கொட்டாவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெரிதாக வாயைத் திறந்து கொட்டாவி விடும் அரிமா

கொட்டாவி என்பது தன்னியல்பாக வாயைப் பெரிதாகத் திறந்து மூச்சுக் காற்றை வாய் வழியாகவும் மூக்கு வழியாகவும் உள்ளிழுப்பதும், அதே வேளையில் செவிப்பறை விரிவடைவதும், பின்னர் நுரையீரலில் இருந்து பெருமூச்சாக வாய்வழியே காற்றை வெளிவிடுவிடுவதுமான செயலைக் குறிக்கும். இத்துடன் கைகால்களை நீட்டி மடக்குவதை சோம்பல் முறித்தல் என்பர்.

அலுப்பு, உளைச்சல், மிகுதியான பணிப்பளு, ஆர்வமின்மை, சோம்பல் ஆகியவற்றுடன் கொட்டாவியைத் தொடர்பு படுத்துகின்றனர். இது இடத்திற்கேற்றாற் போல் வெவ்வேறு பொருள் தரக்கூடிய சைகைக் குறிப்பாகவும் உள்ளது. கொட்டாவி ஒரு தொற்று வினையும் கூட. அதாவது, வேறு ஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்த்த உடனோ, கொட்டாவியைப் பற்றிப் படிக்கும் போதோ கொட்டாவி விடுவதைப் பற்றி எண்ணிப் பார்க்கும் போதோ கூட ஒருவருக்கு கொட்டாவி ஏற்படக்கூடும்.[1] சிம்பன்சிகளிலும் இதே போன்று தொற்றுவினை ஏற்படுவது அறியப்பட்டுள்ளது.

கொட்டாவியின் சரியான கரணியங்கள் அறுதியாக அறியப்படவில்லை. உயிர்வளிக் குறைவினால் இது ஏற்படுகிறது என்ற கூற்றும் அறிவியலில் முற்றாக நிறுவப்படவில்லை.[2] பொதுவாக மூச்சு விடுவதைக் காட்டிலும் கொட்டாவி விடுகையில் உயிர்வளி குறைவாகவே உட்கொள்ளப் படுவதாகவும் சிலர் கருதுகின்றனர்.[2] இது பதற்றத்தினால் கூட விளையும் என்றும் ஒருவரின் விழிப்புணர்ச்சியைக் கூட்ட வல்லது என்றும் அதனாலேயே வானிலிருந்து பரக்குடையுடன் குதிக்கும் முன்னர் கொட்டாவி ஏற்படுகிறது என்றும் சிலர் கருதுகின்றனர்.[3]

கருதுகோள்கள்[தொகு]

பின்வரும் கூற்றுகள் கொட்டாவியின் காரணங்களாகக் கருதப்படுவன. ஆனால் அறுதியாக நிறுவப்படவில்லை.

 1. கொட்டாவியின் போது காற்று ஆழமாக உள்ளிழுக்கப்படுவதால் நுரையீரல் நுண்ணறைகள் சுருங்கி விடாமல் தவிர்க்கப்படுகின்றன.
 2. நுரையீரல் நுண்ணறையிலுள்ள வளிக்கலங்கள் (வகை II) விரிவடைவதால் பரப்பியங்கி நீர்மம் ஒன்று வெளிப்படுகிறது.
 3. மூளை குளிர்வடைகிறது.[4]
 4. கூடுதல் எச்சரிக்கை உணர்வு நிலையிலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்புவதைத் தன்னையறியாமல் வெளிக்காட்டுதல்
 5. குருதியில் கரிமவளி-உயிர்வளி நிலைப்பாடு மாறுபடுதல்.
 6. ஈடுபாடின்மையையைத் தெரிந்தோ தெரியாமலோ வெளிப்படுத்துதல்.
 7. அயர்வு
 8. அருகிலிருப்பவரது கொட்டாவியால் தமது செவியின் நடுவில் ஏற்படும் அழுத்த மாற்றத்தைச் சரிக்கட்டும் பொருட்டு
 9. மூளைக்குப் போதிய அளவு குளுக்கோசு கிடைக்காததால்
 10. உறக்கத்திற்கான தேவை மற்றும் அசதி அதிகமாகும் வேளையில் அடிக்கடி வரும் கொட்டாவியானது, சூடாகிப்போன மூளையை குளிர்விக்கும் ஒரு காரணியாக உள்ளது.
 11. நுரையீரலில் தேங்கிப்போன அளவுக்கதிகமான கரியமில வாயு, கொட்டாவிகளின் மூலம் வெளியேற்றப்பட்டு, புதிய பிராணவாயுவை (ஆக்சிஜன்) நுரையீரல் உள்வாங்கிக்கிறது.

[5]

தொற்றிக் கொள்ளும் தன்மை[தொகு]

Oscar Bluhm Ermüdende Konversation.jpg

கொட்டாவி எனும் தன்னேர்ச்சி வினை தொற்றிக்கொள்ளக்கூடியது என்று கருதுகின்றனர். அதாவது, ஒருவரது கொட்டாவி "பரிவு விளைவால்" மற்றொரு நபரில் கொட்டாவியை ஏற்படுத்தக்கூடும்.[2][6] “குமர் தனியாப் போனாலும் கொட்டாவி தனியாப் போகாது” என்ற பழமொழி இவ்விளைவைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளது. மற்றொரு நபர் கொட்டாவி விடுகையில் அவரது முகத்தை (அதிலும் குறிப்பாகக் கண்களைக்) காணுதல், கொட்டாவியைப் பற்றிப் படித்தல் அல்லது எண்ணிப்பார்த்தல் ஆகியவை கூட ஒருவருக்குக் கொட்டாவி வரச்செய்துவிடுமாம்![2] [7] [8] இத்தொற்றுவினையின் முழுமையான வழி அறியப்படாவிட்டாலும், இது இறுதியில் ஆடி நரம்புக் கலங்களால் (mirror neurons) ஏற்படுவதாக நம்புகின்றனர். இக்கலங்கள் சில முதுகெலும்பிகளின் மூளையின் முற்புறணியில் (frontal cortex) அமைந்துள்ளன. இவை பெரும்பாலும் அதே இனத்தைச் சேர்ந்த பிற விலங்குகளிடமிருந்து பெறும் குறிப்புகளின் விளைவாக தமது மூளையிலும் ஒத்த பகுதிகளைத் தூண்டிவிடும் தன்மையைக் கொண்டவை.[9] இத்தகு ஆடி நரம்புக்கலங்களே மனிதக் கற்கையின் அடிப்படையான பின்பற்றிப் பழகுதலின் பின்னால் இயங்குகின்றன. கொட்டாவியும் இதே வினையின் மற்றொரு வெளிப்பாடாக இருக்கலாம்.

2007-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் மதியிறுக்கம் கொண்ட குழந்தைகளில் இவ்வகையான தொற்றுதல் ஏற்படுவது குறைவு என அறியப்பட்டுள்ளது. இதனால் கொட்டாவி பரிவு விளைவால் தொற்றிக் கொள்கிறது என்ற கருத்து வலுப்பெறுகிறது.[10]

படிவளர்ச்சி நோக்கில் கொட்டாவி ஒரு மந்தை உணர்வாக இருக்கலாம்.[11][12] ஓநாய்கள் ஒன்றாக ஊளையிடுவதைப்போல, கொட்டாவியும் கூடி வாழும் விலங்குகள் ஒரே மனநிலைக்கு வருவதற்காக இயங்குவதாக ஒரு கருத்து உண்டு. அலுப்பைப் பிற விலங்குகளுக்கு அறிவிப்பதன் வாயிலாக தூங்கும் நேரங்கள் ஒன்றாக அமைய ஏதுவாகிறது. இது பல முதனிகளில் காணப்படுவது. தீங்கு நேரும் வாய்ப்பை அறிவித்தல் குழுக் கட்டுப்பாட்டை காக்க உதவுகிறது. இது தொடர்பில் சிம்பன்சிகளிலும்[13] தட்டைவால் குரங்குகள் மீதும்[14] ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றுக்கு தன்னினத்தைச் சேர்ந்த பிற விலங்குகள் கொட்டாவி விடும் காட்சியை நிகழ்படத்தில் காண்பித்ததில் தாமும் கொட்டாவி விடத் துவங்கின.

கோர்டான் காலுப்பு என்பவர் கொட்டாவி மூளையைக் குளிர்விப்பதாகக் கருதுகிறார். அதே வேளையில் கொன்றுண்ணிகள் மற்றும் போட்டிக் குழுக்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்கும் வகையில் எழுந்த உய்வு உத்தி இது எனவும் கருதுகிறார்.[4]

அண்மையில் இலண்டன் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் கொட்டாவி மனிதர்களிடமிருந்து நாய்களுக்கும் தொற்றவல்லது என அறியப்பட்டுள்ளது! அந்த ஆய்வின்போது 29 நாய்களில் 21 நாய்கள் அவை முன்னர் அறிந்திராத நபர்கள் கொட்டாவி விடுவதைப் பார்த்துத் தாமும் கொட்டாவி விடத்துவங்கின. வெறுமனே வாயைத் திறப்பதைப் பார்த்தால் இவ்விளைவு ஏற்படவில்லை![15]

தமிழ் இலக்கியத்தில்[தொகு]

கொட்டாவி விடுவதைத் தமிழில் ஆவலித்தல், அங்கா, ஆவிதல் என்றும் வழங்கியுள்ளனர்.[16] சீவக சிந்தாமணி, திருவாசகம், ஆசாரக்கோவை முதலிய பல நூற்களில் கொட்டாவியைப் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.[17] பிங்கல நிகண்டு இதை ஒரு மெய்க்குற்றம் என்கிறது.[17]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

 1. Camazine, Deneubourg, Franks, Sneyd, Theraulaz, Bonabeau, Self-Organization in Biological Systems, Princeton University Press, 2003. ISBN 0-691-11624-5 --ISBN 0-691-01211-3 (pbk.) p. 18
 2. 2.0 2.1 2.2 2.3 Provine RR (2005). "Yawning". American Scientist 93 (6): 532. doi:10.1511/2005.6.532. http://www.americanscientist.org/issues/feature/yawning. 
 3. New Scientist
 4. 4.0 4.1 Gordon G. Gallup.Good Morning America - The Science of Yawning (July 30, 2007)[TV-Series].USA:ABC. பிழை காட்டு: Invalid <ref> tag; name "GMA" defined multiple times with different content
 5. கொட்டாவி வருவதற்கான காரணம் என்ன?: நீண்டகால மர்மம் விலகியது
 6. The website by Émilie attempts to prove this.
 7. Provine RR (1986). "Yawning as a stereotyped action pattern and releasing stimulus". Ethology 72: 109–122. 
 8. "The Quest to Design the Perfect Yawn : NPR".
 9. V.S. Ramachandran, "Mirror Neurons and imitation learning as the driving force behind "the great leap forward" in human evolution". பார்த்த நாள் 2006-11-16.
 10. Senju A, Maeda M, Kikuchi Y, Hasegawa T, Tojo Y, Osanai H (2). "Absence of contagious yawning in children with autism spectrum disorder". Biol Lett 3: 706. doi:10.1098/rsbl.2007.0337. பப்மெட் 17698452. 
 11. Schürmann et al. (2005). "Yearning to yawn: the neural basis of contagious yawning.". NeuroImage 24 (4): 1260–1264. doi:10.1016/j.neuroimage.2004.10.022. பப்மெட் 15670705. 
 12. Platek et al. (2005). "Contagious Yawning and The Brain.". Cognitive Brain Research 23 (2-3): 448–52. doi:10.1016/j.cogbrainres.2004.11.011. பப்மெட் 15820652. )
 13. Anderson JR, Myowa-Yamakoshi M & Matsuzawa T (2004). "Contagious yawning in chimpanzees.". Proceedings of the Royal Society of London B: Biological Sciences 271: S468–S470. doi:10.1098/rsbl.2004.0224. பப்மெட் 15801606. 
 14. Paukner A & Anderson JR (2006). "Video-induced yawning in stumptail macaques (Macaca arctoides)". Biology Letters 2 (1): 36–38. doi:10.1098/rsbl.2005.0411. பப்மெட் 17148320. 
 15. http://news.bbc.co.uk/1/hi/sci/tech/7541633.stm Retrieved August 7th 2008
 16. Fabricius, Johann Philipp (1972). J. P. Fabricius's Tamil and English dictionary. rev.and enl. Tranquebar: Evangelical Lutheran Mission Pub. http://dsal.uchicago.edu/cgi-bin/romadict.pl?query=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF&table=fabricius. 
 17. 17.0 17.1 சென்னைப்பல்கலைக்கழகம் (1924-1936). Tamil Lexicon. சென்னை: சென்னைப்பல்கலைக்கழகம். http://dsal.uchicago.edu/cgi-bin/philologic/search3advanced?dbname=tamillex&query=%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF&matchtype=exact&display=utf8. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொட்டாவி&oldid=2243082" இருந்து மீள்விக்கப்பட்டது