உள்ளடக்கத்துக்குச் செல்

கிரார்துசு மெர்காதோர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரார்துசு மெர்காதோர்
GerardusMercator
பிறப்புகீர்த் தெ கிரெமர்
(1512-03-05)5 மார்ச்சு 1512
ரூபெல்மோன்டு, பிளான்டர்சு நாடு, அப்சுபர்கு நெதர்லாந்து
(தற்கால பெல்ஜியம்)
இறப்பு2 திசம்பர் 1594(1594-12-02) (அகவை 82)
துயிசுபர்கு, புனித உரோமைப் பேரரசு
(தற்கால ஜெர்மனி)
தேசியம்சர்ச்சையில்
கல்விஇலியூவன் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுமெர்காதோர் வீழலை அடிப்படையாகக் கொண்ட உலக நிலப்படம் (1569)
நெதர்லாந்து நிலப்படவரைவியல் கல்லூரியை நிறுவியவர்களில் ஒருவர்
அட்லசு என்ற சொல்லை நிலப்படத் தொகுப்பைக் குறிக்க உருவாக்கியவர்
தாக்கம் 
செலுத்தியோர்
பின்பற்றுவோர்
  • அபிரகாம் ஓர்தெலியசு
  • யொடொகசு ஓன்டியசு
துணைவர்பார்பரா ஷெல்லகன்சு
(தி. 1534 – இ. 1586)
கெர்த்ரூடு வீர்லிங்சு (தி. 1589)
பிள்ளைகள்அர்னால்டு (முதல்), எமெரென்சியா, டொராத்தே, பர்த்தொலோமியசு, ருமோல்டு, கேத்தரீனா

கிரார்துசு மெர்காதோர் (Gerardus Mercator,/əˈrɑːrdəs mərˈktər/;[1][2][3] 5 மார்ச் 1512 – 2 திசம்பர் 1594)[4] 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த செருமானிய நிலப்படவரைவியலாளர், புவியியலாளர் மற்றும் அண்ட அமைப்பியலாளர். 1569இல் உலக நிலப்படத்தை உருவாக்கியதற்காக இவர் பெரிதும் அறியப்படுகிறார். இவரது மெர்காதோர் வீழல் என்ற கருதுகோளைப் பயன்படுத்தி இந்த நிலப்படத்தை உருவாக்கினார். கடலில் செல்லும்போது ஒரே திசையளவு கொண்ட வழிகளை நேர்கோடுகளாக காட்டுதலே மெர்காதோர் வீழல் ஆகும். இந்த கருதுகோள் இன்றளவிலும் கடல் வழிகாட்டுதல் படங்களில் பின்பற்றப்படுகின்றது.

நெதர்லாந்தின் நிலப்படவரைவியல் கல்லூரியை நிறுவியர்களில் இவரும் ஒருவராவார். இது மிகவும் குறிப்பிடத்தக்க கல்வி நிலையமாக அக்காலகட்டத்தில் (ஏறத்தாழ 1570கள்–1670கள்) இருந்தது. தனது வாழ்நாளில் இவரே உலகின் மிகவும் புகழ்பெற்ற நிலப்படவியலாளராக விளங்கினார். நிலப்படவரைவியலைத் தவிர இவருக்கு சமயவியல், மெய்யியல், வரலாறு, கணிதம், புவியின் காந்தப்புலம் ஆகிய துறைகளிலும் ஆர்வம் இருந்தது. செதுக்குதல், வனப்பெழுத்து உலக உருண்டைகளையும் அறிவியல் கருவிகளை உருவாக்குதல் போன்றவற்றிலும் சிறந்து விளங்கினார்.

அவரது காலகட்டத்தைச் சேர்ந்த மற்ற அறிவியலாளர்களைப் போலன்றி மெர்காதோர் அதிகம் பயணிக்கவில்லை. அவரது புவியியல் அறிவை நூல்களைப் படித்தே வளர்த்துக் கொண்டார். அவரது சொந்த நூலகத்தில் 1000 நூல்களையும் நிலப்படங்களையும் சேகரித்து வைத்திருந்தார். இவற்றை தன்னைக் காணவந்தோர் மூலமாகவும் ஆறு மொழிகளில் மற்ற அறிவியலாளர்கள், பயணிகள், வணிகர்கள், மாலுமிகளுடன் நிகழ்த்திய கடிதப் போக்குவரத்தாலும் சேகரித்தார். மெர்காதோரின் துவக்க கால நிலப்படங்கள் அளவில் பெரிய வடிவங்களாக சுவற்றில் தொங்குவிடுமாறே இருந்தன. ஆனால் வாழ்நாளின் பிற்பகுதியில் நூற்றுக்கும் கூடுதலான வட்டார நிலப்படங்களை சிறிய வடிவங்களில் வெளியிட்டார். இவற்றை எளிதாக நூல் வடிவில் தொகுக்க முடிந்தது. 1595இல் இத்தகைய முதல் நிலப்படத் தொகுப்பை வெளியிட்டார். இதற்கு முதன்முதலாக அட்லசு என்று பெயரிட்டார். இச்சொல்லை நிலப்படத் தொகுப்பிற்கு மட்டுமன்றி இகலுலகின் உருவாக்கம், வரலாறு என அனைத்தையும் குறிப்பிடுவதற்காக உருவாக்கினார். முதல் பெரும் புவியியலாளராக விளங்கிய மாரிதானியாவின் அரசர் அட்லசு நினைவாகவே இப்பெயரை உருவாக்கினார். இந்த அரசர் டைட்டன் அட்லசின் மகனாவார்; எனினும் இவ்விரு தொன்மக் கதைகளும் விரைவிலேயே ஒருங்கிணைந்தன.

மெர்காதோருக்கு தமது நிலப்படங்களையும் பூகோளங்களையும் விற்றே வருமானத்தின் பெரும்பகுதியை ஈட்டினார். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அவை உலகின் சிறந்தவையாகக் கருதப்பட்டன. அப்போது விற்கப்பட்டவற்றில் சில இன்னமும் கிடைக்கின்றன. கோளங்களை உருவாக்கவும் அவற்றில் நிலப்படங்களை அச்சிடவும் தாங்கிகளை வடிவமைக்கவும் பொதிந்து ஐரோப்பா முழுமையும் அனுப்பவும் சிறந்த வணிக முனைவு தேவைப்பட்டது. தவிரவும் மெர்காதோர் அவரது அறிவியல் கருவிகளுக்காகவும் அறியப்பட்டார்; குறிப்பாக சோதிடம். வானியல் வடிவவியலை ஆராயத் தேவையான கருவிகளை உருவாக்கினார்.

கத்தோலிக்க திருச்சபையைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்த மெர்காதோர் ஆழ்ந்த கிறிஸ்தவர். மார்ட்டின் லூதரின் சீர்திருத்தத் திருச்சபை பரவி வந்தபோது தம்மை சீர்த்திருத்தச் சபையினராக காட்டிக்கொள்ளாதபோதும் ஆதரவாளராக இருந்தார். இதற்காக ஆறு மாதங்கள் சிறைக்குச் சென்றார். இந்த மத ஒறுப்பே இவரை கத்தோலிக்க இலியூவனிலிருந்து குடிபெயரச் செய்தது. சமயச் சகிப்பு கொண்டிருந்த துயிசுபர்கிற்கு குடியேறினார். இங்கு தமது வாழ்நாளின் கடைசி 30 ஆண்டுகளைக் கழித்தார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Mercator". Random House Webster's Unabridged Dictionary.
  2. Local New Latin pronunciation: /ɣɛˈrardʊs/ or /gɛˈrardʊs ˈmɛrkatɔr/.
  3. In English speaking countries Gerardus is usually anglicized as Gerard with a soft initial letter (as in 'giant') but in other European countries the spelling and pronunciation vary: for example Gérard (soft 'g') in France but Gerhard (hard 'g') in Germany. In English the second syllable of Mercator is stressed and sounds as Kate: in other countries that syllable is sounded as 'cat' and the stress moves to the third syllable.
  4. மெர்காதோரின் பிறந்த இறந்த நாட்கள் அவரது நண்பரும் அவரது முதல் வாழ்க்கை வரலாற்றாளருமான வால்டர் கிம்மின் வைட்டா மெர்காதோரிசு (மெர்காதோரின் வாழ்க்கை) என்ற நூலில் குறிப்புள்ளபடியாகும். இதனை 1595இல் வெளியிட்ட நிலப்படத் தொகுப்பிலும் குறிப்பிட்டுள்ளார். இதன் ஆங்கில மொழிமாற்றம்: (Sullivan 2000), pages 7–24 of the atlas text, pdf pages 77–94.
  5. The full text of Ghim's biography is translated in (Sullivan 2000) pages 7–24 of the atlas text, pdf pages 77–94.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரார்துசு_மெர்காதோர்&oldid=3240044" இலிருந்து மீள்விக்கப்பட்டது