உள்ளடக்கத்துக்குச் செல்

தீரேந்திர வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீரேந்திர வர்மா
பிறப்பு(1897-05-17)மே 17, 1897
பரேலி, உத்தரப் பிரதேசம்,  இந்தியா
இறப்புஏப்ரல் 23, 1973(1973-04-23) (அகவை 75)
பணிஇந்தி கவிஞர், எழுத்தாளர், மொழியியல் வல்லுநர்

தீரேந்திர வர்மா (Dhirendra Verma) (1897 மே 17 - 1973 ஏப்ரல் 23) என்பவர் பிரபல இந்தி கவிஞரும், எழுத்தாளரும், மொழியியல் ஆராய்ச்சியாளர் மற்றும் நிபுணராகவும் அறியப்படுகிறார். மொழி ஆய்வுக்காகத் தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவரும், இந்தி இலக்கியத்துக்குப் புது வடிவம் கொடுத்தவருமான தீரேந்திர வர்மா இந்தி இலக்கிய களத்தைப் பொருத்தவரை, ஒரு தனி நபர் அளவில் இல்லாது, ஒரு நிறுவனம் போலச் சாதனைப் படைத்திருக்கிறார். ஒரு யுகம் போலத் திகழ்ந்தவர் என்று இந்தி இலக்கிய ஆர்வலர்களால் தீரேந்திர வர்மா இன்றளவும் போற்றப்படுகிறார்.[1]

பிறப்பு

[தொகு]

தீரேந்திர வர்மா, இந்தியாவின் வட மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் உள்ள பரேலி என்னும் முகனை நகரத்தில் 1897-ம் ஆண்டு மே 17-ல் பிறந்தார். இவரது தந்தை, ஆரியசமாசக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். தீரேந்திரனிடம் சிறுவயது முதலே அவரது அப்பாவின் தாக்கம் இருந்தது.[2]

படிப்பு

[தொகு]

பரேலியில், நைனிடா எனும் ஊரில் பள்ளிப்படிப்பை முடித்த தீரேந்திர் பின்னர், இலக்னோ குயீன்ஸ் கல்லூரியில் சேர்ந்து இந்தியை விசேடப் பாடமாக எடுத்து படித்து 1914-ல் இளங்கலை பட்டமும், மற்றும் அலகாபாத் மத்திய கல்லூரியில் சேர்ந்து 1921-ல் சமசுகிருதத்தில் எம்.ஏ. முதுகலை பட்டமும், பின்னாளில் பிரான்சின் பாரிசு பல்கலைக்கழகத்தில் 1934-ல் டி.லிட். பட்டம் பெற்றார்.[2]

இலக்கியப்பணிகள்

[தொகு]

இந்தியாவில் 1917-1923 ஆகிய காலகட்டத்தில் நடந்த அரசியல் நிகழ்வுகள் குறித்து குறிப்பேட்டில் எழுதி வந்தார். இது நான்கு பாகங்கள் கொண்ட ‘மேரீ காலேஜ் டைரி’ என்று இந்தியில் 1958-ல் புத்தகமாக வெளிவந்தது.[3] இந்தி மற்றும் வ்ரஜபாஷா மொழிகளில் கவிதைகள் எழுதியுள்ளார். மேலும், இந்திய மொழிகள் சம்பந்தமான ஒட்டுமொத்த ஆய்வுகளை ஆதாரமாகக் கொண்டு இந்தி மொழியின் முதல் அறிவியல்பூர்வமான வரலாற்றை 1933-ல் எழுதினார். தனது ஆய்வுகளின் அடிப்படையில் ஏராளமான கட்டுரைகள் எழுதியவர், வ்ரஜபாஷா தொடர்பாக பல ஆய்வுகள் மேற்கொண்டு பிரெஞ்சு மொழியில் கட்டுரை எழுதினார். அது இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும், ‘வ்ரஜபாஷா’, ‘வ்ரஜசாப் கா வ்யாகரண்’, ‘அஷ்டசாப்’, ‘சூர்சாகர் ஸார்’ என்பது போன்ற ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். அதில் பல நூல்கள் இந்தி இலக்கியத்தின் செவ்வியல் (classicism) நூல்களாகப் போற்றப்படுகின்றன. தரம் வீர் பாரதி உள்ளிட்ட பல பிரபல எழுத்தாளர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.[2]

கல்விப்பணிகள்

[தொகு]

அலகாபாத் பல்கலைக்கழகத்தில் முதலாவது இந்தி விரிவுரையாளராக 1924-ல் நியமிக்கப்பட்டவர், பின்னர் பேராசிரியராகவும் அத்துறை தலைவராகவும் நியமிக்கப்பட்டார். மத்திய பிரதேசத்தில் உள்ள சாகர் பல்கலைக்கழகத்தில் மொழி அறிவியல் துறை தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். பின்னர் ஜபல்பூர் பல்கலைக்கழக வேந்தராகவும் நியமிக்கப்பட்டார். நூல்களைப் படிப்பதில் அதிக நாட்டம் கொண்டவர் தீரேந்திர வர்மா. இவருடைய சிந்தனை தனித்துவம் வாய்ந்ததாக இருந்தது. மொழி, இலக்கியத்தை கலாச்சாரத் தின் அடிப்படையாகவே கருதுவார். மொழி, இலக்கியங்களின் இளங் கலை, முதுநிலை பாடத்திட்டங்களில் பல சீர்திருத்தங்கள் செய்தார். மிகவும் தெளிவாகவும், நன்கு புரியும்படியும் மாணவர்களுக்கு கற்பிக்கும் முறையை கையால்பவர். மொழி அறிவியல் போன்ற பாடங்களைக்கூட எளிமையாகவும், சரளமாகவும் கற்பிக்கும் முன்னுதாரண ஆசிரியராகத் திகழ்ந்தார்.[2]

அர்ப்பணிப்பு

[தொகு]

இந்துஸ்தானி அகாடமியின் உறுப்பினராக நீண்ட காலம் செயல்பட்ட தீரேந்திர வர்மா, 1958-ல் இந்திய மொழியியல் சங்கத்தின் தலைவராக பணியாற்றினார்.[4] முதலாவது இந்தி கலைக்களஞ்சியத்தின் முதன்மை ஆசிரியராக இருந்தவர் மொழி, இலக்கியம் தொடர்பான அறியப்படாத உண்மைகளை ஆராய்வதையே தன் வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு மொழி ஆராய்ச்சிக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்தார்.[2]

இறப்பு

[தொகு]

இந்தி இலக்கிய களத்தைப் பொருத்தவரை ஒரு நிறுவனமாக சாதனை படைத்தவரும், இந்தி இலக்கியத்துக்கு புது வடிவம் கொடுத்தவருமான தீரேந்திர வர்மா, 1973-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் நாள் தனது 76-வது வயதில் மறைந்தார். இந்தி இலக்கிய ஆர்வலர்களால் தீரேந்திர வர்மா இன்றளவும் போற்றப்படுகிறார்.[2]

தீரேந்திர வர்மா படிமம் இணைப்பு

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "डॉ. धीरेंद्र वर्मा". web.archive.org (இந்தி). कॉपीराइट © 2007. Archived from the original on 2012-01-24. பார்க்கப்பட்ட நாள் 22 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)CS1 maint: unfit URL (link)
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "தீரேந்திர வர்மா 10". தி இந்து தமிழ் (தமிழ்). May 17, 2016 12:11 IST. பார்க்கப்பட்ட நாள் 23 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "Meri College Diary". library.unigoa.ac.in (ஆங்கிலம்). Year: 1958. பார்க்கப்பட்ட நாள் 23 மே 2016. {{cite web}}: Check date values in: |date= (help); Text "by Verma, Dhirendra" ignored (help)
  4. "தீரேந்திர வர்மா 10". archive.org (ஆங்கிலம்). 1930. பார்க்கப்பட்ட நாள் 23 மே 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தீரேந்திர_வர்மா&oldid=3659112" இலிருந்து மீள்விக்கப்பட்டது