சங்கம் பற்றிய இறையனார் களவியல் – நக்கீரர் உரைக்குறிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சங்கம் பற்றிய இறையனார் களவியல் குறிப்பு[தொகு]

ஆசிரியர்: நக்கீரர்.[தொகு]

முதன்முதலாகச் சங்கம் பற்றிய தெளிவான குறிப்பினை நக்கீரர் எழுதிய இறையனார் களவியல் உரையில்தான் காண்கின்றோம். 'இறையனார் களவியல்' என்ற நூல் தொல்காப்பியத்திற்குப்பின் எழுந்த அகப்பொருள் இலக்கணநூலாகும். இதன் ஆசிரியர் இறையனார்; அதாவது, ஆலவாய் (மதுரையின் வேறுபெயர்) இறைவனாம் சிவபெருமான் என்பது மரபுவழி வந்த நம்பிக்கை ஆகும்.
இதுபற்றி நக்கீரர் தம் உரையுள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
"ஆக்கியோன்பெயர் என்பது, நூல்செய்த ஆசிரியன் பெயர் என்றவாறு. 'இந்நூல் செய்தார் யாரோ? எனின், மால்வரை புரையும் மாடக்கூடல் ஆலவாயிற் பால்புரை பசுங்கதிர்க் குழவித்திங்களைக் குறுங்கண்ணியாக உடைய அழலவிர்சோதி அருமறைக்கடவுள் என்பது." எனக் குறிக்கின்றார்.
அதன்பின், தம் உரையுள் சங்கம் பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
அப்பகுதி:
"தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூவகைப்பட்ட சங்கம் இரீஇயினார் பாண்டியர்கள். அவருள் தலைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும், திரிபுரமெரித்த விரிசடைக்கடவுளும், குன்றெறிந்த முருகவேளும், முரஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனும் என இத்தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவர்களால் பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும், முதுநாரையும், முதுகுருகும், களரியாவிரையும் என இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்கமிருந்தார் என்ப. அவர்களைச் சங்கம் இரீஇயினார் காய்சினவழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக எண்பத்தொன்பதின்மர் என்ப. அவருள் கவிஅரங்கேறினார் எழுவர் பாண்டியர் என்ப. அவர் சங்கம் இருந்து தமிழாய்ந்தது கடல்கொள்ளப்பட்ட மதுரை என்ப. அவருக்கு நூல் அகத்தியம்.
இனி, இடைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும், தொல்காப்பியனாரும், இருந்தையூர்க் கருங்கோழியும், மோசியும், வெள்ளூர்க்காப்பியனும், சிறு பாண்டரங்கனும், திரையன் மாறனும், துவரைக்கோனும், கீரந்தையும் என இத்தொடக்கத்தார் ஐம்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு மூவாயிரத்து எழுநூற்றுவர் பாடினார் என்ப. அவர்களால் பாடப்பட்டன கலியும், குருகும், வெண்டாளியும், வியாழமாலை அகவலும் என இத்தொடக்கத்தன என்ப. அவர்க்கு நூல் அகத்தியமும், தொல்காப்பியமும், மாபுராணமும், இசைநுணுக்கமும், பூதபுராணமும் என இவையென்ப. அவர் மூவாயிரத்தெழு நூற்றியாண்டு சங்கமிருந்தார் என்ப. அவரைச் சங்கம் இரீஇயினார், வெண்டேர்ச்செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக ஐம்பத்தொன்பதின்மர் என்ப. அவருள் கவியரங்கேறினார், ஐவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரத்தென்ப. அக்காலத்துப்போலும், பாண்டியனாட்டைக் கடல்கொண்டது.
இனிக் கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் சிறுமேதாவியாரும், சேந்தம்பூதனாரும், அறிவுடையரனாரும், பெருங்குன்றூர்க்கிழாரும், இளந்திருமாறனும், மதுரையாசிரியர் நல்லந்துவனாரும், மருதனிளநாகனாரும், கணக்காயனார் மகனார் நக்கீரனாரும் என இத்தொடக்கத்தார் நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவர்களால் பாடப்பட்டன நெடுந்தொகை நானூறும், குறுந்தொகை நானூறும், நற்றிணை நானூறும், புறநானூறும், ஐங்குறுநூறும், பதிற்றுப்பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையும் என்று இத்தொடக்கத்தன. அவர்க்கு நூல் அகத்தியமும், தொல்காப்பியமும் என்ப. அவர் சங்கம் இருந்து தமிழாராய்ந்தது ஆயிரத்தெண்ணூற்றைம்பதிற்றியாண்டு என்ப. அவர்களைச் சங்கமிரீஇயினார் கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப்பெருவழுதி ஈறாக நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருள் கவியரங்கேறினார் மூவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்தரமதுரை என்ப."
-இப்பகுதி, களவியல் என அழைக்கப்படும் இறையனார் களவியல் நூலின் முதற்சூத்திர உரையுள் உள்ளது. இந்தச்செய்தியைச் சிலப்பதிகாரத்திற்கு உரைவரைந்த அடியார்க்குநல்லாரும் தம் சிலப்பதிகார உரையினுள் குறிப்பிட்டுச் செல்கின்றார்.