சேர்ந்த ஓவியங்களும் சந்தன சிற்பங்களும் உள்ளன. கட்டமைப்பின் ஒரு பகுதி சேதம் அடைந்ததால், இந்த கலைக்கூடம் 2002 ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டுள்ளது.

வரலாறு[தொகு]

தேசிய கலைக்கூடம் விக்டோரியா மகாராணியின் பொன்விழா கொண்டாட்டத்தின் போது கட்டிடக் கலைஞர் ஹென்றி இர்வின் அவர்களால் இந்தோ-சரசெனிக் [2] பாணியில் வடிவமைத்து கட்டப்பட்டது. இந்த கலைக்கூடம் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தால் ஒரு பாரம்பரிய தளமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. [3] [4]

2002 ஆம் ஆண்டு தொடங்கி இந்த கலைக்கூடம் பல கட்டிடக் குறைபாடுகள் மற்றும் கட்டமைப்பு உறுதியற்ற தன்மை காரணமாக மூடப்பட்டுள்ளதால் கலை விமர்சகர்கள் இதனைப் பற்றி அதிகமாக விமர்சனம் செய்துள்ளனர்.

அம்சங்கள்[தொகு]

இந்த கலைக்கூடம் அலங்கரிப்புக்கலைக்கூடம், ரவிவர்மா ஓவியங்கள், தஞ்சாவூர் ஓவியங்கள், இந்திய பாரம்பரிய கலைக்கூடம் என்ற நான்கு முக்கியப்பிரிவுகளைக் கொண்டு அமைந்துள்ளது. ஓவியங்கள் தவிர வரலாற்று கலைப்பொருள்கள், சமயம் சார்ந்த சிற்பங்கள் போன்றவையும் இங்கு உள்ளன. 10 ஆம் நூற்றாண்டையும், 11ஆம் நூற்றாண்டையும் சேர்ந்த கைவினைப் பொருள்கள் காட்சிக்கு உள்ளன. மேலும் இராமர் சீதையின் உருவங்களும் இங்கு உள்ளன. அவற்றைத் தவிர பருவ இதழ்கள், கையெழுத்துப் படிகள் போன்றவையும் இங்கு காணப்படுகின்றன. [5] கலைக்கூடத்தில் பல முகலாய ஓவியங்கள் மற்றும் ராஜா ரவி வர்மாவின் அரிய படைப்புகள் உள்ளன. [6] இங்கு பல்வேறு தஞ்சை ஓவியங்களும் உள்ளன . [7] கன்னிமாரா பிரபு [8] மற்றும் வில்லியம் பென்டிங் பிரபு போன்ற பல்வேறு ஐக்கிய ராச்சியத்தைச் சேர்ந்த அலுவலர்களின் உருவப்படங்கள் உள்ளன. [9] இந்த கலைக்கூடத்தில் நீதிமன்றம் மற்றும் போர் காட்சிகளை சித்தரிக்கின்ற ஏராளமான சிறிய அளவிலான ஓவியங்களும் உள்ளன.

மறுசீரமைப்பு[தொகு]

முதலமைச்சர் ஜெயலலிதா இதன் சீரமைப்பிற்காக ஒரு நிபுணர் குழுவினை அமைத்ததோடு அதற்கான செலவிற்காக ரூ.110 மில்லியன் தொகையை நிதி ஒதுக்கியதைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டில் இந்த கலைக்கூடம் புதிய பொலிவினைப் பெற்றது. [10]

2019 ஆம் ஆண்டில், சீரமைப்பு ரூ.110 மில்லியன் செலவில் தொடங்கியுள்ளது. மறு சீரமைப்பிற்குப் பின் ரவி வர்மாவின் ஓவியங்கள், சந்தனக் கலைப்பொருட்கள், தந்தப் பொருள்கள், சிறிய அளவிலான கலைப்பொருட்கள், தஞ்சை ஓவியங்கள், ராஜ்புத் ஓவியங்கள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள பாரம்பரிய ஓவியங்கள் உள்ளிட்ட 200 தனித்துவத் தன்மை வாய்ந்த பொருள்கள் பார்வையாளர்களுக்காகக் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது. [11] சென்னையில் இவ்வகையில் காணப்படுகின்ற கட்டுமானத்தைக் கொண்ட ஒரே கட்டடம் இது என்று கூறப்படுகிறது. ஆக்ராவிற்கு அருகே உள்ள பதேபூர் சிக்ரியில் அமைந்துள்ள புலந்த் தர்வாசாவைப் போன்ற அமைப்பில் இது அமைந்துள்ளது. பார்வையாளர்களுக்காக மிகவும் விரைவில் திறக்கப்படவுள்ளது. [12]

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

 1. "national art gallery". wikimapia.
 2. J.Jeyaraj, George. "Indo Saracenic Architecture in Chennai". CMDA.
 3. "Art Museum". chennaimuseum.
 4. "heritage buildings". CMDA.
 5. "National Art Gallery". Tour my India.
 6. "ravi varma paintings". Chennai Museum.
 7. "Tanjore paintings". Chennai Museum.
 8. "Robert Bourke, 1st Baron Connemara", Wikipedia (in ஆங்கிலம்), 2019-06-11, 2020-01-05 அன்று பார்க்கப்பட்டது
 9. "British Portraits". Chennai Museum.
 10. "Rs. 11 crore to restore National Art Gallery in Tamil Nadu". NDTV.com. 19 October 2013. http://www.ndtv.com/article/south/rs-11-crore-to-restore-national-art-gallery-in-tamil-nadu-434324. பார்த்த நாள்: 20 October 2013. 
 11. T. K. Rohit. "Chennai’s National Art Gallery to be open to the public in 3 months". Kasturi & Sons. https://www.thehindu.com/news/cities/chennai/chennais-national-art-gallery-to-be-open-to-the-public-in-3-months/article30247280.ece. பார்த்த நாள்: 2 January 2020. 
 12. Yogesh Kabirdoss. "Egmore: PWD restores National Art Gallery for Rs 11cr". Times of India. https://timesofindia.indiatimes.com/city/chennai/pwd-restores-national-art-gallery-for-rs-11cr-strengthens-foundation-fixes-crack-that-ran-across-entire-structure/articleshow/68296324.cms. பார்த்த நாள்: 5 January 2020.