உள்ளடக்கத்துக்குச் செல்

தலைவலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தலையிடி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தலைவலி
தலைவலி கொண்ட ஒரு நபர்.
ஐ.சி.டி.-10G43.-G44., R51.
ஐ.சி.டி.-9339, 784.0
DiseasesDB19825
MedlinePlus003024
ஈமெடிசின்neuro/517 neuro/70
MeSHD006261

தலைவலி அல்லது தலையிடி (இலங்கை வழக்கு) என்பது தலையில் வலி இருக்கும் நிலையாகும். சில வேளைகளில், கழுத்து அல்லது மேல் முதுகுப் பகுதிகளில் ஏற்படும் வலியையும் தலைவலியாகக் கூறுவது உண்டு. குறிப்பிட்ட பகுதியில் மட்டும் வரும் வலிகளில் மிகப் பொதுவானதாகிய தலைவலி, பலருக்கு அடிக்கடி வரக்கூடும். மிகப் பெரும்பாலான தலையிடிகள் தீங்கற்றவையும், தானாகவே குணமாகக் கூடியவையும் ஆகும். சிக்கலற்ற தலைவலிகளுக்கு மருந்துக் கடைகளில் இலகுவாக வாங்கக்கூடிய ஆஸ்பிரின், பரசித்தமோல், இபுபுரோபின் போன்ற வலிநீக்கிகளே போதுமானதாக இருக்கக்கூடும். ஆனால், சில குறிப்ட்பிட வகைத் தலைவலிகளுக்கு வேறு பொருத்தமான மருத்துவ முறைகள் தேவைப்படக்கூடும். ஏற்படும் தலைவலியை, மன அழுத்தம், சிலவகை உணவுகள் போன்று ஏதாவது ஒரு காரணியுடன் தொடர்புபடுத்திக் காணமுடியுமானால் அதனைத் தவிர்க்கமுடியும்.

மூளையில் வலியுணரிகள் இல்லாததால், மூளை வலியை உணராது. தலைப் பகுதியில் அமைந்த சில நரம்புத் தொகுதியின் பகுதிகள், தொண்டை, முகம், வாய் போன்ற பகுதிகளில் காணும் சில நரம்புகள் என்பன காயப்படக் கூடியவை. மூளையுறை, குருதிக் கலங்கள் என்பன வலியை உணரக்கூடியவை. தலைவலிகள் பெரும்பாலும், மூளையுறையில் அல்லது குருதிக்கலங்களில் ஏற்படக்கூடிய இழுவை அல்லது உறுத்தல் காரணமாக உண்டாகின்றன. தலையில் காணப்படும் தசைநார்களும் வலியை உணரக்கூடியவை.

உலக சுகாதார அமைப்பு 2016, ஏப்ரலில் கொடுத்த அறிக்கையின்படி, சனத்தொகையின் அரைவாசியினராவது ஆண்டில் ஒருமுறையேனும் தலைவலிக்கு உட்பட்டிருக்கிறார்கள்[1]. அழுத்தங்களால் ஏற்படும் தலைவலியே மிகவும் பொதுவானதாகவும், கிட்டத்தட்ட 1.6 பில்லியன் மனிதர்கள் (மொத்த சனத்தொகையின் 21.8%), அதைத் தொடர்ந்து அடுத்த நிலையில் ஒற்றைத் தலைவலியும், கிட்டத்தட்ட 848 மில்லியன் (மொத்த சனத்தொகையின்11.7%) காணப்படுகின்றன.[2]. தலைவலியால் அவதிப்படுபவர்கள் அந்த தலைவலி ஆபத்தற்றது என்பதை உறுதிப்படுத்தவும், சிகிச்சை பெறவும் மருத்துவரின் உதவியை நாடுதலே நன்று.

தலைவலிக்கான காரணங்கள்

[தொகு]

தலைவலிக்கான பொதுவான காரணங்களாக, மன அழுத்தம், ஒற்றைத் தலைவலி, விழிக்களைப்பு, உடல்வரட்சி, குருதியில் சர்க்கரை குறைதல், நெற்றியெலும்புப்புழை அழற்சி (sinusitis) என்பவற்றைக் குறிப்பிடலாம். உயிராபத்தை விளைவிக்கக்கூடிய நிலைமைகளான மூளையுறை அழற்சி (meningitis), மூளையழற்சி (encephalitis), மிக உயர் இரத்த அழுத்தம், மூளைக்கட்டிகள் போன்றவற்றினால் வரும் தலைவலிகள் மிகக் குறைவே. தலைக் காயங்களுடன் தலைவலி ஏற்படும்போது காரணம் வெளிப்படையானது. பெண்களிடையே காணப்படும் மிகப் பெரும்பாலான தலைவலிகளுக்கு, மாதவிலக்கு ஆரம்பித்த நாட்களில் (மாதவிலக்குக்கு முன்னர் அல்லது பின்னர்) இருக்கும் இயக்குநீர் அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கம் காரணமாகும்.[3]

நரம்பு மண்டல த்தில் வரும் தலைவலி

[தொகு]

40 வயதிற்குப் பிறகே பெரும்பாலும் தாக்கக் கூடியது. ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் வர வாய்ப்பு உண்டு. மின் அதிர்வுப் போல வலி இருக்கும். கண்ணைச் சுற்றியுள்ள பகுதியில் ஒரு பக்கமாக வலிக்கும். ஒற்றைத் தலைவலியைப் போல மெல்லுதல், பேசுதல், விழுங்குதல், குளிர்நீரில் முகம் கழுவுதல், பல் துலக்குதல் போன்ற எது வேண்டுமானாலும் வலியைத் தூண்டலாம்.

கண் தொடர்பான நோய்கள்

[தொகு]

ஒளி விலகல், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண் சிவத்தல், பார்வை குறைபாடு கண்ணில் காயம் ஆகியவற்றால் கண்ணில் மட்டுமின்றி தலைவலியும் ஏற்படலாம்.

பக்கவாதம்

[தொகு]

இரத்தக் கொதிப்பால் மூளையின் ரத்தக் குழாய் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் தமனி வெடித்துவிட வாய்ப்பு உள்ளது. இதனால், ரத்தக் கசிவு ஏற்படலாம். அப்போது மூளை வீங்கத் தொடங்கும். மூளை வீங்கும்போது மூளையின் உறை இழுபடும். இதனால் கடுமையான தலைவலி ஏற்படும்.

தலைச்சுற்றல்

[தொகு]

இது காதின் மையப்பகுதியின் நரம்புகளில் ஏற்படும் ஒழுங்கின்மையால் ஏற்படும் நோய். நோயாளிகளுக்குக் கழுத்து மற்றும் தலைவலியை ஏற்படுத்தும். தலைச்சுற்றலுடன் வாந்தியும் இருக்கும்.

உளவியல் ரீதியான பிரச்சனைகள்

[தொகு]

மனச்சோர்வு, பதட்டம், தற்கொலை செய்யும் எண்ணம் ஆகியவை ஒற்றைத் தலைவலி நோயாளி களுக்கு அவ்வப்போது வந்து போகும்.

சைனஸ் தலைவல

[தொகு]

கண்களுக்கு கீழே உள்ள எலும்பறைகளில் காற்றுக்குப் பதிலாக நீர் கோர்த்துக் கொண்டு தலை வலி ஏற்படும்.

பல் நோய்கள்

[தொகு]

பல்லில் அடிபட்டாலும், நோய்த் தொற்று ஏற்பட்டாலும், தலைவலி ஏற்படலாம். குளிர்ந்த அல்லது சூடான பானம், பல்லில் படும்போது வலி தீவிரமாகும். மிகக் கடுமையான தலைவலியை ஏற்படுத்தும்.

தைராய்டு குறைவு

[தொகு]

தைராய்டு ஹார்மோன் சுரப்பு குறையும்போது தலைவலி வரலாம். சரியான ஹார்மோன் சிகிச்சை அளித்த பிறகு வலி போய்வடும்.[4]

ஆபத்தான தலைவலி

[தொகு]

பெரும்பாலான தலைவலிகள் ஆபத்து அற்றவை ஆயினும், சில சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்ற தலைவலி ஆபத்தானதாக அமைகின்றது. இவ்வாறான ஆபத்தான தலைவலிகளுக்குக் காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

  • மண்டையோட்டுக் குழியினுள் அமுக்கம் அதிகரித்தல்.
  • சில வகைத் தொற்றுக்கள். உதாரணம் மூளைய அழற்சி
  • இராட்சதக்கல நாடியழற்சி (Giant Cell Arterilis)
  • மண்டையோட்டுக்குழியினுள் ஏற்படும் குருதிப் பெருக்கு
  • மூளைய முண்ணாண் பாய்பொருளின் கனவளவில் ஏற்படும் குறைவு
  • தலையில் அடி படுதலின் பின்னரான தலைவலி
  • திடீரென ஏற்படும் கண்ணின் அமுக்க அதிகரிப்பு
  • மூளையில் ஏற்படும் கட்டிகள், சீழ்க்கட்டிகள்

மேற்கூறிய காரணிகளால் ஏற்படுத்தப்படும் தலைவலிக்கு சிறப்பு சிகிச்சைகள் அவசியமாகின்றன. ஏனெனில் மேற்கூறிய காரணங்கள் பெரும் விளைவுகளைத் தரவல்லன. சில உயிராபத்தையே விளைவிக்கக்கூடியன!

புதிதாக, திடீரென்று தீவிரமான தலை வலி ஏற்பட்டால், முன் எப்போதும் எதிர்நோக்காத அல்லது உணராத, முற்றிலும் வேறுபட்ட தீவிரமான தலைவலி ஏற்பட்டால், தன்னுணர்வில் மாற்றம் ஏற்பட்டால் (Altered Consciousness), தீவிர காய்ச்சல், வாந்தி இருப்பின், ஒரு பக்கம் வாதம் ஏற்பட்டு உணர்வற்றிருப்பின், காலையில் எழும் போதே தலையிடி இருப்பதுடன், இருமும் போதோ அல்லது தும்மும் போதோ தலைவலி அதிகரிப்பின், பார்வையில் மாற்றம் ஏற்படின் (குனியும் போது /வளையும் போது /இருமும் போது) உடனடி மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்ள வேண்டும்.

ஆபத்தில்லாத தலைவலி

[தொகு]

ஒற்றைத் தலைவலி

[தொகு]

பொதுவாக நாற்பது வயதிற்குட்டபட்டவர்களிலே ஏற்படுகின்ற தலைவலியாகும். இது தீவிரமான தலைவலியை ஏற்படுத்தும். இடிப்பது போன்ற உணர்வு ஏற்படுத்தும் தலைவலியாகும். இதனுடன் சேர்ந்து வயிற்றுப்பிரட்டல், வாந்தி என்பன காணப்படலாம். இவ் வகைத் தலைவலி உடையோர் வழமையான வேலைகளில் ஈடுபடமுடியாது அவதியுறுவர்.

வேலைப்பளு காரணமாக ஏற்படும் தலைவலி

[தொகு]

இருபக்கத் தலையிலும் உணரப்படுகின்ற மந்தமான ஒரு தலைவலியாகக் காணப்படும். சிலரில் கண்களுக்கு பின்னால் அழுத்துவது போன்று காணப்படும். சிலர் தலையுச்சியில் அமுக்குவது போன்று உணர்வர். இவ்வகைத் தலைவலி அதிக மன அழுத்தம், வேலைப்பளு உள்ளவர்களிலேயே பொதுவாக ஏற்படுகின்றது. இவர்களுக்கு தளர்வுப் பயிற்சிகள் பரிந்துரைக்கபடுகின்றது. சிலருக்கு வலி நிவாரணிகள் தேவைப்படலாம்.

கிளஸ்டர் தலைவலி (Cluster Headache)

[தொகு]

இருபதுக்கும், நாற்பதுக்குமிடையிலான வயதுடைய ஆண்களில் ஏற்படவவல்ல ஒரு வகைத் தலைவலியாக இது காணப்படுகின்றது. மிகத் தீவிரமான தாங்கமுடியாத தலைவலியாகக் காணப்படும். ஒரு பக்கத் தலைப்பகுதியிலேயே ஏற்படும். கண்ணின் பின்னாக உருவெடுக்கும் இத் தலைவலியுடன் கண்ணீர் சுரத்தல், மூக்கடைப்பு, கண் செந்நிறமாதல், தற்காலிகமாகக் கண்ணை இறுக்கி மூடமுடியாதிருத்தல் போன்றனவும் காணப்படலாம்.

தலைவலியில் இருந்து குணமடைய

[தொகு]

முறையான மருத்துவ சிகிக்சை

[தொகு]

மருத்துவரிடம் காண்பித்து முறையான சிகிச்சை பெறுதல் மூலம் தலைவலியில் இருந்து குணமடையலாம்.

மனதை தளர்வாக்கும் சிகிச்சை (Relax therapy treatment)

[தொகு]

தலைவலிக்கு அடிப்படை மன அழுத்தம் . தேவையற்ற கோபம், விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கும் போது உங்கள் மனதை தளர்வாக்கும் சிகிச்சை உள்ளது. அதிக குளிர்ச்சி, அதிக வெப்பம் இல்லாத அறையில் அமர்ந்து சிகிச்சை பெறவேண்டும் . அங்கு நல்ல காற்றோட்டம் இருக்கவேண்டும். கட்டில் அல்லது தரையில் படுத்துக் கொள்ளலாம். மூச்சை ஆழமாக இழுத்து விடவும். பின்னர் கண்களை இறுக்கமாக இல்லாமல் இலகுவாக மூடிக் கொள்ளவும். கோபம் வரும் போது சிலர் புருவங்களை சுருக்கிக் கொள்வர். முகம் இறுக்கமாக இருக்கும். இந்த சமயத்தில் தசை இறுகும். இதைத் தவிர்க்க புருவத்தையும், முகத்தசைகள் இறுகுவதையும் தவிர்த்து சாதாரணமாக வைத்துக் கொள்ளலாம். மனதுக்குப் பிடித்த வேலை மூலம் மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளலாம் . மனம் அமைதி அடைந்த பின்னர் நிதானமாக யோசித்தால் பிரச்னைக்கான தீர்வை எளிதில் கண்டறிய முடியும். இதன் மூலம் தலைவலிக்கு விடை கொடுக்கலாம்.

பாட்டி வைத்தியம்

[தொகு]

அருகம்புல், ஆலமர இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து உச்சந்தலையில் பற்றுப் போட்டால் தலைவலி உடனடியாக குணமாகும். அவரை இலையை அவித்துத் தலையில் பூசிக் குளித்தால் நாள்பட்ட தலைவலி குணமாகும். ஆதொண்டை வேரை இடித்து நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்து குளித்து வந்தால் மண்டைக் குடைச்சல் குணமாகும்.

இஞ்சியைத் தோல் நீக்கி தேன் சேர்த்து வதக்கி தண்ணீர் (50) மிலி விட்டு கொதிக்க வைத்து தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டால் நாள்பட்ட தலைவலி குணமாகும்.

இஞ்சியைக் காயவைத்து பொடி செய்து தண்ணீரில் குழைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைபாரம் குறையும்.

இஞ்சிச்சாற்றில் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி தலைக்கு தேய்த்தால் தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.

இஞ்சிசாற்றில் வெங்காயத்தை அரைத்து நெற்றியில் பற்றுப் போடலாம்.

இரட்டைப் பேய் மருட்டி இலையை தண்ணீரில் போட்டு ஓமம் சேர்த்துக் கொதிக்க வைத்து, நீராவி பிடித்தால் அதிக வியர்வை வெளியேறி தலைவலி குறையும். எருக்கம் பாலில் வெள்ளை எள்ளை அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். எலுமிச்சம்பழச் சாறை காபியில் கலந்து குடிப்பதன் மூலம் தலைவலி நீங்கும்.

எலுமிச்சம்பழத் தோலை அரைத்து நெற்றியில் பற்றுப்போடலாம். எலுமிச்சம்பழச் சாறுடன் மிளகை சேர்த்து அரைத்து நெற்றியில் பற்றுப் போட்டால் தலைவலி குணமாகும். கடுகை தண்ணீரில் ஊற வைத்து முளைக்கட்டவும், பின்னர் அதனை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் நாள்பட்ட தலைவலிக்கு நிவாரணம் கிடைக்கும்.[5]

குத்தூசி மருத்துவம்

[தொகு]

தலையின் முன்பக்கம், பின்பக்கம் விடாத அல்லது அடிக்கடி தலைவலி, ஒற்றைத் தலைவலி (மைக்ரேன்) போன்றவை குணமடைய குத்தூசி மருத்துவமும் செய்யப்படுகிறது. கை கட்டை விரலின் மேல்பகுதியின் முன்பக்கம், பின்பக்கம் என கட்டைவிரலை சுற்றி ஒரு சில நிமிடங்கள் அழுத்தம் கொடுத்தல் இம்முறையில் செய்யப்படுகிறது. குத்தூசி மருத்துவ முறையானது எந்தவிதமான பாதிப்பும், பக்கவிளைவுகளும் இல்லாத எளிய முறையாகும்.


வர்ம மருத்துவம்

கருஞ்சூரைப்பட்டை தைலம் கண்டத்திற்கு மேல் உள்ள நோய்கள் யாவும் காணாமல் போகும். கருஞ்சுவலிப்பட்டை தைலத்தை தலையில் தேய்த்து வெந்நீரில் குளிக்க தேனிசங்கள்,கபால குத்து,கண்டத்தின் மேல் எழும் எல்லா நோய்களும்,தலையில் வந்த வலி,கழுத்து பிடிப்பு மாறும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Headache disorders Fact sheet N°277". October 2012. பார்க்கப்பட்ட நாள் 15 February 2016.
  2. Global Burden of Disease Study 2013, Collaborators (22 August 2015). "Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 301 acute and chronic diseases and injuries in 188 countries, 1990-2013: a systematic analysis for the Global Burden of Disease Study 2013.". Lancet (London, England) 386 (9995): 743–800. doi:10.1016/s0140-6736(15)60692-4. பப்மெட்:26063472. 
  3. "Menstrual Migraine: Therapeutic Approaches". National Center for Biotechnology Information, U.S. National Library of Medicine. பார்க்கப்பட்ட நாள் 23 சூன் 2017.
  4. http://ta.vikaspedia.in/health/ba8bafbcdb95bb3bcd/ba4bb2bc8bb5bb2bbf/ba4bb2bc8bb5bb2bbf-b95bbebb0ba3b99bcdb95bb3bcd-baebb1bcdbb1bc1baebcd-b86bb2b9aba9bc8b95bb3bcd
  5. http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=828[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலைவலி&oldid=4037149" இலிருந்து மீள்விக்கப்பட்டது