சத்புரா மலைத்தொடர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சத்புரா மலைத்தொடர் மத்திய இந்தியாவில் உள்ள ஒரு மலைத்தொடர் ஆகும். இது கிழக்குக் குஜராத்தில் அரபிக் கடலுக்கு அருகில் தொடங்குகிறது. அங்கிருந்து கிழக்கு நோக்கி, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களூடாகச் சென்று சட்டிஸ்கரில் முடிவடைகிறது.[1]

இம் மலைத்தொடர் விந்திய மலைத்தொடருக்குத் தெற்கே அதற்கு இணையாகச் செல்கிறது. ஒன்றுக்கொன்று இணையாக அமைந்துள்ள இவ்விரு மலைத்தொடர்களும், சிந்து-கங்கைச் சமவெளி அமைந்த வட இந்தியாவையும் பாகிஸ்தானையும், தெற்கில் அமைந்துள்ள தக்காண மேட்டுநிலத்தில் இருந்து பிரிக்கின்றன. இவ்விரு மலைத்தொடர்களுக்கும் இடையிலான தாழ்ந்த பகுதியில் ஓடும் நர்மதை ஆறு சத்புரா மலைத்தொடரின் வடக்குச் சரிவிலிருந்து வடிந்தோடும் நீரை அரபிக் கடலை நோக்கி எடுத்துச் செல்கிறது. இம் மலைத்தொடரின் மேற்கு முனைப் பகுதியின் தெற்குச் சரிவிலிருந்து வடியும் நீரை தப்தி ஆறு எடுத்துச் செல்கிறது. இம் மலைத்தொடரின் நடுப்பகுதிக்கும், கிழக்குப் பகுதிக்கும் தெற்கில் அமைந்துள்ள தக்காண மேட்டுநிலத்து நீர் கோதாவரி ஆற்றினூடாக வடிகிறது. இத்தொடரின் கிழக்கு முனைப்பகுதி நீர் மகாநதி ஊடாக வடிகிறது. இவ்விரு ஆறுகளும் வங்காள விரிகுடாவில் கலக்கின்றன. சத்புரா மலைத்தொடரின் கிழக்கு முனையருகில், இது சோட்டா நாக்பூர் மேட்டுநிலக் குன்றுகளைச் சந்திக்கின்றது.


முன்னர் சத்புரா மலைத்தொடர் காடடர்ந்த பகுதியாக இருந்தது. இப்பொழுது சில குறிப்பிடத்தக்க காட்டுப் பகுதிகள் தவிரப் பெரும்பாலான காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. இக் காடுகள் இந்தியாவின் எஞ்சியுள்ள பெரிய பாலூட்டிகளின் உறைவிடமாக உள்ளன.


இம் மலைத்தொடரின் கிழக்குப் பகுதி மேற்குப் பகுதியிலும் கூடிய மழைவீழ்ச்சியைப் பெறுகிறது. இக் கிழக்குப் பகுதி, கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளுடன் சேர்ந்து கிழக்கு மேட்டுநில ஈர இலையுதிர் காட்டுச் சூழலியல் மண்டலத்தை உருவாக்குகின்றது. பருவகாலத்தையொட்டி வரண்டு காணப்படும் இம் மலைத்தொடரின் மேற்குப் பகுதி, நர்மதை ஆற்றுப் பள்ளத்தாக்கு, விந்திய மலைத்தொடரின் மேற்குப் பகுதி என்பன சேர்ந்து நர்மதைப் பள்ளத்தாக்கு வரண்ட இலையுதிர் காட்டுச் சூழலியல் மண்டலமாக அமைகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Satpura Range
"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்புரா_மலைத்தொடர்&oldid=2115207" இருந்து மீள்விக்கப்பட்டது