உள்ளடக்கத்துக்குச் செல்

தனக்ரா சமர் (கி.மு. 457)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தனக்ரா சமர்
முதல் பெலோபொன்னேசியன் போர் பகுதி
நாள் கி.மு. 457
இடம் தனக்ரா
எசுபார்த்தாவின் வெற்றி
பிரிவினர்
ஏதென்ஸ் எசுபார்த்தா
தளபதிகள், தலைவர்கள்
மைரனைட்ஸ் நிகோமெடிசு
பலம்
14,000 [1] 11,500[2]
இழப்புகள்
தெரியவில்லை தெரிவில்லை

தனக்ரா சமர் (Battle of Tanagra) என்பது கிமு 457 இல் ஏதென்சுக்கும் எசுபார்த்தாவுக்கும் இடையே முதல் பெலோபொன்னேசியப் போரின் போது நடந்த ஒரு போராகும். எசுபார்த்தாவில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலகத்தின்போது ஏதென்சின் இராணுவ உதவிகளை அது நிராகரித்தது மற்றும் ஏதென்சின் மதில் சுவர்களை மீளக் கட்டியமைத்தது போன்றவை ஏதென்சு மற்றும் எசுபார்த்தா இடையே பகை அதிகரிக்க காரணமாயிற்று. ஏதெனியர்கள் படையானது மைரனைட்சால் வழிநடத்தப்பட்டது. அது 14,000 படை வீரர்களைக் கொண்டிருந்தது. [3] எசுபார்த்தன்கள் நிகோமெடிசு தலைமையில் இருந்தனர் அவர்களின் படையில் மொத்தம் 11,500 வீரர்கள் இருந்தனர். [3] இரு தரப்பினரும் இழப்புகளைச் சந்தித்தனர், இருப்பினும், எசுபார்த்தான்கள் வெற்றியுடன் சென்றனர்.

பின்னணி

[தொகு]

பாரசீகப் போர்களில் எசுபார்த்தாவின் தலைமையில் ஒருங்கிணைந்து வெற்றி பெற்று மேலாதிக்கம் பெற்றிருந்தாலும், எசுபார்த்தன் தலைமையிலான பெலோபொன்னேசியன் கூட்டணியானது வளர்ந்துவரும் சக்தியான ஏதெனியப் பேரரசின் சக்தியைக் கண்டு அஞ்சியது. மேலும் மீண்டும் மீண்டும் இராஜதந்திர ரீதியிலான அவமதிப்புகள் மற்றும் எச்சரிக்கை உணர்வுகளால் இருதரப்புகளுக்குமான உறவுகளை மோசமாக்கியது.

ஏதென்சால் கட்டப்பட்ட நீண்ட சுவர்களின் வரைபடம்.

கிரேக்க பாரசீகப் போர்களில் கிரேக்க நகர அரசுகளின் வெற்றிக்குப் பிறகு ஏதென்சு உள்ளிட்ட கிரேக்க நகரங்கள் தங்களைச் சுற்றி மதில் சுவர்களை மீண்டும் கட்டுவதைத் தவிர்க்குமாறு எசுபார்த்தா வலியுறுத்தியது. இருப்பினும், எசுபார்த்தனின் அறிவுரையில் ஏதாகினும் சூழ்ச்சி இருக்கலாம் என சந்தேகித்த ஏதென்சு கட்டுமானப் பணிகளை துவக்கியது. இதை அறிந்த எசுபார்த்தா கட்டுமானப் பணிகளை தடுக்க முயன்றபோது ஏதென்சு இராசதந்திர ரீதியாக செயல்பட்டு கட்டுமானப் பணிகளை முடித்தது. இவ்வாறு கிமு 458 இல், ஏதென்சு நீண்ட சுவர்களைக் கட்டத் தொடங்கியது. இது ஒரு தற்காப்புக் கட்டமைப்பாகும், இது ஏதென்சு நகரத்தையும் பிரேயசு துறைமுகத்தையும் இணைக்கும் வகையில் நீண்டதாக கட்டப்பட்டது. [4] போர் ஏற்பட்டால் இந்தச் சுவர்களின் பாதுகாப்பினால், கடலில் இருந்து வரும் பொருட்களை நகரத்துக்கு கொண்டுசெல்வதை யாரும் தடுக்க இயலாது. [5]

கிமு 464 இல், எசுபார்த்தாவில் எலட்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்கள் இதோம் மலையில் பதுங்கி இருந்தனர். அவர்களை ஒடுக்கி வெல்ல இதோமை முற்றுகையிட தன் மற்ற கூட்டாளிகளுடன் ஏதென்சின் உதவியையும் எசுபார்த்தா கேட்டது. [6] ஏதென்சின் தளபதியான சிமோனின் வற்புறுத்தலின் பேரில் எசுபார்த்தன்களுக்கு ஆதரவாக "கணிசமான படை" ஒன்று ஏதென்சால் அனுப்பப்பட்டது. [7] ஆனால் எசுபார்த்தாவானது, ஏதென்சின் "வழக்கத்திற்கு மாறான" அரசியலையும், அவர்கள் அடிமைகளான எலட்களுடன் சண்டையிடுவதை விட அவர்களுக்கு ஆதரவளிக்கும் சாத்தியக்கூறுகள் மிகுதியாக உள்ளதாகவும் கருதி அஞ்சி, ஏதெனியன் படையினரை திருப்பி அனுப்பினார். இந்த நிகழ்வினால் அவமானம் அடைந்த ஏதென்சு எசுபார்த்தாவுக்கு எதிரான வெளியுறவுக் கொள்கையை ஏற்க வழிவகுத்தது. [7]

எசுபார்தாவின் இந்த அவமதிப்புகளால் ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளான ஏதென்சு, பெலோபொன்னேசியன் கூட்டணிக்குள் ஏற்படும் உள் முரண்பாட்டை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருந்தது. இந்நிலையில் கொரிந்துக்கும், மெகராவுக்கும் எல்லைத் தகராறு ஏற்பட்டது. இவை இரண்டும் பெலோபொனேசியன் கூட்டணியின் உறுப்பினர்களாக இருந்தவையே. என்றாலும் தங்களுக்குள்ளான சிக்கலை சுமூகமாக பேசித் தீர்த்துக்கொள்ள இயலவில்லை. இதனால் மெகரா பெலோபொன்னேசியன் கூட்டணியிலிருந்து விலகி ஏதென்சின் பாதுகாப்பை நாடியது. இதையடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் கிமு 459 இல் நட்பு ஒப்பந்தம் கையொப்பமானது. இதன்படி மெகாராவுக்கு அருகில் உள்ள பாகி என்னும் துறைமுகத்தை ஏதென்சு தன் கடற்படை தளமாக்கிக் கொண்டது. பெலோபொன்னேசியாவிலிருந்து யாரேனும் ஏதென்சு மீது படையெடுத்து வந்தால் அவர்கள் மெகராவை வழியாக பயன்படுத்தக் கூடாது என்பதே ஏதென்சின் நோக்கமாகும்.

போர்

[தொகு]

டோரிய கிரேக்கர்களின் பாரம்பரிய தாயகமான டோரிஸ் நகரங்கள் மீது போசியன்கள் படையெடுத்து வந்தனர். அவர்களை எதிர்க்கும் ஆற்றல் இல்லாததால் டோரிஸ் எசுபார்த்தாவின் உதவியை நாடியது. உடனே எசுபார்த்தா கிளியோம்ப்ரோடஸின் மகன் நிகோமெடிசின் தலைமையில் ஒரு உதவிப் படையை அனுப்பியது. [8] அப்படையில் 1,500 எசுபார்த்தன் ஹாப்லைட்டுகளைக் கொண்டதாகவும், எசுபார்தாவின் கூட்டணியினரின் 10,000 பேர்கொண்ட படையுடன் போயோட்டியாவிற்குள் நுழைந்து போசியன்களை விரட்டியடித்தது.

இதன்பிறகு எசுபார்த்தா தீப்சுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அதன் தலைமையை ஏற்றுக் கொள்ளும்படி மற்ற பியோசிய அரசுகளை கட்டாயப்படுத்தியது. மேலும் இந்த அரசுகளில் எசுபார்த்தாவுக்கு ஆதரவான சர்வாதிகார அரசாங்கங்களை நிறுவியது. மேலும் தீப்சுக்கு வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தது. இதன்பின்னர் எசுபார்த்தன் படைகள் எசுபார்த்தாவுக்கு தரைவழியாக திருப்பும் நோக்கத்துடன் பியோஷ்யாவின் தெற்குப் பக்கமாக வந்துகொண்டு இருந்தது.

ஏதென்சின் சனநாயக ஆட்சியை கவிழ்கும் நோக்கம் கொண்ட பணக்கார தரப்பைச் சேர்ந்த சிலர் பியோஷ்யாவில் தங்கி உள்ள எசுபார்த்தன் தளபதிகளை சந்தித்தித்து சூழ்ச்சி செய்வதாகவும், அதனால் அங்கு உள்ள எசுபார்த்தன் படைகள் பெலோப்பொனீசியாவுக்குத் திரும்பும் வழியில் ஏதென்சை தாக்கக்கூடும் என்ற வதந்தி பரவியது.

இதனால் தனக்ராவில் எசுபார்தன்களை சந்தித்த ஏதென்சு களமிறங்கியது, "அவர்களின் இராணுவத்தில், ஆர்கோசில் இருந்த 1,000 துருப்புக்கள் மற்றும் அவர்களது மற்ற கூட்டாளிகளின் படைகளின் ஆதரவுடன், மொத்தம் 14,000 பேர் கொண்ட படையாக இருந்தது." போரின் போது மேற்கொண்ட தந்திரோபாயங்கள் பற்றிய பதிவு எதுவும் இல்லை என்று பெர்னாண்டோ எச்செவர்ரியா கூறுகிறார். [9]

ஏதென்சில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாடுகடத்தப்பட்ட ஏதெனிய அரசியல்வாதியும் தளபதியுமான சிமோன், ஏதென்சு படைகளுடன் இணைந்து சண்டையிட முன்வந்தார், ஆனால் அவருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

பின்விளைவு

[தொகு]

இரு தரப்பினரும் "பெருமளவில் இழப்புகளை" சந்தித்தாலும், எசுபார்த்தன்கள் வெற்றி பெற்றனர். பின்னர் எசுபார்த்தன்கள் பூசந்தியின் மலைப்பாதைகள் வழியாக நாடு திரும்பினர். போகிற வழியில் மெகாராவில் சில சேதங்களை உண்டாக்கிப் போனார்கள். [10] போரில் தோல்வியுள்ளாலும் ஏதெனியர்கள் தங்கள் உற்சாகத்தை இழக்கவில்லை. போர் நடந்த அறுபத்தி இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஏதெனியர்கள் மைரோனைட்சின் தலைமையின் ஒரு பெரும் படையை திரட்டினர். பின்னர் அவர்கள் ஓனோபைட்டா போரில் பியோஷ்யாவைத் தோற்கடித்து தீப்சைத் தவிர பிரேஸ்யா முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். மேலும் ஓபண்டியன் லோக்ரிசில் சனநாயக ஆட்சியை நிறுவினர். அதை எதிர்த்து பணக்கார பிரபுக்கள் செயல்பட்டனர். சனநாயக ஆட்சியை பாதுகாக்கும் விதமாக அதை எதிர்த்த பணக்காரர்களை அவர்கள் கட்டியிருந்த சுவரை தகர்த்து அவர்களில் நூறு பேரை பணயக்கைதிகளாக ஏதெனியர்கள் பிடித்துச் சென்றனர். [10] சிறிது காலம் கழித்து அவர்களை விடுவித்தனர். இந்த வெற்றியுடன், ஏதெனியர்கள் மோதலின் மூல காரணமான போசிஸ் மற்றும் ஓபன்டியன் லோக்ரிசை கைப்பற்றி ஆக்கிரமித்தனர். [11] [12] இதன்பிறகு நாடுகடத்தப்பட்ட சிமோன் இறுதியில் ஏதென்சுக்குத் திரும்ப அழைக்கப்பட்டார். பின்னர் ஏதென்சுக்கும் எசுபார்த்தாவுக்கும் இடையே ஐந்தாண்டு அமைதி ஒப்பந்தத்தை உருவாக்க உதவினார். [13]

குறிப்புகள்

[தொகு]
  1. History of the Peloponnesian War, Thucydides, 1,107: 5 and 7
  2. History of the Peloponnesian War, Thucydides, 1,107:2
  3. 3.0 3.1 Thucydides, "History of the Peloponnesian War", Oxford World's Classics: Thucydides: The Peloponnesian War, Oxford University Press, p. 1.107, retrieved 2021-11-28
  4. Hornblower, Simon (2011-03-17). The Greek World 479-323 BC (in ஆங்கிலம்). Routledge. ISBN 978-1-136-83125-6.
  5. Balot, Ryan. The Oxford Handbook of Thucydides (in ஆங்கிலம்). Oxford University Press. ISBN 978-0-19-064774-2.
  6. Hornblower, Simon; Spawforth, Antony; Eidinow, Esther (2014). The Oxford Companion to Classical Civilization. Oxford, UK: Oxford University Press. pp. 344. ISBN 978-0-19-870677-9.
  7. 7.0 7.1 Marr, J.L.; Rhodes, P.J. (2008). The 'Old Oligarch': The Constitution of the Athenians Attributed to Xenophon. Oxford: Oxford University Press. p. 164. ISBN 978-0-85668-781-5.
  8. Rahe, Paul Anthony (2019). Sparta's First Attic War. New Haven, CT: Yale University Press. p. 163. ISBN 978-0-300-24261-4.
  9. Rey, Fernando Echeverría. "2017, "The First Peloponnesian War, 460-446 BC"". M. Whitby and H. Sidebottom, eds., The Encyclopedia of Ancient Battles, vol. I, Malden, Wiley-Blackwell: 4. https://www.academia.edu/36244093/2017_The_First_Peloponnesian_War_460_446_BC_. 
  10. 10.0 10.1 Thucydides (1996). The landmark Thucydides : a comprehensive guide to the Peloponnesian War. Robert B. Strassler, Richard Crawley. New York: Free Press. p. 1.108. ISBN 0-684-82815-4. கணினி நூலகம் 34788895.
  11. Fine, John VA. The Ancient Greeks: A Critical History. Harvard University Press. pp. 354.
  12. Martin (1996). Ancient Greece : from prehistoric to Hellenistic times. New Haven: Yale University Press. p. 147. ISBN 0-300-06767-4. கணினி நூலகம் 33900145.
  13. Thucydides (1996). The landmark Thucydides : a comprehensive guide to the Peloponnesian War. Robert B. Strassler, Richard Crawley. New York: Free Press. p. 1.112. ISBN 0-684-82815-4. கணினி நூலகம் 34788895.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தனக்ரா_சமர்_(கி.மு._457)&oldid=3739669" இலிருந்து மீள்விக்கப்பட்டது