உள்ளடக்கத்துக்குச் செல்

சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கம் என்னும் சொல் புலவர் குழுவைக் குறிக்கும் வகையில் சங்கநூல்களில் காணப்படவில்லை.[1] பரிபாடலில் சங்கம் என்னும் சொல் ஒரே ஓர் இடத்தில் பயிலப்பட்டுள்ளது. அதுவும் வரம்பில்லாத ஓர் எண்ணைக் குறிக்கிறது. ஆயின் பண்டைத் தமிழகத்தில் புலவர் குழு இல்லையா என்னும் வினா எழும். இருந்தது என்பதே அதற்கான விடை. ‘புணர்கூட்டு’ என்னும் பெயரால் அது குறிப்பிடப்பட்டுள்ளது. தொல்லாணை நல்லாசிரியர்கள் பலரின் கூட்டமைப்பு அது. இதனையும் சங்கம் என்னும் சொல் தோன்றிய காலத்தையும், அமைப்பின் பாங்கையும் உணரக்கூடிய வகையில் கிட்டியுள்ள சான்றுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

எட்டுத் தொகை, பத்துப் பாட்டு நூல்கள், பின்பு தொகுக்கப்பட்டவை; அதிலுள்ள கவிதைகளைத் தனித் தனியாகத் தான் கவிஞர்கள் பாடினர். யாரும் சங்கத்தில் வைக்க வேண்டும் என்ற நோக்கில் பாடவில்லை;
இன்று கூட, எழுத்தாளர்கள் எழுதும் புதினங்களில், பதிப்பகத்தின் பேரை, புதினத்தின் ஊடே குறிப்பிடுகிறார்களா என்ன?
அதே போல் தான், அன்றும், எந்தக் கவிஞரும், "சங்கம்" என்று தன் கவிதையில் சொல்லாடவில்லை!

மேலும், "சங்கம்" என்பது ஊதும் சங்கையும் குறிக்கும்; தலைச் "சங்க" நாண் மதியம் என்ற தொன்மையான ஊரே உண்டு
"விளக்கு" என்னும் சொல்லில் இருந்து, எப்படி "விளக்கம்" (தெளிவு) பிறந்ததோ, அப்படியே,
"சங்கு" என்பதனின் இருந்து, "சங்கம்" பிறந்தது; சங்கு ஒலித்து ஒழுங்குறும் அவை சங்கம் எனவும் கொள்ளலாம்

"சங்கம்" என்ற தமிழ்ச் சொல்லும், "ஸங்கமம்" என்ற வடசொல்லும் வெவ்வேறானவை;
பெளத்த ஸங்கம் என்பது வேறு; தமிழில் சங்கம் என்பது வேறு; தமிழில் அது "புணர்கூட்டு" அவையைக் குறிக்கும்!

புணர்கூட்டு

[தொகு]
  1. நெடுஞ்செழியன் தன் அவையில் மாங்குடி மருதனாரைத் தலைவராகக் கொண்டு புலவர்கள் பாடியதைக் குறிப்பிடுகிறான் “மாங்குடி மருதன் தலைவனாகப் புலவர்” பாடல் – பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் [2]
  2. இந்த மாங்குடி மருதனார் இந்த நெடுஞ்செழியனை வாழ்த்தும்போது அவனது முன்னோர்களாகிய பல்சாலை முதுகுடுமிப் பெருவழுதி போலவும், நிலந்தரு திருவின் நெடியோன் போலவும் இனிது வாழவேண்டும் என வாழ்த்துகிறார். பல்சாலை முதுகுடுமிப் பெருவழுதி நல்லாசிரியர்களைக் கூட்டி அவர்களுக்கு உணவளிக்கும் நல்வேள்வி செய்தவன் என்றும், நிலந்தரு திருவின் நெடியோன் என்பவன் நல்லாசிரியர்களைக் கூட்டி ‘புணர்கூட்டு’ அவையை நடத்தினான் எனவும் குறிப்பிடுகிறார்.[3]
  3. மாங்குடி மருதனாரின் மகன் மருதன் இளநாகனார் மதுரையில் புலவர்கள் கூடிச் ‘செதுமொழி’ (செம்மொழி)யைப் புதுமொழியாகப் படைத்ததைக் குறிப்பிடுகிறார்.[4]
  4. சேர அரசன் பாலைபாடிய பெருங்கடுங்கோ கூடல் எனப்பட்ட மதுரையில் புலவர்கள் புலன் நாவால் புதிய சொற்களை வழங்கும் வேனில் காலத்தில் திரும்பிவிடுவேன் என்று பொருள் தேடச் சென்ற தலைவன் தலைவிக்கு வாக்குத் தந்த செய்தியைக் குறிப்பிடுகிறார்.[5]
  5. மதுரையில் நெடியோன் புலவர்களைப் ‘புணர்கூட்டு’ என்னும் அமைப்பின் கீழ் ஒன்று திரட்டி தமிழைப் பாடவைத்தான். அது போன்றதொரு ஒருங்கிணைப்பைப் புகாரில் கரிகாலன் உருவாக்கிப் புலவர்கள் தமிழைத் திறனாய்வு செய்து வளர்க்கும் பணியை மேற்கொண்டான்.[6]
  6. காவிரிப்பூம் பட்டினத்தில் மொழி வளர ஒன்றுகூடிய புலவர்களுக்குச் சோழன் கரிகாற் பெருவளத்தான் சோறு வழங்கிய செய்தி பாராட்டப்படுகிறது [7]
  7. சேர அரசன் செல்வக்கடுங்கோ வாழியாதன் பகைநாடுகளிலிருந்து தான் கொண்டுவந்த ‘கொண்டி’ச் செல்வத்தைக்கொண்டு ‘தண்டமிழைச் செறியச் செய்தான் என்று கபிலர் குறிப்பிடுகிறார் [8]

புலவர் குழுவைக் குறிக்கும் சங்கம் என்னும் சொல்

[தொகு]
  1. சங்கம் பற்றிய இறையனார் களவியல் – நக்கீரர் உரைக்குறிப்பு (சங்கம் மருவிய காலம்)
  2. அப்பர் திருப்பத்தூர் சிவனை வழிபடும்போது நன்பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நற்கனகக் கிழி தருமிக்கு அருளினோன்காண் – திருநாவுக்கரசர் தேவாரம் திருப்புத்துர் பதிகம் 3 எனப் பாடுகிறார். (7ஆம் நூற்றாண்டு)
  3. ஆண்டாள் தன் திருப்பாவையில் “சங்கம் இருப்பார்போல் வந்து உன்னைச் சேவித்தோம்” (22) எனப் பாடுகிறார். (8ஆம் நூற்றாண்டு)
  4. சிலப்பதிகாரம் - அடியார்க்கு நல்லார் உரை (15ஆம் நூற்றாண்டு)

முதலானவை சங்கம் பற்றிய செய்திகளைக் குறிப்பிடுகின்றன.

பௌத்த சங்கம்

[தொகு]

1. புகார் நகரத்தில் சமைய உள்ளுணர்வுகளை வெளிப்படுத்தும் சங்கம் இருந்ததாக உணரமுடிகிறது. “வலம்புரிச் சங்கம் வறிதெழுந் தார்ப்ப, புலம்புரிச் சங்கம் பொருளொடு முழங்க” [9]
சமையத்தைக் குறிக்கும் இந்தச் ‘சங்கம்’ என்னும் சொல்லைத் தமிழ்ச்சங்கத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட காலம் பௌத்த சமையம் தமிழகத்தில் வேரூன்றிய மணிமேகலை நூலுக்குப் பிற்பட்டது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

சங்கம் என்னும் அல்பெயர் எண் (வரம்பில்லாத எண்ணைக் குறிக்கும் குறியீடு)

[தொகு]
சங்கம் என்னும் சொல் பரிபாடல் நூலில் வரும் ஒரே ஒரு ஆட்சியைத் தவிர, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களில் இல்லை.
பரிபாடலில் வரும் அந்த ஒரே ஒரு சொல்லாட்சியும் சங்கம் என்னும் எண்ணிக்கையைக் குறிக்கிறதே தவிர, புலவர் கூட்டமைப்பைக் குறிக்கவில்லை.
  • தொன்முறை பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட்டது. பின்னர்த் தோன்றிய ஊழிக்காலங்கள் 6. இவற்றின் கால அளவை அறுதியிட முடியாது.
  1. விசும்பின் ஊழி - நெய்தல் ஆண்டு,
  2. வளி ஊழி – குவளை ஆண்டு,
  3. தீ ஊழி – ஆம்பல் ஆண்டு,
  4. பெயல் ஊழி – சங்கம் ஆண்டு,
  5. பனி ஊழி – கமலம் ஆண்டு,
  6. வெள்ள ஊழி – வெள்ளம் ஆண்டு நிலவின.[10]

தொல்காப்பியர் குறிப்பிடும் அல்பெயர் எண்

[தொகு]

இப்படி எண்ணலளவையில் அடங்காத சொற்கள் எனத் தொல்காப்பியம் மூன்று சொற்களைக் குறிப்பிடுகிறது.
அவை ஐ, அம், பல் என்னும் இறுதிகளைக் கொண்டு முடியும் என்கிறது.[11]
இதற்கு உரை எழுதிய ஆசிரியர்கள் தாமரை, வெள்ளம், ஆம்பல் என்னும் சொற்களைக் குறிப்பிடுகின்றனர்.
சகரம் மொழிமுதல் ஆகாதோ என்னும் ஐயத்தால், "சங்கம்" என்ற எண்ணை அவர்கள் குறிப்பிடவில்லை.
"ச" எழுத்து தமிழ்ச் சொற்களில் முதல் எழுத்தாக வராது எனத் தொல்காப்பியம் சொல்கிறதே? என்பர் ஒரு சாரார்!

ஆனால் பாவாணர் முதலான அறிஞர்கள் இதில் மாறுபடுவர்; இது ஏடு எடுக்கும் போது அறியாதவர்களால் விளைந்த பாடபேதம் என்பர்; தொல்காப்பியம் குறிப்பிடுவது இதுவே:

க, த, ந, ப, ம எனும் ஆவைந் தெழுத்தும்
எல்லா உயிரொடும் செல்லுமார் முதலே
சகரக் கிளவியும் அவற்றோர் அற்றே
அவை ஔ என்னும் ஒன்றலங் கடையே

இதன் பொருள்: க, த, ந, ப, ம என்னும் ஐஞ்சு எழுத்தும், எல்லா உயிரோடும் சேர்ந்து மொழி முதலாக வரும்
ச எனும் கிளவியும் அப்படியே
ஆனா ஔ என்ற சொல்லோடு மட்டும் மொழி முதலாய் வாராது; கௌ, தௌ, நௌ, பௌ, சௌ என்ற ஔகாரம் மட்டும் மொழிக்கு முதல் வராது (காட்டு: கெளமாரம், செளரம், தெளலத் போன்ற வடசொற்கள்)

இதற்கு ஆதாரமாக, பாவாணர், நன்னூல் மயிலைநாதர் உரையிலே ஒரு வெண்பாவையும் மேற்கோள் காட்டுவார்.
அதில் ஆணித்தரமாகச், சகரம் மொழி முதல் வரும் என்றுள்ளது.

சரி சமழ்ப்புச் சட்டி சருகு சவடி
சளிசகடு சட்டை சவளி - சவிசரடு
சத்து சதங்கை சழக்காதி ஈரிடத்தும்
வந்தனவாற் சம்முதலும் வை

இன்னும், ஒப்பியன் மொழிநூல் - 1 (தமிழ்மண் பதிப்பகம், பக்கம் 143-144), தமிழர் வரலாறு - 2 (தமிழ் மண் பதிப்பகம், பக்கம் 42-44) பல்வேறு சகரச் சொற்களை பாவாணர் எடுத்துக் காட்டுவார்.
"சகரம்", மொழி முதல் வரும் நற்றமிழ்ச் சொல்லே என்று அறிஞர் முடிபு.

அடிக்குறிப்பு

[தொகு]
  1. Index des mots de la literature tamoule ancienne, PUBLICATIONS DE L’INSTITUT FRANCAIS D’INDOLOGIE N0.37. PONDICHERY: INSTITUT FRAFRANCAIS D’INDOLOGIE. 1967.
  2. புறம் 72
  3. “களந்தோறும் கள் அரிப்ப, மரந்தோறும் மை வீழ்ப்ப, நிணவூன் சூட்டு உருக்கு அமைய, நெய் கனிந்து வறை அர்ப்ப, குரூஉக் குய்ப்புகை மழை மங்குலின், பரந்து தோன்றா வியன் நகரால், பல்சாலை முதுகுடுமியின், நல்வேள்வித் துறை போகிய, தொல்லாணை நல்லாசிரியர் புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின் நிலந்தரு திருவின் நெடியோன் போல – இனிது உறைமதி பெரும” – மாங்குடி மருதனார் – மதுரைக்காஞ்சி 753 முதல்.
  4. “மதிமொழி இடன்மாலை வினைவர்போல் வல்லவர் செதுமொழி சீத்த செவி செறுவாக முதுமொழி நீராப் புலன்நா உழவர் புதுமொழி கூட்டுண்ணும் புரிசைசூழ் புனலூர!” (மாங்குடி) மருதன் இளநாகனர் - கலித்தொகை 68
  5. “நிலன் நாவில் திரிதரூஉம் நீன்மாடக் கூடலார் புலன்நாவிற் பிறந்தசொல் புதிது உண்ணும்பொழுது அன்றோ --- சுடரிழாய் --- வருதும் என்று உரைத்ததை” – பாலைபாடிய பெருங்கடுங்கோ -கலித்தொகை 35
  6. பல்கேள்வித் துறைபோகிய தொல்லாணை நல்லாசிரியர் உறழ் குறித்து எடுத்த உருகெழு கொடி – பட்டினப்பாலை 169-171
  7. “புகழ் நிலைய மொழிவளர --- சோறு வாக்கிய பெருங்கஞ்சி” – பட்டினப்பாலை – 42-44
  8. “கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்து” (செல்வக்கடுங்கோ வாழியாதன் – கபிலர் - பதிற்றுப்பத்து 63
  9. (மணிமேகலை 7-113&114).
  10. பரிபாடல் 2
  11. ஐ,அம்,பல்- என வரூஉம் இறுதி அல்பெயர் எண் (1-8-98).

சங்க இலக்கியக் கட்டுரைகள்

[தொகு]

ஐ , ஔ, ஃ போன்ற ஓசைகள் உயிர் ஓசைகள் அல்ல. இவை உயிர்மெய் ஓசைகள். அய், அவ், அக் என்றே எழுதப்பட வேண்டும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கம்&oldid=3735471" இலிருந்து மீள்விக்கப்பட்டது