நிலப்படத் தொகுப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலக அட்லஸ்

நிலவரைத் தொகுப்பு (atlas) என்பது நிலப்படங்களின் தொகுப்பு ஆகும். இது பொதுவாக பூமியில் அல்லது பூமியின் ஒரு பகுதியில் உள்ள நிலம் நீர் உள்ளிட்டவைகளை வரைபட அமைப்பில் காட்டும் புத்தகமாகும். பொதுவாக பூமி எனக் குறிப்பிட்டாலும் சூரியக் குடும்பம் மற்றும் அவற்றின் கோள்கள் ஆகியவற்றையும் வரைபட அமைப்பில் தருவதையும் குறிக்கிறது. பொதுவாக நிலப்படத் தொகுப்புகள் பாரம்பரியமாக புத்தக வடிவிலேயே தொகுக்கப்பட்டுள்ளன. இன்று பல நிலப்படத் தொகுப்புகள் இணையப் பக்கங்களாகவும் தொகுக்கப்பட்டுள்ளன. நிலப்படத் தொகுப்புப் புத்தகத்தில் பூமியிலுள்ள புவியியல் அமைப்புகள் மற்றும் அரசியல் எல்லைகள் இடம்பெறுவதோடு பெரும்பாலும் அரசியல், சமூகம், வேளாண்மை, மதம் மற்றும் பொருளாதாரம் குறித்த புள்ளி விவரங்கள் இடம்பெறும். வெறும் வரைபடங்கள் மட்டுமல்லாது இடங்கள் மற்றும் அது குறித்த தகவல் தரவுகள் பலவற்றை ஒரு வரைபடப் புத்தகம் தருகிறது.

பெயர்க்காரணம்[தொகு]

நிலவரைக்கு அட்லசு என்ற பெயர் வந்ததற்கான மூலம் குறித்து கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதற்கு காரணம் தொன்மங்களிலுள்ள இரண்டு வேறுபட்டவர்கள் அட்லசு என்ற பெயருடனும் வரைபட உருவாக்கத்துடனும் தொடர்புபட்டிருப்பதுதான்.

பழங்கால மொரிட்டானியாவின் அரசன் அட்லசு கணித வல்லுனராகவும், வானியல் நிபுணராகவும் தத்துவஞானியாகவும் அறியப்படுகிறார். இவரே சொர்க்கம் அல்லது வான்கோளங்கள் வரைபடத்தை முதலில் உருவாக்கியராக கருதப்படுகிறார். வரைபடவியலாளர் சிராடுசு மெர்கேடர் இவரையே அட்லசு என்று குறிப்பிட்டுள்ளார்",[1][2] இந்த அரசனையே தன் வரைபடத்தின் தலைப்பில் ஓவியமாக வைத்துள்ளார்.[2]

பிளேட்டோ குறிப்பிடப்படும் அட்லாண்டிசு என்னும் தீவின் அரசன் அட்லசு ஆவான்.

கிரேக்க தொன்மவியலில் குறிப்பிடப்படும் அட்லசு என்பவனே பலர் அறிந்தவனாவான். இவன் டைட்டன் லெப்டுசுவின் மகனாவான். இவன் சியுசு என்ற தெய்வத்தால் சொர்கத்தை தன் தோளில் எப்போதும் சுமந்துகொண்டிருக்கவேண்டும் என்று தண்டிக்கப்பட்டவன். சியுசுவின் மகனான அராகில்சு பாம்பு போன்ற டிராகனான லாடான் காக்கும் ஆப்பிள் பழங்களை பறிக்கும் படி பணி வந்தபோது அட்லசை அணுகுகிறான். அட்லசு அப்பழங்களை பறித்து தர ஒப்புக்கொண்டு தான் சுமக்கும் சொர்க்கத்தை அது வரை ஆராகில்சை சுமக்க சொல்கிறான். ஆராகில்சே எப்போதும் சொர்க்கத்தை சுமக்கும் படி எண்ணி அட்லசு விலகிச்செல்ல முயலும் போது ஆராகில்சு அட்லசை ஏமாற்றி அவனிடமே சொர்கத்தை ஒப்படைக்கிறான். அதிலிருந்து அட்லசே சொர்க்கத்தை சுமக்கிறான். கிரேக்க இதிகாசமான ஒடிசியில் ஓமர் அட்லசு கடலின் ஆழத்தையும் அகலத்தையும் அறிந்தவன் என்கிறார்.

கலை உலகில் இந்த அட்லசு சொர்கங்களை அல்லது வான்கோளங்களை தோளில் சுமந்திருப்பவானாக உருவகப்படுத்தப்படுகிறான் (கிரேக்க தொன்மம்). பார்னிசே அட்லசு என்னும் சிலையே பழங்காலத்தில் இவ்வகையில் உருவகப்படுத்தப்பட்ட முதல் சிலையாகும். இச்சிலை தற்போது இத்தாலி நாட்டின் நாபொலி நகரின் அருங்காட்சியகத்தில் உள்ளது, இதன் ஓவியமே பெரும்பாலான நிலவரைபடங்களின் அட்டை அல்லது முகப்பில் இடம் பெறுகிறது. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உலக வரைபடம் வெளியிட்ட டச்சு நாட்டினர் இவ்வோவியத்தை அட்டையில் வரைந்திருந்தனர். அதனால் இப்படம் டச்சு வணிகர்களுடன் தொடர்புபடுத்தப்பட்டது. ஆம்ஸ்டர்டாமில் உள்ள உலக வணிக மையக் கட்டடத்தில் அட்லசு உலகைத் தாங்கி நிற்பது போன்ற சிலை உள்ளது.

வரலாறு[தொகு]

கிமு 2300 காலகட்டத்தில் மத்திய கிழக்கில் இருந்த பாபிலோனிய சுட்ட களிமணில் இருந்த நிலவரைபடமே மிகபழைய வரைபடம் ஆகும்.[3][4]

கிமு 6 ம் நூற்றாண்டிலிருந்து பல கிரேக்க அறிஞர்கள் புவி கோளவடிவுடையது என்று நம்பினார்கள். கிமு 350ல் அரிசுட்டாட்டில் புவியானது கோளவடிவுடையது என்பதை நிருபிக்க ஆறு வாதங்களை வைத்தார் [5][6] கிமு 200ல் எரடோசுதினிசு (Eratosthenes) புவியின் சுற்றளவை கோணங்கள் மூலம் துல்லியமாக கணித்தார்.[7][8]

கிமு 150ல் குளோடியஸ் தொலெமாயெஸ் ஜியோகிரஃபியா என்னும் புவியியல் தொடர்பான நூலில் அறிவியல் முறைப்படி நிலவரைபடக்கலையை பற்றி விளக்கியுள்ளார். இவர் புவியை சுற்றி சூரியன் சுழல்கிறது என கருதினாலும் அவர் காலத்தில் அறிவியல் ஆய்வு செய்வதில் முன்னோடியாக விளங்கினார் [7]

பழங்கால சீனர்கள் அவர்கள் காலத்தில் மற்றவர்களை விட நிலவரைபடவியலில் சிறந்து விளங்கினர். சீன இலக்கியங்கள் வரைபடத்தை பற்றி 7ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் குறிப்பிட்டிருக்கின்றன. மற்ற பழைய நிலவரைபடங்களை விட அவர்களது நிலவரைபடம் விரிவாகவும் துல்லியமாகவும் இருந்தது.

இடைக்காலத்தில் ஐரோப்பியர்களது வரைபடம் வரைபடக்கலையை சார்ந்திருந்ததை விட மதத்தை சார்ந்தே இருந்தது. கிறுத்துவ சமய துறவிகள் நிலவரைபடங்களில் சமயம் தொடர்பான குறிப்புகள் இடம் பெறுவதில் முனைப்பாக இருந்து வரைபடக்கலையை கட்டுப்படுத்தினர். ஐரோப்பியர்களின் வரைபடம் யெருசலம் நகரை மையமாக வைத்தும் வரைபடத்தின் மேல் பகுதி கிழக்கு திசையை குறிப்பதாகவும் இருந்தது [9]. இதற்கு மாறாக அராபியர்களின் வரைபடக்கலை கிரேக்கர்கள் வழிமுறையை பின்பற்றி முன்னேற்றமடைந்து காணப்பட்டது, அல்-இட்ரிசியின் வரைபடத்தொகுப்பு இதில் சிறப்பானது [10].

1507ல் மார்டின் வால்ட்சிமுல்லர் ( Martin Waldseemüller) என்பவர் உருவாக்கிய வரைபடமே அமெரிக்கா என்ற சொல்லை புதிய உலகத்துக்கு முதலில் குறித்ததாகும் [11]. 1569ல் மெர்க்காடர் உருவாக்கிய வரைபடம் அதுவரை இருந்த வரைபடங்களை விட இது மேம்பட்டதாக இருந்ததால் அதை கடலோடிகள் தங்கள் பயணங்களுக்கு பயன்படுத்தினர்.

நியூட்டன் மைய விலக்கு விசையினால் சுழழும் புவியின் நிலக்கோட்டுப்பகுதியில் பருத்தும் வட தென் முனைகளில் குறுகியும் இருக்கும் என்றார். இது வரைபடத்துறையில் பெரும் மாற்றங்களை கொணர்ந்தது.[7]

17ம் நூற்றாண்டிலிருந்து நிலவரைப்படக்கலை அறிவியல் முறையில் பெரும் வளர்ச்சி கண்டது. 20ம் நூற்றாண்டில் வான் வழி நிழற்படக்கலை, கணினி, தொலையுணர்வு கருவி போன்ற பல நிலவரைபடக்கலைக்கு உதவும் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் நிலவரைபடத்தொகுப்பில் துல்லியம் ஏற்பட்டது.

வகைகள்[தொகு]

பயண நிலபடத் தொகுப்பு என்பது பயணங்களின் போது பயன்படுத்துவதற்காக எளிய முறையில் உள்ளதாகும். இது சுருளாக கட்டப்பட்ட புத்தகமாக இருக்கலாம், அதனால் இதன் பக்கங்களை தட்டையாக மடிக்கலாம். இதை சாலை வரைபடம் என்றும் சிலர் கூறுவர்.

மேசை நிலப்படத் தொகுப்பு என்பது மேற்கோள் நூல் போன்று உள்ள நிலப்படத் தொகுப்பாகும். இது மெல்லியஅட்டை அல்லது கடினஅட்டை உடைய புத்தகமாக இருக்கலாம். இதில் பயண நிலப்படத் தொகுப்பை விட அதிக விவரங்கள் இருக்கும்.

வெளியிணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Mercator, father of the atlas, turns 500". German Embassy's Department for Press, Information and Public Affairs. 6 March 2012. Archived from the original on 13 ஆகஸ்ட் 2013. பார்க்கப்பட்ட நாள் 7 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 2. 2.0 2.1 Mark S. Monmonier (2004). Rhumb Lines and Map Wars: A Social History of the Mercator Projection. University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-226-53431-2.
 3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-08-20. பார்க்கப்பட்ட நாள் 2013-02-16.
 4. http://www.britannica.com/EBchecked/topic/363506/map
 5. http://www.britannica.com/EBchecked/topic/363506/map/51765/Maps-and-geography-in-the-ancient-world
 6. http://www.economist.com/node/21561116
 7. 7.0 7.1 7.2 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-12-26. பார்க்கப்பட்ட நாள் 2013-02-16.
 8. http://www.britannica.com/EBchecked/topic/191064/Eratosthenes-of-Cyrene புவியின் சுற்றளவை முதலில் தெரிவித்தவர்
 9. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-07-09. பார்க்கப்பட்ட நாள் 2013-02-16.
 10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-06-26. பார்க்கப்பட்ட நாள் 2013-02-16.
 11. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-02-08. பார்க்கப்பட்ட நாள் 2013-02-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலப்படத்_தொகுப்பு&oldid=3588810" இலிருந்து மீள்விக்கப்பட்டது