ஜாக்குலின் கென்னடி ஒனாசிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாக்குலின் கென்னடி ஒனாசிஸ்
ஜாக்குலின் கென்னடி
ஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி
பதவியில்
சனவரி 20, 1961 – நவம்பர் 22, 1963
முன்னையவர்மார்னீ ஐசன்ஃகோவர்
பின்னவர்சீமாட்டி பேர்டு ஜான்சன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
ஜாக்குலின் லீ பூவியர்

(1929-07-28)சூலை 28, 1929
சவுத்தாம்ப்டன், இலாங் தீவு, நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா
இறப்புமே 19, 1994(1994-05-19) (அகவை 64)
நியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா
துணைவர்(s)ஜான் எஃப். கென்னடி (1953-1963, அவரது மரணம் வரை)
அரிசுடாட்டில் ஒனாசிஸ் (1968-1975, அவரது மரணம் வரை)
பிள்ளைகள்அரபெல்லா கென்னடி (1956, குறைப் பிரசவம்)
கரோலின் பூவியர் கென்னடி (பிறப்பு 1957)
ஜான் எஃப். கென்னடி இளையவர் (1960-1999)
பாற்றிக்கு கென்னடி (ஆகத்து 7, 1963-ஆகத்து 9, 1963)
பெற்றோர்(s)ஜான் வெர்னூ பூவியர் III
ஜேனட் நார்ட்டன் லீ
கல்விவாசர் கல்லூரி - சேர்ந்தது
சோர்போன் - சேர்ந்தது
த ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகம் (இளங்கலை)
வேலைஐக்கிய அமெரிக்காவின் முதல் சீமாட்டி
வைக்கிங் அச்சக ஆசிரியர் (1975-1977)
டபுள்டேயில் நூலாசிரியர் (1978-1994)
கையெழுத்து
ஆர்லிங்டன் தேசியக் கல்லறைத் தோட்டம்

ஜாக்குலின் லீ பூவியர் ஜாக்கி கென்னடி ஒனாசிஸ் (Jacqueline Lee Bouvier "Jackie" Kennedy Onassis, சூலை 28, 1929 – மே 19, 1994), 1961 முதல் 1963இல் அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜான் எஃப். கென்னடி சுட்டுக் கொல்லப்படும் வரை அவரது மனைவியாகவும் அமெரிக்காவின் முதல் சீமாட்டியாகவும் இருந்தவர். பின்னாளில் இவர் கிரேக்க கப்பல்துறை பெருவணிகர் அரிசுடாட்டில் ஒனாசிசை திருமணம் புரிந்தார். தமது இறுதி நாட்களில் நூல் ஆசிரியராக சிறப்பாக பணியாற்றி வந்தார்.

இளமை வாழ்வு[தொகு]

ஜாக்குலின் லீ பூவியர் நியூயார்க் மாநிலத்தின் இலாங் தீவில் சவுத்தாம்ப்டனில் வால் வீதி பெருஞ்செல்வர் ஜான் வெர்னோ பூவியருக்கும் (1891-1957) அவரது மனைவி ஜேனட் நார்ட்டன் லீக்கும் (1907-1989) சூலை 28, 1929இல் மகளாகப் பிறந்தார். இவரது தங்கை கரோலின் லீ பூவியர் 1933இல் பிறந்தார்.

இவரது இளமைக்காலம் நியூ யார்க் நகரத்திலும் இலாங் தீவில் கிழக்கு ஆம்ப்டனிலும் கழிந்தது. தமது இள வயதிலேயே சிறந்த குதிரையேற்ற வீராங்கனையாகத் திகழ்ந்தார். இது அவரது வாழ்நாள் முழுமையும் தொடர்ந்தது. சிறு வயதில் ஓவியம், படிப்பு மற்றும் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் இருந்தது.

அவரது பெற்றோர்கள் 1940இல் ஜாக்குலினுக்கு 11 அகவை இருக்கும்போது மணமுறிவு பெற்றனர்; அன்னை ஜேனட் இசுடாண்டர்டு ஆயில் நிறுவனத்தின் வாரிசான ஹியூ டி. அச்சின்குளோசை 1942இல் மணம் புரிந்தார். இவர்களுக்கு ஜேனட் (1945-1985), ஜேம்சு (பி. 1947) என இருவர் பிறந்தனர். ஜாக்குலினும் தங்கை கரோலினும் தங்கள் அன்னையின் புதிய குடும்பத்தில் இணைந்தனர்.

மிகவும் தெரிந்தெடுத்த தனியார் பள்ளிகளில் தமது கல்வியைத் தொடர்ந்தார். 1949இல் ஒரு ஆண்டு பிரான்சுத் தலைநகர் பாரிசிலுள்ள புகழ்பெற்ற லா சோர்போனில் படித்துள்ளார். 1951இல் ஜார்ஜ் வாசிங்டன் பல்கலைக்கழகத்திலிருந்து பிரெஞ்சு இலக்கியத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மேலும் கலை, வரலாறு மொழிகளில் ஈடுபாடுடையவராக இருந்தார்.

பட்டப் படிப்பிற்குப் பின்னர் வாசிங்டன் டைம்சு எரால்டு இதழுக்கு "புலனாய்வு-புகைப்படக் காரராக" பணியாற்றினார். இந்த பணி முகாந்தரமாக சூன் 1953இல் எலிசபெத் அரசியின் முடிசூட்டுவிழாவினை ஒட்டி இலண்டனுக்கு அனுப்பப்பட்டார்.

திருமணமும் குடும்பமும்[தொகு]

மே 1952இல் விருந்தொன்றில் அப்போது அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் முனைப்பாக இருந்த ஜான் எஃப். கென்னடியை முதன்முதலில் சந்தித்தார். நவம்பரில் தேர்தலில் வெற்றி கண்ட பின்னர் இருவருக்குமிடையேயான நட்பு காதலாக மலர்ந்தது. இருவரின் திருமணம் செப்டம்பர் 12,1953இல் றோட் தீவில் நியூபோர்ட்டிலுள்ள புனித மேரி தேவாலயத்தில் நடந்தது. திருமணச் சடங்கிற்கு 800 விருந்தினர்களும் பின்னர் ஜாக்குலினின் குடும்ப பண்ணையில் நடந்த திருமண வரவேற்புக்கு 1000 விருந்தினர்களும் அழைக்கப்பட்ட இந்நிகழ்வு அக்காலத்தில் முதன்மையான சமூக நிகழ்வாக இருந்தது.

இவ்வளவு வெளிச்சத்திற்கிடையில் இருவரும் பல தனிப்பட்ட துன்பங்களுக்கு ஆளாயினர். கென்னடிக்கு ஏற்பட்டன கடிய முதுகுப் பிடிப்பு சிக்கல்கள் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படவில்லை. போர்க் காயங்களால் ஏற்பட்ட தொடர்ந்த தாங்கவியலா முதுகு வலிக்கும் அடிசன் நோய்க்கும் அவர் ஆளானார். 1954இன் இலையுதிர் காலத்திலும் குளிர் காலத்திலும் இரு சிக்கலான தண்டுவட அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டார். 1955இல் ஜாக்குலினுக்கு கருச்சிதைவு ஏற்பட்டது; 1956இல் பிறந்த பெண் மகவு இறந்து பிறந்தது.

இறுதியில் இருவருக்கும் 1957இல் கரோலின் பிறந்தார். பின்னர் 1960இல் பிறந்த மகனுக்கு ஜான் எஃப். கென்னடி இளையவர் எனப் பெயரிட்டனர். ஆகத்து 1963இல் பிறந்த இரண்டாவது மகன் பாற்றிக் பிறந்த இருநாட்களிலேயே உயிரிழந்தார்.

முதல் சீமாட்டி[தொகு]

சனவரி 20, 1961இல் ஜான் கென்னடி ஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றக் கொண்டபோது 31 அகவை நிரம்பிய ஜாக்குலின் அமெரிக்க வரலாற்றிலேயே மிக இளைய அகவையில் முதல் சீமாட்டியானார். இளமையான, கவர்ச்சியான, பண்பட்ட முதல் சீமாட்டியாக உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மிகவும் பரவலாக அறியப்பட்டார். பொதுமக்கள் அவரை "ஜாக்கி" என அழைக்கலாயினர்.

புதிய இல்லத்தில் நுழைந்தவுடனேயே வெள்ளை மாளிகையை சீர்படுத்த முனைந்தார். நுண்கலை குழுவொன்றை அமைத்தார். வரலாற்றுச் சிறப்பு மிக்க அமெரிக்க தளபாடம், ஓவியங்கள் மற்றும் கலைச் செல்வங்களை கொணர்ந்து வெள்ளை மாளிகையின் பெருமையை மீட்டார். இந்த மீளமைப்புப் பணிகளுக்கு நிதி பெற்றிட வெள்ளை மாளிகையின் வரலாறு குறித்த நூலை வெளியிடச் செய்தார். மேலும் நிதி திரட்டும் முயற்சியில் தொலைக்காட்சிகளில் புகழ்பெற்ற வெள்ளை மாளிகை சுற்றுலாக்களை பெப்ரவரி 14, 1962இல் துவக்கினார். வெள்ளை மாளிகையின் கிழக்கு பூங்காவை மீள் வடிவமைத்தார்; இது தற்போது ஜாக்குலினின் பெயரில் வழங்குகிறது. லாஃபயத் சதுக்கத்தில் உள்ள பல வரலாற்றுக் கட்டிடங்களை இடிப்பதிலிருந்து காப்பாற்றினார்.

குடியரசுத் தலைவரின் வெளிநாட்டு பயணங்களில் கலந்து கொண்டு கனடா, ஐரோப்பா, நடு மற்றும் தென் அமெரிக்காக்களுக்கு சென்றுள்ளார். சென்றவிடங்களில் எல்லாம் அவரது கலை, மொழி மற்றும் வரலாற்று அறிவு பயனுள்ளதாக அமைந்தது. மார்ச் 1962இல் அவர் தமது தங்கை லீ ராட்சிவில்லுடன் சென்ற இந்தியா, பாக்கித்தான் நல்லெண்ணப் பயணம் மிகவும் வெற்றிகரமாக அமைந்தது.

நவம்பர் 22, 1963இல் டெக்சசின் டாலசிற்கு தேர்தல் பயணம் மேற்கொண்ட கென்னடியுடன் திறந்த மகிழுந்தில் அவருடன் பொதுமக்களை சந்திக்க சென்றார். அப்போது குறிசுடுனர் ஒருவரால் கென்னடி சுடப்பட்டபோது மிகுந்த வீரத்துடனும் மனத்தெளிவுடனும் நடந்து கொண்டார். கென்னடியின் மரணத்திற்கு பின்பும் அவரது நடத்தை பன்னாட்டளவிலும் வியக்கப்பட்டது.

பின்னாள் வாழ்க்கை[தொகு]

வெள்ளைமாளிகையிலிருந்து வெளியேறிய பின்னர் சிலநாட்கள் ஜாக்குலின் வாசிங்டன் டி.சியிலுள்ள ஜார்ஜ்டவுனில் வாழ்ந்து வந்தார். பின்னர் 1964இன் பிற்பகுதியில் தமது ஊரான நியூயார்க் நகரத்திற்கு குழந்தைகளுடன் இடம் பெயர்ந்தார். தமது இறந்த கணவரின் நினைவுக் கூட்டங்களுக்கு சென்றும் பாஸ்டன் நகரில் அமைக்கப்பட்டு வந்த ஜான் எஃப், கென்னடி நூலகத் திட்டத்தை மேற்பார்வையிட்டும் வாழ்ந்து வந்தார். அலுவல்முறை போன்ற பயணங்களை இங்கிலாந்து, அயர்லாந்து, கம்போடியா நாடுகளுக்கு மேற்கொண்டார்.

தன்மீது மக்கள் வைத்திருந்த படிமத்திற்கு மாறாக, தம்மை விட 23 அகவைகள் மூத்த, கிரேக்க கடல்வழி பெருவணிகர் அரிசுடாட்டில் ஒனாசிசை அக்டோபர் 20, 1968 அன்று மறுமணம் புரிந்தார். இவரது இரண்டாவது திருமண வாழ்வு மகிழ்ச்சியானதாக அமையவில்லை. மணமுறிவு பெறாவிடினும் பிரிந்தே வாழ்ந்தனர். 1975இல் அரிசுடாட்டிலின் மறைவிற்குப் பிறகு மீண்டும் நியூயார்க் நகருக்கே நிரும்பிய ஜாக்குலின் நூலாசிரியராக பணி புரிந்தார். தமது கடைசி இரு பத்தாண்டுகளாக இந்தப் பணியில் இருந்தார். முதலில் வைக்கிங் அச்சக நிறுவனத்திலும் பின்னர் டபுள்டே நிறுவனத்திலும் பணி புரிந்தார். நியார்க் நகரத்தின் கிராண்ட் சென்ட்ரல் முனையத்தினை வரலாற்றுச் சிறப்புடன் அப்படியே வைத்திருக்க முனைப்பாக செயலாற்றினார். தமது கடைசி காலங்களை தமது குடும்பத்துடனும் நீண்டநாள் நண்பர் மாரிசு டெம்பிள்சுமேனுடனும் அமைதியாக கழித்தார்.

தமது 64வது அகவையில் நிணநீர்த்தொகுதியில் புற்றுநோய் காரணமாக நியூயார்க் நகரத்தில் உயிரிழந்தார். வர்ஜீனியாவில் உள்ள ஆர்லிங்டன் தேசிய கல்லறைத் தோட்டத்தில் அவரது கணவர் கென்னடி,அவர்களது பிறந்திறந்த மகள் மற்றும் மகனின் கல்லறைகளை அடுத்து புதைக்கப்பட்டார்.

உசாத்துணை[தொகு]

  • A Hero for our Time, An Intimate Story of the Kennedy Years, Ralph G. Martin, Fawcett Crest, New York, 1983.

வெளி இணைப்புகள்[தொகு]