சித்திரத்துணி
சித்திரத்துணி அல்லது சித்திரப்பட்டு (Brocade or Damask (அரபு:دمسق) என்பது, கலைநயம் மிக்க சித்திரங்கள் ஒருபக்கம் புதைத்துக்கொண்டு இருக்கும்படி நெய்த துணியாகும். அத்துணியின் மறு பக்கம் சித்திரங்களின் புறத் தோற்றத்தைக் காணும்படியாக, பட்டு, லினன், உரோமம், கம்பளி, செயற்கை இழை, ராயன் அல்லது பருத்தி நூலினால் இதை நெய்வர், பெரும்பாலும் தடித்த இழைகளைக் கொண்டே இச்சித்திரங்களை வரைவது வழமையாகும். துணிகள் எத்தகையப் பயன்பாட்டிற்குத் தேவையென்பதை அறிந்து அதற்கேற்ப இருபுறங்களிலோ, அல்லது ஒருபக்கம் மட்டுமோ சித்திரங்களைக் காணுமாறு உருவாக்கப்படுகிறது.[1]
பயன்பாடு
[தொகு]இந்த ஓவிய வேலைப்பாடுகள் நிறைந்த துணிவகைகளை, படுக்கை விரிப்புகள் (bed- sheets), திரைச்சீலைகள் (curtains), மெத்தை வைத்த நாற்காலிகளின் உறைகள் (covers) முதலியவற்றைத் தயாரிக்க இவ்வகைத் துணிகள் கையாளப்படுகிறது. ஆடைகள் தயாரிக்க சற்று மெல்லிய நூலினால் நெய்யப்பட்ட சித்திரத்துணிகளைப் பயன்படுத்தப்படுகிறது.[1]
பின்புலம்
[தொகு]இதுபோன்ற சித்திரத்துணிகளை, கீழ் நாடுகளிலேயே முதன்முதலில் நெய்யத் தொடங்கினர். சீனாவில் சித்திரத்துணி நெசவு பண்டைக்கால முதலே இத்தொழில் நடைபெற்று வருவதாக அறியப்படுகிறது. 238 இல், வேய் வம்சத்தைச் (Wei Dynasty) சார்ந்த "மிங் டி" (Ming Ti) என்ற சீனச் சக்கரவர்த்தி, சப்பான் சக்கரவர்த்தினிக்கு கொடையாக (அன்பளிப்பு) கொடுத்த சித்திரத்துணியைப் பற்றியத் தகவலை, டாக்டர் புஷேல் (Bushell) என்பவர் சீனக்கலையைப் பற்றி எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டுள்ளார்.[1]
இந்திய ஏற்றுமதி
[தொகு]இந்தியாவில், பல நிறமுள்ள சித்திரப் பட்டுத்துணிகளைப் பண்டையக்காலத்திலேயே நெய்து வந்துள்ளனர். பலநிறப் பட்டுக்களில், வெள்ளி, தங்க இழைகளைக் கொண்டு பூவேலைப்பாடுகள் நிறைந்த சித்திரத்துணிகளை நெய்துள்ளனர். யசுர் வேதத்தில் சித்திரத்துணிகளைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளது, மேலும் புத்தருக்கு முற்பட்ட காலத்திலேயே சித்திரத்துணிகள் மேற்கு, மற்றும் கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாகத் தெரிகிறது.[1]
இந்திய நெசவுத்தொழில்
[தொகு]"கின்காப்" (Kinkhab) என்னும் பெயருடன் காசி, அகமதாபாத், மற்றும் சூரத்து முதலிய இந்திய நகரங்களில் இன்றும் சித்திரத்துணியின் நெசவுத்தொழில் நடைபெற்று வருகிறது.[1]
அயல்நாட்டுப் பயன்பாடு
[தொகு]12ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய மன்னர்களும், பிரபுக்களும் சித்திரப் பட்டாடையாலான உடைகளை விரும்பிப் பயன்படுத்தினர். மேலும், 13ஆம் நூற்றாண்டில் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடிகளில் இவ்வகைத் துணிகளைத் தயாரித்துள்ளனர். மேலும், இங்கிலாந்துவிலுள்ள "தென் கென்சிங்டன்' (South Kensington) பொருட்காட்சிசாலையிலும், இலண்டனிலுள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் பொருட்காட்சியிலும் (Victoria and Albert Museum) பண்டைய நவீனத்துவம் வாய்ந்த சித்திரத் துணிகளைச் சேமித்து வைத்துள்ளனர்.[1]